பிரிய பிரபஞ்சமே – 15 (2)

பிரபஞ்சன் மடிக்கணினியில் இருந்து கண்களை அகற்றாமல், “நீ சாப்பிட்டு படு பிரியா.” என்றான்.

“நான் இதை முடிக்க இன்னும் ஒன் ஹவராவது ஆகும். கோடிங் சொதப்பி வச்சிருக்கான் ஒருத்தன். லாஸ்ட் மினிட்ஸ்ல என் மண்டையை உருட்டுறதே, இவனுங்களுக்கு வேலையா போச்சு” என்று அவன் புலம்ப, அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் அவள்.

ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தான்.

“ம்ம், சாப்பிடுங்க” இட்லியை அவனுக்கு நீட்டினாள்.

அவனுக்கு ஊட்டி விட நீண்டிருந்த அவளின் கையையும், அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்தான் அவன்.

அவனது அடர்ந்த மீசைக்கடியில் அவன் உதடுகள் மெல்ல பிரிந்தன.

“என்ன அதிசயமா..” என்று அவன் கேட்கும் போதே உணவை ஊட்டி விட்டிருந்தாள்.

“குடு, நானே சாப்பிட்டுக்கறேன்” என்று அவன் கை நீட்டவும், “ப்ச்” என்றாள் கோபமாக.

அவன் கண்கள் தன்னிச்சையாக அவள் இதழ்களைக் கூர்ந்தன.

“இந்த ஊட்டி விட்டுச் சாப்பிட்டால்லாம் எனக்குச் சாப்பிட்ட மாதிரியே இருக்காது பிரியா. வயிறு நிறையாத ஃபீல் இருக்கும்” என்று காரணம் சொன்னான்.

“ஓஹோ, அப்படி யார் ஊட்டி விட்டு சார் சாப்பிட்டீங்களாம்?” என்று அவள் கண்களைச் சுருக்கி வினவ, “அதுவா…” என்று குறும்பாக ஆரம்பித்தவன், அவள் முறைக்கவும், “சில்ல்ல்ல் பிரியா” என்றான் சிரிப்புடன்.

“எங்கம்மா தவிர எனக்கு வேற யார் ஊட்டி விட்டிருக்கப் போறாங்க.” என்று தோள் குலுக்கினான்.

“ஏன் இந்த எக்ஸ், க்ரஷ், கேர்ள் ஃப்ரெண்ட் இப்படி யாரும் ஊட்டி விட்டது இல்லையா?” அப்படி யாரேனும் இருந்தார்களா என்ற ஆர்வமும், சந்தேகமும் கலந்த தொனியில் அவள் கேட்க, “என் லைஃப்ல ஆதியும், அந்தமுமா இருக்க ஒரே பொண்ணு நீதான்” என்று உணர்ச்சி வசப்பட்டு உண்மையைச் சொல்லி விட்டான்.

அவனது சில்ல்ல் பிரியாவை விட, இப்போது அவன் சொன்னது சில்லென்று அவள் மனத்தில் இறங்கி அவளைச் சிலிர்க்க வைத்தது.

முகம் நிறைத்த புன்னகையுடன் அவனுக்கு உணவை ஊட்டினாள். அவள் கையைப் பிடித்துத் திருப்பி அவளுக்கே ஊட்டி விட்டான் அவன்.

“நீயும் சாப்பிடு” என்று அவன் சொல்ல, அவள் சாப்பிட்டுக் கொண்டே அவனுக்கும் கொடுத்தாள். சாதாரண இட்லிதான். அதை இணைந்து உண்டதில் ஒருவித இணக்கம் வந்திருந்தது.

பிரியதர்ஷினி கை கழுவி வந்து, தொலைக்காட்சியைப் போட்டு, பாடலை ஒலிக்க விட்டு அவனை நெருங்கி தோள் சாய்ந்து அமர்ந்தாள்.

“நீ போய்த் தூங்கு பிரியா. நாளைக்கு ஆபீஸ் போகணும் இல்ல?”

“கொஞ்ச நேரம் உங்களோட இருக்கறேனே” என்று பூனைக் குட்டியாய் அவனை உரசிக் கொண்டிருந்தாள்.

தொலைக்காட்சியில் கார்த்திப் படப் பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

“பிரபா, இந்தப் படம் வந்தப்போ..” என்று அவள் ஆரம்பிக்கவும், அவசரமாக, “உன்னோட மிஸ் கதையா?” என்று கேட்டான்.

