பிரிய பிரபஞ்சமே – 15 (1)

பிரியதர்ஷினி வேலைக்குச் செல்ல தொடங்கி நான்கு மாதங்கள் கடந்திருந்தன.

இப்போது வேலையும், நிறுவனமும் அவளுக்கு நன்றாகப் பழகி விட்டிருந்தது.

பிரபஞ்சன் சொன்னது போலவே வீட்டு உதவிக்கு ஆள் வைத்து விட்டான். காலை, மாலை என இரு நேரமும் வந்து வீட்டு மேல் வேலைகளை முடித்துக் கொடுக்கிறார் அந்தப் பெண்மணி.

வேலைக்குச் செல்லும் பெண்கள் இருவருக்கும் அது பெரிய உதவியாக இருக்கிறது.

சமையல் பொறுப்பு மட்டும் இன்னும் வீட்டு பெண்களின் கையில்தான்.

பிரியதர்ஷினிக்கு முந்தைய இரவே என்ன சமைக்க வேண்டும் என்று சொல்வதை மரகவதல்லி இன்னமும் நிறுத்தவில்லை. அவளும், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்ன சமைக்க வேண்டும் என்று கேட்பதாலோ என்னவோ அந்தப் பழக்கம் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மருமகள் வேலைக்குச் சென்றாலும் மகனை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்பதில் இருந்தும் அவர் மாறவில்லை.

பிரியதர்ஷினி முன்னைக்கு இப்போது எவ்வளவோ தேறியிருந்தாள். கணவனைக் கவனிப்பதில் மட்டுமல்ல, மாமியாரை சமாளிப்பதிலும் நல்ல முன்னேற்றம்தான்.

பிரபஞ்சன் இப்போதெல்லாம் அடிக்கடி வேலையை விட்டு விடுங்கள் என அம்மாவை வற்புறுத்திக் கொண்டிருக்கிறான்.

மரகதவல்லி இந்த விஷயத்தில் மகனுக்குச் செவி சாய்ப்பதாகவே இல்லை.

“நான் வீட்ல இருந்து என்ன பண்ண போறேன்?” என்று கேட்டு மகனிடம் முறைப்பை வாங்கிக் கொண்டிருக்கிறார்.

பிரபஞ்சனின் காயங்கள் குணமாகி, விரல் நகம் வளர்ந்திருந்தது. காயங்கள் காணாமல் போனது போலவே, அவன் வாழ்வில் இருந்து கிரிக்கெட்டுக்கும் இடம் இல்லாமல் போனது.

அதை அவனே விலக்கி வைத்திருந்தான். விரும்பியா? என்று கேட்டால் அவனுக்குப் பதில் சொல்வது கடினம்.‌ எது எப்படியோ அவன் இப்போது கிரிக்கெட் விளையாட செல்வதில்லை.

அவன் வீட்டில் இருந்த அவனது கிரிக்கெட் தொடர்பான கோப்பைகள், புகைப்படங்களைக் கூட அகற்றியிருந்தான். அதற்கான காரணத்தை அறிவதற்குப் பெரிதான ஆராய்ச்சிகள் தேவையில்லையே.

அவன் கிரிக்கெட் விளையாட பயன்படுத்தும் பொருள்கள் அடங்கிய கிரிக்கெட் கிட் பேக், அவன் கிரிக்கெட் விளையாட தொடங்கிய இத்தனை வருடங்களில் இப்போதுதான் முதல் முறையாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அது அவ்வப்போது கண்ணில் பட்டு அவனை எரிச்சலூட்டவும், இனி இதனால் ஒரு பயனும் இல்லை என்பதைப் போலத் தூக்கி பரணில் போட்டு விட்டான்.

பிரியதர்ஷினிக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் வேலையிருக்கும். சனி, ஞாயிறு அவளுக்கு எப்போதும் விடுமுறைதான். உடனே கணவனையும் இழுத்துக் கொண்டு அம்மா வீடு கிளம்பிடுவாள். பிரபஞ்சனுக்குப் பொழுது நகர்ந்தால் போதும் என்ற மனநிலையில் அவளின் போக்குக்கே இழுபடுவான்.

இதெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பு வரைதான். சமீபமாக, “சார், ரொம்பப் பிஸி” எனும் நிலை. சில நேரம் வார இறுதி கூட அவனுக்கு வேலையிருக்கும். வீட்டில் இருந்தே அலுவலக அழைப்பில் இணைந்து அலுவலை கவனிப்பான். முன் போல அவனுக்கு வார இறுதி நாள்கள் விடுமுறை என்றாலும், ஓய்வில்லாமல்‌‍ வேலை இருந்தது.

அலுவலகத்தில் அவன் புதிதாகப் பொறுப்பேற்றிருந்த ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருக்கிறது. இறுதி கட்ட வேலைகள்‍, அவன் குழுவினரிடம் வேலை வாங்குவதற்குள் அவன் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது.

அவர்கள் குழுவில் சென்னையில் இருப்பது ஆறு பேர்தான். மற்ற மூவரில் இரண்டு பேர் டெல்லி, ஒரு பெண் பெங்களூரில் இருக்கிறாள்.

அனைவரையும் ஒருமித்து வேலை செய்ய வைப்பது அவனுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

அவர்களோடு தினம் போராட்டம்தான் அவனுக்கு. அதில் இருவர் ஜென் சி தலைமுறை. பிறகு கேட்கவும் வேண்டுமா? அவர்களிடம் வேலை சொல்லி அதைச் செய்ய வைப்பதற்குள் இவனது பொறுமை நீர்த்து போய் விடும். பல நேரங்களில் அவர்களின் வேலையையும் சேர்த்து இவனும், இவனது குழுவில் இருக்கும் மற்றவர்களும்தான் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

இப்போது அவர்கள் செய்யும் ப்ராஜெக்ட்டின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்கள். நாளை ப்ராஜெக்ட் முடித்துக் கொடுத்தே ஆக வேண்டும்.

இதோ இந்த நிமிடமும் வீட்டில் அமர்ந்து அலுவலக வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறான்.

கடந்த சில நாள்களாகவே வேலை பளுவின் காரணமாக அவன் வீடு வருவதற்கு மிகவும் தாமதமாகி இருந்தது. அதில் அவன் மனைவிக்கு மிகுந்த மனத்தாங்கல்.

பிரியா வருத்தப்பட்டால் பிரபஞ்சனுக்கு மனம் தாங்குமா? அதனால் இன்று வேலை இருந்தாலும் விரைவாக வீடு வந்து விட்டான். சோஃபாவின் ஒரு மூலையில் மடிக் கணினியுடன் ஐக்கியமாகி விட்டிருந்தான்.

“ரஞ்சன், சாப்பிட வாப்பா” என்று மரகதவல்லி அழைக்க, “நீங்க சாப்பிடுங்கம்மா, எனக்கு லேட்டாகும்” என்றான் வேலையில் கவனமாக.

“மணி ஒன்பதர ஆகதுப்பா.”

“நீங்க சாப்பிடுங்கன்னு சொன்னேன்ம்மா” என்றான் அழுத்தமாக.

“பிரபா..” இப்போது மனைவி அழைக்க, “அம்மாக்குதான் புரியாதுன்னா, உனக்குமா புரியல பிரியா? எனக்கு வேலை முடிய டைம் ஆகும். நீங்க சாப்பிடுங்க” ஒரு கணம் கண்ணை மட்டும் உயர்த்தி இருவரையும் கடிந்து கொண்டு மீண்டும் வேலையில் கவனமானான்.

மரகதவல்லி தயக்கத்துடன் சாப்பிட அமர, அவருக்குப் பரிமாறிய பிரியதர்ஷினி, “நான் அவரோட சாப்பிட்டுக்கறேன் மிஸ்” என்று விட்டாள்.

இட்லியை உண்டவாறே, “ரஞ்சன் இன்னைக்குப் பார்த்திபன் அம்மா கால் பண்ணாங்கப்பா” என்றார். பிரியதர்ஷினி விசுக்கென்று திரும்பி கணவனைப் பார்த்தாள். அவனோ வேலையில் கவனமாக, “ம்ம்” கொட்டினான்.

