“ஒன்னுமில்ல பிரியா, சின்ன அடிதான்” என்றான் பிரபஞ்சன். அதற்குள் அடித்துப் பிடித்து ஓடி அவனைத் தாங்கிப் பிடித்து அவனைச் சுற்றி கைப் போட்டு அணைத்து பிடித்திருந்தாள் பிரியதர்ஷினி.
“என்ன ரஞ்சன் விளையாடும் போது கவனமா இருக்க மாட்டியா?” என்று அமர்ந்த இடத்தில் இருந்தே அமர்த்தலான குரலில் கேட்ட மரகதவல்லியை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அவள்.
மகனின் காயங்கள் கண்டு அவர் வருந்தியதாகவே தெரியவில்லை. என்னவோ தினசரி நிகழ்வு போல அத்தனை சாதாரணமாக அவர் சொல்ல, அவளுக்குத்தான் கண்ணைக் கட்டியது. கணக்கு ஆசிரியரின் கணக்குகள் எதுவும் அவளுக்குப் புரியவேயில்லை.
“சின்ன அடிதான்ம்மா, நத்திங் டு வொர்ரி” என்று அம்மாவிடம் சாதாரணமாகச் சொன்னவன் மனைவியோடு அறையை நோக்கி நடந்திருந்தான்.
“எப்படி அடிபட்டுச்சு பிரபா? அப்படியா அசால்ட்டா விளையாடுவீங்க? கையைக் காட்டுங்க” அறைக்குள் நுழையும் முன்னே அவனை நிறுத்தி அவள் பரிசோதிக்க முயல, “இரு பிரியா” என்று அவளை விலக்கி வேகமாக அறைக்குள் நுழைந்திருந்தான்.
அவனை விட வேகமாக அவனை நெருங்கி, அவன் கைப் பிடித்து அழுத்தி படுக்கையில் அமர்த்தினாள்.
அவனது நெற்றி காயத்தை ஆராய்ந்தாள்.
“ஷ்ஷ்ஷ் பிரியா” என்று அவளின் கையை விலக்கினான்.
“தையல் போட்டிருக்கா பிரபா?” மென்மையாய் அவன் நெற்றி வருடி வினவினாள்.
“இல்ல பிரியா”
“பொய் சொல்லாதீங்க”
“சும்மா ரெண்டு ஸ்டிச்தான் போட்டிருக்கு..” என்றான். இப்போது மலரினும் மென்மையாய் அவன் காயத்தை வருடின அவள் விரல்கள்.
“ஸ்டிச் தானாவேமே? ஹாஸ்பிடல் போகற அளவுக்கு எப்படி அடிபட விடுவீங்க பிரபா? கேர்புல்லா இருக்க மாட்டீங்களா?” என்று கோபமும் வருத்தமுமாக அவன் கைப் பிடித்துக் கேட்டாள்.
ஆவென்று கத்தி விட்டான் அவன்.
“கை பிரியா..” என்று முகம் சுளித்தான்.
“சாரி, சாரி. அப்பவே பார்த்தேன். இப்படிக் காட்டுங்க” என்று அவன் கையைப் பிடித்துப் பரிசோதித்தாள்.
“விரல் ப்ராக்ச்சரா என்ன?” சட்டெனக் கண்கள் தளும்பி விட்டன. எத்தனை முயன்றும் குரல் உடைவதை தவிர்க்க முடியவில்லை.
“விளையாடும் போது இதெல்லாம் ரொம்ப ரொம்ப நார்மல் பிரியா. எங்கம்மா எவ்வளவு அசால்ட்டா டீல் பண்ணாங்க பார்த்தியா? ஏன்னா எனக்கு இதை விடப் பெரிய அடில்லாம்..” என்று சொல்லி முடிக்கும் முன் வலக்கரத்தால் அடித்து அவன் வாயை மூடியிருந்தாள்.
“அப்படியே போரில் வாங்கின வீர தழும்புகள் பாருங்க. ரொம்பப் பெருமைதான்”
அவள் கையை மென்மையாக விலக்கி, “பெருமை இல்ல பிரியா, நீ ஃபீல் பண்ற அளவுக்கு ஒன்னுமில்லைனு சொல்றேன்” என்றவனை முறைத்து தள்ளினாள்.
“எது இப்படி நெத்தில தையல், கையில கட்டு உங்களுக்கு ஒன்னும் இல்லையா?”
“பிரியா..”
“விரலுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க?”
“பால் பட்டு நகம் பேந்துடுச்சு”
“அய்யோடா.. நகம் முழுசா உடைஞ்சு வந்துடுச்சா? பயங்கரமா வலிச்சுருக்குமே?” கண்கள் மளுக்கென உடைந்து விட்டன. அவள் கன்னங்களில் கண்ணீர் வழிய, “ப்ச், பிரியா.. இந்த இத்துணூண்டு அடிக்கு போய்..” என்று அவளை இழுத்து அணைத்துத் தேற்றினான்.
