பிரிய பிரபஞ்சமே – 18 (2)

மெதுவாக நினைவுகளில் மூழ்கியபடி மாடியை அடைந்திருந்தாள். இரும்பு கதவை திறந்ததும் தலை முதல் கால் வரை மழைச் சாரல் வீசி அவளை நனைத்தது. சில்லென்ற சாரலில் மேனி சிலிர்த்தது.‌

மெல்ல மாடியில் பாதம் பதித்தாள், அவள் கால்களில் பரவிய குளுமை, பிரபஞ்சன் அவள் பாதம் பற்றும் குளுமையை நினைவூட்ட ஓர் நொடி அசையாமல் நின்று விட்டாள். அவள் உதடுகள் தாமாகப் பிரிந்து புன்னகைத்தன.

மழை தூறலாகப் பொழிந்து கொண்டிருக்க, அப்படியே சுவரில் சாய்ந்து நின்றாள். மழையில் நனைந்து பசுமையாய் அவள் கவனத்தை ஈர்த்தது மொட்டை மாடி தோட்டம்.

மழைத் துளிகள் மின்ன பூக்கள் ஆங்காங்கே தலை சரித்து மாருதத்தின் திசைக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தன. அவள் கண்கள் ரோஜாக்களின் மேல் அழுத்தமாகப் பதிந்தன.

சிவப்புச் வெள்ளை, ஆரஞ்சு நிற ரோஜாக்களைப் பார்க்கையில், “அது ரஞ்சன் வச்சது” என்று மரகதவல்லி சொன்னது செவியில் மோதியது.

இதுவும் அவன் வேலையா? தங்கள் தோட்டத்து ரோஜாவை தனக்காக அம்மாவின் மேஜையில் வைத்தானா பிரபஞ்சன்?

எப்படி? மகனே என்றாலும் மரகதவல்லி அதை எப்படி அனுமதித்தார்?

அந்தப் பூக்கள் பிரத்யேகமாகத் தனக்கென்று வைக்கப்பட்டது அல்ல. மரகதவல்லியின் மேஜையில் இருக்கும், பார்கவியுடன் சண்டையிட்டு அவள் எடுத்துக் கொள்வாள். அவ்வளவே. அப்படித்தான் அவளுக்கு நினைவு.

சிவப்பு, மஞ்சள், ரோஜா, பன்னீர் ரோஜா, பவள நிறம் என எத்தனை நிற ரோஜாக்கள், எல்லாம் எனக்காகவா?

கைகள் துறுதுறுக்க அலைபேசியை எடுத்து கணவனை அழைத்து விட்டாள். அவளின் அழைப்பை ஏற்காமல், “வேலையா இருக்கேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினான் அவன்.

“சாரி” என்று பதில் அனுப்பியவளை பரபரப்புத் தொற்றிக் கொண்டது. தன் சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு இப்போதே பதில் தெரியா விட்டால் மண்டையே வெடித்து விடும் போலிருந்தது.

“அய்யோடா..” என்று அலறினாள்.

மழையை ரசிக்கும் மனநிலை இல்லாமல் சுவரில் சாய்ந்து மழைத் தாரைகளை வெறித்திருந்தாள்.

அங்கிருந்த பறவைகளுக்கு இரையும் தண்ணீரும் வைக்கும், “பேர்ட் பீடர்” அவள் வீட்டு பால்கனியிலும் இருக்கிறது. அவளுக்குப் பிடிக்கும் என்றே பறவைகளுக்கு இரை வைத்திருக்கிறான்.

இப்படி எத்தனை எத்தனையை அவளுக்காகச் செய்திருக்கிறான் அவன்? இப்படியா கண்ணை மூடிக் கொண்டு இருப்பாள் அவள்? பல வருடங்களாகப் பள்ளி முடித்து வந்ததும் பெரும்பான்மையான பொழுதுகளை அவன் வீட்டில்தான் செலவழித்திருக்கிறாள்.

அவன் மேல் ஒரு நாளும் சந்தேகம் வரும் வகையில் நடந்து கொண்டதே கிடையாதே பிரபஞ்சன்.

திடீரென்று மழைக்கு நடுவில் மின்னல் வெட்டவும் கண்ணை இறுக மூடித் திறந்தாள். அப்போது இதே மொட்டை மாடியில் வைத்து, “அதையெல்லாம் விடு. இந்த ஒன்னை மட்டும் சரியா சொல்றியான்னு பார்த்திடுவோமே. நீ எங்க வீட்டுக்கு டியூஷன் வந்திருக்கும் போது ஒரு நாள் எங்கம்மா, என்னைத் திட்டி அடிச்சிருக்காங்க, எதுக்காகன்னு சொல்லு பார்ப்போம்.” என்று கணவன் கேட்ட கேள்வி மின்னலாய் அவள் மனத்தில் மின்னி மறைந்தது.

