பிரிய பிரபஞ்சமே – 1 (2)

பிரபஞ்சன் சொன்னது போலவே நல்ல கணவனாகக் காத்திருந்து அவளை அழைத்துச் சென்றிருந்தான்.‌ அவன் பணிபுரியும் இடத்தில் இருந்து பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்தது அவளை நேர்காணலுக்கு அழைத்திருந்த நிறுவனம். அவளை நேராக அங்குக் கொண்டு விட்டிருந்தான்.

“ஆல் தி பெஸ்ட்” என்றான்.

“ம்ம், தேங்க்ஸ்”

“இன்டர்வியூ முடிச்சுட்டு கால் பண்ணு. நான் வந்து பிக் அப் பண்ணிக்கறேன்”

“திரும்ப உங்களை டிஸ்டர்ப் பண்ண சொல்றீங்களா? நானே ஆட்டோ புக் பண்ணி வீட்டுக்கு போய்க்கறேன்”

“உன்னைக் கால் பண்ண சொன்னேன்” என்றான் கறாராக.

ஏற்கெனவே நேர்காணலுக்காகப் பதற்றம் உடலில் தொற்றியிருக்க அவனிடம் மேற்கொண்டு வாதாட விரும்பாமல் வெறுமனே தலையசைத்து வைத்தாள்.

“இன்டர்வியூ நல்லா பண்ணு” அவள் கையை அழுத்திச் சொன்னான். பதிலாகப் புன்னகைத்து அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தாள். அவள் உள்ளே செல்லும் போது காலை பதினொரு மணி, வெளியே வருகையில் மணி நான்கை தாண்டிருந்தது.

அவள் போன காரியம் என்னவென்று கேட்டால் என்ன சொல்லுவாள்? காயா, பழமா என்று அவளால் கணிக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் கேட்ட கேள்விகள் அப்படி. தொழில் சார்ந்த, துறை சார்ந்த கேள்விகளுக்கு எல்லாம் சிறப்பாகத்தான் பதில் சொல்லியிருந்தாள். அவள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான கேள்விகள்தான் அவளைக் குழப்பியிருந்தது.

“புதுசா கல்யாணமானவன்னு சொன்னா, புள்ளை பெத்துக்கற பிளான் எப்போன்னு கேட்கறானுங்க. ஏன்டா, அதை நாங்களே இன்னும் முடிவு பண்ணலன்னு நாசூக்கா சொன்னா, அந்த ஹெச்ஆர் ஷாக்காகுறா பார்கவி” என்று வெளியே வந்ததும் தோழியிடம் புலம்பினாள்.

“பின்ன, அவன் உனக்கு வேலை கொடுத்த நாலாம் மாசம், நீ நாலு மாசம், மாசமா இருக்கேன்னு சொல்லி, அடுத்த ஆறு மாசத்துல எனக்கு மெட்டர்னிட்டி லீவ் வேணும்னு சொல்லிட்டா, அவன் பொழப்பயும் யோசிச்சுப் பேசும்மா பிரியூ” என்றாள் பார்கவி கிண்டலாகச் சிரித்துக் கொண்டே.

“பாயிண்ட்டு பாரு. புரிஞ்சுது, எனக்கு இந்த வேலை கிடைக்காது போல. நீ போனை வை” என்று சோகமாகச் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள். சரியாகச் சொல்லி வைத்தது போல அந்நேரம் பிரபஞ்சன் அவளை அழைத்தான்.

“இன்டர்வியூ முடிஞ்சதா?”

“ம்ம்ம்”

“சாப்பிட்டியா?”

“இப்பதான் வெளில வர்றேன்”

“சரி, அங்கேயே வெயிட் பண்ணு. நான் வந்துடுறேன்”

“இல்லங்க, ஆறு மணிக்கு அத்த வீட்டுக்கு வந்துடுவாங்க. என்னைக் காணோம்னு தேடி போன் பண்ண போறாங்க. நான் வீட்டுக்கு..”

“வெயிட் பண்ணுன்னு சொன்னேன்” என்றான் அடர்ந்த குரலில். அடுத்தப் பத்தாம் நிமிடம் அவள் முன் இருந்தான்.