“ஆமா, இந்தப் படம் வந்தப்போ..” கதை சொல்லும் ஆர்வத்தில் திரும்பவும் அவள் முதலில் இருந்து ஆரம்பிக்க, மடிக் கணினியாவது, மண்ணாங்கட்டியாவது என்று மடியில் இருந்த மடிக் கணினியை அம்போ என்று விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திச் சத்தமாக அடித்துக் கும்பிடு போட்டு, “ஆளை விட்டுடு பிரியா. இதுக்கு மேல என்னால முடியாது” என்று அலறி விட்டான்.

அவன் மடியில் இருந்த கணினி நழுவவும், அதை வேகமாகப் பிடித்தவள், “என்ன பிரபா?” என்று கோபிக்க, “நான் கதை கேட்கிற மூட்ல இல்ல பிரியா. தயவு செஞ்சு என்னை விட்டுடு” என்று கண்களால் கெஞ்சினான்.

“ரொம்பப் பண்றீங்க நீங்க..” என்று அவள் உதடு சுழிக்க, “தூங்கு போ” என்று அவளை விரட்டி விட்டான்.

அவள் உறங்க சென்று இரண்டு மணி நேரங்கள் கழிந்த பிறகே அவன் வேலையை முடித்திருந்தான்.

படுக்கையில் எப்போதும் அவன் உறங்கும் பக்கம் இப்போது அவள் படுத்திருந்தாள்.

பிரபஞ்சன் மறுபக்கமாகப் படுக்கப் போக, சட்டென உருண்டு மறுபக்கம் சென்றிருந்தாள் அவள்.

அவனுக்கு நல்ல அசதி. நாள் முழுக்கக் கணினியில் மூழ்கியிருந்ததினால் கண்கள் தீயாய் எரிந்தன.

இரண்டு கைகளாலும் கண்களைத் தேய்த்து விட்டபடி அவன் கண் மூட, மீண்டும் உருண்டு வந்து அவன் மேல் மோதினாள். அவனை உணர்ந்து விழித்துக் கண்களைக் கோடாகத் திறந்து, “தூக்கம் வரலையாங்க?” என்று கேட்டாள். அவன் பதில் சொல்லும் முன் அவள் கரம் அவன் மார்பை வருடி, தாடையைத் தடவி, கன்னத்தில் குளிர்ச்சியாகப் பதிந்தது. மெல்ல நகர்ந்து அவனை நெருங்கினாள்.

அவள் கரத்தை மென்மையாக விலக்கி, “டையர்ட்டா இருக்கு பிரியா” கொட்டாவியை அடக்கியபடி சொல்லி கண்ணை மூடியிருந்தான்‌.

அவள் மின்னல் வேகத்தில் விலகிட, பட்டென்று கண் திறந்து அவள் முகத்தைத் திடுக்கிடலுடன் பார்த்தான்.

அவள் கண்களில் கோபமா, வருத்தமா என்ன இருந்ததென அவனால் கணிக்க முடியவில்லை.

முன்பொரு நாள் கிரிக்கெட் விளையாட போய்க் காயம் பட்டு நெற்றி, கை, கால் எனக் கட்டுக்களுடன் வீடு வந்த போதும், உடல் வலி எனச் சுகமில்லாமல் இருந்த போதும், “என் வலி நிவாரணி நீ பிரியா” என்று அவளைக் கொண்டாடிய கணவனைத் தொலைத்து விட்ட உணர்வில் தவிப்புடன் அவனைப் பார்த்திருந்தாள் அவள்.

அவன் கை நீட்டி மனைவியை இழுத்து, “பிரியா… நான்..” மேலே விளக்கம் கொடுக்க வார்த்தைகள் இல்லாமல் அவளை வாரிச் சுருட்டிக் கொண்டான்.

அவள் மேனியில் அவன் முத்த பாடம் படிக்கத் தொடங்க, அவளுக்கு மற்றவை அனைத்தும் மறந்து போனது.

காலையில் அவன் அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.

காலை உணவின் போதே, “இன்னைக்கு நான் வர லேட்டாகும்” என்று அம்மா, மனைவி இருவருக்கும் பொதுவாக அறிவித்து விட்டான்.

“நான் ட்ராப் பண்ணவா? இல்ல நீ வண்டி எடுத்துக்கறியா பிரியா?” என்று மனைவியிடம் விசாரித்தான்.

பிரியதர்ஷினியின் அலுவலகத்தைக் கடந்தே பிரபஞ்சன் அலுவலகம் செல்ல வேண்டும். பெரும்பான்மையான நாள்கள் மனைவியின் சாரதி அவன்தான். சமீபமாக அவனது வேலை பளுவினால் சாரதி வேலைக்கு ஓய்வு என்றாலும், எப்போதும் ஒரு முறை மனைவியிடம் கேட்டு விடுவான்.