அன்றைக்கு போல இன்று தடுமாறி நிற்காமல் யோசிக்க ஆரம்பித்தாள். அவளின் ஆழ் மனம் அந்தக் கேள்விக்கான விடை அவளுக்குத் தெரியும் என்றது.

அவள் யோசித்துக் கொண்டே கண்களைச் சுழற்ற சிவப்பு ரோஜாவை உரசி கொண்டிருந்த மஞ்சள் ரோஜா அவள் கண்ணில் பட்டது.

சில நாள்களுக்கு முன்பு கணவன் அவளுக்குக் கொடுத்தது மஞ்சள் ரோஜாதானே?

“அது ரஞ்சன் வச்சது?” என்று மாமியார் சொன்ன போது, பிரஞ்சன் ஏன் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே அவளைப் பார்த்தான்? அது அவளுக்கான செய்தியா? சத்தியமாக இப்படிப் புள்ளிகளை இணைத்தால் அவனது பிரியம் பிடிபடும் என்று அவளுக்கு எப்படித் தெரியும்?

தனக்குப் பூ கொடுத்து அம்மாவிடம் அடியும் திட்டும் வாங்கியிருக்கிறானா அவன்?

“நீ என்னை நம்பவே மாட்டியா?” ஒவ்வொரு முறையும் அவனது கேள்விக்குப் பின்னிருந்த வலி இப்போது அவளுக்குப் புரிந்தது.

“என்னை விட்டுட்டு போய்டுவீங்க நீங்க” என்று அவள் சொன்ன தினத்தில் இருந்துதான் அவன் ஆளே மாறிப் போனான்.

கிரிக்கெட் விளையாடுவதைக் கை விட்டான்.

பார்த்திபனுடன் வெளியே செல்வதைத் தவிர்த்தான்.

அவ்வளவு ஏன் அவளிடம் இடைவெளி உண்டானது கூட அப்போதுதானே!.

என்னமோ பெரிய தவறு செய்தது போலத் தவித்துப் போனாள்.

திருமணம் மட்டுமே அவர்களைப் பிணைக்கவில்லை. பிரபஞ்சனின் பிரியம்தான் அவர்களைப் பிணைத்திருக்கிறது.

அம்மா வீடு வந்த போது புழுதி கிளம்பிய சாலை போலத் தெளிவின்றிக் கிடந்த அவள் மனம், இப்போது மழை கழுவிய சாலையாகப் பளிச்சிட்டது. அவளுள் ஒரு தெளிவு பிறந்திருந்தது.

அதற்காகக் கணவனின் மேல் கோபம் இல்லாமல் இல்லை. ஆனால், அவளது கோபத்தை அவன் உணர வேண்டும். அதை வெளிப்படுத்தியே தீருவாள்.

அவனது பிரிய கதையை அவன் கண் பார்த்து பேசிட வேண்டும்.

அந்த மழை நாளின் இதம் அவள் மனதெங்கும் பரவியது.

“பிரபா” என்று அவன் மார்பில் தஞ்சம் புகுந்திட துடித்தது பாவை மனம்.

அப்பா, அம்மா, அண்ணா எனச் செல்லமாக வளர்ந்தவள் அவள். அப்பாவின் கல்லூரியில் நடக்கும் காதல் களேபரங்கள் எல்லாம் வேறு விதமாக இருக்கும்.

கல்லூரி காலங்களில் காதல் கதைகளுக்கும், கலாட்டாவுக்குமா பஞ்சமிருக்கும்? இரவு உணவின் போது அப்பா, அம்மாவிடம் சொல்லும் கதைகளை அவள் புரிந்தும், புரியாமலும் கேட்ட காலங்கள் விரைந்து கடந்து அவளுக்கே புரியத் தொடங்கிய காலத்தில், படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அவளுக்குப் பாடம் எடுத்திருக்கிறார்.

மாணிக்கவேல், மகளிடம் காதல் தவறு என்று சொன்னதில்லை. காதலிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது கிடையாது. ஆனால் அப்பா சொன்ன கதைகளின் சுவாரசியத்தைத் தாண்டி பார்த்தால் காதல் அப்படியொன்றும் அவளுக்கு உவப்பானதாக இருந்ததில்லை.

அவரது மாணவர்கள் பலரை மாணிக்கவேல் காதலின் காரணமாகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார். ஆனால், அவர் மகளையே அவருக்கே தெரியாமல், பல வருடங்களாகக் காதலித்து, அந்தக் காதலை மறைத்து பெற்றோர் பார்த்த திருமணமாக மாற்றியிருக்கிறான் அவரின் அருமை மருமகன்.

