“பிரியா..”
“என்னங்க?” அவனுக்கான உணவுடன் அவள் வரவும், “அம்மா வீட்டுக்கு வந்ததும் எனக்குக் கால் பண்ண சொல்லு” என்றான்.
“ம்ம், விஷயம் என்னன்னு சொல்லுங்க. நானே அத்தைக்கிட்ட சொல்லிடுறேன்”
“அம்மாவை எனக்குப் போன் பண்ண சொல்லேன் பிரியா. என்ன ஏதுன்னு சொன்னாதான் சொல்லுவியா?” என்று அவன் குரல் உயர்த்த, அந்நேரம் அவனை அழைத்தார் மரகதவல்லி.
“ம்மா..” என்றவன் தயக்கத்துடன் மனைவியைப் பார்த்தான்.
“இல்லம்மா, எங்க ப்ராஜெக்ட்ல சின்ன இஸ்யூ. அதான் ஆபீஸ் கிளம்பிட்டேன்”
“அது ஒன்னும் இல்லம்மா, ஈவ்னிங் பார்த்தி வந்து ஒரு செக் குடுப்பான். அத வாங்கி வச்சுக்கோங்க” என்றான். மறந்தும் மனைவியின் பக்கமே திரும்பவில்லை அவன் கண்கள்.
அம்மாவிடம் பேசி முடித்து அப்படியே வெளியேற போனான்.
“பிரபா..” வேகமாக அவன் கைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள் அவள்.
சட்டெனத் திரும்பியவன், அவள் கையை மென்மையாக உதறி, “அவனுக்கு என்னோட ஆஃபீஸ் தெரியாதா? ஏன் அங்க வந்து செக்கை குடுக்க மாட்டாராமா, வீட்டுக்குத்தான் வரணுமான்னு நீ கேட்கலாம். ஆனா, நீ நம்பலன்னாலும் நான் அவனை வீட்டுக்கு வரச் சொல்லல பிரியா. அவனுக்கு இன்னைக்கு லீவ், மேட்ச் ஆட போய் இருக்கான். அது முடிஞ்சு வீட்டுக்கு போற வழியில.. நம்ம வீட்டுக்கு வந்து செக் குடுக்கறதா சொல்றான்.” என்று அதி அவசரமாக விளக்கம் கொடுத்தான்.
காசோலை என்றதும் பிரபஞ்சன் அவனுக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.
“அவர் எப்போ வருவாரு?” என்று அவள் கேட்கவும், அதிர்ச்சியாக நோக்கினான்.
“நீங்க வர ரொம்ப லேட்டாகுமா? உங்க ஃப்ரெண்ட் வர்றதுக்கு முன்னாடி நீங்க வந்துடலாம் இல்ல?” அவளின் அந்தக் கேள்வியையும் அவன் வில்லங்கமாகத்தான் விளங்கிக் கொண்டான்.
“அவன் வர்றதுக்கு முன்னாடி நான் வரணுமா?”
“இல்ல, அவர வீட்டுக்கு கூப்பிட..”
“அவன் வீட்டுக்கு வர மாட்டான் பிரியா. கீழ இருந்து கால் பண்ணுவான். அம்மா போய் வாங்கிப்பாங்க”
“அதான், அத்த ஏன் கீழ போகணும்..”
“என்ன பிரியா உன் பிரச்னை? என்ன வேணும் உனக்கு இப்போ? என் தலைக்கு மேல கத்தி தொங்கிட்டு இருக்கு. நீயும் கார்ப்பரேட்ல ஒர்க் பண்றதானே? நான் எப்போ வருவேங்கற கேள்வியெல்லாம் எப்படிப் பிரியா கேக்கற? சில நேரம் ரெண்டே நிமிஷத்துல பக் கண்டுபிடிச்சி சரி பண்ணிடலாம். சம் டைம் சில பக்லாம் டீகோட் பண்ணவே ரெண்டு மூனு மணி நேரமாகிடும். இதுல.. உனக்கு நான் வீட்டுக்கு வர டைம் சொல்லணும்னா எப்படிப் பிரியா முடியும்? ஆபீஸ் போய்ட்டு என்ன சிட்டுவேஷன்னு பார்த்திட்டு கால் பண்றேன்” என்றான்.
