பிரபஞ்சன் உடல் சோர்வின் காரணமாக விரைவாகப் படுக்கைக்குச் சென்றிருந்தான்.
அவள் சமையல் அறையை ஒதுக்கி உறங்கச் செல்ல, அவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ணுது பிரபா? பெயின் கில்லர் போட்டீங்கதானே?” அவனை நெருங்கி நெற்றியில் கை வைத்து கேட்டாள். உடல் சுடவில்லை. ஆனாலும் அவன் முகம் அதீதமாகச் சோர்ந்திருந்தது.
“பாடி பெயினா இருக்கு பிரியா. கொஞ்சம் என் மேல ஏறி மிதிச்சு விடு” என்றான்.
“அய்யோடா. மேல ஏறி மிதிக்கவா? எதுக்கு? நகம் உடைஞ்சது போதாதுன்னு, எலும்பும் உடையவா?”
“பூ மோதிலாம் எலும்பு உடையாது பிரியா” என்றான் குறும்பு புன்னகையுடன் கண் சிமிட்டி.
“நல்லா பேசுறீங்க” என்று உதடு சுழித்தவள், மெல்ல நகர்ந்து அவன் காலை பிடிக்க, “ஏய் ஏய் பிரியா, கைய எடு முதல்ல. என்ன பண்ற நீ?” என்று கத்தினான்.
“அய்யோடா, உங்களுக்குக் கால்லயும் அடி பட்டிருக்கா பிரபா. நீங்க சொல்லவே இல்ல” முகம் வாட அவள் கேட்க, “கால்ல அடியெல்லாம் படல. நீ காலப் பிடிக்காத, எந்திரி” என்றான் கண்டிப்புடன்.
“நீங்கதானே உடம்பு வலிக்குதுன்னு சொன்னீங்க?”
“அதுக்குக் காலை பிடிப்பியா நீ?” என்று கோபமாகக் கேட்டான். அவனது கோபத்தின் காரணமே அவளுக்கு விளங்கவில்லை.
“நீங்க மட்டும் என் காலை பிடிக்கறீங்க?”
அவன் வேகமாக, “ப்ச்” எனவும் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“என் காலை பிடிக்காத. உன் காலால முடிஞ்சா முதுகு மிதிச்சு விடு” என்றான்.
ஒரு நொடி அவனை முறைத்தவள், அவன் சொன்னதைச் செய்தாள்.
ஒற்றைக் காலை படுக்கையில் வைத்து மறுகாலால் மென்மையாக முதுகில் பாதத்தை அழுத்தி ஒத்தடம் கொடுத்தாள்.
“ம்ம்ம்ம், அப்படியே மேல வா. மெதுவா ஏறி நில்லு, பார்ப்போம்” என்றான். தலையணையில் அவன் முகம் புதைந்திருக்க, அவன் வார்த்தைகள் தெளிவாகப் புரியவில்லை அவளுக்கு.
“முதுகு மேல ஏறி நில்லு”
“அய்யோடா முடியாது” என்று பதறியவளை, பேசி பேசியே சரி கட்டி விட்டான். மெல்ல அவன் மேல் ஏறி நின்றிருந்தாள். படுக்கையில் குப்புற கிடந்தவன், மெல்ல திரும்ப அவளின் பிடிமானம் நழுவிட, “பிரபா” என்று அலறியவளை அணைத்து தாங்கி கொண்டான்.
“இப்ப உடம்பு வலிக்கலையா உங்களுக்கு?”
“நீ என் வலி நிவாரணி பிரியா” என்று கண்ணடித்து, அவன் கைகளுக்குள் அவளை வாரி சுருட்டி கொண்டான்.
இன்றும் பறவைகளின் கீச்சிடல்தான் அவளைக் கண் விழிக்கச் செய்தது. கண்களை முழுதாகத் திறக்க முடியாமல் சுக சோர்வு அவளை அழுத்தியது.
மெல்ல புரண்டு படுத்தவள் பிரபஞ்சனின் கைகளுக்குள் இருந்தாள்.
அவன் கரத்தின் குளிர்ச்சி அவள் உடலில் ஊடுருவ, “பிரபா சில்லுன்னு இருக்கீங்க?” விழிகளைக் கோடாகத் திறந்தவள், அவனது தோற்றத்தை கண்டதும் விழிகள் தெறித்து விடும் அளவுக்கு விரித்தாள்.