பிரபஞ்சனின் காதல் அப்பாவுக்குத் தெரிந்திருக்காது என்று நூறு சதவீதம் நம்பினாள். மகளிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை அவர் மறைக்க மாட்டார் என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்.

முதலில் இந்த மரகதவல்லி ஏன் மகனின் காதலை மறைத்தார்?

தன்னிடம் படிக்க வந்த பெண்ணை மகன் விரும்புகிறான் என்ற காரணத்தினாலா? அது மட்டும்தானா? கணக்கு ஆசிரியரின் கணக்கு இப்போதும் அவளுக்குப் புதிராகப் புரியாமல் குழப்பியது.

அவர்களின் திருமணம் முடிவான பின் அவளிடம் சொல்லியிருக்கலாம். மகனின் மனைவி, அவரின் மருமகள் என்ற பதவி உயர்வு பெற்ற பிறகாவது சொல்லியிருக்கலாம் அவர்.

இப்படி எத்தனையோ இருக்க, அவரின் காரணம் என்னவாக இருக்கும்? அவரிடமே கேட்டிட வேண்டும். அப்படியெல்லாம் எளிதாக விட மாட்டாள் அவள்.

அப்பொழுது அவளின் மனம் போல மழையும் சட்டென ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.

அந்நேரம், “தர்ஷி, தர்ஷி” என்று கீழிருந்து கத்தி அவளை அழைத்தார் ராதா.

“எங்க இருக்கத் தர்ஷி?”

“மாடியில இருக்கேன்ம்மா” பதிலுக்குக் கத்தினாள்.

“மாடியிலயா? மழை பெய்யுது குட்டிம்மா. இந்நேரம் மாடியில என்ன பண்ற?” அப்பா கத்த, “மாடிக்கு போகணும்னாலே துணைக்கு ஆளை தேடுவா. மழை அடிச்சு ஊத்திட்டு இருக்கையில அங்க போய்த் தனியா என்ன பண்றா இந்தப் பொண்ணு?” என்று ராதா புலம்புவது கேட்டது.

“இதோ வந்துட்டேன் மா” என்று சத்தமாகக் குரல் கொடுத்தாள். மெல்ல திரும்பி மழையில் நனையாமல், உள்ளே வந்து மாடிக் கதவை பூட்டினாள்.

மழைச் சாரல் தெறித்து மாடி படிகள் முழுக்கத் தண்ணீர் சிதறி வடிந்திருந்தது.

“என்னவளே அடி என்னவளே” பாடல் கீழே ஒலித்துக் கொண்டிருக்க, அவள் காதில் மட்டும் கணவனின் குரல் ஒலித்தது.

அவளைத் தேடி வந்து விட்டானா என்ன? அதுதானே அவனால் அவளில்லாமல் இருக்க முடியாதே? அவனது பிரியம் அப்படி.

அவளுக்கு அந்த நொடியே அவனைக் காண வேண்டும் போலிருந்து. அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்திட துடித்தாள்.

முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவனுக்குப் பிடித்ததை எல்லாம் அவனிடம் மனதார சேர்ப்பித்திட வேண்டும். அதற்கு முதலில் அவனைப் பார்க்க வேண்டுமே.

“பிரபா..” சத்தமாக அழைத்தபடி மனத்தின் துள்ளல் கால்களுக்கும் கடத்தப்படப் படியில் கால் வைத்தாள்.

முதல் படியில் கால் வைத்தவளுக்குக் கால் தரையில் படாத உணர்வு. உடல் அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல், கால்களைப் போலவே பிடிமானம் இன்றி நழுவியது.

மறுகணம், “பிரபா.. அப்பா..” என்று அலறினாள்.

ஒன்று, இரண்டு, மூன்று.. தட் என்ற சத்தத்துடன் சரிந்தது அவள் உடல்.

மறுநொடி அவள் வீடெங்கும் அவளின் அலறல் எதிரொலிக்க, அதைக் கேட்டு, “தர்ஷி” என்று அலறி துடித்து ஓடி வந்தார்கள் அவள் வீட்டினர்.

“அப்பா, மாடி படி முழுக்கத் தண்ணி, கால் வழுக்குது. கேர்ஃபுல்” என்று எச்சரிக்கை தந்து முன்னே ஓடினான் பிரகாஷ்.

அங்கே சிறகு ஒடிந்த பறவை போலக் கலைந்து கிடந்தாள் பிரியதர்ஷினி.

பிரபஞ்சன் பிரியம் பகிர்ந்து விட்டான். பிரபஞ்சனின் பிரியத்தை உணர்ந்தும் விட்டாள் பிரியதர்ஷினி. ஆனால், பிரபஞ்சம் இருவரையும் பிரித்து வைக்க அவர்களின் பிரியமும் அவளைப் போலவே பரிதவித்துக் கிடந்தது.

error: Content is protected !!
Scroll to Top