காலை சூரியன் காணாமல் போய் இப்போது நண்பகல் வானம் மேக மூட்டமாகக் காட்சி தந்தது.
வெண்மையும், கருமையும், நீலமும் கலந்து நவீன ஓவியம் போலிருந்தது. பால்கனியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அள்ளியவள் மேனியை தழுவிய காற்றில் அப்படியொரு குளுமை. உடல் சிலிர்க்க அந்தக் காலநிலையைச் சில நொடிகள் ரசித்து நின்றிருந்தாள் பிரியதர்ஷினி.
அவள் கண் முன்னே வானம் மேலும் இருள சட்டென மண்ணில் விழுந்தது மழைத்துளி. அங்கேயே அப்படியே நின்று அந்த முதல் மழையை ரசித்தாள். மூன்றாம் தளத்தில் இருந்ததால் மண் வாசம் நாசியை நிறைக்கவில்லை என்றாலும் மழையின் ஈரம் மனத்தைக் குளிர்விக்கப் போதுமானதாக இருந்தது.
அவளுக்குப் பல வருடங்கள் கழித்துப் பிரபஞ்சனை பார்த்த நினைவு மனத்தில் வந்தது.
ஓர் அடை மழை நாளில் தொப்பலாக நனைந்து அவள் முன் நின்றவனை, சத்தியமாகச் சட்டென அவளால் அடையாளம் காண முடியவில்லை.
அவன் அடர்ந்த குரலில், “பிரியதர்ஷினி” என்று அவளை அழைத்தது இன்றும் கனவு போலிருக்கிறது.
இடைப்பட்ட ஐந்தாறு ஆண்டுகளில் அவளிடம் ஏகப்பட்ட மாற்றங்கள். அன்று, அப்பாவுடன் வீடு வந்திருந்தான். அந்த மழை நாளில் அவள் அப்பாவை பத்திரமாக வீடு சேர்ப்பிக்க வந்திருந்தவனுக்கு, தான் மாணிக்கவேலின் மகளென எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிந்திருக்கும் என்றே நினைத்திருந்தாள்.
அன்றைக்கு அவன் பார்த்த பார்வை, தன் பெயரை நினைவில் வைத்து உச்சரித்த விதம், அதன் பிறகான அவர்களின் திருமண ஏற்பாடு எல்லாம் சேர்த்து இப்போது அவளுக்கு வேறு அர்த்தம் சொன்னது.
பள்ளி, கல்லூரி காலங்களில், “ஓ பிரியா பிரியா” பாடலை பாடித்தான் பெரும்பாலும் அவளைக் கேலி செய்வார்கள் பலர். பார்த்திபனையும் அந்தப் பட்டியலில் சேர்த்திருந்தாள் அவள். அதற்கு இப்படியொரு கோணம் இருக்கலாம் என்று அவள் சிந்திக்காமல் போனதற்கு அதுவே காரணம். அதைக் கேலியாக மட்டுமே எடுத்திருந்தாள். காதல் என்று கோணத்தை யோசிக்கும் வயதும் அல்ல அது. அப்படியொரு எண்ணமும் இல்லை அவளுக்கு. என்ன செய்வது!
கணவன் தன்னைக் காதலித்தானா? அந்தக் கேள்வி அவளை வண்டாகக் குடைந்தது.
பிரபஞ்சன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவனை அப்படியே உலுக்கி எழுப்பி விசாரிக்கும் வேகம் வந்தது.
சில நாள்களுக்குப் பிறகு நிம்மதியான உறக்கத்தில் இருக்கிறான். “தூங்கட்டும்” சிறிய தலையசைப்புடன் அறைக்குள் வந்தாள். கையில் இருந்த துணிகளை அவள் மடித்து வைக்க, பிரபஞ்சன் புரண்டு படுத்தான்.
மெல்ல அவனை நெருங்கி, “பிரபா..” என்று மென்மையாகத் தோளை தொட்டு அழைத்தாள்.
அவன் தோளில் பதிந்த அவள் கையில் தலையைச் சாய்த்து, “ம்ம்ம்” எனச் சொல்லி உறக்கத்தைத் தொடர்ந்தான் அவன்.
அவனது உறக்கத்தைக் கலைக்க விரும்பாமல் அப்படியே படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து விட்டாள்.
அந்நேரம் அவளது அலைபேசி சத்தமாக ஒலியெழுப்ப, “அய்யோடா, இவர் தூங்கற நேரம் யார் கால் பண்றது?” என்று புலம்பிக் கொண்டே வேகமாக எழுந்தாள். அவள் கையை உருவியதில் அவன் தலை சரியவும், அவனும் கண் விழித்திருந்தான்.
அவனுக்குத் தூக்கம் போதவில்லை போலும். கொட்டாவி விட்டபடி கண்ணைக் கசக்கி விட்டான்.
