“பிரியதர்ஷினி, சாப்பிட வா” மீண்டும் மரகதவல்லி அழைக்க அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. நாங்கள் மதிய உணவுக்கு அம்மா வீட்டிற்குச் செல்கிறோம் என்று ஏற்கெனவே அவரிடம் தகவல் சொல்லியிருந்தாள்தானே? அது தெரிந்தும், “சாப்பிட வா” என்று அழைப்பவரை என்ன சொல்ல?
“நீங்க சாப்பிடுங்க மிஸ். நான் அம்மா வீட்டுக்கு போகணும்” என்றாள்.
அவர்களின் அறை வாசலில் நின்று மருமகளையே கூர்ந்து நோக்கினார் மரகதவல்லி.
“ரஞ்சன் வர்றேன்னு சொன்னா கண்டிப்பா வந்துடுவான்.” என்றவரை சடாரென்று விழிகள் விரிய நிமிர்ந்து நோக்கினாள்.
பத்து நிமிடம் காத்திரு என்று சொல்லி விட்டு அவளை ஒரு மணி நேரம் அவன் விட்டுச் சென்ற கதையெல்லாம் அவருக்குத் தெரியாதுதானே? இப்போதும் சொல்ல மனமின்றி அவள் அழுத்தமாக அமர்ந்திருக்க, “முன்ன பின்ன ஆனாலும் வந்துடுவான். அது வரைக்கும் நீ பசியோட இருக்க வேணாம். எழுந்து வந்து சாப்பிடு” என்றார்.
“எனக்குப் பசிக்கல..”
“மணி என்ன ஆகுது பாரு. அதெப்படி பசிக்காம இருக்கும்? எழுந்து வா” என்றார் கண்டிப்புடன். அந்த ஆசிரியர் குரலுக்கு எப்போதும் அடிபணிபவள் இன்றும் அடமாய் அமர்ந்திருந்தாள்.
அவளுக்கும் நேரம் நகர்கிறது என்பதுதானே பதட்டத்தைத் தருகிறது. அவள் வீட்டில் அவர்களுக்காக உண்ணாமல் காத்திருப்பார்களே. அப்பாவிடம் சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டாள்தான். ஆனாலும் என்று அவள் மனம் முரண்டியது.
அவள் பதில் சொல்லவில்லை என்றதும் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டார் மரகதவல்லி.
கணவனுக்காகக் காத்திருந்து பெற்றோரை பசியில் வாட விடுவதா? அவளுக்கென்ன அம்மா வீட்டுக்கு வழி தெரியாதா? அவனுக்காகக் காத்திருந்து, அவளுக்காக ஆசையுடன் காத்திருக்கும் பெற்றோருக்கு ஏன் ஏமாற்றத்தை கொடுக்க வேண்டும்? சட்டென எழுந்து வண்டிச் சாவியைக் கையில் எடுத்திருந்தாள்.
ஒருவேளை கணவன் சீக்கிரமாக வீடு வந்தால்? அவர்களைத் தேடி அவர்கள் செல்லும் கடைக்கே வந்திடுவானோ? அவனது நெற்றி காயத்தைப் பார்த்து பெற்றோர் கேள்வி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பாள் அவள்?
அதை விட அவள் மட்டும் தனியாக வீடு சென்றால், அதற்கென்ன சொல்வார்கள்? பிரபஞ்சன் ஏன் வரவில்லை என்பதோடு நிறுத்தி கொள்வார்கள் என்பது நிச்சயம். ஆனால், அவன் வரவில்லை என்று வருந்துவார்கள்தானே? இப்படியாகக் கணவன், பெற்றோர் இருவர் பக்கமும் யோசித்தபடி ஒவ்வொரு விரலின் நகங்களாகக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள்.
அவள் உடுத்தியிருந்த புடைவையை அப்படியே உருவி எறியும் அளவு ஆத்திரம் வந்தது. மனத்தில் வீம்பு விருட்சமாக வளர, வேகமாக எழுந்து புடைவையை மாற்ற போனாள்.
அந்நேரம், “பிரியதர்ஷினி” என்று அவளைத் தேடி வந்து விட்டார் மரகதவல்லி.
“மிஸ்” என்று அவள் திரும்ப, “இந்தா, இந்த ஜூஸையாவது குடி” என்று அவசரமாய்ப் பிழிந்து எடுத்து வந்திருந்த சாத்துக்குடி பழச்சாறை நீட்டினார்.
“வேணாம் மிஸ்” என்று மறுத்தவளை முறைத்தார்.
