பிரிய பிரபஞ்சமே – 14 (2)

விடுமுறை தினம் இதுவரை இத்தனை சோம்பலாக அவனுக்கு விடிந்ததே இல்லை. இவ்வளவு தாமதமாக அவன் எழுந்ததும் இல்லை.

காலை ஒன்பது மணிக்குதான் உறக்கம் கலைந்து எழுந்தான். முன்தின இரவின் இனிமை அந்தக் காலையை அவனுக்கு அழகாக்கியிருந்தது. பாதி விலகியிருந்த திரைச்சீலைகளின் வழியே படுக்கையில் இருந்து பால்கனியை பார்க்க, சூரிய வெளிச்சத்துப் பின்னணியில் ஒற்றை மஞ்சள் ரோஜாவும், மைனாக்களுமாக அழகாகக் காட்சி தந்தன.

பால்கனி தோட்டத்தில் பறவைகளுக்கு இரை வைக்கும், “பேர்ட் பீடர்” தொங்க விட்டிருந்தான். அதில் எப்போதும் திணையும், தண்ணீரும் தனித்தனியாக இருக்கும். நாள் முழுக்க ஒன்றிரண்டு பறவைகள் வந்து இரை கொத்த, தண்ணீர் குடிக்க என அவர்களின் பால்கனியை ஆக்கிரமித்திருக்கும். மைனா, தேன் சிட்டு, தவிட்டுக் குருவி, காகம் என அவர்களின் விருந்தினர்களின் பட்டியல் பெரியது.

பால்கனி கம்பியில் அவர்கள் தத்தி தத்தி தலையை உயர்த்திக் கண்களைத் திருப்பித் திருப்பி நடப்பதை காண பிரியாவுக்கு மிகவும் பிடிக்கும்.

அவளுக்குப் பிடிக்கும் என்றே அதை வைத்திருந்தான்.

அவன் சிந்தனையின் நாயகியே, “பிரபா” என்றழைத்து அவனைக் கலைத்தாள்.

“காஃபி தரவா?”

“ஃபைவ் மினிட்ஸ் குடு, நான் வர்றேன்” என்று எழுந்து ஓய்வறை சென்றான்.

அதன் பிறகு மதிய உணவு வரை அவனுக்கு நேரம் சிரமம் இல்லாமல் சென்றது.

மரகதவல்லி ஏதோ புத்தகத்துடன் அமர்ந்து விட்டார். பிரியதர்ஷினி அம்மாவுடன் அலைபேசி கொண்டிருந்தாள்.

பிரபஞ்சன் தொலைக்காட்சியைப் போட்டுச் சோஃபாவில் சரிந்தான். அவன் கரம் அனிச்சையாக விளையாட்டு சேனலை வைத்திருந்தது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் ஆடிக் கொண்டிருந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

ஐந்து நிமிடம் அப்படியே விளையாட்டில் மூழ்கி விட்டிருந்தான்.

“நாளைக்கா? வர முடியுமா தெரியலையேம்மா? இருங்க, அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்ற மனைவியின் குரல் கேட்கவும், பட்டென்று சேனலை மாற்றினான்.

அதில், “பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே. என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்” என எஸ்பிபி உருகி கொண்டிருந்தார்.

அந்த வரிகள் செவியில் விழுந்து மனத்தை அடையவும் திடுக்கிட்டு திரும்பவும் சேனலை மாற்றினான்.

அப்போது, “பிரபா..” என்று அவனைப் போட்டு உலுக்கினாள் பிரியதர்ஷினி.

“என்ன?”

“நாளைக்கு அம்மா வீட்டுக்கு போவோமா? அம்மா கூப்பிடுறாங்க” என்று அலைபேசியைக் குறிப்பாகக் கண்ணால் உணர்த்திக் கேட்டாள்.

“நாளைக்கா? என்ன ஸ்பெஷல்?”