“நான் பேசலன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. இந்த ஞாயித்துக் கிழம உங்களை அவங்க வீட்டு விருந்துக்குக் கூப்பிட்டாங்கப்பா. அவங்களும் உங்களுக்குக் கல்யாணமான நாள்ல இருந்து கூப்பிடுறாங்க. நீங்க வரலன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க”

“…”

“ஆமா, இப்போல்லாம் பார்த்திபன் நம்ம வீட்டுப் பக்கம் வர்றதே இல்லயே, ஏன்? நீயும் அவங்கிட்ட பேசுறாப்ல தெரியல. என்னப்பா, உங்களுக்குள்ள ஏதும் பிரச்சனையா?”

“இல்லம்மா..”

“என்ன இல்லம்மா? பார்த்திபன் கிட்ட பேசுறது இல்லையா நீ? சண்டையா?” என்று ஆசிரியருக்கே உண்டான குரலில் அழுத்தமாகக் கேட்டார்.

மனைவியின் கண்கள் அவன் மேல் கூர்மையாகப் பதிந்திருக்க, அவள் பக்கமே திரும்பவில்லை அவன்.

“ரஞ்சன்”

“பேசிட்டுதான் மா இருக்கேன்” என்றான்.

“அப்படியா? அவனைப் பத்தி எதுவும் சொல்றது இல்லையே நீ. அவங்கம்மா அதைத்தான் சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருந்தாங்க. எங்க வீட்ல வளர்ந்த பையன் ரஞ்சன், அவனை விருந்துக்குக் கூப்பிட சொன்னா என் பையன் மொனச்சிக்கிட்டு போறான்னு புலம்பறாங்க. இப்போ சொல்லு என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?” என்று தீவிரமாக மகன் முகம் பார்த்து கேட்டார்.

அவன் மடிக்கணியில் இருந்து முகத்தை நிமிர்த்தவேயில்லை.

“நீங்க பஞ்சாயத்து பண்ற அளவுக்கு ஒரு பிரச்னையும் இல்லம்மா. நீங்க சாப்பிடுங்க ஃபர்ஸ்ட்” என்றான் கண்டிப்பாக.

“சரி, பிரச்னை இல்லல்ல‌ அப்போ இந்த வாரம் அவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போறோம், இப்பவே சொல்லிட்டேன்” என்றார் முடிவாக.

“எனக்கு வேலையிருக்கும்மா”

“சண்டே‌வாடா?”

“என்னம்மா புதுசா கேட்கறீங்க? நாளைக்கு எனக்கு ப்ராஜெக்ட் ஒர்க் இருக்குன்னு சொன்னேனே இல்லையா? ஒருவேளை எங்களால நாளைக்கு வேலையை முடிக்க முடியலைன்னா இந்த வீக் எண்ட் வேலை பார்க்க வேண்டியதா இருக்கும். என்னால எங்கேயும் வர முடியாது. சும்மா இங்க வா, அங்க வான்னு தொல்லை பண்ணாதீங்க” என்று நிதானமாகத்தான் சொன்னான். ஆனால் அவன் வார்த்தைகள் வெளிப்படுத்திய கோபத்தை அவரால் தெளிவாக உணர முடிந்தது.

“அப்போ அவங்க போன் பண்ணா அடுத்த வாரம் வர்றோம்னு சொல்லிடவா?”

“என்னமோ பண்ணுங்க. என்னை இப்போ வேலை பார்க்க விடுங்க, போதும்” என்று குரல் உயர்த்தியவன் கோபமாக மடிக் கணினியுடன் எழுந்தே விட்டான்.

பிரியதர்ஷினி ஓடி வந்து, “பிரபா, பிரபா. நாங்க டிஸ்டர்ப் பண்ணல. நீங்க ஒர்க் பண்ணுங்க பிளீஸ்” என்று அவன் தோளில் அழுத்தி சோஃபாவில் அவனை அமர்த்தினாள்.

“இன்னொரு இட்லி வச்சுக்கோங்க மிஸ்” என்று மாமியாரை கவனித்தாள்.

ம்ம், இவனுக்கும் பார்த்திபனுக்கும் ஏதோ பிரச்சனை போல” மேடை ரகசியம் போல மருமகளிடம் மகனை ஜாடை காட்டிச் சொன்னார் மரகதவல்லி.

“எப்படிச் சொல்றீங்க?” என்று அவள் எதுவும் தெரியாதது போலக் கேட்க, “பிரச்னை இல்லன்னா இவனுங்க பேசாம, பார்க்காம இருந்ததா வரலாறே இல்லையே. என்னமோ நடந்திருக்கு..” என்றார் யோசனையுடன்.

