பிரபஞ்சன் உடலில் பரபரவெனப் பதற்றம் தொற்றியது. சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், சட்டென நிமிர்ந்து அமர்ந்தான்.
கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள் கழித்துக் கிரிக்கெட் ஆடியிருக்கிறான். அவன் உடலும் மனமும் புதிதாகச் சிறகு முளைத்த பறவையாகப் படபடத்துக் கொண்டிருந்தது. மனைவியின் பார்வையில் சிறகு ஒடிந்த பறவையாய் சோர்ந்து போனான்.
அவளுக்கு அவன் கிரிக்கெட் ஆடினால் பிடிக்காது என அவனுக்கு நன்றாகத் தெரியும். இம்முறை அவனது விருப்பத்தின் பேரில் அவன் கிரிக்கெட் விளையாட செல்லவில்லை. அவர்களுக்கு இருந்த வேலை நெருக்கடியில் அதையெல்லாம் யோசிக்கும் நிலையிலா அவன் இருந்தான்? ஆனால், அலுவலகத்தைப் பொறுத்தவரை அவன் சிறந்த கிரிக்கெட் வீரன். கிரிக்கெட் அவனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அலுவலகத்தில் டீம் அவுட்டிங் என்று வெளியே சென்றால் கூடக் கிரிக்கெட் மட்டையை எடுத்து விடுவார்கள். அவன் எந்த அணிக்கு என்பதில் அங்கே பெரிய போட்டா போட்டியே நடக்கும்.
முன்தின இரவு அவனது அலுவகத்தில் அவர்களோடு, மேலும் மூன்று குழுவினர் ப்ராஜெக்ட்டின் இறுதி கட்ட வேலையில் இருந்தார்கள். அனைவரும் இரவு கண் விழித்து வேலை செய்தார்கள்.
அவர்கள் குழுவுக்கு வேலை முடிய நள்ளிரவுக்கு மேலாகி இருந்தது. அவ்வளவு நேரம் மனத்தை அழுத்திய வேலை பளு குறையவும் பெருமூச்சுடன் ஆளுக்கொரு இருக்கையில் கண்களைத் தேய்த்தபடி கொட்டாவியுடன் சரிந்தார்கள்.
ஒருவன் அப்படியே உறங்கியே விட்டான்.
நான்கைந்து பேர், “ஹே பசிக்குதுடா யப்பா. வெளில போய் மிட்நைட் பிரியாணி இருக்கானு பார்த்திட்டு வருவோமா?” என்றார்கள்.
“ஐயோ எனக்கெல்லாம் மண்டை சூடாகி போய் இருக்கு. வாங்கப்பா ஒரு டேபிள் டென்னிஸ் கேம் ஆடுவோம்” என்று ஒருவன் அழைத்தான். அப்படியாக ஆளுக்கொன்றை சொல்ல, உணவு, விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
பிரபஞ்சன் அவர்கள் பக்கமே செல்லவில்லை.
அவனுக்கு மனைவியின் சோர்ந்த குரலே செவியில் மோதி தொந்தரவு செய்தது.
“நான் வீட்டுக்கு கிளம்பறேன் கைஸ்” என்று கார் சாவியுடன் எழுந்து விட்டான் அவன்.
“பாஸ், இருங்க பாஸ். எங்க ஓடுறீங்க” என்று அவனைப் பிடித்து அமுக்கி விட்டார்கள்.
“ஃபர்ஸ்ட் வெளில போய் ஏதாவது சாப்பிடுறோம். அப்புறம் டர்ஃப் போய் ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆடுறோம். என்ன சொல்றீங்க?” என்று ஒருவன் கேட்டதும், “கிரிக்கெட்டா?” என்று அதிர்ந்து விட்டான் அவன்.
“நான் செம்ம டயர்ட் கைஸ், நான் வீட்டுக்கு கிளம்பறேன். நீங்க என்னமும் பண்ணிக்கோங்க. என்னை ஆளை விட்டுருங்க” என்று நழுவ பார்த்தான். அவர்கள் அவனைப் போக விட்டால்தானே.
