மறுநாள் அதிகாலையில் எழுந்து அவள் சமைக்கையில் மரகதவல்லியும் எழுந்து வந்து விட்டார்.
இருவரும் ஆளுக்கொரு வேலையைச் செய்யச் சமையல் சீக்கிரமாக முடிந்திருந்தது.
பிரபஞ்சன் எழுந்தான், குளித்தான், கிளம்பினான், சாப்பிட்டான், அலுவலகம் சென்றிருந்தான்.
எதற்கும் மனைவியை எதிர்பார்த்து நிற்கவில்லை அவன்.
அன்று மரகதவல்லி பள்ளி கிளம்பும் போதே அவனும் அலுவலகம் செல்ல தயாராகி நின்றிருந்தான்.
“உங்களை நான் ட்ராப் பண்றேன்ம்மா, வாங்க” என்று அம்மாவையும் உடன் அழைத்துச் சென்றான்.
மனைவிக்கு இயல்பாக விடை கொடுத்தவன், “ஈவ்னிங் ஆஃபீஸ்ல இருந்து கிளம்பும் போது கால் பண்றேன். ஏதாவது வாங்கிட்டு வரணுமா?” என்று கேட்டான்.
“ம்ஹும், ஒன்னும் வேணாம்” என்றாள்.
“ஏதாவது வேணும்னா.. எதுனாலும் கால் பண்ணு.. மீட்டிங்ல இல்லன்னா கண்டிப்பா எடுப்பேன்” என்று சொல்லி கையசைத்துச் சென்றான். கதவு நிலையில் சாய்ந்து அவன் மின் தூக்கிக்குள் நுழையும் வரை பார்த்து நின்றிருந்தாள் பிரியதர்ஷினி.
அவள் புதிய வேலையில் சேரும் தேதியை இன்னமும் அவளின் அலுவலகம் தெரிவித்திருக்கவில்லை. எப்படியும் ஒரு வாரம், பத்து நாள் ஆகிடும் என்பது அவளின் கணிப்பு. அதுவரை பகலில் இந்தத் தனிமையை நெட்டி தள்ள வேண்டும் என்பதே அவளுக்கு ஆயாசத்தைத் தந்தது.
வீட்டு வேலைகள் குவிந்து கிடந்தன. எந்த வேலையையும், அவ்வளவு ஏன் ஒரு விரலை கூட அசைத்திடும் மனநிலை இல்லாமல் சோஃபாவில் சரிந்து விட்டாள்.
இந்த வயிற்றுக்கு மட்டும் தனி அலாரம் இருக்கும் போலும். மணி அடித்தது போலப் பசித்தது. அதனால் எழுந்து சாப்பிட்டு வந்து மீண்டும் சோஃபாவில் சரிந்து விட்டாள். சற்று நேரத்தில் உறங்கியும் விட்டிருந்தாள்.
“பிரியா, என்னாச்சு? என்ன பண்ணுது?” கணவனின் கரிசன குரல் பதற்றமாக அவளை வருடி எழுப்பி விடவும், படக்கென்று கண்களைத் திறந்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த கணவனைப் பார்த்தாள்.
“பிரபா, டைம் என்ன? இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்?”
“உடம்புக்கு முடியலன்னா கால் பண்ண மாட்டியா? என்ன பண்ணுது?” அவள் நெற்றியில் கை வைத்து அவன் அக்கறையுடன் கேட்க, “எனக்கு ஒன்னும் இல்ல பிரபா. சும்மா சோபாவுல படுத்தேன். அப்படியே தூங்கிட்டேன் போல.” என்றாள்.
அவளையே இமைக்காமல் பார்த்தவன், “இந்நேரத்துல தூங்க மாட்டியே? தலைவலியா?” என்று மென்மையாக வினவினான். .
“அச்சோ, நான்தான் ஒன்னுமில்லன்னு சொல்றேனே பிரபா..”
அவள் மேலிருந்து விழிகளை விலக்காமல், “ம்ம்” என்றான்.
“நீங்க என்ன இந்நேரமே வீட்டுக்கு வந்துட்டீங்க?”
“தோனுச்சு, வந்துட்டேன்” என்றான்.
“வர்றேன்னு சொல்லவே இல்ல?”
“ஓ, ஏதாவது வாங்கிட்டு வரணுமா? சொல்லு. இப்போ போய் வாங்கிட்டு வர்றேன்” என்று பரபரத்தவனை, பிடித்து உலுக்கி விடும் வெறி வந்தது அவளுக்கு.
