பிரிய பிரபஞ்சமே – 1 (1)

“மழை மட்டுமா அழகு?

சுடும் வெயில் கூட ஒரு அழகு” இதழ்கள் மென்மையாகப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருக்கப் பால்கனியில் நின்று துணி காயப் போட்டுக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி. குரலொன்றும் அத்தனை வசீகரமில்லை. ஆனால், பெண் வசீகரிக்கும் அழகுடன் மிளிர்ந்தாள்.

எட்டு மணிக்கே சூரியன் சுள்ளென்று முகத்தில் அறையத் தொடங்கியிருந்தான். “வெயில் கூட ஒரு அழகு” என்று பாடி ரசித்தவளின் மேல் இரக்கமே இல்லாமல் தன் கதிர்களைப் பாய்ச்சினான் கதிரவன். அதன் தாக்கத்தினால் அவள் காதோரம் வியர்வை முத்தாகத் தேங்கி நின்று வெயில் பட்டு மினுமினுத்துக் கொண்டிருந்தது.

அவள் கைகள் அதன் போக்கில் துணிகளை உதறி காய வைத்துக் கொண்டிருந்தன. கண்கள் அலைபாய்ந்து கீழே நோக்கின. பள்ளிகள், கல்லூரிகள், வேலைக்குச் செல்பவர்கள் என அந்தக் காலை வேளையில் அவர்களின் அப்பார்ட்மெண்ட் வளாகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் இருப்பது மூன்றாம் தளம். அங்கிருந்து பார்க்க தரைத்தளம் தெளிவாகத் தெரியும்.

பள்ளி, கல்லூரி பேருந்துகள் அவள் பார்வையில் பதிந்தாலும் மனத்தில் பதியவில்லை. பாதிப்பை ஏற்படுத்தியது என்னவோ கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர் பேருந்துகள்தான். அவர்களின் கட்டிட வளாகத்தின் வெளியே நின்று தங்களின் பணியாளர்களை அவை ஏற்றிச் செல்ல அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

தற்போது வேலை தேடும் வேட்டையில் இருக்கிறாள். “வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்?” சமீபமாக அப்படியொரு அலுப்பு வந்ததினால் வந்த பெருமூச்சு அது. ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டிருக்கக் கூடாது என்பதை நாற்பதாவது முறையாக நினைத்து வருந்தினாள். அதனால் விளைய போவது ஒன்றுமில்லை.

புதிதாக ஒரு வேலை கிடைத்து, அதில் தான் பொருந்தி, தினம் வீட்டில் இருந்து வேலைக்குப் போய் வருவதற்குள் என்னவாகப் போகிறேனோ என்று கவலைப்படும் ரகமல்ல அவள். தன் பெற்றோரை பார்த்து வளர்ந்தவளுக்கு வீட்டில் இருப்பதுதான் கடினம். அவள் பெற்றோர் வேலைக்குச் செல்லும் தம்பதிகள். அவளின் அப்பா, மாணிக்கவேல் கல்லூரி பேராசிரியர். அம்மா ராதா, அரசு வங்கி ஊழியர்.

அவளும் பொறியியல் படித்திருக்கிறாள். பல மாதங்களுக்கு முன்பு வரை நல்ல வேலையிலும் இருந்தாள். அவள் வாழ்வில் ஏற்பட்ட புதிய திருப்பம் அவளை வேலையை விடச் செய்திருந்தது.

அந்தத் திருப்பம், திருமணம்!

பெண்களுக்கு மட்டும்தான் அங்குப் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படும். ஆண்கள் அனைத்திற்கும் விதிவிலக்கு. பின்னே, திருமணத்திற்குப் பிறகு எந்த ஆணையாவது வேலையை விடச் சொல்கிறார்களா? இல்லையே. கேட்டால், உத்யோகம் புருஷ லட்சணம் என்பார்கள்.

“பொடலங்கா” என்று கசப்பாக முணுமுணுத்து கொண்டாள்.

“யாரை திட்டுற? என்னையா?” மென்மையாய் அவள் மேல் சாய்ந்து அவள் காதோரம் கிசுகிசுப்பாகக் கேட்டான் பிரபஞ்சன், அவள் வாழ்வில் நேர்ந்த திருப்பத்துக்குக் காரணமான கணவன்.

