அவளின் அப்பா மாணிக்கவேல், பிரபஞ்சனுக்குக் கல்லூரி பேராசியர். ஆம், மாணிக்கவேலின் மாணவன் அவன்.
அவனுக்கு மட்டும் எப்படி இயல்பாக மாமா என்று அவரை உறவு முறை வைத்து அழைக்க வருகிறது? பல வருடங்கள் கழித்து அப்பாவுடன் அவள் வீடு வந்த போது, “சார்” என்று அவன் அழைத்த ஞாபகம். அதன் பிறகு மாமா என்று மட்டுமே அழைக்கிறான்.
அது தன்னால் ஏன் முடியவில்லை? இன்னமும் மரகதவல்லி மிஸ் என்பதிலேயே தேங்கி நிற்கிறாள் அவள்.
“இல்ல மாமா” இருவரும் இயல்பாகப் பேசி சிரித்தபடி வீட்டினுள் நுழைந்தார்கள்.
புடைவை தலைப்பில் கையைத் துடைத்தபடி கிட்டத்தட்ட ஓடி வந்த ராதா, “வாங்க” என்றவர், மருமகனை பார்த்ததும், “அச்சச்சோ, என்னாச்சு மாப்ள” என்று விசாரித்தார்.
பிரியதர்ஷினி ஓடிப் போய் அம்மாவின் கைப் பற்றினாள்.
“அட, உங்கள பார்த்ததும் என் கண்ணுல பட்டுச்சு மாப்ள. ஆனா கேட்க மறந்துட்டேன் பாருங்க. என்ன நெத்தில, எப்படி அடிபட்டுச்சு?” என்று மாணிக்கவேல் விசாரிக்க, “ம்மா..” என்று ராதாவின் கையைச் சுரண்டினாள் அவள்.
பிரபஞ்சன் கிரிக்கெட் விளையாட போய்க் காயப்பட்டு வந்தான் என்று தெரிந்தால் பெற்றோர் என்ன சொல்வார்களோ என்ற பயம் அவளுக்கு. அதைவிட முன் தினம் அவனுக்கு முக்கிய வேலையிருக்கிறது, அதனால் வெளியில் சென்றிருக்கிறான், எங்களால் வீடு வர முடியாது என அம்மாவிடம் காரணம் சொல்லியிருந்தாள் அவள்.
இப்போது, விளையாட்டுதான் அந்த முக்கிய வேலையா உனக்கு? என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்லுவாள் அவள். கைகள் வியர்த்து, தொண்டைக் குழி அவஸ்தையாக ஏறியிறங்கியது.
அந்நேரம் அவளது அண்ணன் பிரகாஷும் வந்து விட்டான்.
“நேத்து முக்கியமான கிரிக்கெட் மேட்ச் மாமா. அப்போ லேசா அடிபட்டுருச்சு” பிரபஞ்சன் நெற்றி காயத்தை லேசாக வருடியபடி சொல்ல, “அடடே கவனமா இருக்கக் கூடாதா மாப்ள?” என்று கடிந்து கொண்ட மாணிக்கவேல், மறுகணமே, “நீங்க இன்னும் கிரிக்கெட் விளையாடுறத விடலயா?” என்று சிரிப்புடன் அவனிடம் கேட்டார்.
“இல்ல மாமா. ஒரு விக்கெட் என் கையில விழுந்தது, பால பிடிச்ச கையோட பாலன்ஸ் இல்லாம..” என்று அடிப்பட்ட காரணத்தை அவசரமாக விளக்கிய பிரபஞ்சன், அவரின் கேள்வியில் நிறுத்தி நிதானமாக முழுமையாகப் பற்கள் தெரிய புன்னகைத்தான்.
“ஆமா, மாமா. நான் இன்னமும் கிரிக்கெட் ஆடிட்டுதான் இருக்கேன்” என்றான்.
அப்பா, கணவன் இருவரையும் அவள் மீண்டும் மாறி மாறிப் பார்க்க, “பிரபஞ்சன் படிச்ச டைம்ல அவருதான் குட்டிமா எங்க காலேஜ் கிரிக்கெட் டீம் கேப்டன்” என்று மருமகனின் தோளை தட்டி மகளுக்குத் தகவல் சொன்னார் அவர்.
அந்தத் தகவலை உள்வாங்கி, “ஓ” என்றாள். அவள் உதடுகளைப் போலவே விழிகளும் பெரிதாக விரிந்தன.
“நீ நேத்து என்கிட்ட பேசும் போது மாப்ளைக்கு அடிப்பட்டு இருக்குன்னு சொல்லவே இல்ல தர்ஷி” ராதா அவள் கையைச் சுரண்டி கோபமாகக் கேட்க, “ம்மா, எனக்கே நைட்தான்ம்மா தெரியும்” என்று முகம் சுருக்கினாள்.
