அத்தனை கோபத்திலும் கணவன் பகிர்ந்த பிரியமே பிரியாவின் மனத்தில் பசுமையாய்ப் பிரதானமாக இருந்தது. அதை மீறி எதையும் யோசிக்க முடியாத நிலை அவளுக்கு. அப்பாவிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறாள். அம்மாவிடம் அனைத்தையும் பகிர வேண்டும், ஆலோசனை கேட்க வேண்டும் என்று நினைக்கிறாள், ஆனால் அவை எதையும் செய்ய மனம் ஒத்துழைக்கவில்லை.
எல்லாவற்றையும் உதறி விட்டு அமைதியாய் ஆழ் மனத்தை ஆராய்ந்தபடி அமர்ந்திடவே ஆவல் கொண்டாள்.
பிரபஞ்சன், அவன் ஒருவன் மட்டும்தான் மொத்தமாய் அவள் மூளையை ஆக்கிரமித்திருந்தான்.
படுக்கையில் சாய்ந்து அமர்ந்து எதிரே கண்களை அலைபாய விட அங்கும் அவனே நின்றிருந்தான். அது அவர்களின் திருமணப் புகைப்படத் தொகுப்பு.
அந்தப் புகைப்படங்களில் அவன் கண்களில் நிரம்பி வழிந்த நேசம் இப்போது வேறு செய்தி சொன்னது.
“எப்படி, எப்படி அதைக் கவனிக்கத் தவறினாள் அவள்?” அவளுக்கு நினைவுத் தெரிந்து பிரபஞ்சன் ஒருநாளும் அவளை வேறு மாதிரி பார்த்ததே கிடையாது. அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தது கிடையாது. அவள் பின்னோடு அலைந்ததும் கிடையாது.
காதல் எனக் கடைக்கண்ணில் காட்டிக் கொண்டது கூடக் கிடையாது.
அவன் வீட்டில்தான் அவள் டியூஷன் படித்தாள். அங்கும் கூட அவளுக்கு ஒருவன் காதல் கடிதம் நீட்டியிருக்கிறான்.
பள்ளி, கல்லூரி காலங்களில் காதல், கத்திரிக்காய் எனச் சில பல நிகழ்வுகளை அவளும் கடந்து வந்திருக்கிறாள்.
பார்வை, பாட்டு, பிரியமென்று பிதற்றுவது, அவளையே பின் தொடர்வது, காதல் கடிதம் நீட்டுவது, கள்ளத்தனமாகக் கண் களவு செய்வது எனப் பட்டில் நீளுமே. அதில் எதிலுமே பிரபஞ்சன் இல்லையே.
அவள் மாலை வகுப்புகளுக்குச் செல்லும் போது அவன் வீட்டில் கூட இருக்க மாட்டான். எப்போதும் தெருவில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பான். அவனது கவனமெல்லாம் விடையாட்டில்தான் இருக்குமே ஒழிய ஒருநாளும் அவள் புறம் திரும்பியதில்லை.
அப்படியிருக்கையில், அவன் பிரியம் எப்படி அவளுக்குத் தெரிய வரும்.
தெரு, கிரிக்கெட் என்று யோசிக்கையில்தான், “காலி தெருவுல வண்டியோட்டி பழகின உன்னை நம்பி நான் வண்டியில வர்றதே பெருசு” என்று அன்றொரு நாள் கணவன் கேலி செய்தது அவளுக்கு நினைவில் வந்தது.
அதற்கடுத்து, “உனக்காக நம்ம ரோட்டயே காலியா வச்சாங்களே”
என்று அண்ணன் சொன்ன தகவலும் மனத்தை நெருடியது.
“அய்யோடா” என்று நெஞ்சில் கை வைத்துப் பின்னால் சாய்ந்தவள் தலை சுவரில் நங்கென்று முட்டியது. வலியை உணர்ந்தாலும் உதாசீனப்படுத்தினாள். அப்போதும் புகைப்படத்தில் இருந்து இமைக்காமல் அவளையே பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் அவன் பார்வையே அவளைப் பின் தொடர்ந்தது.
“பிராடு பிரபா, பல வருஷமா என்னைப் பார்த்திருக்கீங்க. ஒரு சின்னச் சிக்னலாவது எனக்குக் குடுத்திருக்கலாம் இல்ல?” அப்போதும் அதே மாறா புன்னகை அவனிடம்.
“என்னைப் பாரு பிரியா, என் கண்ணைப் பாரு” நெருக்கத்தில் கிசுகிசுக்கும் அவன் குரல் இப்போது நினைவில் வந்து குறுகுறுப்பூட்ட கண் மூடி படுக்கையில் சரிந்தாள்.