“ஆமா” பட்டென்று சொல்லி விட்டாள்.

“அடிப்பாவி, எனக்கு ஏன் காலையிலேயே அர்ச்சனை பண்ற? நானே இப்பத்தான் தூங்கி எழுந்து வர்றேன். ஹாவ்வ்” கேள்வியோடு பிறந்த கொட்டாவியை அடக்க முடியவில்லை அவனால்.

“ப்ச்”

“என்ன பிரியா சலிச்சுக்கற?” கழுத்தோரம் ஈரமாய் இதழ்கள் பதிந்து பதிந்து விலகின.

“ஒன்னுமில்ல. நீங்க போய்க் குளிங்க. நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று நகரப் போனவளை விடாமல் இறுக்கினான்.

“நானே வந்து காஃபி கலந்துக்கறேன்”

“எதுக்கு? நான் காலையிலேயே அத்தைகிட்ட திட்டு வாங்கறதுக்கா?”

“எங்கம்மாக்கு ஏன் இவ்ளோ பயப்படுற நீ?”

“பழகிடுச்சு”

“அந்தப் பழக்கத்தை மாத்துறோம். சரியா?” என்றவனை முறைத்து, இடித்து விட்டு உள்ளே சென்றாள். அவள் விறுவிறுவென்று அறைக்குள் நுழைந்து வெளியேற, “அதென்ன ஒன்னுமில்லன்னு சொல்லிட்டு போற? இன்னைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு நீ போகணும். மறந்துட்டியா?” என்று கேட்டான்.

“நீங்க மறக்காம இருந்தா சரிதான்” என்றபடியே வெளியேறினாள்.

சமையல் அறைச் சென்று பாலை அடுப்பில் ஏற்றினாள்.

அவளின் பின்னால் வந்து நின்று, “ரஞ்சன் எழுந்துட்டானா?” என்று கேட்டார் அவளின் மாமியார்.

“ம்ம், குளிக்கப் போய் இருக்கார் மிஸ்” என்று விட்டு நாக்கை கடித்தாள். அவரும் அத்தை என்றுதான் அவளை அழைக்க வற்புறுத்துகிறார் அனுதினமும். அவளுக்குப் பழக்க தோஷத்தில், “மிஸ்” என்றே வந்து, அத்தை என உச்சரிக்க மிஸ்ஸாகி விடுகிறது. என்ன செய்வது ஒருநாள் இரண்டு நாள் பழக்கமா எளிதாக மாற்றிக் கொள்வதற்கு.

அவளுக்குப் பதினோராம் வகுப்பில், “மரகதவல்லி மிஸ்” தான் வகுப்பாசிரியர், கணித ஆசியர். ஆனால், அவள் ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் இருந்தே அவளுக்கு அவர்தான் டியூஷன் ஆசிரியர்.

அம்மாவின் வங்கிக் கிளை மாற்றல் காரணமாக அப்போதுதான் தாம்பரத்திற்கு இடம் மாறியிருந்தார்கள். வீடு, பள்ளி, அந்தப் பகுதி என எல்லாமே அவளுக்குப் புதிது.

மரகதவல்லி மிஸ் அவர்களின் பக்கத்துத் தெருவில்தான் வசித்தார். அவள் பெற்றோர் வேலை முடித்து வீடு திரும்ப மிகவும் தாமதமாகி விடும். ஆக, அவளை டியூஷன் சேர்த்து விட்டார்கள். அவளும் கணக்கில் சூரப்புலி கிடையாது. கணக்கில் எப்போதும் சுமார் மதிப்பெண்கள்தான் எடுப்பாள். எழுபதை தாண்டினால் ஆச்சரியப்பட வேண்டும். அம்மா ராதாவிற்கு அதனால் நிரம்ப வருத்தம் உண்டு.

அவள் பள்ளி முடித்து வந்ததும், வீட்டில் பொறுப்பாக அமர்ந்து படிப்பாள் என்று யாரேனும் சொன்னால் ராதா அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து விடுவார்.

பின்னே, அண்ணன் பிரகாஷுடன் அடிபிடி சண்டை போடுவதற்கே அவளுக்கு நேரம் சரியாகப் போகுமே.