பிரியா வேகமாக அம்மாவின் அழைப்பை துண்டித்து, “சாரி, உங்களை எழுப்பி விட்டுட்டேனா?” என்று கேட்டாள். மறுப்பாகத் தலையசைத்தான்.
“காஃபி தரவா?”
“ம்ஹும்” என்று மறுத்து, “மணி என்ன?” என்று கேட்டபடியே படுக்கையை ஒட்டிய மேஜையில் இருந்த தன் அலைபேசியை எடுத்தவன், ஒரு நொடிதான் அசட்டையாக இருந்திருப்பான். அலைபேசி திரை முழுக்க ஓடிய அவன் கருவிழிகள் மெல்ல மெல்ல விரியத் தொடங்கின.
மறுகணம், “ப்ச், இவனுங்களோட..” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தான்.
“என்ன பிரபா, என்னாச்சு?”
“டெஸ்டிங் டீம் நாலு மணி நேரத்துக்கு முன்னாடியே எனக்கு மெயில் போட்டிருக்கானுங்க. நான் அதையே இப்போதான் பார்க்கறேன்.”
“ப்ராஜெக்ட்ல ஏதாவது பிரச்னையா?”
“ஆமா, பக்னு (Bug) சொல்லி இருக்கானுங்க. என்னன்னு பாக்கணும்” என்றவன் குரலில் அப்படியொரு அலுப்பு. நான்கு விரலால் கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.
“ப்ச், மனுஷனை நிம்மதியா அரை நாள் கூடத் தூங்க விட மாட்டேங்கறானுங்க” கோபத்துடன் அலைபேசியைப் படுக்கையில் எறிந்தான்.
“நேத்து நைட் ஒர்க் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்து நல்லா ரெஸ்ட் எடுத்திருக்கலாம் இல்ல பிரபா? உங்க கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு. நீங்க ஒழுங்கா தூங்கி எவ்வளவு நாளாச்சு தெரியுமா? இப்போ திரும்பவும் வேலைன்னு..” ஆதங்கத்துடன் அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, படக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான் அவன்.
மனைவியின் அக்கறையும், அன்பும் அவனுக்குப் புரிந்தது. ஆனாலும், அந்த அக்கறையின் பின்னே இருந்த மறைமுகக் குற்றச்சாட்டுதான் அவனைக் கோபம் கொள்ளச் செய்தது.
“வேலை முடித்து வீடு வராமல், ஏன் கிரிக்கெட் விளையாட சென்றாய்?” என்று கேட்கிறாளோ? என்ற எண்ணமே ஏகத்துக்கும் அவனது எரிச்சலை ஏற்றி விட்டது.
மனைவியின் பக்கமே திரும்பாமல் ஓய்வறைச் சென்றான்.
சற்று நேரத்தில் குளித்து வந்தவன், அலைபேசியை எடுத்து அவசரமாகத் தனது குழுவுக்கு அழைப்பு விடுத்தான்.
அவனைப் போலில்லாது அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் போலும். டெல்லியில் இருப்பவன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மற்ற அனைவருக்கும் அழைப்புச் சென்றது, ஆனால் அவர்கள் ஏற்கத்தான் இல்லை.
ஒரு ப்ராஜெக்ட் முடிந்து டெஸ்டிங் சென்றால் இது போன்ற பிரச்சனைகள் வரும் என்பது அவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இதையெல்லாம் எதிர்பார்த்தே இருப்பார்கள் அவர்கள்.
அதிலும் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க அது வார இறுதி, விடுமுறை தினம் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், டெஸ்டிங் டீம் மெயில் அனுப்பி விடுவார்கள்.
இப்போது அவன் உடனடியாக அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லையேல் அவனது உயர் அதிகாரிக்கு மெயில் பறக்கும். ஏற்கெனவே இருக்கிற வேலை பளு தலைவலியோடு, உயர் அதிகாரி, கிளையண்ட் என அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையும் சேர்ந்து கொள்ளும்.
அவனுக்கு அனிச்சையாக அழுத்தம் கூடியது. அவனது குழுவில் இருக்கும் மற்றவர்களை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. அவன்தான் அந்த ப்ராஜெக்ட்டுக்குப் பொறுப்பு. ஆக, இம்மாதிரியான சூழலில் அவன் காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. உடனடியாக அலுவலகம் கிளம்பினான் அவன்.
இன்றைக்கு அவனால் நிச்சயமாக வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது.
மீண்டும் ஒரு முறை தன் குழுவினரை அழைத்தான்.
உறக்க கலக்கத்துடன், “சொல்லுங்க டிஎல்” என்று மறுபக்கம் பதில் வரவும், “நத்திங் வேணு. எனக்கு ஈவ்னிங் எழுந்ததும் கால் பண்ணுங்க. ஓகே?” என்று சொல்லி முடித்து விட்டான்.