“நான் வண்டியில போய்க்கறேன் பிரபா.” என்றவள் தயங்கி அவன் முகம் பார்க்க, “என்ன பிரியா?” என்று கேட்டான்.

“இல்ல, இன்னைக்கு ஈவ்னிங் நீங்க எப்போ ஃப்ரீயாவீங்க?” அவள் தயக்கத்துடன் கேட்க, “இன்னைக்கு ஈவ்னிங்கா? குறிப்பிட்டு டைமெல்லாம் சொல்லவே முடியாது பிரியா. இன்னைக்கு ப்ராஜெக்ட் முடிச்சாகணும் சொன்னேன் இல்ல? ப்ராஜெக்ட் முடிச்சு டெஸ்டிங் அனுப்பணும். அதுக்கே நைட்டானாலும் ஆகிடும். நீ சொல்லு என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“எங்க அண்ணாக்கு பொண்ணு பார்க்க போறோம் இன்னைக்கு. நீங்களும் வந்தா நல்லா இருக்குமேன்னு..”

“ஓ, அது இன்னைக்குத்தானா? சுத்தமா ஞாபகம் இல்ல பிரியா”

“ம்ம், ஒரு ஒன் ஹவருக்கு உங்களால வர முடியுமா?”

“என்ன பிரியா, விளையாடுறியா நீ? எனக்கு ப்ராஜெக்ட் டெலிவரி வொர்க் இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன்..”

“சரி, சரி. விடுங்க. தெரியாம கேட்டுட்டேன். நீங்க இல்லாம.. நான் மட்டும் தனியா எப்படிப் போகன்னு..” என்று அவள் இழுக்க, “நீங்க இல்லாம எப்படிப் போவேன்..” என்று அவள் வார்த்தைகள் அவன் மனத்தில் சாரலாய் வருடி சென்றது.

மென்மையாய் அவள் கரம் பற்றி, “உங்க அண்ணன் லவ் பண்ற பொண்ணு வீட்டுக்குத்தானே போறீங்க? அவங்களை உனக்கு நல்லா தெரியும்தானே? அப்புறம் என்ன? உங்கம்மாப்பா கூடப் போய்ட்டு வா” என்றான்.

“நீங்க இல்லாம..”

“உங்கப்பா வருவாரே பிரியா”

“நான் உங்களைச் சொன்னா.. நீங்க எதுக்கு எங்கப்பாவை இழுத்துட்டு இருக்கீங்க? எனக்கு நீங்க என் கூட வரணும்” என்று அடமாக அவள் சொல்ல அவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை.

“அடுத்து நிச்சயம், கல்யாணம்னு எத்தனையோ விஷயம் இருக்குல்ல. அப்போ நாம ஜோடியா போவோம். ஓகே?”

“ம்ம்” என்று சொல்லி முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு வழி அனுப்பினாள். மென்மையாய் முத்தமிட்டு அவள் முகத்தில் புன்னகையை மலர செய்திருந்தான்.

“ஹால்ல இருக்கோம் பிரபா, அத்த வெளில வந்திருந்தா..” என்று அவன் மார்பில் அடித்தாள்.

“அதான் வரல இல்ல. அப்புறம் என்ன..” மீசை உரச கன்னங்கள் இரண்டிலும் ஈர முத்தம் பதித்தே விலகிச் சென்றிருந்தான்.

அன்றைய நாள் அவன் வசமே இல்லை. கழுத்தை நெரித்தது வேலை.

பிரியதர்ஷினி முன் அனுமதி வாங்கி மதியமே வீடு வந்தவள், கணவனுக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை.

முன் மாலை பொழுதில் தயாராகி அம்மா வீடு கிளம்பி விட்டாள். மரகதவல்லியை அழைத்துத் தகவல் பகிர்ந்தாள்.

அவள் திரும்ப வீடு வரவே ஒன்பது மணியாகி விட்டது.

அவள் அண்ணன் காதலிக்கும் பெண் வீட்டிற்குதான் திருமணம் பேச சென்றிருந்தார்கள். மாணிக்கவேல் ஏற்கனவே அவர்களிடம் அலைபேசியில் பேசியிருந்தார். அப்போது மிகவும் நல்லவிதமாகப் பேசியவர்களின் நடவடிக்கை நேரில் சந்திக்கையில் வேறாக இருந்தது.