பிரகாஷ் அவளை விட ஆறு வயது பெரியவன். பெற்றோர் இருந்தால் பெரிய வகுப்பில் இருக்கிறான் என்று தொலைக்காட்சி பார்க்க அவனை அனுமதிக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் வரும் முன் அவளிடம்தான் வம்புக்கு நிற்பான்.

“சுட்டி டிவி வைண்ணா” என்று அவள் கத்தினால், “சுட்டி டிவிலாம் வைக்க முடியாது. இப்போ எங்க போறோம்னு அந்த டோரா, புஜ்ஜி கத்துறத உனக்கு, நானே கத்திக் காட்டுறேன், இரு” என்று அவளை அழ விடுவான். அவளுக்குப் பிடிக்காத கிரிக்கெட்டை வைத்து அவளைக் கதற விடுவான்.

இவர்களின் அக்கப்போர், அடிதடியை தாங்காமல்தான் மரகதவல்லியிடம் டியூஷன் சேர்த்து விட்டார்கள். அவளை மட்டுமல்ல, அவளின் அண்ணனையும் சேர்த்துதான். அவரும் கெடுபிடி காண்பித்து, கண்ணை உருட்டி மிரட்டியே அவர்களுக்குக் கணக்கு சொல்லித் தருவார். பத்தாம் வகுப்பில் அவள் 97 மதிப்பெண் எடுத்த பெருமை அவரையே சேரும்.

“பால் பொங்குது பார், அடுப்பை ஆஃப் பண்ணு பிரியதர்ஷினி” என்று அதட்டலாக அவள் பெயரை அழைத்துச் சொன்னார். இந்த ஆசியர்கள் ஏன் எப்போதும் முழுப் பெயரையே சொல்லியே அழைக்கிறார்கள்? பெயரை சுருக்கி அழைத்தால் இவர்களுக்கு யாரேனும் பனிஷ்மெண்ட் கொடுத்து விடுவார்களா என்ன? அவள் முன்னராவது அவரின் மாணவி, இப்போது மகனின் மனைவிதானே? பிரியா என்று அழைத்தால் பிரியம் வெளிப்படும்தானே? ம்ம், செய்ய மாட்டார்.

“சாரி” என முணுமுணுத்து, அடுப்பை அணைத்து காஃபி கலக்கத் தொடங்கினாள்.

“நீ போய் அவனுக்குக் காஃபிய குடு. நான் டிஃபன் பேக் பண்றேன்”

“சரிங்க மிஸ்”, ‘ஐயோ, மீண்டும் மீண்டுமா?’ என்று மானசீகமாக மண்டையில் அடித்துக் கொண்டாள். ஆனால், மரகதவல்லி முகத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் உணவு பாத்திரங்களைத் திறந்து பார்க்கத் தொடங்கினார்.

“லஞ்ச்சுக்குக் கேரட் பீன்ஸ் பொரியல்தானே செய்யச் சொன்னேன் பிரியதர்ஷினி?”

“அவருக்குக் கேரட் பிடிக்காதே அத்த. அதான் காலிஃப்ளவர் ஃப்ரை பண்ணேன்”

“ப்ச், நான் என்ன சொல்றேனோ அதைச் செய் இனிமே. நீயா மெனுவ மாத்தாத. ரஞ்சன் பிடிக்காதுன்னுதான் சொல்லுவான். ஆனா செஞ்சு வச்சா சாப்பிட்டுடுவான்” என்றார். அவர் சொன்ன மற்றதையெல்லாம் மண்டையில் ஏற்றாமல், “மகன் பெயரை மட்டும் சுருக்க இவருக்கு எப்படி மனசு வந்தது?” என்று யோசித்தாள் அவள்.

“பிரியதர்ஷினி?”

“ஆங், அவருக்குக் காஃபி கொடுத்துட்டு வந்துடுறேன் மிஸ்” என்று தப்பித்து ஓடி வந்து விட்டாள்.

பிரபஞ்சன் இடையில் கட்டிய துவாலையுடன் காற்சட்டை அணிந்து கொண்டிருந்தான்.

