அவர்களின் கிரிக்கெட் அகாடெமி வீரர்களுக்கு என்றே பிரத்யேக வாட்ஸ்அப் குழு இருந்தது. அதில் ஒரே வாழ்த்துச் செய்தியாக வந்து குவிந்து கொண்டிருந்தது.
அதற்கு மேல் புகைப்படங்கள் வேறு வந்து வரிசையாக விழவும், “உங்களுக்கு வாட்ஸ்அப்ல நிறைய மெசேஜ்ஸ் வந்துட்டே இருக்கு பிரபா, இந்தாங்க” என்று அலைபேசியை அவனிடம் நீட்டினாள். மேலோட்டமாகத் திரையில் தெரிந்த அறிவிப்பை, செய்திகளை நோட்டமிட்டவன், “நத்திங் இம்பார்ட்டன்ட்” என்று சொல்லி, அலைபேசியை அவளிடம் இருந்து வாங்கவே இல்லை.
கடைத் தெருவில் இருந்து நேராக அவளது வீட்டுக்குச் சென்றார்கள்.
அங்கே அவளின் இரு சக்கர வாகனம் இருந்தது. அவளின் பெற்றோர் வற்புறுத்த இரவு உணவை எளிமையாக அங்கேயே முடித்துக் கொண்டு அவளின் வண்டியில் வீடு திரும்பினார்கள்.
வானில் நிலவு பளிச்சிட்டது. இருவரும் வீடு திரும்புகையில் நேரம் பத்து மணியை நெருங்கியிருந்தது.
மரகதவல்லி கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் கதவை திறந்து உள்ளே காலடி வைக்க, “அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே. அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே” என்ற பாடல் அவர்களின் செவிகளை மோதியது.
“டிவிய ஆஃப் பண்ணுங்கம்மா” என்றான் அடர்ந்த குரலில். அடுத்த நொடியே தொலைக்காட்சியை அணைத்து விட்டார் மரகதவல்லி.
“சாப்பிட்டீங்களா?”
“ம்ம், எட்டு மணிக்கே”
“அப்புறம் ஏன் இன்னும் தூங்க போகாம டிவி முன்னாடி உக்கார்ந்து இருக்கீங்க? நாளைக்கு ஸ்கூல் இல்லையா உங்களுக்கு?” என்று கேட்டான்.
“நீங்க இந்நேரத்துக்கு வந்துடுவீங்கன்னு தெரியும். அதான் உங்களைப் பார்த்துட்டுப் படுக்கப் போகலாம்னு இருந்தேன்” என்றார் அவர்.
இரண்டு கைகள் நிறையப் பைகளுடன் நின்றிருந்தவன் பதிலாகத் தலையசைத்தான்.
“உங்களுக்குப் பால் தரவா மிஸ்?” என்று அவரிடம் கேட்டாள் பிரியதர்ஷினி.
அந்த மிஸ் என்று விளிப்புக்குக் கண்களை இறுக மூடித் திறந்தான் பிரபஞ்சன்.
மகன் முகத்தைக் கூர்ந்த மரகதவல்லி, “நீங்க வந்ததும் குடுக்க இப்பத்தான் பால் காய்ச்சினேன். உட்காருங்க, நான் எடுத்துட்டு வர்றேன்” என்றார்.
“எனக்கு வேணாம்மா. பிரியாக்கு குடுங்க” என்றவன், அவருக்காக வாங்கிய இனிப்பு, காரம் அடங்கிய பையை அவரிடம் கொடுத்தான்.
“மிஸ், நான் உங்களுக்குச் சேலை எடுத்தேன். பார்க்கறீங்களா?” என்று ஆவலாக விழிகளை விரித்துக் கேட்ட பிரியதர்ஷினி, கணவனின் கையில் இருந்த பைகளை ஆராய்ந்து, ஒன்றை மட்டும் அவன் விரலில் இருந்து லாகவமாக உருவினாள்.
“நீங்க ஸ்கூல் கட்டிட்டு போற மாதிரி காட்டன், ஜார்ஜெட் அப்புறம் சில்க் காட்டன் கூட எடுத்தேன். நீங்க பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க” என்று அவரிடம் கொடுத்தாள். அவளின் ஆர்வம் கண்டு அப்போதே அந்தப் பையைப் பிரித்து, புடைவைகளைப் பார்த்தார் மரகதவல்லி.
“எல்லாமே நல்லாருக்கு. ஆமா, எனக்கு எதுக்கு இத்தனை சேலை எடுத்த?”
