பிரிய பிரபஞ்சமே – 12 (1)

பிரபஞ்சன், “சாப்பிடு” என்று கண்களால் அவளை அதட்டினான். மதிய உணவோடு அவர்கள் அனைவரும் பேச்சையும், சிரிப்பையும் சேர்ந்தே பரிமாறிக் கொள்ள, அவளால் அதிகம் யோசிக்க முடியவில்லை. குடும்பத்தின் கலகலப்பில் ஐக்கியமாகி விட்டிருந்தாள்.

“சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா கடைங்களுக்குப் போகலாம். என்ன சொல்றீங்க மாப்ள?” என்று மாணிக்கவேல் கேட்க, “சரிங்க மாமா” என்றான் பிரபஞ்சன்.

அது போலவே உணவு முடித்ததும் கணவனுடன் தங்களின் அறைக்கு வந்து விட்டாள் பிரியதர்ஷினி.

அறைக்குள் நுழைந்ததும் ஆழ மூச்செடுத்தான் அவன். அவன் கண்கள் அவள் அறையைக் கண்களால் சுழற்றி, உள்வாங்கி முடித்ததும் பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.

“ஆஆஆ” என்ற அவன் அலறல் குரலை கேட்டதும், “என்ன பண்ணுது பிரபா?” பதறி திரும்பி விசாரித்தாள்.

மெல்ல புரண்டு ஒற்றைக் கரத்தில் தலையைத் தாங்கி படுத்தவன், “எனக்கு ஒன்னும் பண்ணல. ஜஸ்ட் பாடி பெயின். நீ கொஞ்சம் மிதிச்சி விட்டா சரியா போகும்” என்றான் தீவிரமாக.

அவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “மிதிச்சுதானே விடணும்? செஞ்சுடலாமே” என்றாள் சிரிப்புடன். அவளின் சிரிப்பில் சுதாரித்து, “ஹே நான் சீரியஸா சொல்றேன் பிரியா” என்றான்.

“ஓ, ஐ அம் டாம் சீரியஸ் டூ மிஸ்டர் பிரபஞ்சன்” என்று அவள் சொன்னதும் கள்ளச் சிரிப்புடன் கையை நீட்டினான். அவன் நீட்டிய கையில் விரலில் கட்டுப் போடப்பட்டிருக்க அவள் முகமே மாறிப் போனது.

“உண்மையாவே உடம்பு வலிக்குதா பிரபா?”

“அதென்ன உண்மையா பொய்யான்னு? பாடி பெயின் இல்லாம சும்மாவா சொல்லுவேன்” என்று சினந்தான்.

“இன்னும் பெயின் இருக்குன்னா எப்படிங்க? இன்னைக்கும் போய்ப் பேட் பண்ணீங்களா?” அவள் கேட்க அவன் பதிலே சொல்லவில்லையே.

“பிரபா”

“ம்ம்”

“இந்தக் கையோட போய்ப் பேட் பண்ணீங்களான்னு கேட்டேன். என்கிட்ட இன்னைக்குப் பேட் பண்ண மாட்டேன்னுதானே சொல்லிட்டு போனீங்க?”

“நான் கொஞ்ச நேரம் தூங்கறேன் பிரியா. வீட்ல எல்லாரும் கிளம்பினதும் என்னை எழுப்பி விடு” என்று தலையணையில் முகம் புதைத்துக் கண் மூடியிருந்தான்.

“நான் என்ன கேட்டா.. பிரபா..” அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. உனக்கென்ன இந்நேரம் நிம்மதியாக உறக்கம் வேண்டி இருக்கிறது என்று அவனைப் போட்டு உலுக்கி விடும் ஆத்திரம் வந்தது.

அவனை நெருங்கி, “பிரபா, வீட்டுக்கு வர லேட்டாகும்னு ஏன் எனக்குப் போன் பண்ணி சொல்லல? பேட் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு போய்.. அதுவும் இந்தக் கையோட பேட் பண்ணியிருக்கீங்க. உடைஞ்ச நகம் திரும்ப வளர எவ்வளவு மாசம் எடுக்கும் தெரியுமா? இதுல திரும்ப அந்த விரல்லயே அடிபட்டா எப்படி வலி தாங்கி இருப்பீங்க?” அவன் தோளை தொட்டு உலுக்கி, கேள்விகளால் அவனை நெறித்தாள்.

“மூனு மாசம் ஆகும்” என முணுமுணுத்தான் அவன்.

அவன் சொன்னது தெளிவாகக் கேட்காததால், “ஹாங்?” என்று அவள் குனிய, ஒற்றைக் கரத்தால் அவளை இழுத்து சுருட்டி தன்னோடு சேர்ந்திருந்தான் அவன். அவளின் புடைவை மறைக்காத இடைப் பகுதியில் அவன் கரம் அழுத்தமாகப் பதிய, “நகம் வளர மூனு மாசம் ஆகும்னு சொன்னேன்” என்று அவள் கழுத்தில் முணுமுணுத்தான்.