“என்ன பாஸ், நீங்களே வரலன்னு சொன்னா எப்படி? இத்தனை மாசமா எங்களைத் தூங்க விடாம வேலை வாங்கினீங்கதானே? இப்போ நாங்க வேலை முடிச்சுட்டு ரிலாக்ஸ் பண்ணுவோம்னு கூப்பிட்டா, வர மாட்டேங்கறீங்களே” என்று அவனைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள்.
“இதென்னப்பா உங்களோட தொல்லையா போச்சு. நீங்க போயிட்டு வாங்கய்யா. நான் வரல” என்றான் திட்டவட்டமாக.
“சரி விடுங்க பாஸ். அப்போ நாங்களும் போகல.” என்றவர்களைப் பார்க்க அவனுக்குப் பாவமாகப் போனது.
“நான் உங்களோட வர்றேன். ஆனா, என்னை விளையாட கூப்பிடாதீங்க. இப்பவே சொல்லிட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியே அவர்களுடன் சென்றான்.
அங்குச் சென்றும் ஒழுக்கமாக ஒதுங்கித்தான் நின்றான். சற்று நேரத்தில் ஆட்டம் சூடு பிடிக்க, பந்து பொறுக்கி போட்டவனைப் பந்து போட விட்டிருந்தார்கள். அடுத்தக் கணம் அவனும் ஆட்டத்தில் ஐக்கியமாகி இருந்தான்.
பல மாதங்களுக்குப் பிறகு அவன் உள்ளம் உவகைக் கொண்டது. நமக்குப் பிடித்த ஒன்றை செய்யும் போது வரும் உற்சாகமே அலாதிதானே. அவனுக்கு அந்த ஆட்ட பரபரப்பில் நேரம் போனதே தெரியவில்லை. நான்கரை மணி போல, “போதும் கைஸ்” என்று ஆட்டத்தை முடித்து வீடு வந்து சேர்ந்திருந்தான்.
இப்போது மனைவியின் முகத்தை நிமிர்ந்து நோக்கியவன், முகத்தில் முறுவல் மறைந்திருந்தது.
நான் திட்டமிட்டு விளையாட செல்லவில்லை. அலுவலக நண்பர்களின் வற்புறுத்தலால் சென்றேன் என்று அவளிடம் எப்படி விளக்குவான். அவன் விளக்கம் கொடுத்தாலும் புரிந்து கொள்வாளா அவன் மனைவி? இல்லை எப்போதும் போல அவனைக் குற்றம் சாட்டிடுவாளா? அவனது எண்ணங்கள் எங்கெங்கோ சிதற அமைதியாய் எழுந்து நின்றான்.
பிரியதர்ஷினி கூடத்துக்குள் வந்து, “காஃபி குடிக்கறீங்களா பிரபா?” என்று அவனிடம் கேட்டாள்.
“வேணாம். தூங்கணும்” என்றான், அவள் முகம் பாராமல்.
“நைட் எல்லாம் வேலை பார்த்திட்டு வெறும் வயித்தோட படுப்பியா? ரெண்டு தோசை ஊத்தி தர்றேன். சாப்பிட்டு படு ரஞ்சன்” என்று மரகதவல்லி சொல்ல, “இல்லம்மா, பசியில்ல. எதுவும் வேணாம்” என்று விட்டு, வேகமாக அறைக்குச் சென்றிருந்தான்.
அவன் விளையாடியதால் உண்டான களைப்பும், வியர்வையும் நீங்க, குளித்து விட்டு படுக்கைக்குச் செல்ல, பிரியதர்ஷினி அறைக்குள் இருந்தாலும் அவனை ஒன்றுமே கேட்கவில்லை.
“உங்கண்ணா விஷயம் உங்கப்பா பார்த்துப்பார். நீ ஃபீல் பண்ணாத பிரியா. லவ் பண்ண தெரிஞ்ச உங்கண்ணனுக்கு அதை நிறைவேத்திக்கவும் வழி தெரிஞ்சுருக்கும்” என்று மனைவிக்கு ஆறுதல் சொன்னவன் மனசாட்சி அவனையே கேலி செய்து சிரித்தது.
அவன் காதலும் கை கூடியதுதான். ஆனால், அந்தக் காதலை மனைவியிடம் வெளிப்படுத்த தெரிந்தவனுக்கு, வாய் மொழியாக அதை அவளிடம் சொல்ல தோன்றவில்லையே. அதற்கு வார்த்தைகளும் சிக்கவில்லையே என்ன செய்வான்?.
எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறான் அவனுக்குத் தெரியவில்லை. அவனது பிரியத்தை எத்தனையோ வழிகளில் அவளிடம் பகிர்கிறான். ஆனால், அவளுக்குத்தான் புரியவில்லையே. சட்டென மனத்தை ஒருவித அழுத்தம் சூழ்ந்து கொள்ளக் கண்களை இறுக மூடித் திறந்தான்.
“அண்ணா விஷயம் அப்புறம் பேசலாம். நீங்க தூங்குங்க பிரபா” அக்கறையுடன் அவள் சொல்ல, அதில் அன்பைத் தேடி தவித்தான் அவன்.
அவளின் அக்கறைதான் அன்பென அவனுக்கு எப்போது புரிய போகிறது?
இருவரும் மனம் விட்டுப் பகிராத பிரியம் இவருக்கும் இடையில் பரிதவித்துக் கிடந்தது.
சூரியன் மெல்ல மேலேழ அறைக்குள் வெளிச்சம் பரவத் தொடங்கியது. அவனுக்காகத் திரைச்சீலைகளை இழுத்து மூடினாள் அவள்.
மனைவியை நோக்கி கையை விரித்து, நீயும் வந்து படு எனச் செய்கையால் அழைத்தான். அன்று அவளுக்கும் விடுமுறைதானே.
அவளோ, “மிஸ்ஸுக்கு ஸ்கூல் இருக்கு. நான் அவங்களை அனுப்பிட்டு வர்றேன்” என்றாள், பொறுப்பான மருமகளாக.
தான் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியதால் தன் மேல் கோபமாக இருக்கிறாளோ என்று குழம்பியவன் மனத்தில், அவளின் மிஸ் என்ற விளிப்பு வெறுப்பை வாரி இறைத்தது. அதை வேகமாக விழுங்கி, இதயத்தின் ஆழத்தில் புதைத்து விட்டுக் கண்களை மூடினான். கடந்த ஒரு வாரமாகச் சரியான உறக்கமில்லை அவனுக்கு. ஆக, இன்று படுத்த ஐந்தாம் நிமிடம் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான்.
மரகதவல்லி சமையல் அறையில் இருக்கப் பிரியதர்ஷினி அவரிடம் சென்றாள்.
“நீங்க போய் ஸ்கூலுக்கு ரெடியாகுங்க மிஸ். நான் சமைக்கறேன்” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டாள்.
அரை மணி நேரத்தில் வீட்டு உதவிக்கு வரும் பெண்மணி வந்து விட்டார். அவரோடு சேர்ந்து எல்லாம் வேலைகளையும் அவள் முடிக்கும் தருவாயில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
“அய்யோடா இவர் தூங்கறார், இந்நேரம் யாரு காலிங் பெல் அடிக்கிறது?” என்று புலம்பி அவள் ஓடிய வேகம் கண்டு அந்தப் பெண்மணி சிரிக்க, பள்ளி செல்ல தயாராகி வந்திருந்த மரகதவல்லியும் யாரென்று பார்க்க கூடத்துக்கு வந்து விட்டார்.
மரகதவல்லியிடம் டியூஷன் பயிலும் இரண்டு மாணவிகள் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்களும் அதே வளாகத்தில்தான் வசிக்கிறார்கள்.
“மிஸ்ஸ பாக்கணுமா? உள்ள வாங்க” என்று அவர்களுக்காகக் கதவை திறந்து விட்டாள்.
லேசாகத் தயங்கி அவள் முகம் பார்த்து உள்ளே வந்த மாணவிகளிடம், “என்ன கேர்ள்ஸ்? ஏதாவது டவுட்டா? சொல்லுங்க, என்ன விஷயம்? இந்நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கீங்க. உக்காருங்க, உக்காருங்க” என்றார் மரகதவல்லி. அந்த மாணவிகள் இருவருக்கும் அன்று பள்ளி விடுமுறை போலும். சாதாரண உடையில் இருந்தார்கள்.
“மிஸ்” என்று அவர்கள் தயங்க, “என்ன கேர்ள்ஸ்?” என்றார் மரகதவல்லி.