“நான் வர்றதுக்கு முன்னாடி பார்த்து வந்தா அம்மா பார்த்துப்பாங்க. நீ அவனைப் பார்க்க வேண்டி இருக்காது. சோ டோண்ட் வொர்ரி” என்றான்.
அவனது கடுமையான குரல் அவள் மனத்தில் அபாய மணியை அதிர விட்டது. அதையும் மீறி, “நான் சொல்ல வர்றதையே புரிஞ்சுக்காம நீங்க பாட்டுக்கு பேசுறீங்க பிரபா” என்று மனத்தாங்கலுடன் சொல்லி விட்டாள்.
மறுகணம் வாயை குவித்து, “ஊப்ப்” என்று காற்றை வெளியேற்றினான். அத்துடன் சேர்த்து தனது கோபத்தை, மன அழுத்தத்தையும் வெளியேற்ற முனைந்தான்.
“நீங்க, என்னை முழுசா பேச விடாம..” என்று அவள் தொடங்க, “சரி, சொல்லு. கேட்கறேன்” என்று முடித்தான்.
“உங்க ஃப்ரெண்ட் பார்த்திபன்..” இம்முறையும் மனைவியை முழுதாகப் பேச விடவில்லை அவன்.
நண்பனின் பெயரை கேட்டதும் குப்பென்று கோபம் பெட்ரோலாக பற்றிக் கொண்டது அவனுக்கு.
வேலை பளு, போதிய உறக்கமின்மை, பசி, மனைவிக்குப் பிடிக்காததைச் செய்து விட்டோம், அவள் கோபத்தைத் தூண்டுகிறோம் என்ற குற்ற உணர்ச்சி என எல்லாம் சேர்ந்து அவனை எரிய வைத்தது.
“பார்த்திபன்..” என்று பல்லைக் கடித்தான்.
“நான் அவன்கிட்ட பேசிட்டுதான் இருக்கேன். போதுமா? உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும். ஆனா, என்னால அவனோட பேசாம இருக்க முடியல. என்னை என்ன செய்யச் சொல்ற?”
“நான்…”
“அடுத்து என்ன கேட்க போற? நேத்து நைட் ஏன் கிரிக்கெட் விளையாட போனேன்னுதானே? உங்ககிட்ட சொல்லாம போனது தப்புதான், நீ ஏற்கனவே உங்கண்ணா விஷயத்துல அப்செட்டா இருந்த. அந்நேரம் உன்னைக் கால் பண்ணி, எழுப்பி, இன்ஃபார்ம் பண்ணி தொல்லை பண்ண வேணாம்னு அப்படியே கிளம்பிட்டேன். உங்கிட்ட மறைக்கணும்னு நான் நினைக்கல.. ட்ரஸ்ட் மீ” அதுவரை குற்றம் செய்தவன் போலப் பொறுமையாக விளக்கம் சொன்னவன், “ப்ச்” என்றான் வெறுப்பும், சலிப்புமாக.
“பிரபா..”
“பேசாத” என்று கர்ஜித்தான். அதுவரை அடக்கி வைத்திருந்த அவனது உணர்வெல்லாம் எரிமலை போலச் சீற்றத்துடன் வெளிப்பட்டது.
அவளை நெருங்கி அவள் கண்களைக் கூர்ந்து, “உனக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்?” என்று கோபமாகக் கேட்டான்.
“ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போறோமே, அவனைப் பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சுப்போம்னு உனக்கு துளி அக்கறையாவது இருந்ததா சொல்லு?”
