பிரிய பிரபஞ்சமே – 11 (2)

“நீ வண்டியோட்டிருவதானே பிரியா? இல்ல, காரை எடுக்கவா?” என்று கீழிறங்கியதும் திரும்பக் கேட்டான் பிரபஞ்சன். கார் ஓட்ட முடியாத அளவுக்கொன்றும் அவனுக்குக் கையில் அடிபடவில்லைதான். மனைவியின் பின்னே அமர்ந்து பயணிக்கப் பிரியப்பட்டான் பிரபஞ்சன்.

“எனக்கு என்னமோ வண்டியோட்ட தெரியாத மாதிரியே கேள்வி கேட்கிறீங்களே? நான்லாம் லெவன்த் படிக்கும் போதே வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன் தெரியுமா?” என்று பெருமை பீற்றியவாறே வண்டியை ஆக்கிரமித்து இயக்கினாள். அவள் பின்னால் லாகவமாக ஏறி அமர்ந்து அவள் தோள் பிடித்து அமர்ந்தவன் வெடி சிரிப்புச் சிரித்தான்.

வண்டியை வேகமாக நகர்த்தியவள், “இப்போ நீங்க விழுந்து விழுந்து சிரிக்கிற அளவுக்கு என்ன சொல்லிட்டேன் நான்?” என்று புரியாமல் கண்ணாடியில் அவன் முகம் பார்த்து கேட்டாள்.

“நீ என் மேல கோபமா இருக்கப் பிரியா. ரெண்டு நாளைக்கு என்கிட்ட பேசவே மாட்டேன்னு நினைச்சேன். இவ்வளவு சீக்கிரம் பேசிட்ட?” என்று சீண்டினான். அவளின், “ப்ச்” காற்றில் கரைந்து போனது.

அவளின் புடைவை முந்தானை காற்றில் பறந்து விடாமல் இருக்க அவன் கைகளில் சுற்றிக் கொண்டான்.

அவள் தோளில் முகம் பதித்து, “காலி தெருவுலயும், காலி கிரவுண்ட்லயும் வண்டியோட்டி பழகின உன்னை நம்பி நான் வண்டில பின்னாடி ஏறினதே பெருசு பிரியா” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

“ஹலோ, எங்க தெரு… அதென்ன எங்க தெரு.. அப்போ அது நம்ம தெரு..” என்று கோபமாகச் சிலிர்த்துக் கொண்டு அவள் சொல்லவும், சத்தமாகச் சிரித்திருந்தான்.

“நம்ம ஏரியா மெயின் ரோட்ட ஒட்டி இருந்தது. டெய்லி எத்தன வண்டிங்க வரும், போகும்னு நீங்க பார்த்திருக்கீங்கதானே? அதுக்கு நடுவுல ஓட்டி பழகினேன் நானு” என்று தன் வீரதீர பராக்கிரமத்தை வேகமாகச் சொன்னவள் மனத்தில் சின்னதாக வேகத்தடை வந்து தடுமாற வைத்தது.

அவள் வண்டியோட்டி பழகிய நாள்களில் அவர்கள் தெருவில் பெரிதாகப் போக்குவரத்து இருந்திருக்கவில்லை என்பது அவளின் நினைவின் ஆழ் அடுக்குகளில் இருந்து மெல்ல மேலேழும்பி வந்தது.

“அட, ஆமால்ல” என்று அதிசயித்தவளின் புருவங்கள் புரியாத பாவனையில் நெரிய, “பிரபா..” என்று அவனை விளித்தாள்.

“ம்ம்ம், வண்டியை அந்த ரெஸ்டாரண்ட் முன்னாடி நிப்பாட்டு. வீட்டுக்கு ஸ்வீட் வாங்கிட்டுப் போகலாம்” என்றான்.

“அய்யோடா ஆல்ரெடி நேரமாகுது பிரபா” என்று பதற்றமானாள். அப்போதும் உன்னால்தான் தாமதம் என அவள் குற்றம் சாட்டாதது இதமாய் அவன் உதட்டில் வசீகரப் புன்னகையை வரவழைத்தது.

“ஃபைவ் மினிட்ஸ் பிரியா” என்று வண்டியை நிறுத்த வைத்தான்.

பெரிய பூந்திகள் கொண்டு பிடித்திருந்த லட்டு, கட்டி மைசூர்பாக், பாதுஷா என அவன் தேர்ந்தெடுத்து வாங்கியவை அனைத்தும் அவள் வீட்டினருக்கு மிகவும் பிடித்த இனிப்புப் பண்டங்கள். அவளுக்காகப் பாசந்தியும் வாங்கினான்.

“போலாம், டைமாகுது” இப்போது அவளை அதட்டி வெளியே இழுத்து வந்தவன், வாசலில் பூக்கடை போட்டிருந்த பெண்மணியிடம் மல்லிகைச் சரம் வாங்கித் தந்தான்.

சாலையோர கடையில் சிவப்புக் கொய்யா தென்படவும், “அப்பாக்கு இந்தக் கொய்யா ரொம்பப் பிடிக்கும்” என்று ஓடிச் சென்று இரண்டு கிலோ வாங்கினாள். அதற்குப் பணம் கொடுத்து, “ம்ம், சீக்கிரம்” என்று அவளின் கையைப் பிடித்திழுத்தான்.

அவன் அவசரப்படுத்தியதில் இம்முறை அவள் வேகமாக வண்டியை செலுத்தவும், “ஹே பிரியா சில்ல்ல்ல், ஸ்லோவா போ” என்று கத்தினான்.

மிதமான நிதான வேகத்தில் வண்டியை அவள் செலுத்த அடுத்தச் சில நிமிடங்களில் அவள் வீட்டை சென்றடைந்திருந்தனர்.