“போங்க, கையை எடுங்க. அப்படியென்ன கவனம் இல்லாம விளையாடுவீங்க?” அவன் கையைக் கோபமாகத் தட்டி விட்டாள்.
“என் கவனம் எல்லாம் வீட்ல இருந்தா விழுந்து வார தானே செய்வேன்” என்று கரகரத்த குரலில் சொல்லி அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தினான்.
“அடிக்கடி இப்படி அடிபடுமா?”
“இல்ல பிரியா, எப்பவாவதுதான் இப்படியாகும்.”
“இன்னைக்கு எப்படி அடிபட்டுச்சு?”
“ம்ம்ம்” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான். அவர்களது கிரிக்கெட் குழுவின் ஜெர்சி அணிந்திருந்தான். அந்த உடை செம்மண் நிறம் பூசியிருந்தது. ஆங்காங்கே இரத்த கறை வேறு இருக்க, அவளின் முகம் போன போக்கு இருக்கிறதே.
“ஒரு முக்கியமான விக்கெட், செம்ம கேட்ச், வசமா என் கையில வந்து விழுந்துச்சு. ஓடி போய்ப் பாலை பிடிச்ச கையோட பேலன்ஸ் போய்க் கீழ விழுந்துட்டேன்” என்றான்.
“அதுக்குன்னு நகம் உடைஞ்சு வர்ற அளவுக்கா விழுவீங்க? என்ன நடந்தது ஒழுங்கா சொல்லுங்க?” அவள் புருவங்களை நெரித்துச் சந்தேகம் கேட்க, அவள் கன்னங்களைத் துடைத்து விட்டு, “நான் பால் பிடிக்க வரும் போது நடுவுல ஒருத்தன் வந்துட்டான். ரெண்டு பேரும் எசகுபிசகா விழுந்ததுல எனக்கு நெத்தில அடி. பால் வந்த ஃபோர்ஸ்ல நகத்துல பட்டு பேந்துடுச்சு” என்றான், கசப்பாகப் புன்னகைத்து.
“சாரி, நீங்க கிளம்பும் போதே நான் அவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கக் கூடாது” அவள் குற்ற உணர்ச்சியுடன் சொல்ல, “ஹே சில்ல்ல்ல் பிரியா. இதெல்லாம் ரொம்பச் சாதாரணம்னு சொன்னேனா இல்லையா?” என்று அவளின் கன்னம் தாங்கி கேட்டான்.
“ப்ச்” என்றாள். அவன் கண்கள் கண்டனத்துடன் விரிய, “சாரி” என்றாள் அதற்கும்.
“எழுந்துக்கோ. நான் போய்க் குளிச்சுட்டு வர்றேன்”
“குளிக்கப் போறீங்களா? தையல்ல தண்ணி படக் கூடாதில்ல? டிடி இன்ஜெக்ஷன் போட்டாங்களா? டேப்லெட் குடுத்திருக்காங்களா?”
“ம்ம், டேப்லெட் என் கிரிக்கெட் கிட் பேகில் இருக்கும், பாரு. நாள் முழுக்க வெயில்ல நின்னது எனக்கு ரொம்பக் கசகசன்னு இருக்கு. கவனமா தையல்ல தண்ணி படாம குளிச்சுட்டு வர்றேன்” என்று அவளை எழுப்பி நிறுத்தி அவனும் எழுந்து கொண்டான்.
“இந்தக் கையோட எப்படிப் பிரபா?”
“நீ ஹெல்ப் பண்றது?” என்று கண் சிமிட்டினான்.
அவள் முறைக்கவும் சிரித்துக் கொண்டே குளிக்கச் சென்றான். அரை மணி நேரத்தில் ஆள் பார்க்க கொஞ்சம் தெளிவாக இருந்தான்.
இருவரும் இரவு உணவு உண்ண செல்ல, மரகதவல்லி அனைத்தையும் தயாராக உணவு மேஜையில் எடுத்து வைத்திருந்தார்.
மகனிடம் பெரிதாக எந்த விசாரணையும் செய்யவில்லை அவர். அன்றாட வழக்கம் போல இயல்பாகப் பேசினார்.
மருமகள் முதலில் உண்ணாமல் மகனை கவனிப்பது கண்டு புன்னகைத்துக் கொண்டார்.
“நீயும் உக்காந்து சாப்பிடு பிரியா” அவளை வலுக்கட்டாயமாகப் பிடித்து அமர்த்தித் தன்னுடன் உண்ண வைத்தான் பிரபஞ்சன்.