“காரணம் கேட்டா.. எங்கப்பாக்கு உங்களைப் பிடிக்கும், எனக்கு உங்கம்மாவை பிடிக்கும். சோ, நான் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்னு சொல்லுவ. சரி, நீ கல்யாணத்துக்குச் சம்மதிக்க அதுலாம் காரணமா இருக்கலாம். ஆனா அதுக்கு அப்புறம் கூட உனக்கு என் மேல ஆர்வம், அக்கறை, அன்பு எந்த மயிரும் வரலையா? என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு? ம்ம்ம், சொல்லு பிரியா.. இப்போ மட்டும் ஏன் அமைதியா இருக்க?”
“எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு ஏதாவது தெரியுமா உனக்கு?”
“தெரியும்” என்றாள் ரோஷத்துடன். அவனது கோபமும், வார்த்தைகளும் அவளைக் கண் கலங்க செய்திருந்தன.
“என்ன தெரியும்? சொல்லு, என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு?” அவன் வார்த்தைகள் அவள் முகத்தில் அறைந்தன.
“பிரபா..”
“என் மனசுல இருக்க ஏக்கம், எதிர்பார்ப்பு உன் கண்ணுக்கு என்னைக்கும் எட்டவே எட்டாது பிரியா. முதல்ல உன் கண்ணுல அதெல்லாம் பட்டாதானே உன் கருத்துல பதியும்? உங்கிட்ட எதிர்ப்பார்க்கற என்னைச் சொல்லணும்..” என்று கோபத்துடன் பல்லைக் கடித்தான்.
அவள் பட்டென அவன் கையைப் பற்றினாள்.
அதை மின்னல் வேகத்தில் உதறியவன், “பார்த்திபன் போன் பண்ணா உன்னை விட்டுட்டு போயிடுவேன்னு சொன்ன இல்ல நீ? அப்படி உன்னை அம்போன்னு விட்டுட்டு போயிடுவேன்னு எப்படி நீ நினைக்கலாம்? எங்கம்மாக்கு உன்னைப் பிடிக்கும்னு உன்னைப் பொண்ணு கேட்டு வரல நாங்க. அதை முதல்ல உன் மண்டையில ஏத்திக்கோ..” என்று கத்தினான்.
அவள் கண்களைக் கூர்ந்து, “எனக்கு உன்னைப் பிடிக்கும் பிரியா” என்றான் அழுத்தம் திருத்தமாக. உண்மையை உரக்க அவன் வாயாலேயே சொல்லி விட்டான். பிரியதர்ஷினி பட்டென மூச்சை உள்ளிழுத்தாள்.
“பல வருஷமா என் பிரியமும், பிரபஞ்சமும் நீதான். நீ மட்டும்தான்.”
அந்த வார்த்தைகள் கோடை மழையாய் எதிர்பாராத கணத்தில் அவளுள் குளிர்ச்சியாக உள்ளிறங்கியது. அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தன. குருவியைப் போல வாயை திறந்து திறந்து மூடியவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. மொழி மறந்த நிலையில் நிலை மறந்து நின்றிருந்தாள்.
“நான் எவ்வளவோ டிரை பண்ணேன். ஆனா என்னால உன்னைத் தாண்டி போகவே முடியல. ஆனா நீ.. உனக்கு இப்பவும் என்னோட மனசு ஒரு பொருட்டே இல்லைல்ல?” அவள் விழிகளுக்குள் ஊடுருவி கேட்டான்.
“சா….ரி” என்றாள் திக்கி திணறி.
அந்த மன்னிப்பை ஏற்கும் என்ன, கேட்கும் மனநிலை கூட இல்லாதவன் போலக் கணத்தில் அங்கிருந்து காணாமல் போய் இருந்தான் பிரபஞ்சன்.
அவள் கையில் கனத்தது, அவனது காலி வயிறுக்கு இட பொதிந்த உணவு.
அவன் வார்த்தைகள், அவளுள் புயலை கிளப்பியிருந்தது.