அவன் காதலை உள்வாங்கிய கணம், அது மனத்தில் ஏற்றிய இனிமையான, இம்சையான கனம், அவளின் பசியை மந்திக்கச் செய்திருந்தது.
அலைபேசியை ஓரமாகப் போட்டு விட்டு அப்படியே படுக்கையில் சுருண்டு விட்டாள். மழை நாளின் காற்று அவளைக் குளிர்ச்சியாகத் தாலாட்ட அப்படியே உறங்கியிருந்தாள்.
அலைபேசி அடித்துதான் அவளை எழுப்பி விட்டது.
அண்ணன் பெயரை பார்த்ததும், “சொல்லுண்ணா” என்று அழைப்பை ஏற்றாள். அவளின் உறக்கம் சுமந்த குரல் கரகரத்து ஒலித்திட, தங்கைக்கு உடல் நிலை சரியில்லையோ என அந்தப் பாசக்கார அண்ணனை கவலையுறச் செய்தது.
“தர்ஷி ஏன் ஒரு மாதிரி பேசுற? உடம்புக்கு முடியலையா?”
“இல்லண்ணா, தூங்கிட்டேன்”
“என்னது தூங்கிட்டியா? உடம்புக்கு எதுவும் முடியலையா? பிரபஞ்சன் எங்க?” என்று அக்கறையாகக் கேட்டான்.
“ப்ராஜெக்ட்ல இஸ்யூனு அவர் ஆபீஸ் போய் இருக்கார்ண்ணா. நான் சும்மா உக்காந்திருந்தேன், அப்படியே தூங்கிட்டேன் போல, வேற ஒன்னுமில்ல”
“சரி, சாப்பிட்டியா இல்லையா?”
“ம்ம்ம்” என்று அவள் இழுக்க, “அம்மா கால் பண்ணாங்களாம், நீ எடுக்கலன்னு சொல்லிட்டு இருந்தாங்க” என்றான்.
அவளுக்கு என்ன சொல்லி சமாளிப்பதென்றே தெரியவில்லை.
“நான் அம்மாக்கு இப்ப கால் பண்றேன்ண்ணா” என்றாள், சமாளிப்பாக
“ஓகே, நீ கால் பண்ணி பேசு. நான் உங்க ஏரியா பக்கம் ஒரு வேலையா வந்தேன். பத்து நிமிஷத்துல உங்க வீட்ல இருப்பேன்.” என்றிருந்தான். பிரகாஷ் சொன்ன படியே பத்தே நிமிடத்தில் தங்கையின் வீட்டில் இருந்தான்.
அண்ணன் வருகிறான் என்றதும் விரைந்து எழுந்து, முகம் திருத்தி தயாராக நின்றிருந்தாள் பிரியதர்ஷினி. அம்மாவிடம் கூடப் பேசவில்லை. ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும், “நீ மட்டும் தனியாவா இருக்கத் தர்ஷி? போராடிக்கலயா?” என்று கேட்டான் பிரகாஷ்.
கண்களால் அந்த வீட்டை சுழற்றியவன், “எனக்கும், அம்மாக்கும் இன்னைக்கு லீவ்தான். நீ வீட்டுக்கு வர்றேன்னு சொன்னா அப்பாவும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்க. வா, நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று வற்புறுத்தி அழைத்தான்.
“உன் முகமே சரியில்ல. ரொம்ப டல்லா தெரியுற” என்று அவன் மேலும் பேச, “அத்த இப்போ வந்துடுவாங்கண்ணா. அவரும் ஒர்க் முடிஞ்சதும் வந்துடுவார்.” என்று இடைபுகுந்து சொன்னாள்.
“நான் உனக்கு டீ போடவா?”
பொறுப்பாக அவள் கேட்க, “சரி, வா. வெளியில போய்ச் சூப்பரா ஒரு காஃபி குடிச்சுட்டு வருவோம். உனக்குப் பிடிச்ச சமோசா சாட் வாங்கித் தர்றேன்” என்று ஆசையாக ஆசைக் காட்டி அழைத்தான்.
“அப்போ நான் போடுற டீ மோசமா இருக்கும்னு சொல்ற, அப்படித்தானே?”
“இல்லையா பின்ன?” என்று கேட்டு சிரித்தவன், அவள் நீட்டிய தண்ணீரை வாங்கி அருந்தினான்.
“இப்போ என் கூட நீ வர போறியா இல்லையா தர்ஷி? நான் கூப்பிட்டுட்டே இருக்கேன். நீ காதுலயே வாங்கிக்காம வேற பேசிட்டு இருக்க?”
