பிரிய பிரபஞ்சமே – 13 (1)

அவள் பெற்றோர் பணம் செலுத்துமிடத்தில்தான் இன்னமும் நின்றிருந்தார்கள். பேச்சு மும்முரத்தில் இருந்தவர்கள் அவர்கள் பக்கமே திரும்பவில்லை. அண்ணனை தேடினால், அவனையும் காணவில்லை.

ஒரு பெருமூச்சுடன் அவள் கணவன் புறமாகத் திரும்ப, பிரபஞ்சன் பார்வை இப்போது அவள் மேலில்லை.

அவள், “பிரபா” என்றழைத்த மறுநொடி அவனது அலைபேசியை அவள் கையில் திணித்து விட்டு அவளின் பெற்றோரை நோக்கி நடந்தான்.

“பிரபா, அப்பாக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களைப் பத்தி அப்படிப் பேசுவார். அவர் முன்னாடி நீங்க என்னைத் தனியா விட்டுட்டு போனா..”

மறுகணம் நடையை நிறுத்தி, “நான் எங்கேயும் போகல” என்றான் அடர்ந்த குரலில்.

“அப்பா உங்களைத் தப்பா நினைச்சுட கூடாதுன்னுதான்…” என்று திரும்பி திரும்பி அப்பாவை பார்த்தாள்.

“அப்பாக்கு பிடிக்குமா? அப்போ நம்ம கல்யாணம்.. எனக்கு ஏன் நீ ஓகே சொன்ன பிரியா?” என்று அவன் தீவிரமாகக் கேட்க, “அப்பா சொன்னாங்க, சரின்னு சொல்லிட்டேன்” என்று தன் கவனம் முழுவதையும் அப்பாவின் மீதே வைத்தே பதில் சொன்னவளுக்கு அவனது கேள்வியும், தான் சொன்ன பதிலும் மூளையில் பதிய, சட்டென நடையை நிறுத்தி, “சாரி. நீங்க என்ன கேட்டீங்க பிரபா?” என்று அவன் கண்களைப் பார்த்து கேட்டாள்.

அவளை விட்டு ஓரடி தள்ளி நின்றிருந்தான். அவன் கைகள் இரண்டும் காற்சட்டை பைக்குள் இருந்தன. கண்களை மட்டும் அசைத்து, முன்னாடி நட என்று செய்கை செய்தான்.

“அப்பா, நம்ம கல்யாணம்னு ஏதோ கேட்டீங்களே. என்னது?” என்று கேட்டாள்.

ஒன்றுமில்லை என்பதாகத் தலையசைத்தான்.

“சொல்லுங்க பிரபா பிளீஸ்”

“உங்கப்பா பார்த்த மாப்பிள்ளைன்னு எனக்கு ஓகே சொன்னியான்னு கேட்டேன். அதுக்கு எஸ் சொன்ன. உங்கப்பா கூப்பிடுறார் பார்” என்று தாடையை உயர்த்தி மாணிக்கவேல் இருந்த திசையைக் காட்டினான்.

“அது பிரபா..” என்று விளக்கம் சொல்ல போனவள், அப்பா அழைக்கிறார் என்று அவன் சொன்னதும் சடாரென்று பேச்சை நிறுத்தி திரும்பி அப்பாவை நோக்கினாள்.

பிரபஞ்சன் நடை மறந்து போன சவலை பிள்ளை போல நின்ற இடத்திலேயே கல்லாகச் சமைந்து நின்றான்.

“தர்ஷி” என்று மாணிக்கவேல் அழைக்கவும், பிரியதர்ஷினி அப்பாவை நோக்கி நகர்ந்தவள், பாதி வழியில்தான் கணவன் தன்னைப் பின் தொடரவில்லை என்பதையே உணர்ந்தாள்.

“பிரபா, வாங்க” என்று அவள் சத்தமாக அழைக்கவும், பதிலாகச் சின்னத் தலையசைப்பு அவனிடம். சற்றே இடைவெளி விட்டு மிக நிதானமாக அவர்களை நோக்கி நடந்தான்.