“நான் கேட்ட மத்த கேள்விக்குலாம் பதில் இல்லையோ?”

“ஜஸ்ட் டென் மினிட்ஸ், தூங்கிக்கறேன் பிரியா, பேசாம இரேன்” என்று அவள் காதோரம் முனங்கியவன், அவள் முரண்டினாலும் விடாமல் அவளை அணைத்துப் பிடித்திருந்தான்.

“உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? என்கிட்ட மட்டும் எதையும் ஒழுங்கா சொல்றது இல்ல.. என்னை மதிக்கிறது இல்ல..” என்று படபடத்தவள் பேச்சு அவன் கரம் தளர்வது கண்டு நின்று போனது.

அவனுக்கு உண்மையாகவே நல்ல அசதி போலும். ஒரே நிமிடத்தில் உறங்கியிருந்தான். சீரான மூச்சில் அவன் மார்புக் கூடு ஏறியிறங்க, கோபத்தைக் கட்டுப்படுத்தியதில் வேகமாக ஏறியிறங்கியது அவளின் மார்பு கூடு.

சத்தமேயில்லாமல், “ப்ச்” என்றாள். மெல்ல படுக்கையில் இருந்து கீழிறங்க அவள் முயல, ஆழ்ந்த உறக்கத்தில் அமிழாதிருந்தவன், அழுத்தமாய் அவள் இடையைப் பற்றி இன்னும் நெருக்கமாய் இழுத்தான். மல்லாந்து படுத்து அவளை மார்பில் அள்ளி போட்டு, தூங்கு என்பதாகத் தட்டி கொடுத்தான்.

அவள் விழிகளை உயர்த்த அவனது குரல் வளை கண் முன்னே இருந்தது. அப்படியே எக்கி குரல் வளையைக் குதறி விடும் வேகம் வர, மறுப்பாகத் தலையசைத்துக் கண்ணை மூடினாள். ஐந்தாம் நிமிடம் அவளுமே உறங்கி விட்டிருந்தாள்.

அவள் கண் விழிக்கும் போது மணி நான்கரை.

“இவ்வளவு நேரமாகிடுச்சா?” என்று அடித்துப் பிடித்து அவள் எழ, பிரபஞ்சன் இன்னுமே ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்தான்.

பிரியதர்ஷினி ஓய்வறை சென்று முகம் கழுவி வந்தவள், அலமாரியை திறந்து உடைகளை ஆராய்ந்து அடர் நீல நிற குர்தி ஒன்றை தேர்ந்தெடுத்து புடைவையை மாற்ற எத்தனித்தாள்.

அப்பொழுது, “என்ன பண்ற?” என்று பிரபஞ்சன் கேட்கவும், “பார்த்தா தெரியல பிரபா? ஸாரி மாத்துறேன்” என்றாள்.

மையலுடன் அவள் மேல் பதிந்த அவன் கண்கள், “எதுக்கு?” என்ற கேள்வியை எழுப்பின.

“ட்ரெஸ் ஷாப்பிங் பண்ண போறோம். அங்க போய் ஒவ்வொரு டிரஸ் ட்ரையல் பார்க்கவும் ஸாரியை மாத்திட்டே இருக்க முடியுமா? சிரமமா இருக்கும்ல?”

“பாயிண்ட். பட் புடைவையை இப்பவே மாத்தணுமா? ஒரு டூ மினிட்ஸ் குடு, நான் வந்துடுறேன்” என்று எழுந்து வேகமாக ஓய்வறை சென்று வந்தான்.

அவள் கண்களைக் கேள்வியாகச் சுருக்க, “வா” என்று மாடிக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே மொட்டை மாடியில் சிறியதாகத் தோட்டம் அமைத்திருந்தார்கள். பெரும்பாலும் விதவிதமான பூக்கள், கீரை வகைகள், ஓரிரு காய்கறிகள் என்றிருந்தது.

ரோஜாக்கள் ரகம் ரகமாக இருந்ததைக் காணவே ரம்மியமாக இருந்தது. மனைவிக்கு மஞ்சள் வண்ண ரோஜாவை கிள்ளி கொடுத்தான் பிரபஞ்சன்.

அவளோடு நின்று முன்பு அவர்கள் வாடகைக்கு இருந்த வீட்டை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இங்க இருந்து பார்த்தா உங்க வீடு தெளிவா தெரியுதே பிரபா.”

“ம்ம், முன்ன இதை விடத் தெளிவா தெரியும். அப்போ இப்படி ரெண்டு, மூனு மாடி கட்டிடங்கள்லாம் இல்லல்ல?”