அவர்களின் கருவிழிகள் அலைபாய, கைகளைப் பிசைந்து நிற்கவும், “நீங்க வாங்கக்கா, நாம நம்ம வேலையைப் பார்ப்போம்” என்று அவர்களின் தயக்கம் புரிந்து, உதவி செய்யும் பெண்மணியுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள் பிரியதர்ஷினி.
அவள் சமையல் அறை செல்ல, அந்தப் பெண்மணி கூடத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்.
மரகதவல்லியிடம் பதினைந்து நிமிடங்கள் பேசிய மாணவிகள், “நீங்கதான் மிஸ் அவனை வார்ன் பண்ணணும், பிளீஸ் மிஸ்” என்று கெஞ்சும் போது அவள் கூடத்துக்கு வந்திருந்தாள்.
“என்கிட்ட சொல்லிட்டீங்க இல்ல? நான் பார்த்துக்கறேன். நீங்க பயப்படாம வீட்டுக்கு போங்க” என்று தைரியம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் அவர்.
அதைக் கேட்டதும் அவளுக்கு அந்த நாள் நினைவுகள் நெஞ்சில் மேலெழுந்து வந்தன. அவளும் பள்ளிக் காலத்தில் ஒரு முறை இப்படிப் போய் அவரிடம் நின்றிருக்கிறாள். இதே வார்த்தைகளைச் சொல்லித்தான் அவளுக்கும் நம்பிக்கை தந்தார் அவர். அவள் கேட்டதை உடனடியாக நிறைவேற்றவும் செய்திருந்தார்.
இப்போது என்ன விஷயமாக இருக்கும் என்ற ஆர்வ குறுகுறுப்பில், “அந்தக் குட்டி பொண்ணுங்களுக்கு என்ன பிரச்னை மிஸ்?” என்று அவரிடம் கேட்டாள்.
“அது ஒன்னுமில்ல. டிஃபன் ரெடின்னா குடேன். எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகுது. நான் சாப்பிட்டு கிளம்பறேன்” என்று படபடத்தார் அவர்.
“அந்தப் பொண்ணுங்களுக்கு ஏதோ பிரச்சினை போலத் தெரிஞ்சதே.. அதான் கேட்டேன் மிஸ்..”
“பிரியதர்ஷினி..” என்று ஓர் அதட்டல் போட்டார் மரகதவல்லி.
அடுத்த நொடி அவள் முகம் வாட திரும்பவும், “அட பிரியா பொண்ணு, ஒத்த சொல்லுக்கு இப்படியா மூஞ்சி வாடி போவ? அந்தப் பொண்ணை ஒருத்தன் போகும் போதும், வரும் போதும் பாட்டு பாடி கிண்டல் பண்றானாம். அதை உங்கத்தகிட்ட வந்து சொல்லிட்டு போகுது அந்தக் குட்டி பொண்ணு. அந்தப் பாட்டு பாடுற பையனையும், அவன் ஃப்ரெண்ட்டையும் மிரட்ட சொல்லிட்டு போகுது. வேற ஒன்னுமில்ல” என்று வேக வேகமாக விளக்கமாக அவளுக்கு விஷயத்தைச் சொன்னார், வீட்டு வேலை செய்யும் பெண்மணி.
மரகதவல்லி திரும்பி அந்தப் பெண்மணியை முறைக்க, அவரோ அலட்டிக் கொள்ளாமல் தன் வேலையைத் தொடர்ந்தார்.
மறுகணம் அவள்தான் திகைத்து நின்று விட்டிருந்தாள்.
முன்பொரு முறை மரகதவல்லியிடம் அவளும் இதே புகாரைத்தானே கொடுத்திருந்தாள். அதனால் வந்த அதிர்ச்சியுடன், “அந்தப் பையன் பாட்டு எதுக்காகப் பாடினானாம் கா?” என்று சந்தேகம் கேட்டாள்.
“அட நீ என்னம்மா இம்புட்டு அப்பாவியா இருக்க? அவன் ஃப்ரெண்ட்டு லவ் பண்ற பொண்ணுன்னு பாடி இருப்பான். இல்லனா சைட்டா இருக்கும்..” என்று அவர் அசட்டையாகச் சொல்லவும், அதிர்ந்தே விட்டாள் அவள். அதிர்ச்சியில் விழிகள் தெறித்து விடுவது போல விரிந்தன.