“எங்க கிளம்பிட்டீங்க பிரபா?”
“இன்னைக்குமா?”
“கிரிக்கெட் ஆடவா போறீங்க?” என்று வரிசையாக அவள் உதட்டில் உதித்த கேள்விகளை உள்ளுக்குள் விழுங்கி,
“என்ன பிரபா..” என்று மட்டுமே கேட்டிருந்தாள்.
“இன்னைக்கு ஃபைனல் மேட்ச் பிரியா, நான் போயே ஆகணும்” என்றான்.
“என்ன விளையாடுறீங்களா?”
“விளையாடதான் போறேங்கறேன். நீ முறைச்சுட்டு விட மாட்டேங்கற பிரியா” என்று அவள் முகத்தை வருடினான்.
“உங்களுக்கு அடிப்பட்டிருக்கு பிரபா. ரெஸ்ட் எடுக்காம இந்தக் கையோட எப்படிப் போய் விளையாடுவீங்க?”
“ஃபைனல் மேட்ச் பிரியா”
“அதுக்கு? முதல்ல இன்னைக்கு உங்களை எப்படி டீம்ல எடுப்பாங்க? நேத்தே நீங்க ரிட்டயர்ட் ஹர்ட்னு வெளில வந்திருப்பீங்கதானே?” என்று அவள் சரியாகக் கேட்கவும், “அய்யோடா என் பொண்டாட்டிக்குக் கிரிக்கெட் எல்லாம் தெரியுதே” என்று அவளின் கன்னம் கிள்ளி கொஞ்சினான்.
“பிரபா..” அவள் கோபமாகக் குரல் உயர்த்தவும், “நான் ரிட்டயர்ட் ஹர்ட்தான். அவுட் இல்லையே. சோ திரும்ப உள்ள போகலாம்” என்றான்.
“இந்தக் கையோட எப்படிப் பேட் பிடிப்பீங்க?”
“இன்னைக்கு நான் ஆடல போதுமா? மேட்ச் பார்த்திட்டு வந்துடுறேன். கார் கூட நான் டிரைவ் பண்ணல. பார்த்தியை ஓட்ட சொல்றேன். போதுமா?” அவனின் எந்தப் பேச்சும் அவளைச் சமாதானம் செய்யப் போவதில்லை.
கழுத்தை ஒடித்து முகத்தைத் திருப்பினாள்.
அங்கே உடை மாற்றும் மேஜை மேல் அவளுக்குப் புடைவையும், அவனுக்கு உடையும் நேர்த்தியாகத் தேய்த்து வைத்திருந்தான். அவள் அதைக் கவனித்து விட்டாள் எனத் தெரிந்ததும், “மதியம் ஒரு மணிக்கு டான்னு வீட்ல இருப்பேன். ஓகே?” என்றான்.
அவள் ஒன்றுமே சொல்லவில்லை.
“என்னை எப்படியும் சமாளிச்சுடலாம்னுதானே என்கிட்ட நேத்து நைட்டே சொல்லாம இப்படிக் காலையில கிளம்பி நிக்கறீங்க?” முகத்தை உயர்த்திக் கேட்டாள்.
மெலிதான புன்னகையுடன், “நீ சேலை கட்டி ரெடியா இருப்பியாம். நான் சரியா ஒரு மணிக்கு வந்துடுவேனாம்” என்று அவள் கையை அழுத்திச் சென்றான். வேறு வழி, சரியெனத் தலையசைத்தாள்.
அவள் காலை உணவின் போது மதியம் அம்மா வீடு செல்கிறோம் என மாமியாரிடம் சொல்லி விட்டாள். அத்துடன் பெற்றோருடன் கடைக்குச் செல்லும் தகவலையும் பகிர்ந்திருந்தாள்.
“ரஞ்சன் கிட்ட சொல்லிட்டியா?” என்று மட்டுமே கேட்டார் மரகதவல்லி. பிரபஞ்சன் மதியம் வீடு வந்து விடுவான் என அவள் சொன்னதும் தலையசைத்தார்.
அப்போதே அம்மாவை அழைத்து விவரம் பகிர்ந்தாள் அவள்.