“அப்போ நான் காலையில போன் பண்ணப்போ சொல்லியிருக்கலாம் இல்ல?”
“அதும்மா..” என்று அவள் தடுமாற, “ஏரியா கிரிக்கெட், இப்போ அகாடெமி லெவல் போய்டுச்சா” என்று பிரகாஷ், பிரபஞ்சனிடம் கேட்பது அவள் காதில் விழுந்தது.
அதைக் கேட்டு வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தார் மாணிக்கவேல்.
“நம்ம ஏரியால விளையாடும் போது என் மண்டையிலயே பால் போட்டாங்க, ஞாபகம் இருக்கா?” என்று அவர் கேட்க, “அய்யோடா, இவராப்பா? அது எப்போ?” என்று தீவிரமாகக் கணவனை முறைத்து கேட்டிருந்தாள் அவள்.
பிரபஞ்சன் அவளின் எதிர்வினை கண்டு கண்களைச் சுருக்கி புன்னகைக்க, “உங்கப்பா மண்டையில எல்லாம் அடிக்கல தர்ஷி. உங்கப்பா சும்மா அடிச்சு விடுறார். வாத்தியார் பாரு, அடிச்சு விடுறதுக்கு நாம சொல்லியா குடுக்கணும். ம்ம், அப்பா வண்டியில வரும் போது அவர்மேல் தெரியாம பால் பட்டிருச்சு போல, அவ்ளோதான்” என்றார் ராதா.
“அவ்ளோதானாப்பா?”
“எப்போவோ நடந்ததுக்கு இப்போ விசாரணை கமிட்டி வைக்குறியே குட்டிமா” என்று மாணிக்கவேல் சிரிக்க, ராதா கூடச் சிரித்து விட்டார்.
“என் மேல அவ்ளோ நம்பிக்கை, இல்ல பிரியா?” என்று இப்போதும் அவளை நெருங்கி சீண்டினான் பிரபஞ்சன்.
“ப்ச்” எனச் சத்தம் எழுப்ப போன உதடுகளைப் பல்லால் கடித்து உள்ளே இழுத்தாள். பிரஞ்சனின் கண்கள் கூர்மையாக அவள் உதட்டில் பதிய, படக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“வாங்க, முதல்ல சாப்பிடலாம்” என்று அவர்களை நேராக உணவு மேஜைக்கு அழைத்துச் சென்றார் ராதா.
“நீங்க வர்றதுக்குள்ள பால்கோவா செஞ்சுடணும்னு கிண்டிட்டு இருந்தேன். இருங்க முதல்ல அதை எடுத்துட்டு வர்றேன், சூடா சாப்பிடுவீங்க” என்று ராதா சொல்லவும், “அதைக் கிண்டினது நானு மாப்ள. நீங்க லேட்டா வந்தது பிரச்சினையில்லன்னு பேங்க்காரம்மா சொல்றாங்க. அவங்க ப்ராசெஸ் எப்பவும் ஸ்லோதான்” என்று மாணிக்கவேல் மனைவியைக் கிண்டலடித்தார்.
“பார்த்தியா, இதுக்குப் போய்..” என்று தன் மனைவிக்குக் கண்ணால் செய்தி கடத்தி, கண்ணை மூடித் திறந்தான் பிரபஞ்சன்.
“வீட்டுக்கு வாங்க, உங்களுக்கு இருக்கு” என்று கண்ணை உருட்டி மிரட்டி பல்லை கடித்தாள் பிரியதர்ஷினி. அதைக் கண்டு அவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை மின்னியது.
“இப்பவும் கிரிக்கெட் விளையாட போய்ட்டு வர்றீங்களா? அதான் லேட்டா?” என்று பிரகாஷ் கேட்க, மாணிக்கவேலிடம் பேசியபடி இருக்கையில் அமர்ந்த பிரபஞ்சன் செவியை அக்கேள்வி சென்றடையவில்லை.
“அய்யோடா அண்ணா, பேசாம இரு” என்று அண்ணனை அடக்கினாள் அவள்.
“நீ என்ன இவ்ளோ ரியாக்ட் பண்ற, உங்காள் ஸ்கூல் படிக்கும் போதிருந்தே தெருக் கிரிக்கெட் ஆடிட்டுதானே இருப்பார். என்னமோ உனக்குத் தெரியாத மாதிரி..” என்று தோள் குலுக்கினான் பிரகாஷ்.
அதானே? அது அவளுக்கும் தெரியும்தான். ஆரம்பத்தில் அவர்கள் தெருவில் அதுவே தினம் ஒரு பஞ்சாயத்தாக இருக்கும்.