அப்போது அவனுக்கான காஃபியுடன் அறைக்குள் வந்தாள் பிரியதர்ஷினி.
“பிரபா, காஃபி..” என்று அவள் நீட்ட, “பெட்சைட் டேபிள்ல வை பிரியா, எடுத்துக்கறேன்” என்றான். அவள் கையிலேயே வைத்துக் கொண்டு நிற்க, அவன் வாங்குவதாகவே இல்லை.
“ரொம்ப லேட்டாகிடுச்சு, சாப்பிடுறீங்களா பிரபா? லஞ்ச் எடுத்து வைக்கவா?”
“ம்ம்ம், வேணாம்”
“காலைலயும் ஒன்னும் சாப்பிடல நீங்க. நேத்து நைட்டும் ஆபீஸ்ல ஒழுங்கா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பிளீஸ், கொஞ்சமா சாப்பிடுங்களேன்”
“டைமில்ல” என்றான் ஒற்றை வார்த்தையில்.
“ஒரு ஃபைவ் மினிட்ஸ்தானே பிரபா, நாலு வாய் சாப்பிட்டுப் போகலாம் இல்ல?”
“உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா பிரியா” சுருக்கென்று கேட்டு விட்டான். அவனுக்கு யார் மீது கோபம்? அவள் மீதா? இல்லை, அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் கிரிக்கெட் விளையாட சென்ற தன் மீதா? அவன் மனத்தைத் தொட்டு உண்மையைச் சொல்ல சொன்னால், இரண்டாவதுதான் என்பான்.
“சாரி” என்றாள் தொண்டை அடைக்க. அவன் கோபப்படும் பொழுதுகள் எல்லாம் மிக அரிது. அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாத முகம் அது.
“நான் வேணா உங்களுக்குப் பாக் பண்ணி தரவா? ஆபீஸ் போய்ட்டு கூடச் சாப்பிடுங்க” கெஞ்சலாகக் கேட்டாள்.
அவள் கையில் இருந்த காபியை வாங்கி, எப்போதோ உயிரை விட்டிருந்த அதை ஒரே மடக்கில் குடித்துக் காலி கோப்பையை அவளிடம் நீட்டினான்.
அந்நேரம் அவனது அலைபேசிக்கு அழைப்பு வந்தது.
“பார்த்திபன்” நண்பனின் பெயரை பார்த்ததும், அவன் முதுகுத் தண்டில் மின்சாரம் பாய்ந்தது போல நேராக நின்றான்.
அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஐயோ என்ன சொல்லப் போகிறாளே என்று மிரண்டு, மறுநொடியே அவனது அழைப்பை துண்டித்து விட்டான்.
“நேத்து நைட்.. பார்த்திபன்.. உங்க ஃப்ரெண்ட்… அந்த அண்ணாவும் உங்களோட கிரிக்கெட் விளையாட வந்தாங்களா?”
அந்தக் கேள்வி அவனது நரம்பு மண்டலத்துக்கு நாணேற்றி நிமிர்ந்து நிற்கச் செய்தது.
அவளது கேள்வியை மட்டுமே கவனித்தான் அவன். அதில் இருந்த அழைப்பு மாற்றத்தை பதற்றத்தில் அவன் கவனிக்கவேயில்லை.
நண்பனின் பெயரை உச்சரிப்பதே பாவம் போல, அவன் பெயரை விடுத்து, “அவன் எங்க ஆஃபீஸ்ல ஒர்க் பண்ணல. அப்புறம் எப்படி அர்த்த ராத்திரி எங்க ஆஃபீஸ் வருவான்?” என்று சற்று காட்டமாகவே கேட்டிருந்தான்.
“இல்ல..” அவள் பேசாதது போலப் பாவித்து, அவளைக் கடந்து தான் அலுவலகம் செல்ல தேவையான பொருட்களை எடுத்தான்.
“பிரபா, லஞ்ச் பேக் பண்ணவா பிளீஸ்”
“ம்ம்ம்” என்றவன், விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறினான். அவளும் வேகமாக அவனைப் பின் தொடர்ந்தாள்.
“அம்மா” என்று கத்தி அழைத்தவன், அதற்குப் பதில் வராமல் போகவும், “அம்மா, எங்க?” என்று அவளிடம் திரும்பி விசாரித்தான்.
“ஸ்கூல் போய் இருக்காங்க. இப்போ கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.” என்றாள். அவனோ ஆழ மூச்செடுத்து தலை கலைத்து கோதி கொண்டான்.
அவள் வேகமாகச் சமையல் அறைக்குள் செல்ல, அவசரமாக அம்மாவுக்கு அழைப்பு விடுத்தான். அது அவருக்கு வகுப்பு நேரமாக இருந்திருக்கும், அழைப்பை ஏற்கவில்லை அவர்.
மூன்று முறை முயற்சி செய்தவன், கடுப்பாகி சோஃபாவில் அமர்ந்தான்.