“கொஞ்ச நேரத்துல அத்தை ஸ்கூல்ல இருந்து வந்துடுவாங்கண்ணா”
“அதுனால? நீ நம்ம வீட்டுக்கு வர மாட்டியா? நீ என் கூட வா, பிரபஞ்சன் ஆஃபீஸ் முடிச்சுட்டு வரும் போது உன்னை நம்ம வீட்ல இருந்து பிக் அப் பண்ணிக்கச் சொல்லலாம்” என்று வலியுறுத்தினான்.
“இல்லண்ணா” என்று அவள் சொல்லவும் பிரகாஷின் முகமே மாறி விட்டது. அவளுக்கு ஐயோ என்றானது.
பிரபஞ்சன் எப்போதும் அவளிடம் பிரியமாகத்தான் இருந்திருக்கிறான். அவர்களுக்குத் திருமணம் முடிவான நாளில் இருந்து அவன் அப்படித்தான். அவளுக்குப் பிடித்தது மட்டுமே அவளுக்கு அவனிடம் இருந்து கிட்டியது.
பிரிய மழை பொழிந்தான் என்பாள். அதைத் திருமண வாழ்வின் ஆரம்பக் காலங்கள் இப்படித்தானே இருக்கும் என எளிதாக ஏற்றுக் கொண்டாள் அவள். ஆனால், அவனது பிரியத்தின் ஆழத்தை அறிந்த பின் எப்போதடா அவனைப் பார்ப்போம், பேசுவோம் என்றிருந்தது அவளுக்கு.
பிரபஞ்சனின் கண்களில் எப்போதும் அவளுக்கான பிரியம் இருக்கும். இன்றைக்கு அவன் கண்களை நேராகப் பார்த்து அதன் ஆழத்தை அவள் உணர வேண்டும். அவன் கண் பார்த்து தன் பிரியத்தை, அவன் மேலான பிடித்ததைப் பகிர வேண்டும்.
அவனுக்குப் பிடித்தவை பற்றி அவளுக்குத் தெரியாதா என்ன?
கிரிக்கெட், அம்மா, பார்த்திபன், பிரியதர்ஷினி. இதில் வரிசை வேண்டுமானால் மாறலாம். ஆனால், அவனின் பிரிய பிரபஞ்சம் இவைதான் என்பது அவளுக்கு உளமார தெரியும்.
தனக்காக அவனுக்குப் பிடித்ததை எல்லாம் ஒதுக்கி இருக்கிறான். தன் மேல் அத்துணைப் பிரியம் கொண்டவனுக்குப் பதிலாக என்ன செய்யப் போகிறாள் அவள்? அவனுக்குப் பிடித்ததைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லியது அவன் மேல் அவள் கொண்ட பிரியம். அதற்கு அவள் வீட்டில் இருக்க வேண்டுமல்லவா.
என்னதான் பிரபஞ்சன், “போ, திரும்பி வராதே” என்று கோபத்தில் சொல்லி இருந்தாலும், அதைப் பின்னுக்குத் தள்ளி விட்டு அங்கேயே இருக்க முடிவு செய்திருந்தாள் அவள்.
இப்போது, “இந்தா, அம்மா பேசுறாங்க” என்று தன் அலைபேசியை அண்ணன் நீட்டவும், அவனை முறைத்தபடி வாங்கி, “சொலுங்கம்மா” என்றாள்.
“இல்லம்மா, நான் நாளைக்கு அவரோட வர்றேன் மா. பிளீஸ்” அவளின் எந்த மறுப்பும் அங்கே எடுபடவில்லை.
“ஏழு மணி போல நீதான் என்னைத் திரும்பக் கூட்டிட்டு வந்து இங்க விடணும்ண்ணா” என்று அண்ணனுக்கு அன்பு கட்டளை இட்டே வீட்டிற்குக் கிளம்பினாள்.
“நான் மாப்ளைக்குப் போன் பண்ணி சொல்லிடுறேன். உனக்காகப் பிரபஞ்சன் பறந்து வருவார்” என்று கேலி செய்து தங்கையை அழைத்துச் சென்றான் பிரகாஷ்.
அவள் வீட்டில் இருந்து கிளம்பும் முன் மரகதவல்லியை அழைத்து, “எங்கண்ணா வீட்டுக்கு வந்திருக்கான் அத்த. அவனோட எங்க வீட்டுக்கு போறேன். நைட் கண்டிப்பா திரும்ப வந்துடுவேன்” என்று தகவல் சொல்லியே சென்றாள்.
பிரபஞ்சனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள். அவன் பார்க்கவும் இல்லை. பதில் அனுப்பவும் இல்லை.
அம்மா வீட்டில் காலடி வைத்ததும், “வா தர்ஷி. ஏன் ஒரு மாதிரி இருக்க? தலைவலியா? லஞ்ச் சாப்பிட்டியா இல்லையா?” என்று அன்புடன் விசாரித்தார் ராதா.