அவளுக்குப் பதற்றம் வந்தாலே பசி மரத்து விடும். இப்போதிருக்கும் மனநிலையில் அவளின் தொண்டைக்குள் எதுவும் இறங்காது. அவள் முகத்தை ஆராய்ச்சியாக நோக்கியவர், “எழுந்து மூஞ்சி கழுவிட்டு வா, சாப்பிடலாம்” என்றார்.
அவளின் அகத்தின் சலிப்பு முகத்தில் தெரியவும், “நீ சாப்பிட வேணாம். எனக்கு வந்து கம்பெனி குடு” என்று உடனடியாக அணுகுமுறையை மாற்றினார்.
“அய்யோடா அத்த. நீங்க சாப்பிடலயா இன்னும்?” பெற்றோரை யோசித்தவள், மாமியாரை யோசிக்க மறந்திருந்தாளே. இவர்களின் அக்கப்போரில் சிக்கி அவரும் அல்லவா பசியோடு இருக்கிறார்.
படுக்கையை விட்டு எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள்.
“இத குடி” அவளை வற்புறுத்தி பழச்சாறை குடிக்க வைத்தார்.
“அம்மாக்கு போன் பண்ணி அவங்களைச் சாப்பிட சொல்லிட்டதானே?” என்று அவளிடம் கேட்டார்.
“ம்ம்”
“அப்போ நீயும் சாப்பிடலாம் இல்ல?”
“எப்பவும் உங்க பிள்ளை சாப்பிடுறதுக்கு முன்னாடி நான் சாப்பிட்டா உங்களுக்குப் பிடிக்காதே மிஸ்” வெடுக்கென்று கேட்டு விட்டாள். மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளின் வாய்ப் பூட்டு கழன்றிருக்காது.
“நான் எப்போ அப்படிச் சொன்னேன்? அவனுக்குப் பரிமாறிட்டு சாப்பிடுன்னு சொல்லியிருப்பேன். அதுக்கு நீயா ஒரு அர்த்தம் பண்ணிப்பியா?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டார் அவர்.
எப்படி மாற்றிப் பேசுகிறார் பார் என்று அவரை விழி மலர்த்திப் பார்த்தவள், ஒன்றும் சொல்லவில்லை.
பொறுப்பாக அவருக்கு மதிய உணவை பரிமாறினாள்.
“நீ ஜூஸை குடி” பழச்சாறு இருந்த குவளையை அவளின் கையில் திணித்துக் கண்ணை உருட்டினார். உண்மையில் அவளின் வறண்ட தொண்டைக்கு அது இதமாக இருக்கவும், ஒரே மூச்சில் குடித்து முடித்திருந்தாள்.
“ஒரு துண்டு வறுத்த மீன் சாப்பிடுறியா?” அவர் கேட்கவும், மறுப்பாக மண்டையை ஆட்டினாள்.
“இந்த மல்மல் சேலை கட்ட சாப்ட்டா நல்லா இருக்குல்ல?” இப்படியெல்லாம் அவளிடம் பேசும் ஆளா அவர்?
“ம்ம்ம், நீங்க ஸ்கூல் கட்டிட்டு போக ஈசியா இருக்கும். உங்களுக்கு ரெண்டு சேலை ஆர்டர் பண்ணவா மிஸ்?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கையில் வேகமாகக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மறுகணம் வேக எட்டுக்கள் வைத்து வீட்டுக்குள் வந்தான் பிரபஞ்சன். அவள் கண்கள் தன்னிச்சையாக அவனை நோக்கி திரும்பின.
இன்றும் அவனது உடை செம்மண் நிறம் பூசியிருந்தது. முகம் கருத்து, கசங்கி தெரிந்தவன், “ஃபைவ் மினிட்ஸ் குடு பிரியா, வந்துடுறேன்” என்று அவர்களின் அறைக்கு விரைந்திருந்தான்.
அவன் பின்னே செல்ல விழைந்த மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் அவள்.
அவனிடம் கேட்க எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன அவளிடம். சண்டையிட வலுவான காரணமும் இருக்கிறது. ஆனால் இதுவல்ல சமயம் எனத் தற்போதைக்குத் தள்ளி போட்டாள்.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன பிரச்சனைனாலும் அன்னன்னைக்கே பேசி தீர்த்திடணும் பிரியதர்ஷினி. எல்லாத்தையும் மனசுல அடைச்சு வச்சு தள்ளி தள்ளி போட்டுட்டே இருந்தா நாளைக்குத் தீர்க்க முடியாத அளவுக்குத் தகராறா போயிடும்” என்று அறிவுரை சொன்னவரை, ஆச்சர்ய அதிர்ச்சியுடன் ஏறிட்டாள். இதுதான் அவளுக்குப் பிடித்த மரகதவல்லி மிஸ். அவளுக்குச் சரியான ஆலோசனை சொல்லும் ஆசிரியர். சமீபமாக மாமியாராக மட்டுமே இருந்தவரின் இந்தத் தீடீர் அவதாரத்தில் அவள்தான் வியப்பாக அவரைப் பார்த்திருந்தாள்.