“நீங்கதானே மிஸ் டெய்லி சேலை கட்டுறீங்க? அப்போ உங்களுக்கு நிறையச் சேலை வேணும்ல? கடைக்குப் போயிட்டு எனக்கு மட்டும் வாங்கினா நல்லா இருக்குமா? எனக்கு மனசு வராது மிஸ்” என்றாள் புன்னகையுடன்.
“சரி, உனக்கும் ரஞ்சனுக்கும் என்ன வாங்கின?”
“எனக்கு அப்பா ட்ரெஸ் எடுத்து கொடுத்தாங்க” என்று வேகமாகச் சொன்னவள், ஒரு நொடி தடுமாறி, “நான் இப்போ போட்டிருக்க நகைங்க மாதிரி சில செட் வாங்கினோம். நான் ஆபீஸ் போட்டு போறதுக்கு. அது உங்ககிட்ட காலையில காட்டவா?” என்று கேட்டாள்.
“இது போலவா? ம்ம், நல்லாருக்கு” என்றார் பாராட்டாக.
“இரு. நான் உனக்குப் பால் எடுத்துட்டு வர்றேன்”
“நீங்க உக்காருங்க மிஸ். நான் போய் எடுத்துட்டு வர்றேன்”
“கடை கடையா ஏறி இறங்கி அலைஞ்சுட்டு வந்திருக்கீங்க. நீ உக்காரு” என்று அவளின் தோளில் அழுத்தி அவளை அமர வைத்து, உள்ளே சென்று இளம் சூட்டில் பால் எடுத்து வந்து நீட்டினார்.
பாலை அருந்தியபடியே, “நாளைக்குப் பிரேக்பாஸ்ட் அண்ட் லஞ்ச் என்ன மிஸ் செய்யட்டும்?” என்று அவள் கேட்க, “காலைலைக்கு இட்லியும் சட்னியும் செஞ்சிட்டு, மதியத்துக்கு..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் உடை மாற்றி வெளியே வந்திருந்தான் பிரபஞ்சன்.
உணவு மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்தவன், “இந்த மெனு குடுக்கற வேலையை முதல்ல நிறுத்துங்கம்மா. பிரியா உங்க வீட்டு சமையல்காரி இல்ல. உங்களால முடிஞ்சா சமைங்க. இல்லையா, சமையலுக்கு நல்ல ஆளா பார்த்துப் போட்டுடலாம்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“நான்தான் நாளைக்கு என்ன சமைக்கட்டும்னு கேட்டேன் பிரபா” என்று பிரியாவும், “நான் எப்பவும் போல முன்னாடியே பிளான் பண்ணிட்டா ஈசியா இருக்குமேன்னு சொன்னேன் ரஞ்சன்” என்று மரகதவல்லியும் படபடத்தார்கள்.
“பிரியா இன்னமும் உங்க ஸ்டூடண்ட் இல்லம்மா. அவளுக்கு அதைச் செய், இதைச் செய், இப்படிச் செய்னு டைம் டேபிள் போட்டு குடுக்கறதை நிறுத்துங்க முதல்ல” என்றான் திட்டவட்டமாக.
“இல்ல பிரபா, நான்தான்..”
என்ற மனைவியை நோக்கி, “நான் இப்போ சொல்லலன்னா அம்மா உன்னை அவங்க ஸ்டூடன்ட் மாதிரியேதான் காலத்துக்கும் ட்ரீட் பண்ணுவாங்க. உனக்கு அதான் வேணுமா?” என்று கேட்டான். அவள் தர்மசங்கடத்துடன் மரகதவல்லியை பார்க்க, அவரோ அதிசயமாகப் புன்னகைத்தார். இது குறித்து மாமியாரிடம் அவளே பேசியிருக்கிறாள்தான். ஆனால் அதையே கணவன் சொல்லும் போது, அதன் தொனியே வேறாக ஒலித்தது.
“நான் ஆல்ரெடி வீட்டு ஹெல்ப்க்கு ஏஜென்சில ஆள் அனுப்ப சொல்லிட்டேன். அடுத்த மாசம் ஸ்டார்டிங்ல இருந்து வந்துடுவாங்க” என்றான்.
“இப்போ வேலைக்கு ஆள் வைக்க என்ன ரஞ்சன் அவசியம்?”
“பிரியா வேலைக்கும் போய்ட்டு வீட்டு வேலையும் செய்யிறது கஷ்டம்மா. ரெண்டு நாள்ல ஆள் வருவாங்க, நீங்க பேசி பாருங்க. உங்களுக்குப் பிடிக்கலன்னா வேற ஆள் அனுப்ப சொல்லலாம்” மேலே விவாதத்துக்கு நான் வாய்ப்பளிக்கப் போவதில்லை என்பதாக முடித்து உள்ளே சென்றிருந்தான்.
