முதல் வேலையாகச் சென்று உடையை மாற்றினாள் அவள். சேலையைக் களைந்து கேப்ரி ஜீன்ஸ் அதற்குப் பொருத்தமான சட்டை அணிந்து தயாராகி வந்தாள்.
மாலை தேநீர், சிற்றுண்டி முடித்ததும் அனைவரும் ஒன்றாக ஒரே காரில் கடைத் தெருவுக்குக் கிளம்பி விட்டார்கள்.
அவர்கள் வழக்கமாகச் செல்லும் ஜவுளிக் கடை அது. நேராகப் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள்.
“குட்டிமா, இது பிடிச்சுருக்கான்னு பாரு” என்று ஒரு சுடிதார் செட்டை எடுத்து மகளிடம் நீட்டினார் மாணிக்கவேல்.
“முதல்ல சேலை எடுக்கலாம்ங்க” என்று ராதா சொல்லவும், “நாம உனக்கு ஷாப்பிங் வந்தா, உங்கம்மா அவளுக்கு வாங்க வந்திருக்கா குட்டிமா” என்று மகளிடம் சொல்லி சிரித்தார் அவர்.
“இருங்கம்மா, இங்க முடிச்சுட்டு சேரி செக்ஷன் போவோம். உங்களைப் போல அதிகமா நான் சேரி கட்ட போறதில்லயே. சோ எனக்கு டாப்ஸ் செலக்ட் பண்ணுங்க வாங்க” என்று அம்மாவையும் சேர்த்து இழுத்தாள்.
பெற்றோர் அவளுக்காகத் தேடித் தேடி எடுக்க, அங்கேயே சாய்ந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன். அவன் முகம் வாடி தெரியவும், “என்னாச்சு?” என்று அவனிடம் கேட்டாள்.
“ஒன்னுமில்லயே பிரியா. யூ கேரி ஆன்” என்று ஒதுங்கியவனை வற்புறுத்தி உள்ளே இழுத்துச் சென்றாள்.
மாணிக்கவேல் மகளுக்காக எடுத்து நீட்டிய எதுவுமே அவனுக்குப் பிடிக்கவில்லை.
“இந்தக் கலர் காம்போ நல்லா இல்ல. இந்த டிசைன் நல்லா இல்ல. இது உனக்குச் சூட் ஆகாது” என்று குறைகள் சொல்லி கொண்டே இருந்தான். அவள் கடுப்பாகி விட்டாள்.
“அப்போ நீங்களே செலக்ட் பண்ணுங்க” என்று அவள் சொல்லவும், மிக நிதானமாக அவளுக்கான உடைகளைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து, “போய்ப் போட்டு பாரு” என்று அவளிடம் கொடுத்தான்.
அவள் அப்பா எடுத்ததை விட, அவன் எடுத்துக் குமித்திருந்தது அதிகமாக இருந்தது.
“வேணும்னு பண்றீங்களா பிரபா? எங்கப்பா எனக்கு டிரஸ் வாங்கிக் குடுக்குறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?”
“எனக்கென்ன பிரச்சனை? நான் என் பொண்டாட்டிக்கு ஆசையா வாங்கிக் கொடுத்தா அது தப்பா பிரியா?” என்று தீவிரமாகக் கேட்டவனை என்ன செய்வதென்று தெரியாமல் முறைத்து நின்றாள்.
“உங்கப்பா நார்மலா இருக்கார். நீதான் ஓவர் ரியாக்ட் பண்ற” என்று அவன் கடியவும், அவனை முறைத்து அப்பாவிடம் சென்றாள்.
அடுத்ததாகப் புடைவை பிரிவுக்குச் சென்றார்கள்.
“எனக்கு ஒரு ரெண்டு சேரி போதும்ப்பா. அம்மாக்கு எடுங்க” என்று அவள் சொல்லியும் கேளாமல், அவள் அலுவலகம், விழாக்கள், விசேஷங்களுக்கு உடுத்தும் விதமாக, பட்டு, ஜார்ஜெட், சில்க் காட்டன் என ஐந்தாறு புடைவைகளைத் தேர்ந்தெடுத்த பின்னரே ராதாக்கு பார்த்தார்கள்.
பிரகாஷ் அவர்களிடம் இருந்து ஒதுங்கி மும்முரமாக அலைபேசி கொண்டிருந்தான். பிரபஞ்சன் அங்கே வாடிக்கையாளர்கள் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்து கைகளில் முகத்தைத் தாங்கி கண் மூடியிருந்தான்.
“பிரபா..”
“ஐ ஆம் ஓகே பிரியா. சும்மா சும்மா என்ன பண்ணுதுன்னு கேட்காத” என்றவனை விசித்திரமாகப் பார்த்தாள் அவள்.
“அப்போ உங்களுக்கு உடம்புக்கு முடியல. அப்படித்தானே? வீட்டுக்கு போவோமா நாம?”