“ரஞ்சன் உன்னை.. ம்க்கும்..” என்று தொண்டையை அவர் செரும, வேகமாகத் தண்ணீர் எடுத்து அவருக்கு நீட்டினாள்.
“உங்க கல்யாணத்தை முன்னெடுத்தது நான்தான்னாலும் ரஞ்சன் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவன் உன் விருப்பத்துக்குக் கண்டிப்பா மதிப்பு குடுப்பான். நீ எதையும் மனசுல வச்சுக்காம நேரா அவன்கிட்ட சொல்லிடு” என்றிருந்தார். இப்போதும் அவளுக்கு ஆச்சரியம்தான். ஆனால் மூவர் மட்டுமே இருக்கும் வீட்டில் எந்தவொரு விஷயமும் அதிக நாள்கள் மற்றவர் பார்வையில் இருந்து தப்பாதுதானே?
அவர்களின் சண்டையும், அவளின் மௌன நாடகமும், மரகதவல்லி போன்ற ஆசிரியரின் கவனத்தில் விழாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
அப்போது நீல நிற சட்டை பழுப்பு நிற காற்சட்டையில், அவளின் உடையின் நிறத்தை நகலெடுத்து பளிச்சென்று அங்கு வந்த பிரபஞ்சன், “போலாம் பிரியா” என்று அவளின் கைப் பிடித்து எழுப்பி விட்டான். “நான் வரலை போ” என்று கோபமாக முரண்டத்தான் நினைத்தாள். ஆனால், தற்போதைக்கு அம்மா வீடு செல்வது மட்டுமே முக்கியம் என அடங்கி விட்டாள்.
“ம்மா, வர்றோம்” என்று மரகதவல்லிக்கும் விடை கொடுத்தான்.
“கார் சாவிய மறந்துட்டு போற ரஞ்சன்”
“பிரியா வண்டியில போறோம்மா” மெதுவாகத் திரும்பி பிரியாவின் கையிலிருந்த சாவியைத் தூக்கி காட்டினான்.
அவளின் கைப்பை அவன் கையில் தொங்கி கொண்டிருந்தது.
“பார்த்து, கவனமா போய்ட்டு வாங்க” என்று அவர்களுக்கு விடை கொடுத்தார் மரகதவல்லி.
அவனிடம் அதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்த மனைவியைப் பக்கவாட்டில் கீழிருந்து மேலாகக் கண்ணால் வருடி கண் களவு செய்தவன், மெலிதாக விசில் அடித்தான்.
“காரெடுக்கணுமா பிரியா? நீ வண்டியோட்டிருவதானே?” மிகவும் இயல்பாக அவள் தோளில் கைப் போட்டு கேட்டான்.
“ஓ, அப்போ சரியா வண்டியோட்ட தெரியாது போல. பேசாம கை வலிச்சாலும் பரவால்லன்னு நாமளே காரை எடுப்போம்” என்றவனைத் திரும்பி தீப் பார்வை பார்த்தாள்.
அடர்ந்த மீசைக்கடியில் அவன் உதடுகள் புன்னகையில் துடித்தது அப்பட்டமாகத் தெரிந்தது. கண்களில் குறும்பு கூத்தாட, கன்னங்கள் இரண்டும் சிரிப்பை அடக்கியதில் குழிந்திருக்க, மயக்கினான் அவன்.
அவனைத் திரும்பி ரசிக்கத் தூண்டிய கண்களைச் சூழல விடாமல் தடுப்பது அவளுக்குப் பெரும்பாடாக இருந்தது.
இருவரும் மின் தூக்கிக்குள் நுழைய, அவனது காற்சட்டை பையில் இருந்து எதையோ எடுத்தவன் மென்மையாக அவள் வலக்கரம் பற்றி அதை அணிவித்தான்.
அவளின் கழுத்தணி, காதணிக்கு பொருத்தமான வளையல் அது. அதிலும் இரண்டு இதயங்கள் பின்னி பிணைந்து அழகாகக் காட்சியளித்தன.
அவளின் கோபத்தை அழுத்தமாகப் பதிய வைக்க, வேகமாக அதைக் கழற்ற போனாள்.
“ப்ச், பிரியா” என்றானே பார்க்கலாம்.
“அய்யோடா என் நேரம் நீங்க ப்ச்சுங்கறீங்க” என்று அலுத்துக் கொண்டாள் அவள். சிரித்தான் அவன்.