அவளைப் பக்கத்தில் இருந்த உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். அவள் மனம் சோர்ந்திருக்கக் கைப்பையைக் காரிலேயே வைத்து விட்டு இறங்கினாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம். சாப்பிடற மூட் இல்ல”

“வேற என்ன மூட் இருந்தாலும் வீட்ல போய்தான் வசதிப்படும். சோ” என்று தோள் குலுக்கினான். கண்கள் குறும்பு சிரிப்பில் பளபளத்தன. அவள் முகம் சிவந்து விட்டது.

“பப்ளிக் பிளேஸ்”

“தெரியுதுல்ல? தெரிஞ்சே ஏன் மூட் பத்தி பேசுற?”

“நான் என்ன சொல்ல வந்தேன்னு..” என்று விளக்கம் சொல்ல போனவளுக்குக் கன்னச்சதை கடித்து அவன் புன்னகைத்ததில் சிரிப்பு வந்து விட்டது. அவன் உணவக ஊழியரை அழைத்து அவளுக்கான உணவை சொன்னான்.

“உங்களுக்கு எதுவும் சொல்லல?”

என்று அவள் கேட்க, அவன் நேரத்துக்குச் சாப்பிட்டதாகச் சொல்லி மறுத்து விட்டான். அவள்தான் வற்புறுத்தி அவனுக்காகப் பழச்சாறு கொண்டு வரச் சொன்னாள். அவளுக்கான உணவு வரவும் சாப்பிடத் தொடங்கினாள். அப்போது அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டேயிருந்தது.

“ஆஃபீஸ் காலா? நீங்க கிளம்புங்க. நான் சாப்பிட்டு வீட்டுக்கு போய்க்கறேன்” என்றாள்.

“ஆஃபீஸ் கால் இல்ல, நீ சாப்பிடு”

என்று அவன் சொல்லும் போதே மீண்டும் அழைப்பு வந்தது.

அவள் நிமிர்ந்து நோக்க, வேகமாக அலைபேசியை அமைதியாக்கினான். அதன் பிறகும் அது அடித்துக் கொண்டே தானிருந்தது.

“சைலண்ட்ல போட்டுட்டீங்களா? வைபரேட்டாகிட்டே இருக்கு பாருங்க. எடுத்து பேசுங்க”

“நீ தட்ட பார்த்து சாப்பிடு” என்று அதட்டியவன் ஒரே மூச்சில் பழச்சாறை காலி செய்திருந்தான்.

அவனது அலைபேசி ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருந்தது. லேசாக விழி உயர்த்தி அதைப் பார்த்தவள் தன் கவனத்தை உணவில் பதித்தாள். அவனுக்குப் பிடித்த பாயாசத்தை அவன் புறமாக நகர்த்தி வைத்தாள். நொடியில் அதுவும் காலியானது.

காலி கிண்ணத்தை அவன் மேஜையில் வைக்க, அவனது அலைபேசி அதிர்ந்து அதன் மேல் மோதியது. அதைக் கண்டு அவள் கண்கள் கேலி சிரிப்பில் மலர, சட்டென்று அலைபேசி அழைப்பை ஏற்று விட்டான்.

“சொல்லுடா பார்த்தி” என்று அவன் சொன்னதும் அவளுக்குப் பகீரென்றது.

“ஓகே, வெயிட் பண்ணு. நான் வர்றேன்” என்று சொன்னவன், அவளை நிமிர்ந்து நோக்கி, “நீ சாப்பிட்டுட்டே இரு. நான் இப்ப வந்துடுறேன்” என்று எழுந்து கொண்டான்.

“என்னங்க..”

“பார்த்தியை பக்கத்து மெட்ரோ ஸ்டேஷன்ல விட்டுட்டு வர்றேன். நீ சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள வந்துடுவேன்” என்று அழுத்தமாகச் சொன்னவன், அவள் பேச வாய்ப்பே கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

“பிரபஞ்சன்..”

“சாப்பிடு” என்று செய்கை செய்து சென்றான்.

“இப்படி ஹோட்டலுக்குக் கூட்டிட்டு வந்து தனியா விட்டுட்டு போனா எப்படிச் சாப்பிடுறதாம்?” என்று கோபமாக உணவை அளைந்தாள். அவள் எங்குச் செல்வதாக இருந்தாலும் அண்ணா, பார்கவி என்று யாரேனும் துணைக்கு வந்திடுவார்கள். உணவகத்துக்குத் தனியாக வந்து உணவருந்திய அனுபவமே அவளுக்குக் கிடையாது.