“நீ ஃபர்ஸ்ட் ஷாப்பிங்கை முடி. ஐ ஆம் ஜஸ்ட் டயர்ட், அவ்ளோதான். யூ கேரி ஆன்” என்றான் சோர்வுடன். மெல்ல அவளை நிமிர்ந்து நோக்கிய அவன் முகத்தில் சோர்வு அப்பட்டமாக வெளிப்பட்டது.
“போன்னு சொல்றேன் இல்ல பிரியா..”
“அத்தைக்கு இந்த ஸாரிஸ் எடுத்தேன். நல்லா இருக்கா பாருங்க.” என்று அவனிடம் நீட்டினாள்.
“நீ வாங்கிக் கொடுத்தா அம்மா பிடிக்கலன்னா சொல்ல போறாங்க. உனக்குப் பிடிச்சத எடு” என்றான். அவளோ அவன் பக்கத்தில் சென்று அமர்ந்து புடைவைகளைப் பிரித்துக் காட்டினாள்.
“சரி, வா. நானும் வர்றேன்” என்று அவன் எழப் போகவும், “நீங்க வரவே வேணாம். எதுக்கு நீங்க வந்து எனக்கு இன்னும் நாலு புடவை எங்கப்பா கூடப் போட்டி போட்டு எடுக்கவா? வேணாம் மிஸ்டர் பிரபஞ்சன்” என்று கையெடுத்து கும்பிடு போட்டு விட்டாள்.
“இதுக்குத்தான் பேசாம நான் ஓரமா உக்காந்தேன். நீதான் சும்மா இல்லாம என்னைச் சீண்டி விட்ட” என்று அவன் சொல்லவும், “தெரியாம உங்க ஒப்பீனியன் கேட்டுட்டேன் பிரபா. என் தப்புதான். நீங்க ரெஸ்ட்ட கன்ட்டினியூ பண்ணுங்க. நான் போய் ஷாப்பிங்க கன்ட்டினியூ பண்றேன்” என்று எழுந்து ஓடி விட்டாள். புன்னகையுடன் மீண்டும் கைகளில் முகம் புதைத்துக் கண் மூடினான் அவன்.
பெண்களுக்கு மட்டும் உடை எடுத்துப் பணம் செலுத்த போனார்கள்.
இங்கே என்ன செய்யப் போகிறானோ கணவன் என்று அவள் மிரண்டு கணவனைப் பார்க்க, “இந்தா பிரியா” என்று அவளுக்கு அவன் எடுத்த உடைகள் அடங்கிய பையை அவளிடம் நீட்டினான் அவன்.
“பில் பே பண்ணிடீங்களா? எப்போ?”
“ம்ம்ம், அப்பவே” என்று தோள் குலுக்கியவனைக் கண்டு அவளுக்குச் சிரிப்பதா, கோபப்படுவதா என்றே தெரியவில்லை.
“எஸ்டெல் கடை அந்தப் பக்கமா இருக்கு தர்ஷி. அப்பா பில் பண்ணிட்டு வரட்டும். அதுக்குள்ள நாம பார்ப்போமா?” என்று ராதா வந்து அவளிடம் கேட்க, “அப்பா வரட்டும்மா” என்றாள் அவள்.
ராதா நகர்ந்ததும், “வா, நாம போய்ப் பார்ப்போம்” என்று அவளின் கைப் பிடித்து அவன் அழைக்க, “அப்பா வரட்டும் இருங்க” என்றாள் அழுத்தமாக.
“அப்போ என் கூட வர மாட்ட நீ?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனது அலைபேசி அடித்தது. அலைபேசியை அவன் கையில் எடுத்ததும் அனிச்சையாக யாரென்று எட்டி பார்த்தாள் அவள்.
“பார்த்திபன்” என்ற பெயரை பார்த்ததும் பதட்டமாகி விட்டாள்.
அவன் மெதுவாக அலைபேசியுடன் அங்கிருந்து நகர, “பிரபா” என்று அவனைப் பின் தொடர்ந்தாள்.
“இரு பிரியா, டூ மினிட்ஸ் போன் பேசிட்டு வர்றேன்”
மறுகணம், “நோ” என்று வேகமாக, கோபமாக மறுத்தாள். அவன் கையை இறுக தடுத்து பிடித்தாள்.
“என்ன நோ? கையை விடு பிரியா முதல்ல”
“இப்போ பார்த்திபன் எதுக்கு உங்களுக்குக் கால் பண்றாரு?” அவளையும் அறியாமல் குரல் உயர்ந்து விட்டிருந்தது. அவளது குடும்பமே அங்கிருக்கிறது. அவர்கள் முன் அவளைத் தனியாக விட்டுவிட்டு போய் விடுவானோ கணவன் என்ற நினைப்பே நெஞ்சில் போர் முரசை கொட்டியது.