“ரஞ்சன் படிக்கிற டைம்ல நான் ஸ்கூல், டியூஷன்னு ரொம்பப் பிஸியா இருந்தேன். இவன் எப்பவும் பார்த்திபன் வீட்லதான் இருப்பான். அவங்க வீட்ல இல்லன்னா அவனோட கிரவுண்ட்ல கிரிக்கெட் ஆடிட்டு இருப்பான். ரெண்டு பேரும் அண்ணன், தம்பிங்க மாதிரி ஒன்னாவே சுத்திட்டு இருப்பானுங்க.” என்றார்.

அது அவளுக்கும் தெரியுமே.

“நல்லா தோள் மேல கை போட்டுட்டு சுத்திட்டு இருப்பானுங்க, திடீர்னு பார்த்தா நாலு நாள் பேசிக்காம, எதிரி நாட்டுக்காரன் மாதிரி மூஞ்சியைத் திருப்பிட்டு திரிவானுங்க. ரஞ்சன் வீட்டை விட்டு வெளில போகலன்னாலே..”

“அம்மா..” என்று அடிக்குரலில் சீறினான் பிரபஞ்சன்.

“நீ வேலையை ரஞ்சன்” என்றவர், மருமகளிடம் திரும்பி, “ஆ, என்ன சொல்லிட்டு இருந்தேன்?” என்று கேட்டார்.

“இவர் வீட்டை விட்டு போகலைன்னா..”

“ம்ம், முட்டை கோழி மாதிரி வீட்டுக்குள்ளயே இருந்தான்னு வச்சுக்கோ. இதோ இப்போ இருக்கானே அது போல. அப்போ கண்டிப்பா பார்த்திபன் கூடச் சண்டையா இருக்கும். ரெண்டு பேரும் ஒருத்தனோட ஒருத்தன் பேசிக்காம மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு, கையை நெஞ்சுல கட்டிட்டு, ஆளுக்கொரு மூலையில முறைச்சுட்டு நிப்பானுங்க பாரு..” என்று அவர் பாவனையாகச் சொல்லவும், அதைக் கற்பனை செய்து சத்தமாகச் சிரித்து விட்டாள் அவள்.

பிரபஞ்சன் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் வேலையில் மூழ்கியிருந்தான்.

“அப்புறம் அத்த?”

“நான்தான் இவனுங்களைப் பேசி சமாதானம் பண்ணி விடுவேன். திரும்பவும் ஒட்டிட்டு திரிவானுங்க” என்றார் சிரிப்புடன். மகன் அவர் பேச்சையே காதில் வாங்காதது போல அமர்ந்திருந்தது அவரைத் தொந்தரவு செய்தது.

“ரஞ்சன், இந்த வாரம் இல்லைனாலும்.. சீக்கிரமே பார்த்திபன் வீட்டுக்கு நாம போறோம். புரிஞ்சுதா? அப்புறம் அப்படியே அவனை ஃப்ரீயா இருக்கும் போது நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு. நான் பார்க்கணும்” என்றார். அதற்கும் அமைதிதான் பதிலாக வந்தது.

“ரஞ்சன்..” கண்டிப்புடன் அவர் அழைக்க, “உங்ககிட்ட அவன் நம்பர் இருக்குதானேம்மா? அவனுக்குக் கால் பண்ணி நீங்களே பேசிடுங்க” என்றான் இயல்பாக.

மரகதவல்லி மகனை சில நொடிகள் சந்தேகமாகப் புருவங்களை நெரித்துப் பார்த்து, சாப்பிட்டு முடித்திருக்கவும் எழுந்து கொண்டார்.

பிரியதர்ஷினியின் பார்வை ஆணி அடித்தது போலப் பிரபஞ்சன் மேலேயே நிலைத்திருந்தது.

“பார்த்திபனிடம் பேசுவதே இல்லையா?” தொண்டையை அழுத்திய கேள்வியைக் கேட்க பயந்து அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“சாப்பிட்டுட்டு வேலையைப் பாருப்பா” மகனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார் மரகதவல்லி.

error: Content is protected !!
Scroll to Top