பிரஞ்சனின் நெற்றி காயத்தின் தையல் இரண்டு நாள்களுக்கு முன்பு பிரிக்கப்பட்டிருந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் பார்த்தாலே பளிச்சென்று தெரியும் வகையில் சிறியதாக வடு இருந்தது. கை விரலிலும் கட்டுப் பிரித்திருந்தார்கள். நகம் பெயர்ந்த இடத்தில் இப்போது சதை தெரிந்தது. அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டு விடக் கூடாது என்பதால் மிகவும் கவனம் என்றிருந்தார் மருத்துவர். பிரியதர்ஷினி அழகு நிலையத்தில் இருந்த போது அவன் மருத்துவமனை சென்று வந்திருந்தான். பின்னர் அவளிடம் தகவல் பகிர்ந்தான்.
இப்போது, “நான் வரல டா. நீயே பார்த்துக்கோ” என்று நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள் அவள்.
நெற்றி, கை விரல், கணுக்கால் என எத்தனை இடங்களில் காயம் பட்டிருக்கிறது. எல்லாமே ஓரளவு இப்போதுதான் சரியாகி வருகிறது. நாளை மீண்டும் விளையாட சென்று கணவன் அடிபட்டு வர வேண்டுமா என்பதுதான் அவளது எண்ணமாக இருந்தது.
அதனால் கணவனின் பேச்சை அமைதியாக ஆமோதித்து அமர்ந்திருந்தாள்.
“நான் கேப்டன்னா விளையாட வந்தே ஆகணுமா என்ன? நான் இல்லாட்டி என்ன பண்ணுவீங்களோ அதைப் பண்ணுங்க” என்று நண்பனிடம் கத்திக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
“பார்த்தி..” என்று பல்லைக் கடித்தான்.
“ஆங், பெரிய இந்தியன் கிரிக்கெட் டீம், ஆஸ்திரேலியாக்கு அகைன்ஸ்ட்டா ஆட போறோம். போடாங்..” என்று அலுத்துக் கொண்டான்.
“விடுடா. நான் வரலன்னு சொன்னா விட்டுத் தொலையேன்டா. என்ன.. ஹாங், வேற எவனையாவது கேப்டனா போட்டு ஆடுங்கடா..”
“என்னால எங்கேயும் வர முடியாது பார்த்தி. யார் என்ன கேட்டாலும் நீயே பேசிக்கோ.” என்றதோடு அழைப்பை துண்டித்து அலைபேசியைப் பொத்தென்று சோஃபாவில் போட்டான். அந்தப் பக்கம் பார்த்திபன் என்ன பேசினான் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனால் கணவனின் பதிலை வைத்து அவனது கேள்விகளை அவளால் ஓரளவு அனுமானிக்க முடிந்தது.
மரகதவல்லியும் அங்குதான் இருந்தார். அதுவரை மகன் பேசியதை கேட்டு கொண்டிருந்தவர், அவன் பேசி முடித்ததும் விருட்டென்று எழுந்து தனதறைக்குச் சென்று விட்டார்.
மகன் என்று வந்து விட்டால் அவரின் நியதிகள் மாறுதலுக்கு உட்பட்டு விடும். மகன், மருமகளுக்கு இடையே எதுவோ சரியில்லை என்பதைக் கடந்த சில நாள்களில் கணித்து விட்டார் அவர். அதன் காரணம் இப்போதுதான் அவருக்குப் புரிந்தது.
பிரபஞ்சனிடம் பேசு, அவன் உன்னைப் புரிந்து கொள்வான் என மருமகளிடம் அவரே அறிவுரையாகச் சொல்லியிருக்கிறார்தான். ஆனால் இப்படியொரு அதிரடி மாற்றத்தை மகனிடம் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனது மாற்றம் அவருக்குச் சற்றே ஏமாற்றத்தை தந்ததோ? ஒரு வார்த்தை கூட அவனிடம் என்ன, ஏதென்று கேளாமல் உள்ளே சென்று விட்டார் அவர்.
மகன் நன்றாக யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாக இருந்தது.
மாமியார் உள்ளே சென்றது பிரியதர்ஷினியின் பார்வை வட்டத்தில் விழுந்தாலும் மனத்தில் பதியவில்லை. கணவன் இனி கிரிக்கெட் விளையாட போவதில்லை என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்ததும் எதையோ சாதித்து விட்ட உணர்வு. தனக்காக ஒன்றை செய்து விட்டான் கணவன். அவன் கிரிக்கெட் விளையாட செல்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்பது தெரிந்ததும் அதை அடியோடு விட்டு விட்டான் என ஆனந்த கூச்சலிட்டது அவள் மனம்.
மறுநொடியே ஓடி போய் உணவு மேஜையின் மேலிருந்த இனிப்பு பெட்டியை பிரித்து, லட்டை எடுத்து வந்து கணவனுக்கு நீட்டினாள்.
அவளைப் புருவங்கள் நெரிய பார்த்து, “வேணாம்” என்றான் கடின குரலில். அவள் கரம் அப்படியே நீண்டிருக்க, “நீ சாப்பிடு” என்றான்.