“சண்டேங்க”

“சண்டேன்னா எனக்கு மேட்ச்..” என்று ஆரம்பித்த வேகத்தில் நிறுத்தி, “போலாமே. எதுக்கும் ஒரு வார்த்தை அம்மாகிட்ட என்ன பிளான்னு கேட்டுக்கோ” என்றான்.

“எனக்கு ஒரு பிளானும் இல்ல. நீங்க போயிட்டு வாங்க” என்றார் மரகதவல்லி.

“அப்போ நாம போவோமா? அம்மாகிட்ட வர்றோம்னு சொல்லிடவா?” கண்களைச் சுருக்கி, கன்னங்கள் சிரிப்பில் குழைய அவள் கேட்க, அவனெங்கே மறுக்கப் போகிறான். சரியென்று விட்டான்.

“நாங்க காலையிலேயே வந்துடுறோம்மா. அப்பாகிட்ட சொல்லிடுங்க.” என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் அமைதியாக எழுந்து அறைக்குச் சென்று விட்டான்.

மாமியாரிடம் கதை பேசியபடி அங்கேயே அமர்ந்திருந்தாள் அவள்.

ஒன்றரை மணி நேரம் கடந்திருந்தது.

“காஃபி போடவா அத்த?” பேச்சு மும்முரத்தில் அவள் கேட்க, “ரஞ்சனுக்கும் சேர்த்து போடு. அவனைப் போய் எழுப்பி விடு. தூங்கிட்டான் போல” என்றார் மரகதவல்லி.

“வாழைக்காய் இருக்கு. பஜ்ஜி போடவா மிஸ்?”

“நீ போய் அவனை எழுப்பு. தூங்குறானா இல்ல வேலையா இருக்கானான்னு பாரு.” என்று அவளைச் சொடுக்கி விட்டு அவர் எழுந்து சமையல் அறை சென்றார்.

“வெயிட் பண்ணுங்க மிஸ், நான் வர்றேன்” என்று கத்தி விட்டு, அறைக்குள் நுழைந்தாள்.

பிரபஞ்சன் பால்கனியில் நின்றிருந்தான். பால்கனியின் ஒரு பக்கம் பறவைகளின் எச்சங்கள், தானியங்களின் சிதறல்கள் இருக்க அதையெல்லாம் சுத்தம் செய்து, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு அப்படியே சுவரில் சரிந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த மாலை வேளையில் அவர்களின் அபார்ட்மெண்ட் வளாகத்தில் இருக்கும் சிறிய பூங்காவில் சிறகு முளைத்த பறவைகளாகக் குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க, அவன் கவனமெல்லாம் அங்கிருந்தது.

அதிலும் பத்துச் சிறுவர்கள் ஒன்றாக இணைந்து கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கப் புன்னகையுடன் அதைப் பார்த்து நின்றிருந்தான்.

“கேட்ச்சே.. அவுட்டு டா” என்று அவர்கள் கத்தி ஆர்ப்பரிக்க அவன் புன்னகை இன்னுமே விரிந்தது.

“பிரபா..” பின்னிருந்து மனைவி அழைக்கவும், படக்கென்று திரும்பினான்.

“உங்கம்மா உங்களைக் காணோம்னு தேடுறாங்க. காஃபி குடிக்க வாங்க” என்று அவள் கிண்டலாகச் சொல்ல, “ஃபைவ் மினிட்ஸ்ல வர்றேன் போ” என்று குளியல் அறைக்குள் புகுந்தான்.

மரகதவல்லி பஜ்ஜி போடும் வேலையில் இருக்க, அவருக்கு உதவிடச் சென்றாள் அவள்.

“ரெண்டு வெங்காயம் எடு பிரியா. அப்படியே வட்ட வட்டமா வெட்டு” என்று அவளை வேலை ஏவினார்.

“வாழைக்காய் இருக்கே மிஸ். அது போதுமே நமக்கு. அப்புறம் எதுக்கு வெங்காயம்?”