துணிக் கடையில் இருந்து வெளியே வந்து அதே வணிக வளாகத்தில் இருந்த செயற்கை நகைகள் விற்கும் கடையை நோக்கி நடந்தார்கள். அங்கே சில ஆயிரங்கள் பெருமதிப்பில், அழகழகான வடிவங்களில் பொன் போன்றே தோற்றமளிக்கும் நகைகள் ரகம் ரகமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

“எனக்கும் ரெண்டு செட் வளையல் வாங்கித் தாங்கங்க” என்று ராதா கணவரிடம் கேட்க, “நீதான் தங்கம் தவிர எதுவும் போடுறது இல்லையே? அப்புறம் ஏன் என் தங்கத்துக் கூடப் போட்டி போடுற?” என்று மனைவியை விளையாட்டாக மாணிக்கவேல் கடிய, “உங்களுக்கு நான் வாங்கித் தர்றேன்ம்மா” என்றாள் மகள்.

“அம்மாவுக்கு இந்த நகை சேராது குட்டிமா. அலர்ஜி ஆகிடும்.”

“அம்மா ஆசைப்படுறாங்க இல்லப்பா.”

“அட நான் சும்மா கேட்டேன் தர்ஷி. இந்தா நீ இதைப் போட்டு பாரு” என்று மெல்லிய கழுத்து சங்கிலியை எடுத்து அவளிடம் நீட்டினார். அவர்கள் நகை தேர்வில் மூழ்கி போக, பிரகாஷ் அப்போது அங்கு வந்தான்.

பிரபஞ்சன் ஓரமாக நின்று அந்த வணிக வளாகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, “இவ ஷாப்பிங் முடிக்கட்டும்‌னு நான் மால்ல ஒரு ரவுண்டு போயிட்டு வந்துட்டேன்.‌ ஆனா இவங்க இன்னும் முடிக்கல” என்றான், கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்து.

அவர்கள் நின்றிருந்த இடத்துக்குப் பக்கத்திலேயே, “பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரீம்” கடை இருந்தது.

“தர்ஷி, ஐஸ்கிரீம் வேணுமா?” என்று நகை தேர்ந்தெடுக்கும் மும்முரத்தில் இருந்த தங்கையிடம் கேட்டான் பிரகாஷ்.

“வேணும்ண்ணா..”

“பாஸ்கின் ராபின்ஸ், என்ன பிளேவர் வேணும்?”

“நீயே எதையாவது ஒன்னை வாங்கிட்டு வாண்ணா”

“நான் வாங்கிட்டு வந்ததுக்கு அப்புறம் திட்ட கூடாது”

“திட்ட மாட்டேன்” என்று திரும்பி கத்தினாள்.

“அம்மா உங்களுக்கு?”

“எனக்கு வேணாம்ப்பா. அப்புறம் தொண்டை கட்டிக்கும்” என்று ராதா மறுக்கவும், “உங்களுக்கு?” என்று திரும்பி பிரபஞ்சனிடம் கேட்டான்.

“குக்கீஸ் அண்ட் கிரீம்” என்றான் அவன்.

“ஓகே, அப்போ உங்களுக்குக் குக்கீஸ்..”

“இல்ல, எனக்கில்ல. பிரியாக்கு சொன்னேன்” என்றான்.

“ஓகே” என்று அவன் சிரிக்க, அவனுடன் இணைந்து நடந்தான் பிரபஞ்சன்.

பிரியதர்ஷினி ஒரு கரண்டி ஐஸ்கிரீமை விழுங்கியதும், “ஹே தேங்க்யூண்ணா. எனக்குப் பிடிச்ச ப்ளேவர்” என்று ரசித்து உண்டாள். பிரகாஷ், அப்பாவிடம் என்ன வேண்டுமென்று கேட்கவே இல்லையே. ஏனென்றால் அப்பா, மகளை அவனுக்குத்தான் நன்றாகத் தெரியுமே.