“ஆமாதான்.” என்றவள், என் வீட்டு மொட்டை மாடியை நீ ஏன் நோட்டம் விட்டாய் என்ற கேள்வியைக் கேட்கவேயில்லை. அவளுக்கு அப்படியெல்லாம் கேட்கத் தோன்றவும் இல்லை. நாம் இருவரும் ஒரே பகுதியில் வசித்தோம். நான், உன் அம்மாவின் மாணவி. அதைத் தாண்டி அவள் சிந்தனை செல்லவில்லை. முதலில் சந்தேகங்கள் வந்தால்தானே சிந்தனை அந்த வழிச் செல்லும்.

அந்த மாலை வேளையில் வெயிலின் தாக்கம் சற்றே குறைந்திருக்க, அவர்களைத் தழுவிய காற்றில் குளுமை இருந்தது.

அவன் கை வளைவிற்குள் நின்றபடி முகம் நிமிர்த்தி அவனை ஏறிட்டவள், “கிரிக்கெட் பைத்தியமா நீங்க? கிரிக்கெட் பிளேயர் ஆகணும்னு நினைச்சிருந்தீங்களா?” என்று கேட்டாள்.

“என்னைப் பத்தி ஒன்னுமே தெரியாதா பிரியா உனக்கு?” சிரிப்புடன் எதிர்கேள்வி கேட்டான். ஆனால் அந்தச் சிரிப்புக்கு பின்னே சிறிய ஏமாற்றம் இருந்தது போலிருந்தது.

“ஏன் தெரியாது? உங்களைப் பத்தி ஓரளவு எல்லாம் தெரியும் எனக்கு. உங்க அம்மா கிட்டதானே டியூஷன் படிச்சேன் நானு? எனக்குத் தெரியாம இருக்குமா?” முகத்தை நிமிர்த்தி உதட்டை சுழித்து அவள் சொல்ல, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சரி, எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்குத் தெரிஞ்சத எடுத்து விடு, கேட்போம்”

“அது.. உங்களுக்கு மீன் பிடிக்கும். முட்டை ஹால்ப் பாயில் பிடிக்கும்..”

“போடி ஹால்ப் பாயில்..” என்று அவள் நெற்றியில் முட்டி சிரித்தான்.

“என்ன பிரபா.. சரியாதானே சொன்னேன்?”

“ம்ம், அதையெல்லாம் விடு. இந்த ஒன்னை மட்டும் சரியா சொல்றியான்னு பார்த்திடுவோமே. நீ எங்க வீட்டுக்கு டியூஷன் வந்திருக்கும் போது ஒரு நாள் எங்கம்மா, என்னைத் திட்டி அடிச்சிருக்காங்க, எதுக்காகன்னு சொல்லு பார்ப்போம்.” என்று கேட்டான்.

“மிஸ் உங்களை அடிச்சாங்களா?” என்று அதிர்ந்தவளை கண்டு முறைத்தான் அவன்.

“அந்த அய்யோடாவை விட்டுட்ட” என்று கேலி வேறு செய்தான்.

“பிரபா..”

“உனக்கு ஞாபகம் இல்ல பார்த்தியா? இதுல எல்லாம் தெரியும்னு அடிச்சு வேற விடுற..” என்றான் கிண்டலாக. அவள் முகம் வாடவும், “கிரிக்கெட் பிளேயர் ஆகணும்னு கனவெல்லாம் எனக்கு எப்பவும் இருந்தது இல்ல பிரியா. அப்படியே ஆசைப்பட்டாலும் நம்ம ஊர்ல அதெல்லாம் நடக்கவே நடக்காதுன்னு பார்த்தி அப்பா எங்களுக்குச் சின்னதுலயே புரிய வச்சுட்டார். பட் விளையாட ரொம்பப் பிடிக்கும்.” என்றான் அவள் கண் பார்த்து.

“இப்படித்தான் அடிக்கடி அடிபடுமா? மிஸ் எப்படி உங்களை விளையாட விடுறாங்க?”

“இப்போ நீ விடலையா? அது போலத்தான்” என்று எளிமையாக முடித்து விட்டான்.

“ஹையோ நீ விடலையாவா? நான் எப்போங்க உங்களைக் கிரிக்கெட் விளையாட போங்கன்னு விட்டேன்? எங்கிட்ட பெர்மிஷன் கேட்டா போனீங்க நீங்க? என்கிட்ட பெர்மிஷன் கேட்கல நீங்க இன்பார்ம் பண்ணீங்க. தட்ஸ் ஆல்” என்று அவள் எகிற, அவன் கண்கள் இடுங்கின.

அப்பொழுது, “தர்ஷி” எனக் கீழிருந்து பிரகாஷ் அழைக்கவும், “போகலாம்” என்று அவள் கைப் பிடித்துக் கீழிறங்கினான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top