“காஃபி”

“உன் கை ஃப்ரீயாதானே இருக்கு? பேண்ட் பட்டன போட்டு விடு. நான் காஃபியை குடிக்கறேன்” என்று அவளிடமிருந்து காஃபி கோப்பையை வாங்கினான். அவள் இதழ்கள் வெட்கப் புன்னகையில் வளைய, “ஃபர்ஸ்ட் பேண்ட்ட ஒழுங்கா போடுங்க” என்று முகத்தைத் திருப்பினாள்.

“ஒழுங்கா போடுங்களாவா? ஏன் நீ போட்டு விட்டா என்னவாம்? என் கையிலதான் காபி இருக்குல்ல. உன் கை ஃப்ரீயாதானே இருக்கு பிரியா..”

“அதுக்குன்னு.. முடியாது போங்க” என உடை மாற்றும் மேஜையின் மேல் சாய்ந்தாள். அவளை நெருங்கி நெருக்கமாக நின்று, “அப்போ போட்டு விட மாட்ட?” என்று தீவிரமாகக் கேட்டான்.

“ம்ஹும்” அவள் பார்வை அவனுக்குப் பின்னால் போனது.

“சரியான சுயநலவாதி நீ. உனக்கு வேணும்ங்கும் போது மட்டும் வேகவேகமா பெல்ட் கழட்டி, பேண்ட் பட்டன…” பட்டென்று அவன் வாயை மூடினாள்.

“போட்டு விடு” அவள் உள்ளங்கைகளுக்குள் உச்சரித்தான்.

“பிளீஸ் சொல்லுங்க”

“முடியாது” உள்ளங்கையில் மீசை உரச சொன்னான். அவள் உள்ளங்கையில் உதித்த சிலிர்ப்பு நொடியில் உச்சந்தலை வரை பரவிட, அவள் கரம் வேகமாக அவன் இடுப்பில் பதிந்தது. அவன் கள்ளச் சிரிப்புடன் காஃபியை அருந்தினான்.

“போட்டு விட்டாச்சு. தேங்க்ஸ் சொல்லுங்க”

“அதான் நீயே சொல்லிட்டியே, திரும்ப நான் வேற எதுக்குத் தனியா சொல்லணும்” என்று நகர்ந்து விட்டான்.

அவள் மேஜையில் சாய்ந்து அப்படியே நின்றிருந்தாள்.

“உனக்குப் பத்தர மணிக்குதானே இன்டர்வியூ?”

“லெவன் தேர்டிங்க”

“ம்ம், நீ அவ்ளோ தூரம் தனியா போக வேணாம். என் கூட வந்துரு, நான் ட்ராப் பண்றேன்”

“எது லெவன் தேர்டி இன்டர்வியூக்கு நைன் தேர்டிக்கே போய் வெயிட் பண்ண சொல்றீங்களா?” என்று அவள் கேட்டதும், முறைத்தான். அவன் நீட்டிய காஃபி கோப்பையை வாங்கி ஓரமாக வைத்தாள்.

“நான் வெயிட் பண்ணி கூட்டிட்டு போறேன்னு சொல்றேன்”

“உங்களுக்கு ஆபீஸ்க்கு லேட்டாகும்ல?”

“பார்த்துக்கலாம், பெர்மிஷன் சொல்லிடுறேன்” என்றான்.

“இல்லல்ல, வேணாம். நீங்க கிளம்புங்க. நான் பொறுமையா ரெடியாகி போயிக்கறேன்”

“ஒரு தடவ சொன்னா உனக்குப் புரியாதா?”

“புரியாதுங்க. என்ன செய்ய? நான் என்ன டீச்சர் புள்ளையா?” என்று கிண்டலாகக் கேட்டவளை தீவிரமாகப் பார்த்து நின்றான்.

“நீங்க கூட்டிட்டுப் போறது இருக்கட்டும். முதல்ல அத்தைக்கிட்ட சொல்லணும்ல?”

“நான்தான் சொல்ல வேணாம்னு உன்கிட்ட சொன்னேனா இல்லையா?”

“அதெப்படிங்க சொல்லாம இருக்கறது? ஃபர்ஸ்ட் இன்னைக்கு வீட்ல இருக்காம எங்க போனேன்னு கேட்டா என்ன சொல்ல? பொய் சொன்னா சரியா கண்டுபிடிச்சுடுவாங்க, தெரியும்ல?”