“ரஞ்சனுக்கு வெங்காயப் பஜ்ஜிதான் பிடிக்கும். உனக்கும், எனக்கும் வாழைக்காய் பஜ்ஜி போட்டுப்போம். என்ன?”

“ம்ம், நான் வெங்காயம் வெட்டுறேன்” என்று அவர் சொன்னபடி செய்தாள்.

“தள்ளுங்க மிஸ். நான் போட்டு எடுக்கறேன்” என்று அவளே வேலையில் இறங்க, மரகதவல்லி தேநீர் தயாரித்துக் கோப்பைகளில் ஊற்றினார்.

“நீ எல்லாத்தையும் எடுத்து வை. நான் மூஞ்சி கழுவிட்டு வர்றேன்” என்று அவர் அறைக்குச் செல்ல, பஜ்ஜி, தேநீரை உணவு மேஜைக்கு எடுத்துச் சென்றாள்.

அங்கே மேஜையில் மஞ்சள் ரோஜா அவளுக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிரபஞ்சன் வரவும், அவனுக்குத் தேநீர், பஜ்ஜியை பரிமாறியவள், “உங்களுக்குத் தெரியுமா பிரபா, நான் டியூஷன் படிக்கும் போது மிஸ் எனக்கு மட்டும் ஸ்பெஷலா பூ குடுப்பாங்க” என்று கடந்த காலக் கதை சொன்னாள்.

அப்போது மரகதவல்லியும் முகம் துடைத்தபடி கூடத்துக்கு வந்து விட்டார்.

பிரபஞ்சனுக்குக் கதை கேட்கும் ஆர்வமெல்லாம் இல்லாதது போல அசட்டையாக அமர்ந்திருந்தான். அவன் தேநீர் அருந்தியபடி அவளையே பார்த்திருந்தான்.

“ஃபர்ஸ்ட் டைம் எனக்காகக் குட்டியா ஆரஞ்சு கலர் ரோஸ் குடுத்தாங்க.” என்றாள்.

“நானா குடுத்தேன் பிரியதர்ஷினி?” என்று மரகதவல்லி சத்தமாகக் கேட்கவும், மெல்ல திரும்பி, “ஆமா மிஸ்..” என்று அவசரமாகச் சொன்னவள், “இல்லயில்ல, அது நீங்க குடுக்கல. இதே போல உங்க டேபிள்ல இருந்தது, நான் எடுத்துக்கவா மிஸ்னு கேட்கவும் நீங்க எடுத்துக்கோ சொன்னீங்க.” என்றாள்.

“அப்புறம் எனக்காக அடிக்கடி உங்க டேபிள் மேல ரோஸ் இருக்கும். பார்கவி கூடச் சண்டை போட்டு நானே எடுத்துப்பேன். இப்ப இந்த ரோஸ் பாக்கவும் அந்த ஞாபகம் வந்துச்சி பிரபா” என்று புன்னகையுடன் சொன்னாள்.

மரகதவல்லி தனக்கான தேநீரை எடுத்தவர், அவள் கையில் இருந்த ரோஜாவை சுட்டி காட்டி, “அது ரஞ்சன் வச்சது” என்றார்.

அத்துடன் அங்கிருந்து விலகி தொலைக்காட்சி முன் சென்று அமர்ந்திருந்தார்.

பிரியதர்ஷினி திரும்பி கணவனைப் பார்க்க, வலக்கரத்தால் தன் கன்னத்தைத் தேய்த்தபடி இமைக்காமல் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“ஓ, இது காலையில நம்ம பால்கனியில பூத்த எல்லோ ரோஸ் தானே? நீங்க பறிச்சுட்டு வந்தீங்களா பிரபா?” என்று அவள் கேட்க, அவனோ பதிலே சொல்லவில்லை.

error: Content is protected !!
Scroll to Top