காதல் திருமணம் எங்கள் குடும்பத்துக்குப் பிடிக்காது. எங்கள் வசதிக்கு நீங்கள் ஈடாக முடியாது. எங்க பொண்ணை, “இங்க கேட்டாங்க, அங்க கேட்டாங்க” என்று பெண்ணின் அப்பா பழங்காலம் போல அலட்டலாகப் பேச, மாணிக்கவேலுக்கு அவர் பேசிய தொனியும், பேசிய வார்த்தைகளும் பிடிக்கவேயில்லை.

அவர் மகனை முறைக்க, அவனோ தன் காதலியை முறைத்தான்.

“என்னம்மா நடக்குது இங்க?” என்று அம்மாவின் காதை கடித்தாள் பிரியதர்ஷினி.

பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து, திருமணத்தை உறுதி செய்யாமலே திரும்பி வந்து விட்டார்கள். அதனால் அவள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மன வருத்தம்.

அங்கு நடந்ததை யாரிடமாவது பகிர்ந்திட வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

பார்கவியிடம் பகிர மனம் வரவில்லை. முதலில் கணவனைத்தான் தேடினாள்.

அவனிடம் இருந்து இரண்டு தவறிய அழைப்புகள் காண்பிக்க, உடனே அவனை அழைத்து விட்டாள்.

“பிரபா..” என்று அவள் பரபரக்க, “நான் வர லேட்டாகும் பிரியா. நீ தூங்கு” என்று சொல்லி அழைப்பை துண்டிக்கப் போனான்.

“பிரபா..” அந்தக் குரல் அவனைச் சொடுக்கி நிறுத்தியது.

“என்ன பிரியா? ஏன் உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?”

“அதுவா? அது.. நீங்க வர ரொம்ப லேட்டாகுமா?”

“ம்ம். எப்போன்னு சொல்ல முடியாதே. என்னாச்சு? ஏன் அப்செட்டா பேசுற?”

“சீக்கிரம் வீட்டுக்கு வாங்களேன்.. பிளீஸ்..” கெஞ்சலும், கொஞ்சலுமாக அவள் கேட்க, “ஒர்க் முடிஞ்சதும் நேரா உன்கிட்ட வந்துடுறேன். ஓகே?” என்றான் கரகரத்த குரலில்.

“ம்ம். நான் வெயிட் பண்றேன்”

“ஹே பிரியா, தூங்கு நீ. தூங்கணும். ஓகே?” என்று அதட்டி அழைப்பை துண்டித்திருந்தான்.

அண்ணனுக்காக வருந்தினாள் அவள்.

அவன் காதல் நிறைவேற வேண்டும் என மனத்தில் வேண்டுதல் வைத்தாள்.

கணவன் வரும் வரை விழித்திருப்போம் என மடிக்கணியில், “நெட்ஃபிளிக்ஸ்” தொடர் ஒன்றை பார்க்கத் தொடங்கினாள்.

பத்துக்கு மணிக்கு ஒரு முறை, பதினொரு மணிக்கு ஒரு முறை எனக் கணவனை அவள் அழைக்க, அதே பதிலைதான் திரும்பவும் சொன்னான் அவன்.

அவனுக்காக வெகுநேரம் காத்திருந்தவள் நள்ளிரவில் உறங்கியிருந்தாள்.

அதிகாலை ஐந்தரை மணிக்கு வீடு வந்தான் பிரபஞ்சன்.

அவன் கதவை திறந்து உள்ளே வர, “ரஞ்சன், காஃபி தரவா” என்று மகனிடம் கேட்டார் மரகதவல்லி.

அவன் பொத்தென்று சோர்வுடன் சோஃபாவில் சரிந்தான்.

“என்னப்பா ரொம்ப டையர்டா தெரியறா, ரொம்ப வேலையாப்பா?” மகனை கூர்ந்து கவலையுடன் அவர் கேட்க, சன்ன சிரிப்புடன், “இல்லம்மா. நைட் ஒர்க் முடிஞ்சதும் எங்க டீமோட டர்ஃப் போய்க் கிரிக்கெட் ஆடிட்டு வர்றேன்ம்மா” என்று முறுவலித்தான். மகனை வாஞ்சையுடன் பார்த்திருந்தார் மரகதவல்லி.

பிரபஞ்சன் முகத்தில் முறுவல் மறையாமல் திரும்ப, அவர்களின் அறை வாசலில் மார்பில் கை கட்டி நின்று அவனையே பார்த்திருந்தாள் பிரியதர்ஷினி.

error: Content is protected !!
Scroll to Top