இங்கே மாமியாருக்கு மட்டுமாக எளிமையாகச் சமைத்து வைத்தாள். முன்தினம் வாங்கிய மீன் மசாலா போட்டு குளிர்சாதனப் பெட்டியில் இருக்க, மதிய உணவுக்கு நானே பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டார் அவர்.
அம்மா வீடு செல்லும் உற்சாகமே அலாதிதானே? மிகுந்த ஆவலுடன் விரைந்து கிளம்பினாள் அவள்.
மணி பனிரெண்டை நெருங்கும் போதே பிரபஞ்சனை அழைத்து விட்டாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை.
“டிரைவிங்ல இருப்பாங்க” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தயாராகினாள்.
அவன் சட்டைக்குப் பொருத்தமாக அதே நிறத்தில் அடர் நீல மல்மல் சேலையை அவள் உடுத்த எடுத்து வைத்திருந்தான். அவள் எப்போதும் அலுவலகத்துக்கு அணியும் புத்தம் புதிதான, அழகான, மெல்லிய எஸ்டில் கழுத்தணி, அவளின் சேலைக்குள் பொதிந்து இருந்ததை அப்போதுதான் கவனித்தாள்.
மெல்லிய சங்கிலியில் இரண்டு இதயங்கள் இணைந்து கிடந்தன. காதணியும் அதே வடிவமைப்பில் இரண்டு இதயங்களுடன் இருந்தன.
அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“இது எப்போ வாங்கி இருப்பார்?” கழுத்தில் அணிந்து பார்க்க அவளுக்கே அவ்வளவு பிடித்தது.
அவன் தேர்ந்தெடுத்து வைத்திருந்த புடைவை, புது நகை என அட்டகாசமாகத் தயாராகி நின்றிருந்தாள்.
இப்போது மணி ஒன்று என்றது கடிகாரம்.
பிரபஞ்சன் வரவில்லை.
ராதா அவளை அழைத்து விட்டார்.
“கிளம்பிட்டீங்களா தர்ஷி?” என்று கேட்டார்.
“இல்லம்மா. இப்போ கிளம்பிடுவோம்” என்றாள்.
ஒன்றரை மணிக்கு ராதா திரும்பவும் அழைக்க, “சாரிம்மா கொஞ்சம் லேட்டாகுது. நீங்க சாப்பிடுங்க. நாங்க கிளம்பிட்டே இருக்கோம்” என்றவளுக்குப் பொய் சொல்வதே பெரிதாக மனத்தை உறுத்தியது.
“சாப்பிட வா பிரியதர்ஷினி” மரகதவல்லி இயல்பாக அழைக்க, “அவர் வரட்டும் மிஸ்” என்று விட்டாள்.
“வருவான். நீ வந்து சாப்பிடு”
“நீங்க சாப்பிடுங்கத்த” அவர் பேச இடம் கொடுக்காமல் உள்ளே சென்று விட்டாள்.
“குட்டிம்மா கிளம்பிட்டீங்களா? உனக்குப் பிடிச்ச நண்டு செஞ்சிருக்கு” இம்முறை அப்பா மாணிக்கவேல் அழைக்க, “நாங்க வர லேட்டாகும்ப்பா. நீங்க சாப்பிடுங்க” அவர் பதில் பேசும் முன் அழைப்பை துண்டித்து விட்டவளுக்குக் கோப மிகுதியில் தொண்டையடைத்து வலித்தது.
உதடு கடித்து அழுகையை அடக்க முயன்றாலும் முடியவில்லை. கண்களைச் சிமிட்டி சிமிட்டி தன்னைக் கட்டுப்படுத்தினாள். ம்ஹும், ஒன்றும் உபயோகமாக இல்லை. இரண்டு சொட்டுக் கண்ணீர் கன்னம் தொட்டு விட்டது.
கணவனின் உதாசீனம் அவளை அவ்வளவு பாதித்தது.
“நான் வர தாமதமாகும்” என அவளுக்குத் தகவல் சொல்வதற்குக் கூடவா அவனால் முடியவில்லை? தகவல் தெரிவிக்க முடியவில்லையா? இல்லை, அவள் முக்கியமில்லையா? கோபமும், குழப்பமுமாக அமர்ந்திருந்தாள் பிரியதர்ஷினி.