உடனே பாதியை பிய்த்து தன் வாயில் இட்டாள்.
“ம்ம், இப்போ எடுத்துக்கோங்க பிரபா” என்று மீதியை நீட்டினாள்.
“வேணாம்னு சொன்னேன் இல்ல பிரியா” என்று கண்கள் கடினமுற சொன்னான்.
“கொஞ்சமாதானே குடுக்கறேன். சாப்பிட்டா என்ன?”
“டின்னருக்கு அப்புறம் நான் ஸ்வீட் சாப்பிடுறது இல்ல பிரியா.” என்றான். அவன் கேள்விக்குப் பின்னே, இதுவரை என்ன கவனித்தாய் என்னை? என்ற கேள்வி தொக்கி நின்றதோ?
“ம்ம், ரொம்பத்தான் பண்றீங்க” என்று உதடு சுழித்துச் சொல்லி மிச்சத்தையும் அவளே உண்டு முடித்திருந்தாள்.
அந்நேரம் அவனது அலைபேசிக்கு அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் வந்து விழுந்து கொண்டேயிருந்ததை அவனது அலைபேசி திரை தொடர்ந்து ஒளிர்வதை வைத்தே உணர முடிந்தது.
அலைபேசியை அங்கேயே விட்டுவிட்டு அறைக்குச் சென்றிருந்தான் அவன்.
அவனது அலைபேசியுடன் அவனைப் பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தாள்.
அறையில் அவனது தடமே இல்லை. மெதுவாக எட்டி பால்கனியை பார்க்க அங்கே இருளில், அங்கிருந்த பீன் பேகில் கால் நீட்டி அமர்ந்திருந்தான்.
படுக்கையை ஒட்டிய மேஜையில் அவனது அலைபேசியை வைத்து அவனிடம் சென்றாள்.
கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னே கட்டி வான்வெளியை விழிகளால் விழுங்கி கொண்டிருந்தான்.
“பிரபா..”
“ம்ம்..”
“இந்நேரம் இங்க என்ன பண்றீங்க?” சாய்ந்த வாக்கில் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.
“தூங்கல?” என்ற கேள்வியை அவள் கேட்டதும் பட்டென்று எழுந்து நின்றான். அவள் சற்றே ஒதுங்கி வழி விடவும், உள்ளே வந்த மறுகணம் படுக்கையில் சரிந்திருந்தான்.
கடந்த ஐந்து நாள்களாகக் கணவனிடம் ஏற்பட்டிருந்த இந்த மாற்றத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவன் எப்போதும் போல அவளிடம் அன்பாகத்தான் இருக்கிறான். மிகவும் அக்கறையாகத்தான் கவனிக்கிறான். அவளுக்கு வேண்டியதை எப்போதும் போலப் பார்த்து பார்த்துச் செய்கிறான்.
அவள் பாதம் பற்றும் விரல்களுக்கு அவன் ஓய்வே கொடுத்ததில்லை.
அத்தனைக்குப் பிறகும் அவளை வருந்த வைக்கும் அளவு வெற்றிடத்தை உணர்ந்தாள் என்றால், அதற்குக் காரணம் அவளின் கண்ணெதிரேயே இருந்தது.
இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி இம்சித்தது.
படுக்கையின் ஒரு ஓரமாக மல்லாந்து, வலக்கரத்தால் முகத்தை மறைத்துப் படுத்திருந்தான் பிரபஞ்சன்.
“நான்தான் அன்னைக்கே சாரி சொல்லிட்டேனே பிரபா. அப்புறமும் எதுக்கு இப்படிப் பண்றீங்க?” திடீரென்று அவள் கத்தவும் திடுக்கிட்டு முழித்து, “என்னாச்சு?” என்று கண்களைச் சுருக்கி குழப்பத்துடன் வினவினான்.
“என்னாச்சு.. ஒன்னும் ஆகல..” என்று அவனைப் போலக் கட்டை குரலில் சொல்லி காண்பித்தாள்.
“நீங்க ரொம்பப் பண்றீங்க?” என்றாள் கோபத்தில் மூக்கு விடைக்க.
அவளின் கோபம் கண்டு திகைத்து எழுந்து அமர்ந்து விட்டான்.
“இப்போ என்ன பண்ணேன் நான்? கோபமா இருக்கியா? எதுக்கு?” தவறு செய்து விட்ட போலச் சிறுவன் போலத் தவிப்புடன் கேட்டான்.
“நீங்க ஒன்னும் பண்ணல..”
“அப்புறம்.. நான் ஒன்னும் பண்ணலன்னா நீயேன் கோபமா இருக்க?”
“அதுக்குத்தான் கோபமா இருக்கேன்” என்றாள் கோபமாக. அதைச் சொல்வதற்குள் அவள் முகம் சிவந்து விட, அவன் அதைக் கோபச் சிவப்பென நினைத்து பதட்டத்துடன் எச்சில் கூட்டி விழுங்கினான்.