“சொல்லு பிரியா, என்ன வாங்கிட்டு வரணும்”
“ஒன்னும் வேணாம்” என்று முறுக்கி கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
“ம்ம்” என்றவன், எழுந்து சட்டையின் கையை மடித்து விட்டு வீட்டு வேலைகளைச் செய்தான். அம்மாக்கு உதவி செய்து வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் எப்போதோ செய்யப் பழகியிருந்தான். ஆனால் இதையெல்லாம் இப்போது மகன் செய்வதைப் பார்த்தால் மரகதவல்லியிடமிருந்து மருமகளுக்கு மண்டகபடி நிச்சயமாகக் கிடைக்கும்.
சலவை இயந்திரத்தில் இருந்து துணிகளை எடுத்து அவன் உலர்த்த போக, “நீங்க வைங்க பிரபா. நான் காயப் போட்டுக்கறேன்” என்று தடுத்தாள் அவள்.
“இந்நேரம் தூங்கியிருக்கன்னா உனக்கு முடியலன்னுதானே அர்த்தம்? நீ ரெஸ்ட் எடு” என்றான் கண்டிப்புடன்.
“இல்ல பிரபா..”
“நீ டெய்லி செய்யுற வேலையை நான் ஒரு நாள் செஞ்சா ஒன்னும் குறைஞ்சுடாது” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்து, “உங்களுக்கு ஆபீஸ் வேலை இல்லையா? வொர்க் ஃப்ரம் ஹோம்தானே வாங்கிட்டு வந்திருப்பீங்க?” என்று கேட்டாள்.
“நான் ஒன்றர மணிக்குதான் கால் ஜாயின் பண்ணணும். அதுவரைக்கும் நான் ப்ரீதான்” என்றான். அன்று மட்டுமல்ல அதற்கடுத்து வந்த நாள்களும் வீட்டில் இருந்துதான் வேலை பார்த்தான். இடையில் ஒரு நாள் நான்கு மணி நேரத்திற்கு மட்டும் அலுவலகம் சென்று வந்தான். மற்றபடி வீட்டில் இருந்துதான் அலுவலை கவனித்தான்.
அதில் ஒரு வசதி இருக்கத்தானே செய்கிறது. மனைவி போக வேண்டிய இடங்களுக்கு எல்லாம் அவளை அழைத்துச் சென்றான்.
அவளுக்கும், மரகதவல்லிக்கும் வாங்கிய புதுப் புடைவைகளுக்குச் சட்டை தைக்க வேண்டும் என்றாள், காய்கறி வாங்க வேண்டும் என்றாள், அவளுக்குச் சந்தோஷமாகச் சாரதி ஆனான்.
வெள்ளிக்கிழமை அவளுக்குப் பணியாணை மெயிலில் வந்து விட்டது. அவள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க, அலட்டிக் கொள்ளாமல் அவளை அழகு நிலையம் அழைத்துச் சென்றான்.
“நானே வந்துடுவேன் நீங்க வெயிட் பண்ண வேணாம் பிரபா” என்று அவள் அழுத்திச் சொன்னாலும் கேளாமல், நான்கு மணி நேரம் அவளுக்காக அங்கேயே காத்திருந்து திரும்ப அழைத்து வந்தான்.
அந்த வாரம் முழுக்க அவனுக்கு நண்பனிடம் இருந்து அழைப்பே வரவில்லையே என்று அவள் அவனைச் சந்தேகமாகப் பார்த்திருந்தாள்.
“சின்னதா சவுடுண்டு விட்டேன். அதுக்குப் பயந்து பிரெண்ட் கிட்ட பேசுறது இல்லையா இவரு? இல்ல திருந்திட்டாங்களா?” என்று மனத்துக்குள் எண்ணியபடியே கணவனை ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தாள்.
இரண்டு நாளைக்கு முன்தான் வீட்டு உதவிக்கு ஆள் வந்திருந்தார். மாமியார், மருமகள் இருவரும் அந்த நடுத்தர வயது பெண்மணியிடம் பேசியிருந்தார்கள். இருவருக்கும் திருப்தியாக, அவரையே உதவிக்கு வரச் சொல்லியிருந்தார்கள்.
அவரின் வேலை குறித்து மகனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் மரகதவல்லி.
அந்நேரம் பிரபஞ்சனின் அலைபேசி சத்தமாக ஒலியெழுப்பியது. சோஃபாவில் அவளுக்குப் பக்கத்தில் இருந்த திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததும் மனத்துக்குள் சத்தமாகச் சலித்துக் கொண்டாள்.
“பார்த்திபன்”
பிரபஞ்சன் அலைபேசியைக் கையில் எடுத்து அனுமதி போல அவளின் முகம் பார்த்தான்.
“என்னைப் பார்த்தா..” என்று விழியால் மொழிந்து தோளை அசட்டையாகக் குலுக்கினாள் அவள்.
“சொல்லு பார்த்தி..”
“நாளைக்கா? மேட்ச்சா? நானா.. வாய்ப்பில்லை..” என்றவன் கருவிழிகள் அழுத்தமாக மனைவியின் மேலேயே பதிந்திருந்தன.