பிரபஞ்சன், பார்த்திபன் மற்றும் அவர்களின் நண்பர்கள் குழு, அவர்கள் தெருவில் உடைக்காத வீட்டு ஜன்னல் கண்ணாடிகளே கிடையாது. கார், வண்டி, சில சமயம் தெருவில் நடமாடும் மனிதர்களின் மண்டைகள் எனக் கிரிக்கெட் பந்தால் பதம் பார்த்து விடுவார்கள். பெரிதாக யாருக்கும் காயம் பட்டது கிடையாது.
ஆனாலும், “மிஸ்.. மரகதவல்லி மிஸ்” என்று அடிக்கடி வாசலில் நின்று யாரெனும் கத்தி அவன் அம்மாவை அழைப்பார்கள்.
பிரபஞ்சன் வியர்வை சொட்ட, மூச்சு வாங்க, கையில் கிரிக்கெட் மட்டை அல்லது பந்துடன் அவர்களின் பின்னால் வந்து நிற்பான்.
மகனை குறித்துப் புகார் படிப்பவர்களிடம் மரகதவல்லிதான் மன்னிப்பு கேட்பார். பிரபஞ்சன் ஒரு நாளும் மன்னிப்பு கேட்டு அவள் பார்த்ததேயில்லை.
“அப்பா காலேஜ் முடிஞ்சு வண்டியில வரும் போது இவங்க அடிச்ச பால் அவர் மேல பட்டிருக்கும் போல. அப்பாக்கு பெருசா அடியெல்லாம் படல தர்ஷி. பால் மேல பட்டிருமோன்னு பயந்து அப்பாதான் வண்டியை நிறுத்தி பாலன்ஸ் பண்ண முடியாம விழ போய்..”
“அய்யோடா..” என்று அவள் விழி விரிக்க, “ஷாக்க குறை தர்ஷி. அதான் அப்பாக்கு ஒன்னும் ஆகலன்னு சொன்னேனே. எப்பவோ நடந்ததுக்கு இப்போ போய் அவர்கிட்ட சண்டைக்கு நிக்காத. அதுக்காகதான் சொன்னேன்” என்று அவளுக்கு விளக்கமாகச் சொன்னான் பிரகாஷ்.
“எனக்கு ஏன் அன்னைக்கே சொல்லல?” என்று அவள் கோபமாகக் கேட்க, “நீ அப்படியே போய் உங்க மிஸ் கிட்ட அவங்க மகனை போட்டு குடுத்துருப்பியே” என்று சொல்லி சிரித்தான் அவன். அதுவும் உண்மைதான் என மெலிதாகச் சிரித்தாள் அவள்.
“எனக்கு அப்போ அவர் மேல கோபம் இருந்ததுதான். ஆனா, நீயும், பார்கவியும் வண்டி ஓட்டி பழகும் போது கிரிக்கெட் என்ன, யாரும் வண்டியில கூடக் குறுக்க வர விடாம நம்ம தெருவ காலியா வச்சாங்களே உங்களுக்காக, அப்போ மன்னிச்சு விட்டுட்டேன் அவங்களை” என்ற அண்ணனை புருவங்கள் சுருங்க புரியாமல் பார்த்தாள்.
வண்டியில் பயணிக்கும் போது கணவன் விளையாட்டாகத் தன்னைச் சீண்டுகிறான் என்றே அவள் எடுத்துக் கொண்டிருக்க, அதன் பொருள் இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
“தெருவ காலியா வச்சாங்களா? எதுக்கு?”
“எல்லாம் அப்பாக்கும், உங்க மிஸ்ஸுக்கும் பயந்துதான். நீ போய்ப் பொறுப்பா போட்டு குடுத்து ரெண்டு வாத்தி கிட்டயும் எங்களை ரைடு வாங்க விடுவியே” என்று அவன் சொல்ல, “நான் ஒன்னும் அப்படியெல்லாம் பண்ணதில்ல” வேகமாக ரோஷமாகச் சொன்னவளுக்கே அது சுத்த பொய் என்று நன்றாகவே தெரிந்திருந்தது.
“பால்கோவா, சாப்பிடுங்க” ராதா அனைவருக்கும் பரிமாற, அவளுக்கு மிகப் பிடித்த உணவென்றோ என்னவோ, பிரபஞ்சன் தன் இலையில் இருந்து எடுத்ததை முதலில் அவளுக்குக் கொடுத்தான். இதை எப்போதும் செய்கிறான் அவன். ஆனால் இன்றுதான் அவள் மனத்தில் பதிந்தது.
இப்படி எத்தனையைக் கவனிக்காமல் விட்டிருக்கிறாள் அவள் என்ற சிந்தனையுடன் பிரபஞ்சனை திரும்பி பார்த்தாள் பிரியதர்ஷினி.