“நான் நல்லாதான் மா, இருக்கேன். எனக்கு ஒன்னும் இல்ல. சும்மா போன் பார்த்திட்டுப் படுத்திருந்தேன், அப்படியே தூங்கிட்டேன் மா. அதான் சாப்பிட மறந்துட்டேன்” என்ற மகளைக் கடிந்து கொண்டே, மதிய உணவை சூடுப்படுத்தி அவளுக்கு எடுத்து வந்தார்.
அந்நேரம் அப்பாவும் வந்து விட, பேச்சு பிரகாஷின் கல்யாணத்தைப் பற்றிய திசைக்கு மாறியது.
“நேத்து அவருக்கு ஒர்க் அதிகம்ண்ணா. அதான் அவரால வர முடியல. உனக்காக ரொம்ப ஃபீல் பண்ணார்” என்று கணவனுக்காக அவள் பரிந்து பேச, “ம்ம், மாப்ள நேத்து நைட்டே என்கிட்ட பேசிட்டாரே தர்ஷி” என்றான் பிரகாஷ், புரியாத பாவனையுடன்.
“அப்படியா? எப்போண்ணா? என்கிட்ட அவர் எதுவும் சொல்லலையே”
“ஒரு ஒன்பதரை போலப் பேசினார். நாங்க ரெண்டு பேரும் ஹாஃப் அன் அவருக்கு மேல பேசியிருப்போம். அவர்கிட்ட பேசினதுக்கு அப்புறம்தான் எனக்குத் தெளிவே வந்திருக்கு. நீ என்னன்னா..” என்று அவன் சிரிக்க, “பிராடு பிரபா” மீண்டும் கணவனை மனத்தில் தாளித்தாள்.
அவனுக்கு எப்போதும் இதே வேலைதான்.
அவர்கள் விருந்துக்கு அவள் வீடு செல்ல தாமதமாகும் என்றால் அவளிடம் கூடத் தகவல் சொன்னதில்லை. எல்லாம் நேரடி டீலிங்தான். அவனே நேராக மாமனருக்கு அழைத்துத் தகவல் சொல்லி விடுகிறான். அண்ணனின் திருமணப் பேச்சு வார்த்தையில் சிக்கலா, இதோ அவனிடமே மனம் விட்டு ஆறுதலாகப் பேசியிருக்கிறான்.
தன்னிடம் அப்படி மனம் விட்டுப் பேசுவதற்கு எது அவனைத் தடுக்கிறது? என்ற கேள்வியே அவளுக்குக் கோபத்தைக் கொடுத்தது.
அப்பாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, சந்தேகங்களை எல்லாம் மறந்து விட்டு அப்படியே அங்கிருந்து நழுவி மாறியேடி விட்டாள்.
“நான் இல்லனாலும் நீ தனியா தைரியமா மொட்டை மாடிக்கு வரணும் பிரியா” கணவனின் குரல் பிரியம் சுமந்து அவள் செவியில் எதிரொலித்தது.
அந்த நினைவு வந்ததும், பல வருடங்களுக்கு முன்பு நடந்த மொட்டை மாடி சம்பவம் நினைவுக்கு வந்தது.
பார்த்திபனின் பாடலை தவறாக அர்த்தம் கற்பித்துக் கொண்டது போல, தான் இதையும் தவறாகப் புரிந்து கொண்டோமோ என்று முதன்முறையாகச் சரியான வழியில் சிந்தித்தாள்.
அன்றைக்கு அந்தக் குடிகாரன் காலில் அடிப்பட்டிருந்ததே, அவன் நடக்க முடியாமல் நொண்டி நொண்டி வந்தது அவளுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அதை அவளுக்காக மரகதவல்லி செய்யவில்லையோ?
பிரபஞ்சன் செய்தானா? அப்போது அவன் கல்லூரி படித்துக் கொண்டிருந்தான்தானே? அவன் செய்திருக்க வாய்ப்பு அதிகம். மரகதவல்லி எப்படி அந்தக் குடிகாரன் காலை உடைத்திருப்பார்? வாய்ப்பில்லையே.
எதையும் பேசி சரி செய்ய வேண்டும் என்று நினைப்பாரே தவிர அடிதடி என்று இறங்குவதில் அவருக்கு உடன்பாடே கிடையாது. ஆக அது கணவனின் கைங்கரியம்தான்.
“அப்பவேவா?” என்று அதிர்ந்து போனாள்.
“உன்னைக் கடந்து போகவே முடியல என்னால” அவன் வார்த்தைகளின் ஆழம் மட்டுமல்ல, பிரியத்தின் ஆழமும் இப்போது அவளுக்குப் புரிந்தது.