“ஏன் இப்படிக் கத்தற? அவன் எதுக்குக் கால் பண்றான்னு போன் அட்டென்ட் பண்ணி பேசினாதானே தெரியும்? கையை விடு, என்னன்னு கேட்டுட்டு சொல்றேன்”
“உங்களுக்கு நான் போன் பண்ணப்போ.. நீங்க இப்படிப் பதறிட்டுப் போனை எடுத்து என்கிட்ட பேசலையே. உங்க ஃப்ரெண்ட்ன்னா மட்டும் இப்படிப் பதறுறீங்க?”
“நீ கால் பண்ணும் போது கிரவுண்ட்ல இருந்தேன். அந்நேரம் போன் என் கையில இல்ல, அதுனால உன் காலை அட்டென்ட் பண்ணல. போதுமா விளக்கம்?”
“சரி. அதுக்கு அப்புறம் என் மிஸ்டு கால் பார்த்தும் கூட எனக்கு நீங்க திரும்பக் கால் பண்ணலயேங்க?”
“அதான் வீட்டுக்கு வந்துட்டேனே பிரியா. வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு வரணுமா? அதுக்கொரு போன் வேற பண்ணணுமா? என்ன பிரியா?”
“ஏன் ஒரு நிமிஷம் போன் பண்ணி பேசினா என்ன தப்பு?” என்று எகிறினாள். அதற்குள் பார்த்திபன் இரண்டு முறை அழைத்து ஓய்ந்திருந்தான். மூன்றாம் முறையாக அழைப்பு வர, “ஏதாவது இம்பார்ட்டன்ட்டான விஷயமா இருக்கப் போகுது பிரியா, கையை விடு” என்று குரலை தழைத்துச் சீறினான்.
“கையை விட்டா, என்னை அம்போன்னு இங்கேயே விட்டுட்டு நீங்க போய்டுவீங்க” என்று அவள் சீற, மறுகணம் அவனது உடல் மொழியே மாறிப் போனது. வில்லேற்றிய நாண் போல இறுகி நின்றான். தாடை இறுக, “என்ன சொன்ன பிரியா?” ஆழ்ந்த அமைதியுடன் கேட்டு அவள் கையை உதறினான். அவள் பிடி உடும்பு பிடியாக இருந்தது.
“பிரபா பிளீஸ், பிளீஸ். கோபப்படாதீங்க. அப்பா பார்த்தா..”
“என்ன சொன்ன நீன்னு கேட்டேன்..”
“இல்ல, பார்த்திபன் கூப்பிட்டா.. நீங்க..”
“உனக்குக் காலத்துக்கும் என் மேல நம்பிக்கைன்ற ஒன்னே வராதா பிரியா?”
“நீங்க காலத்துக்கும் இப்படித்தான் என்னை அம்போன்னு தவிக்க விட்டுட்டு பாதியில உங்க பிரெண்ட் பின்னாடி போகப் போறீங்களா?” என்று உச்சபட்ச கோபத்தில் குரல் உடைய கேட்டாள்.
“உன்கிட்ட எதிர்பார்க்கற என்னைச் சொல்லணும்.”
“அதேதான் நானும் சொல்றேன். நமக்குக் கல்யாணமாகி மூனு மாசம் முடியல. அதுக்குள்ள ஃப்ரெண்ட், கிரிக்கெட்ன்னு என்னைத் தவிர உலகத்துல இருக்க எல்லாமே உங்களுக்கு முக்கியமா இருக்கு. இதுக்கு எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணீங்க? உங்ககிட்ட ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி எதிர்பார்க்கிற என்னைச் சொல்லணும்” அதுவரை இறுக பற்றியிருந்த அவன் கரத்தை ஒருவித விரக்தி மனநிலையுடன் உதறினாள்.
அப்பொழுது கடையில் அவர்களைக் கடந்த இருவர், அவர்கள் இருவரையும் ஆர்வமும் ஆராய்ச்சியுமாகப் பார்க்க, பொது இடத்தில் இருக்கிறோம் என்பதையே அப்போதுதான் அவள் மூளை அவளுக்கு உணர்த்தியது.
எட்டி அவன் கைப் பிடித்து, “சாரி, பிரபா” என்று கெஞ்சலாகச் சொன்னவள், பயமும் பதற்றமுமாகப் பிரபஞ்சனை பார்க்க அவன் முகம் அவமானத்தில் சிறுத்திருந்தது. அவளையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவன் பதிலாக ஒற்றை வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை. அம்மா, அப்பா தங்களின் சண்டையைப் பார்த்திருக்கக் கூடாது என்ற வேண்டுதலுடன் பிரியதர்ஷினியின் கண்கள் வேகமாகத் திரும்பி தன் பெற்றோரை தேடின.