பிரியதர்ஷினி சங்கடமாக மாமியாரை பார்க்க, “போய்ப் படு, போ. நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு” என்று எழுந்தவர், “மதியத்துக்கு நீயே ஃபிரிட்ஜ்ல என்ன இருக்குன்னு பார்த்து சமைச்சிடு.” என்று சொல்லிச் சென்றார்.
அவளுக்கு அது சிறிய வெற்றிதான். ஆனால் ஏனோ கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை.
அவள் அறைக்குள் நுழைய, மாத்திரை விழுங்கிக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
“பாடி பெயின் இருக்கா பிரபா?”
“ம்ம்”
மறுநாளுக்கான உடைகளை எடுத்து இஸ்திரி போட தொடங்கினான்.
“உனக்கு எதுவும் அயர்ன் பண்ணணுமா?”
“ம்ஹும்” என்று இரவு உடையை எடுக்க அலமாரியை திறந்தாள். அதன் கண்ணாடியில் பிரபஞ்சனின் பிம்பம், அவன் கணுக்காலில் சற்று மேலே வரை வலிக்காகப் போடப்படும் எலாஸ்டிக் கம்ப்ரஷன் பேண்டேஜ் போட்டிருந்தான்.
“பிரபா, கால்ல என்ன கட்டு போட்டிருக்கீங்க?”
“சுளுக்கு, வேற ஒன்னும் இல்ல. ரெண்டு நாள்ல சரியா போயிடும்” என்றான் சாதாரணமாக.
“அதுக்கா இவ்வளவு பெரிய கட்டு போட்டிருக்கீங்க?”
“பேண்டேஜ் கையில வந்துருச்சு அத வேஸ்ட் பண்ண கூடாதுன்னு சுத்தி விட்டுட்டானுங்க, நத்திங் டு வொர்ரி” என்றான், தன் வேலையில் கவனமாக. அவளோ அப்படியே அவனைப் பார்த்தது பார்த்தபடி அசையாமல் நிற்க, அவனது அலைபேசி ஓயாமல் ஒலித்துக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்ற தகவல் சொல்லி அவளைக் கலைத்தது.
படுக்கையில் அவள் பக்கமிருந்த மேஜையில் அவனது அலைபேசி இருந்தது.
பிரபஞ்சன் ஆறே எட்டில் படுக்கையைச் சுற்றி வந்து, அலைபேசி வெடுக்கென எடுத்து, அந்த வாட்ஸ்அப் குழு அறிவிப்பு செய்திகளை, “ம்யூட்” செய்தான். குறுஞ்செய்திகள் வரும், ஆனால் சத்தமாக அறிவிப்புகள் வந்து தொல்லை செய்யாது.
“உங்க டீம் கிட்ட பேசலையா நீங்க?”
“என்ன பேச சொல்ற?” என்று புருவங்களை நெரித்தான்.
“டீம் வின் பண்ணதுக்கு விஷ் பண்ணலையா நீங்க?”
“இந்நேரம் கொண்டாடி முடிச்சுருப்பானுங்க” என்று சத்தமாகச் சொன்னவன், “நான் விஷ் பண்ணலன்னு வருத்தப்பட்டுட்டு இருப்பாங்கனுங்களா என்ன?” என்று அவன் முணுமுணுத்தது அவளுக்குக் கேட்கவில்லை.
அலைபேசியை அங்கேயே வைத்து விட்டு மீண்டும் இஸ்திரி போடும் வேலையைத் தொடர்ந்தான். அவள் உடை மாற்றி ஓய்வறை சென்று வரும் போது, முகத்தில் கை வைத்துக் கண் மூடி படுத்திருந்தான்.
அவன் விழித்திருக்கிறானா? உறங்கி விட்டானா? அவளால் கணிக்க முடியவில்லை.
ஒரே நாளில் இருவருக்கும் இடையில் இருவருமாகச் சேர்ந்து ஒரு பெருஞ்சுவரை கட்டி விட்டது போலிருந்தது அவளுக்கு.
படுக்கையில் இப்படி இடைவெளி விட்டுப் படுத்தெல்லாம் அவர்களுக்குப் பழக்கமே இல்லை.
புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் இரவு எப்போதும் இனிமையாகவே கழியும். இயற்கை அவளைத் தள்ளி நிறுத்தும் நாள்களிலும், இழுத்து கையணைப்புக்குள் மனைவியை வைத்தே உறங்கிடுவான் அவன். இன்றோ இடைவெளி இடறியது. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப அவளுக்கும் இஷ்டமில்லை போலும்.
அவன் மல்லாந்து படுத்திருக்க, இவளோ அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.