மரகவல்லி உண்டு முடித்ததும், “சாப்பிட்டு மறக்காம டேப்லெட் போட்டு படு ரஞ்சன்” என்று மகனை அறிவுறுத்தி விட்டு சென்றார்.
அந்நேரம் அவளுக்கு அம்மா அழைத்தது நினைவு வந்தது. ஏழு மணி போல அவளைத் திரும்ப அழைத்து, “நாளைக்கு வர்றீங்கதானே தர்ஷி?” என்று வேறு கேட்டிருந்தார் அவர்.
“மிஸ்ஸோட வெளில இருக்கேன்ம்மா, உங்களுக்கு வீட்டுக்கு வந்து கால் பண்றேன்” என்று வைத்து விட்டாள்.
இப்போது, “பிரபா, காலையில அம்மா கால் பண்ணியிருந்தாங்க” என்று கணவனிடம் சொன்னாள். அவன் என்னவென்று கண்களால் கேட்க, “நம்மள நாளைக்கு ஷாப்பிங் கூட்டிட்டுப் போறாராம் அப்பா” என்று அவள் சொல்லவும், “எதுக்குப் பிரியா? மாமா நமக்கு ஒன்னும் வாங்கித் தர வேணாம். உனக்கு என்ன வாங்கணும்னு சொல்லு. நாம போய் வாங்கிக்கலாம்” என்றிருந்தான். அவன் குரலில் கணத்தில் கனமான கோபமிருக்க, அவளுக்கு எரிச்சலாக வந்தது.
“நான் ஒர்க்குக்குப் போட்டு போக டிரஸ், அப்புறம் கொஞ்சம் ஆர்ட்டிபிசியல் ஜூவல்ஸ் வாங்கித் தர்றேன்னு சொன்னாங்க. அவ்ளோதான்”
“அதான் வேணாம்னு சொல்றேன், இல்ல? உனக்கு என்ன வாங்கணும்னு சொல்லு, நான் கூட்டிட்டு போறேன்”
“ப்ச், திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லாதீங்க பிரபா. எங்கம்மாப்பா ஆசைப்பட்டு வாங்கித் தர்றதா எப்படி வேணாம்னு சொல்றது?”
“வேணாம்னா வேணாம்தான்”
“எதுக்கு வேணாங்கறீங்க?” கோபமாக அவள் கேட்க, பட்டென முகம் திருப்பினான்.
அவன் முகத்தை அழுந்த பற்றி, “என்ன பிரச்னை உங்களுக்கு? எங்கப்பா கிட்ட வரதட்சணை வாங்க மாட்டேன்னு சொன்னீங்க. தட் இஸ் ஓகே. ஆனா அதுக்காக எங்கப்பா எனக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்ன? இப்பவும் நான் அவர் பொண்ணுதான்” என்றாள் அழுத்தமாக, அவன் கண்களுக்குள் ஆழ பார்த்து.
அவன் கண்களும், உதடுகளும் குறும்பு புன்னகையில் பளபளத்தன.
“பிரபஞ்சன் பொண்டாட்டி பிரியதர்ஷினி” என்றான் அடர்ந்த குரலில்.
“அதுக்கு?”
“நாளைக்கு உங்கப்பாவோட ஷாப்பிங் போறோம். போதுமா?” என்று கேட்டான்.
“நீங்க சொல்ற டோனே சரியில்லையே. அங்க வந்து உங்க பர்ஸ தொறந்தீங்க.. தொலைஞ்சீங்க” என்று கீழுதடு கடித்து ஒற்றை விரல் நீட்டி மிரட்டினாள். உடல் குலுங்க சிரித்தான் அவன்.
“அம்மாகிட்ட நாளைக்கு நாம வர்றோம்னு சொல்லிடவா பிரபா?”
“சொல்லிடு” என்றான். உடனடியாக உற்சாகமாக அம்மாவை அழைத்து விட்டாள். அப்பா பேசினார். அவரிடமே நாளை வீடு வருகிறோம் என்று தகவல் சொல்லி விட்டாள்.
மதிய உணவுக்கே இங்கு வந்து விடுங்கள் என்றார் அவர். அவளும் முடிந்தால் வருகிறோம் என்று கணவனை ஓரக் கண்ணால் பார்த்தவாறே சொன்னாள்.
“மட்டன் வாங்கவா? மீன் வாங்கவா? நண்டு வாங்கவா?” என்று மாணிக்கவேல் இப்போதே விசாரிக்க, சிரிப்புடன், “அம்மா பாவம்ப்பா. நாங்க என்ன விருந்தாளியா? சிம்பிளா செஞ்சா போதும்ப்பா” என்று விட்டாள். விரைவில் வீடு வந்து விடுங்கள். வீட்டில் கொஞ்சம் நேரம் செலவிடலாம் என்று அவர் வலியுறுத்த, சரியென்று உறுதியாகச் சொன்னாள்.