பழைய காலச் சினிமாக்களில் ஒரு காட்சியை வினாடிக்கு வினாடி உறைய வைத்துக் காண்பிப்பது போல, பிரபஞ்சன் தன் கண்களைக் கழற்றி மனைவியை, அவளின் வீட்டை, அந்தத் தெருவை மிக மிக நிதானமாகப் பார்த்தான்.

அவன் உதடுகள் தன்னிச்சையாக, “என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தைத் தொலைத்து விட்டேன்” என உன்மத்தத்துடன் ராகம் போட்டு உச்சரித்தன.

வண்டியில் இருந்து வேகமாகக் கீழிறங்கியவள், “எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இப்போதான் உங்களுக்குப் பாட்டு கேட்குதா?” என்று முழங்கையால் அவன் இடுப்பில் இடித்தாள்.

அவன் முகத்தில் உதித்த முறுவல் முழுதாய் விரிந்தது. ஒரு நொடி கண்ணிமைக்க மறந்து அவனை அவள் பார்த்திருக்க, குறும்பாகக் கண் சிமிட்டினான்.

“அய்யோடா, அம்மாப்பா சாப்பிடாம நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க” என்று படபடத்தாள். நொடியில் அவளைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

“உங்க நெத்தியை பார்த்ததும் என்னாச்சுன்னு கேட்க போறாங்க. அம்மா நேத்து நைட் பேசும் போது நான் ஒன்னுமே சொல்லல வேற. இப்போ பார்த்தா என்னானு கேட்பாங்க இல்ல?” அவள் கையைப் பிசைந்து புலம்ப, அவனோ, “என்னவளே எந்தன் இதயத்தைத் தொலைத்து விட்டேன்” என்று பாடலிலேயே மூழ்கியிருந்தான். அந்த இடம் சில காலம் அவன் வாழ்ந்த இடம். அவனுக்குப் பல நூறு கனவுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் ஏற்படுத்திய இடம் அது.

“வாங்க மாப்ள, வா குட்டிம்மா.” என்று வரவேற்பாய் அழைத்தபடி வீட்டினுள்ளிருந்து ஓடி வந்தார் மாணிக்கவேல்.

“வண்டி சத்தம் கேட்டுச்சு, தர்ஷியான்னு பாருங்கன்னு உங்கம்மா சொன்னா. நான் இவ்ளோ நேரமும் வாசல்லதான் நின்ருந்தேன்டா. இப்பதான் அம்மா கூப்பிட்டான்னு உள்ள போன நேரத்துல நீங்க வந்துட்டீங்க.” என்று படபடத்தவர், மகளின் தலைக் கோதி, மருமகனின் முகம் பார்த்து, “உள்ள வாங்க மாப்ள” என்றழைத்தார்.

அப்பாவின் கண்ணில் கணவனின் நெற்றி காயம் படவில்லை போலயே.

“அப்பாடா” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு அவருடன் நடந்தாள்.

“ரொம்ப லேட்டாகிடுச்சு மாமா” என்று பிரபஞ்சன் வருந்தும் குரலில் சொல்ல, “அட இருக்கட்டும் மாப்ள. என்னைக்காவது ஒரு நாள் இப்படி ஆகுறதுதானே? முதல்ல உள்ள வாங்க, சாப்பிடலாம்” என்று இயல்பாகப் பேசினார்.

“அப்பா, நீங்க சாப்பிட்டீங்களாப்பா?” மகள் அக்கறையாகக் கேட்கவும், “நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு வெயிட் பண்ணோம் குட்டிமா” என்றார் அவர்.

“அய்யோடா, ஏன்ப்பா? ஆல்ரெடி ரொம்ப லேட்டாகிடுச்சே. நான்தான் கால் பண்ணி உங்களைச் சாப்பிடுங்கன்னு சொன்னேனா இல்லையாப்பா? இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பீங்க?” என்று கோபித்துக் கொண்டாள்.

“இல்லடா, உன் கூடச் சாப்பிடலாம்னு..”

“சாரிப்பா, சாரிப்பா. ரொம்ப லேட் பண்ணிட்டேன். சாரிப்பா” என்று அவள் கொஞ்சலும், கெஞ்சலுமாகச் சொல்ல, மறுபக்கம் அவள் கரத்தை அழுந்தப் பற்றினான் பிரபஞ்சன்.

“அட, எத்தன சாரி சொல்லுவ குட்டிமா..” மாணிக்கவேல் சிரிப்புடன் வினவ, “மாமா..” என்றழைத்தான் பிரபஞ்சன்.

“அடுத்து நீங்க ஆரம்பிக்காதீங்க மாப்ள. அதான் நீங்க போன் பண்ணி வர லேட்டாகும்னு சொல்லிட்டீங்களே, அப்புறம் என்ன விடுங்க” என்று சிரிப்புடன் அவர் சொல்ல,

“இருந்தாலும் மாமா..” என்று அவன் ஆரம்பிக்க, அவன் தோளில் தட்டி, “விடுங்க மாப்ள” என்று அவனை மேலே பேச விடாமல் செய்திருந்தார் மாணிக்கவேல்.

ஆக, அப்பாவை நேரடியாக அழைத்து நாங்கள் வர தாமதம் ஆகுமென்று தகவல் சொல்லி இருக்கிறான். தான் மட்டும்தான் கணவனுக்கு ஏமாளி போலும் என மனத்துக்குள் அலுத்து கொண்டாள் அவள்.

“மாமா..” பிரபஞ்சன் அழைக்க, தன் முன்னிருந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் பிரியதர்ஷினி.

error: Content is protected !!
Scroll to Top