“லவ்வாக்கா?” தொண்டைக் குழி அவஸ்தையாக ஏறியிறங்க வினவினாள்.
“ம்க்கும், அப்புறம் வேற எதுக்குப் பாட்டு பாடுவானுங்க இந்தப் பயலுக?” என்றார் நக்கலாக.
அப்பொழுது, “பிரியதர்ஷினி..” என்று கோபமாக மரகதவல்லி அதட்டல் போட, “இருங்கத்த” என்றாள் அவர் புறம் திரும்பி. அவர் முகத்தில் அப்பட்டமான அதிருப்தி. ஆனாலும் அமைதியாகி விட்டார்.
“பாட்டு, அது சும்மா கிண்டல் பண்ண கூடப் பாடுவாங்க இல்லக்கா?” என்று அவள் சந்தேகம் கேட்கவும், “சும்மா கிண்டல் கூடக் காரணம் இல்லாம ஏன் பண்ண போறானுங்க? ஒன்னு அந்தப் பையனுக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சுருக்கணும். இல்லன்னா..” என்று அவர் ராகம் போட்டு இழுக்க, அதீத ஆர்வத்துடன் இதயம் எகிறி குதித்துத் துடித்திட, “இல்லன்னா..” என்று அவளும் இழுத்தாள்.
“இல்லன்னா அவன் ஃப்ரெண்ட் லவ் பண்ற பொண்ணா இருக்கும். உன் ஆளு வர்றாடான்னு ஃப்ரெண்ட்டுக்கு சிக்னல் குடுக்க, அவன சீண்ட பாடியிருப்பானா இருக்கும்மா” என்றார் சிரித்துக் கொண்டே.
“அப்படியா சொல்றீங்கக்கா?”
“ஆமாம்மா. இது கூடத் தெரியாதா உங்களுக்கு?”
“ம்ஹும். எனக்கு அப்படியெல்லாம் யோசிக்கத் தோனலக்கா” என்று பாவமாகத் தலையாட்டினாள்.
அந்தப் பெண்மணி அதற்கும் சிரிக்க, “ஒழுங்கா வேலையை மட்டும் பாருங்க. அது முடியாதுன்னா வீட்டுக்கு கெளம்புங்க” என்று அவரைக் கடுமையான குரலில் எச்சரித்தார் மரகதவல்லி.
“எனக்கு டிஃபனே வேணாம். நான் ஸ்கூலுக்குக் கிளம்பறேன்” என்று பிரியதர்ஷினியை பார்த்து அவர் கோபமாகச் சொல்லவும், “மிஸ், மிஸ் பிளீஸ், உக்காருங்க. நான் பொங்கல் எடுத்துட்டு வர்றேன் உங்களுக்கு” என்று எழுந்து உள்ளே ஓடினாள்.
சற்று நேரம் கழித்து மரகதவல்லி பள்ளி கிளம்பி விட்டார். வீட்டு உதவிக்கு இருக்கும் பெண்மணியும் வேலை முடித்துச் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாகி இருந்தது. ஆனால் பிரியதர்ஷினிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.
அவள் சிந்தனை எல்லாம் பழைய நினைவில் சிக்கி சிக்கெடுத்துக் கொண்டிருந்தது.
ஏனென்றால் இதே புகாரை மரகதவல்லியிடம் அவளும் சொல்லியிருக்கிறாளே.
அன்றைக்கு அவளைப் பார்த்து பாட்டு பாடியவன் பார்த்திபன். அவளுக்கு அவனை அப்போதே பிடிக்காமல் போனதற்கு அதுதான் காரணம்.
அப்படி அவளைப் பார்த்து அவன் பாடலை முணுமுணுக்கும் தருணங்களில் எல்லாம் அவனோடு இருக்கும் நண்பன், பிரபஞ்சன்!
பார்த்திபன் எதற்காக, “ஓ பிரியா பிரியா” பாடலை தன்னைப் பார்க்கும் போதெல்லாம் பாடினான்? தன்னைச் சீண்டவா? இல்லை தன் பெயரை சொல்லி தன் நண்பனை சீண்டினானா?
என்ற சிந்தனையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.