“இந்தாங்கப்பா” என்று மாணிக்கவேலுக்குக் கொடுத்திருந்தாள் மகள்.

“போதும் குட்டிமா, நீ சாப்பிடு” என்று அவர் மறுக்க, “இந்த டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் தொல்லை தாங்கலப்பா” என்று அவன் புலம்ப, பிரபஞ்சன் வேடிக்கை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அவனது நேரம் அவன் கால்கள் சரியாக விளையாட்டுத் தொடர்பான பொருள்கள் விற்கும் கடை முன் வந்து நிற்க, மானசீகமாக நெற்றியில் அறைந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

ஒரு சுற்று நடந்து ஓய்ந்து நகை கடைக்கு அவன் வர, “பிரபா, உங்க போன் அடிச்சுட்டே இருக்கு” என்று வேகமாக அவனிடம் வந்து அவனது அலைபேசியை நீட்டினாள்.

திரையில் ஒளிர்ந்த நண்பனின் பெயரை பார்த்ததும், “ப்ச்” என்றான் எரிச்சலுடன்.

அலைபேசியை வாங்கி, அழைப்பை துண்டித்து, “பின்னர் அழைக்கிறேன்” என்று அவனுக்குக் குறுஞ்செய்தியை தட்டி விட்டான்.

அந்தச் செய்தியை பார்க்காமலேயே மீண்டும் அவனை அழைத்தான் பார்த்திபன். அலைபேசியை இறுக பற்றி, கருவிழிகளை அசைத்து மனைவியை நோக்கினான்.

“எடுத்து பேசுங்க” என்று அவள் அனுமதி கொடுக்கவும், அழைப்பை ஏற்றிருந்தான்.

“மச்சா ரஞ்சா.. டேய் கேப்டன், நாம ஜெயிச்சுட்டோம் டா” என்று பார்த்திபன் கூச்சலிட்டது பக்கத்தில் நின்றிருந்தவளின் காதிலும் விழுந்தது.

“ம்ம்”

“கால் பண்ணா எடுக்க மாட்டியா? கேப்டன் நீ கப் வாங்க வரலியா?”

“நீயே வாங்கிடு” என்றான்.

“டேய், மிஸ்டர் பி. நீ தான்டா மேன் ஆஃப் த சீரிஸ்” என்று பார்த்திபன் சொன்னது அவள் காதில் தெளிவாக விழவில்லை.

“நீங்க போகணுமா பிரபா?” என்று அவன் பேச்சின் நடுவில் இடையிட்டாள்.

அதற்கு மறுப்பாகத் தலையசைத்து, “ம்ம், வெளில இருக்கேன். நீ பார்த்துக்கோ” என்று நண்பனிடம் முடித்திருந்தான் அவன்.

“டேய்..” மேலே நண்பன் பேசுவதற்கு இடம் கொடாமல் அழைப்பை துண்டித்து, அலைபேசியை மீண்டும் அவளிடம் கொடுத்திருந்தான்.

“மேட்ச் உங்க டீம் வின் பண்ணிட்டீங்களா பிரபா?”

“ம்ம்”

“செலிப்ரேஷன் இருக்குமா? நீங்க போகணும் இல்ல?”

“அவசியம் இல்ல”

“நீங்கதானே கேப்டன்?”

“உங்கம்மா கூப்பிடுறாங்க பாரு” என்றான். அவள் திரும்பி பார்க்க, “இது எல்லாத்தையும் பில் பண்ணிடலாமா தர்ஷி?” என்று கடையிலிருந்து அவளிடம் கேட்டார் ராதா.

“பண்ணிடுங்கம்மா” என்றவள் திரும்பி கணவனைப் பார்க்க பிரகாஷுடன் புதிய நெட்ப்ளிக்ஸ் தொடரை பற்றிய விவாதத்தில் இருந்தான் அவன்.

அந்த மாலை முழுக்க அவனது அலைபேசி அவள் வசம்தான் இருந்தது. அடுத்து எந்த அழைப்புகளும் அவனுக்கு வரவில்லை.

error: Content is protected !!
Scroll to Top