ஏற்கெனவே மோசமான மனநிலையில் இருந்தாள், அது இன்னும் அதிகமானது. உணவு உள்ளிறங்க மறுத்தது. ஆனால் வீணாக்கவும் மனமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு உள்ளே தள்ளினாள்.

நேரம் பார்க்கவும், கணவனை அழைக்கவும் அலைபேசியைத் தேட அது அவளிடம் இல்லை. அவளின் கைப்பை? அதையும் காணவில்லை. ஐயோ, கைப்பையும், அதனுள் இருக்கும் அலைபேசியும் கணவனின் காரில் அல்லவா இருக்கிறது. இப்போது அவனை எப்படித் தொடர்பு கொள்வது?

பட்டென்று நெற்றியில் அறைந்து கொண்டாள். அதன் பிறகு அவளுக்கு எங்கிருந்து உணவு உள்ளே செல்லும்? நொடியில் அவளைப் பதற்றம் தொற்றிக் கொண்டது. கையில் கைப்பையும் இல்லை, காசும் இல்லை. உதவிக்கென யாரையும் அழைக்க அலைபேசியும் இல்லை. வீட்டுக்குச் செல்லலாம் என்றால் வீட்டுச் சாவியும் கைப்பையில் அல்லவா இருக்கிறது. அவளுக்கு அப்படியே மூச்சடைத்து விட்டது.

உணவக ஊழியர் அவளைக் கடந்து செல்ல, உணவுக்குக் கொடுக்கப் பணமில்லாதது அக்கணம் உரைக்க, குளிர் சாதனத்தின் சில்லிப்பையும் மீறி நெற்றியில் வியர்வை பூத்து விட்டது.

அங்கே சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள். ஐந்து மணி என்றது. நொடிகள் நிமிடங்களை உண்டு செரிக்க, ஐந்தே கால் ஆகியிருந்தது. வாசலை பார்த்தாள், பிரபஞ்சன் வரவில்லை. ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்புடன் அவள் விழிகள் வாசலை பார்த்தன.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்திருந்தது. உணவக ஊழியர் அதற்குள் நான்கு முறை அவளை நோட்டம் விட்டுச் சென்றிருந்தார். அதற்கே அவளுக்கு இதயம் தொண்டைக்குத் தாவி துடித்தது. சற்று முன்னர் உண்ட உணவெல்லாம் நெஞ்சுக்கு இடம் மாறி நெஞ்சடைப்பது போலிருந்தது.

“வேற எதுவும் வேணுமா மேடம்?” என்று பரிமாறுபவர் வந்து நிற்கவும், “உங்க போன் தர்றீங்களா அண்ணா? ஒரு போன் பண்ணிட்டு தர்றேன்” என்று அவரிடமே உதவி கேட்டிருந்தாள்.

அவர் அலைபேசியை எடுத்து நீட்டவும், அவசரமாகக் கணவனை அழைத்தாள், அவன் அழைப்பை ஏற்கவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, ம்ஹூம் பதிலில்லை. அவள் எண்ணுக்கு அழைக்க, அதிலும் பலனில்லை.

இப்போது பதற்றம் போய் அவளைப் பயம் பிடித்துக் கொண்டது.

இங்கே உண்ட உணவுக்குப் பணம் கொடுக்க வேண்டும், அடுத்து வீடு செல்ல வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். ஆனால், வீடு சென்றாலும் உள்ளே செல்ல கையில் சாவி வேறு இல்லையே. என்ன செய்யப் போகிறாள்?

“அப்படியென்ன ஃப்ரெண்ட் அழைத்ததும் பொண்டாட்டியை பொது இடத்தில் அம்போவென்று விட்டுவிட்டு போவது? இந்தப் பார்த்திபன் என்ன பச்சை புள்ளையா?..” என்று பல்லை கடித்தாள்.

அவள் விரல்கள் அலைபேசியில் அனிச்சையாய் அடுத்த எண்ணை அழுத்தின.

மரகதவல்லி மிஸ்ஸுக்கு மருமகளாக்கிய பெற்றோரை அந்நேரம் மனத்தில் தாறுமாறாகத் தாக்கி கொண்டிருந்தாள்.

ஆம், அவளுக்கு அது பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். ஆனால், அவனுக்கு? அந்தக் கேள்விக்குப் பிரபஞ்சன்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கெல்லாம் வாய்ப்பு கிட்டாது போலவே!

பிரியங்கள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top