“என் பிரியமும், பிரபஞ்சமும் நீதான். நீ மட்டும்தான்.” பிரபஞ்சனின் பிரியம் பேரலையாக எழுந்து அவளைச் சுருட்டியது.
“எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு ஏதாவது தெரியுமா உனக்கு?” அவனது கேள்விக்கான சரியான பதில் அவளுக்குத் தெரியும். ஆனால் அதில் தானும் சேர்த்தி என அவளுக்குத் தெரியாதே.
அரை மணி நேரத்தில் அவளது பிரபஞ்சத்தையே புரட்டி போட்டு விட்டிருந்தான் பிரபஞ்சன்.
“கவனமா டிரைவ் பண்ணுங்க. ஆபீஸ் போனதும் சாப்பிடுங்க, பிளீஸ்” என்று அந்த நேரத்திலும் அவனுக்குக் கரிசனத்துடன் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
பத்து நிமிடங்கள் கழித்து அப்பா அழைக்கவும், வீட்டுக்கு செல்லத் தயாரானாள். தனியாக இருக்கவே தவிப்பாக இருந்தது.
தற்போது ஆற அமர நிதானமாக அமர்ந்து கணவனின் கோபத்தைப் பிரித்துப் போட்டு ஆராயத்தான் அவளுக்கு ஆசை. ஆனால் அப்பா அழைக்கவும் அங்குச் செல்லவும் விரும்பியது அவள் மனம். அப்பாவிடம் மனம் விட்டு பேசிட மனம் துடித்தது.
மதில் மேல் பூனையாகத் தத்தளித்தவள், கணவனுக்கே செய்தி அனுப்பிச் சந்தேகம் கேட்டாள்.
“நான் அம்மா வீட்டுக்கு போகவா?” என்ற செய்தியை வாசித்ததும், அப்போதுதான் அணைந்திருந்த அவனது கோபத்தீ மீண்டும் பற்றிக் கொண்டது.
“போகவா?” என்று என்ன அர்த்தத்தில் கேட்கிறாள்? அவனது கோபத்துக்கு அவள் கொடுக்கும் மதிப்பும், எதிர்வினையும் அவ்வளவு தானா? தான் வீடு வரும் வரையில் அவளால் காத்திருக்கக் கூட முடியாதா?
நான் என் பிரியத்தைச் சொல்லி இருக்கிறேன். அதற்குப் பதிலாக, “அம்மா வீட்டுக்கு போகவா?” என்றால் என்ன அர்த்தம்?
“போ” என்று ஒற்றை வார்த்தையில் பதில் அனுப்பினான்.
“போன்னா? திரும்ப வராதன்னு சொல்றீங்களா?”
“உன் விருப்பம் போல எப்படி வேணும்னாலும் அர்த்தம் எடுத்துக்கோ”
பிரியாவிற்கு யாரோ இரண்டு விரல்களால் தொண்டையை நெரிப்பது போலிருந்தது.
கண்ணீர் முட்ட அழுது விடாமல் இருக்க மூக்கை அவசரமாக உறிஞ்சினாள்.
“உங்க விருப்பம், உங்க பிரியம்னு நீங்களும் உங்க மனசைதானே பார்க்கறீங்க. எல்லாத்தையும் என்கிட்ட நேரா சொல்லணும்னு உங்களுக்குத் தோனவேயில்லையா?” கண்ணில் வைரமாய் மின்னிய இரு துளி கண்ணீருடன் தன் மனத்தைக் கசக்கிய கேள்வியைக் கேட்டே விட்டாள்.
“இப்ப சொல்லிட்டேனே. அதுக்கு நீ கொடுக்கிற முக்கியத்துவம் பார்த்து எனக்குப் புல்லரிச்சி போகுது” மின்னல் வேகத்தில் வந்தது பதில்.
“உங்கப்பா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார். அண்ட் எனக்கு வேலை இருக்கு” என்று மொட்டையாகப் பதில் அனுப்பி இருந்தான்.
அலைபேசி திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் பிரியா.