“பிரியா.. நீ எதுக்குக் கோபமா இருக்கேன்னு கொஞ்சம் தெளிவா சொல்றியா பிளீஸ்? சத்தியமா இப்போ நீ கோவப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணேன்னு எனக்குத் தெரியல” என்று உதடு பிதுக்கி, கையை விரித்தான்.
“ஒன்னும் பண்ணலன்னு சொன்னேன்..” என்றாள் மீண்டும். அந்தோ, பரிதாபம். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘இப்போ எதுக்குக் கோபமா இருக்கான்னு தெரியலையே. என்னடா பண்ணித் தொலைச்ச பிரபஞ்சா’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு, தலை கலைத்து கோதி கொண்டான்.
அவள் புறமாகத் திரும்பி, அவள் கண்களுக்குள் ஊடுருவி, “என்ன, ஒன்னும் பண்ணலன்னு சொல்லிட்டு..” என்று அவன் கேட்டு முடிப்பதற்குள்,
“என்ன இல்ல.. என்னை.. என்னைச் சொன்னேன்.. மக்கு..” என்று ஒற்றை விரலால், “என்னை” என்று அவள் நெஞ்சை சுட்டிக் காட்டி, பல்லை கடித்துக் கண்ணை உருட்டி கோபமாகக் கத்தினாள். அப்போதுதான் பிரபஞ்சனுக்குப் பல்ப்பே எரிந்தது போலும்.
“என்னை ஒன்னும் பண்ணல.. ஓ? அப்படி..” என்று கரகரத்த குரலில் முணுமுணுத்தான்.
அவனுக்குப் பதில் சொல்லும் பொறுமையெல்லாம் அவளுக்குப் பறந்திருக்க, எட்டி அவனது டிஷர்ட்டை பிடித்து இழுத்தாள்.
அதை எதிர்பார்த்திராதவன் பிடிமானம் இல்லாது தடுமாறி, “பிரியா..” என்று அவள் மேல் மோதிட, அவன் மீசையைப் பிடித்திழுத்து முத்தமிட தொடங்கியிருந்தாள் அவள்.
அதுவரை அவன் மனத்தில் வண்டாகக் குடைந்த கேள்விகள் அனைத்தும் அக்கணம் காணாமல் போயின.
“மரகதவல்லி மிஸ் பிடிக்கும். அதுனால கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்” என்று அவள் முன்பு சொன்னது அவனைப் பாதிக்கவேயில்லை. அதை அத்தனை எளிதாக எடுத்துக் கடந்திருந்தான்.
ஆனால், “எங்கப்பா சொன்னாங்க, சரின்னு சொல்லிட்டேன்.” என்று போகிற போக்கில் அவள் சொன்னது அவனை அத்தனை பாதித்திருந்தது. அவன் எண்ணங்கள் தறிகெட்டு ஓட அவனால் அதைத் தடுக்க முடியவில்லை.
அப்பா யாரை கை காட்டியிருந்தாலும் மகிழ்ச்சியாக மணந்திருப்பாள் பிரியதர்ஷினி என்ற எண்ணமே அவன் நெஞ்சில் கத்தியை சொருகியது.
தன்னை மணக்க தன் அம்மாதான் காரணம் என்பது ஆசுவாசத்தை அல்ல, அவஸ்தையைத் தந்தது.
என்ன எதிர்பார்க்கிறான் அவளிடம்? என்ற கேள்வி எல்லாம் அர்த்தமற்று போய் விட்டது. அன்றே அவனது எதிர்பார்ப்புகளை மூட்டை கட்டி அவளின் காலடியில் போட்டு விட்டான்.
மனைவி தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள்? என்ற கேள்வி மட்டுமே அவன் முன் பூதாகரமாக எழுந்து நின்றது. அவளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற, தன் பிரியத்தைத் தனக்குள் புதைத்துக் கொண்டான்.
அவள் எதிர்பார்க்கும் சராசரி கணவனாக நடந்து கொண்டான். அவளைத் தவிர்க்கவெல்லாம் நினைக்கவில்லை அவன். ஆனால், நெருங்க மனம் வரவும் இல்லை. இடைவெளி தானாக விழுந்து விட்டது.
இப்போது அதை இல்லாமல் ஆக்கி விட்டாள் அவள். மனைவி தன்னைத் தேடுகிறாள் என்பதே அவனது பிரியம் கொண்ட மனத்துக்குப் போதையைத் தந்தது.
அவள் முத்தத்தில் தொடங்க, அவன் கரம் மொத்தமாய் அவளைத் தனக்குள் இழுத்துக் கொண்டது.
கோபங்கள் கரைந்து தாபங்கள் தழைத்தோங்கி நின்றது.
வெட்கங்கள், கூச்சங்கள் விடை பெற்றுக் கொண்டன. கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சியதில் காதலும், காமமும் கலந்திருந்தன.
உடைகள் கனமாகிய கணம் உடல்களே உடைகளாகி இருந்தன.
முத்தத்தில் ஆரம்பித்து மோகத்தில் மூழ்கி, முத்தத்தால் முடிவுரை எழுதினர்.