“உன்னை யாரு பொய் சொல்ல சொன்னா? ஜஸ்ட் வெளில போனேன்னு சொல்லு, போதும்”

“எங்க போனன்னு கேட்பாங்க”

“அம்மா கேட்கிறாங்களோ இல்லையோ, நீயே கற்பனை பண்ணி..”

“சீரியஸா பேசுங்க, இன்டர்வியூ போகவே இப்படி அல்லல்ப்பட வேண்டியதா இருக்கு. ஒருவேளை இன்டர்வியூல எனக்கு வேலை கிடைச்சுட்டா என்ன செய்யறது?”

“வேலை கிடைச்சா வேலைக்குப் போ பிரியா, சிம்பிள். அம்மா அதெல்லாம் உன்னைத் தடுக்க மாட்டாங்க. தடுக்கவும் முடியாது” என்றான் தீர்மானமாக.

“தடுக்க முடியாதா? ம்க்கும், அவங்க ஆல்ரெடி வேலைக்குப் போகக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. அதை மீறி எனக்கு இன்டர்வியூக்கு போகவே பதறுது”

“அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன்னு சொல்லிட்டேன் பிரியா. திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டு இருக்காம நீ போய் ரெடியாகு” என்று அழுத்தமாகச் சொன்னவன், அப்படியே மெத்தையில் சரிந்தான்.

அந்நேரம், “பிரியதர்ஷினி” என்ற அழைப்பு வர, “வந்துட்டேன் மிஸ்” என்று எழுந்து ஓடினாள் அவள்.

அவனும் சலித்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான்.

“உனக்கு ஆஃபீஸ் டைம் ஆகலையா ரஞ்சன்? வா, வந்து உக்கார்ந்து சாப்பிடு” என்று மரகதவல்லி மகனை உணவருந்த அழைக்க, “நான் இன்னைக்குப் பத்து மணிக்கு மேல ஆஃபீஸ் போனா போதும்மா” என்றான் அவன்.

“சரி, ஆஃபீஸ் லேட்டா போகணும்னா பிரேக்பாஸ்ட் லேட்டா சாப்பிடணுமா என்ன?” என்றார் கண்டிப்புடன். பிரியதர்ஷினி வேகமாகத் தட்டுகள் எடுத்து வைத்து, அவர்கள் இருவருக்கும் ரவா கிச்சடியை பரிமாறினாள். தட்டைப் பார்த்து பிரபஞ்சன் முகம் சுருங்குவதைப் பார்க்க அவளுக்கே பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்ய? காலை, மதிய உணவுக்கு இதுதான் செய்ய வேண்டுமென்று முந்தைய இரவே மரகவதல்லி சொல்லி விட்டாரே. அன்று மட்டுமல்ல, என்றுமே அதுதான் வழக்கம்.

“பிளீஸ், சாப்பிடுங்க” என்று கண்ணால் கெஞ்சி அவனுக்குத் தேங்காய் சட்னியை பரிமாறினாள். அவன் அமைதியாக உண்ண, “எதுக்குத் தேங்கா சட்னி செஞ்ச? கிச்சடிக்கு சீனி போதுமே?” என்றவர், தன் தட்டில் சக்கரை போட்டு மகனுக்கும் வைக்கப் போனார்.

கையை நீட்டி வேண்டாம் எனத் தடுத்து விட்டான் அவன்.

பிரியதர்ஷினி முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை. அமைதியாக அவனுக்குத் தண்ணீரை நிரப்பினாள்.

“நீயும் உக்காந்து சாப்பிடு” பிரபஞ்சன் அழைக்க, “நீங்க சாப்பிடுங்க” என்று விட்டாள். பின்னே மிஸ்ஸுக்கு பிடிக்காதே.

“ரஞ்சன் சாப்பிடும் போது பக்கத்திலேயே நின்னு பரிமாறு. நாம இல்லன்னா ஒழுங்கா சாப்பிட மாட்டான்” என்று சொல்லி, எப்போதோ கட்டளை பிறப்பித்து இருந்தார். பல வருடங்களாக அவர் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஆனால் ஒருநாளும் அவர் மகனை கொஞ்சி, கவனித்து, சிரித்து, அவ்வளவு ஏன் ஒழுங்காகப் பேசி கூடப் பார்த்ததில்லை. அவருக்கு அதற்கு நேரம் வாய்க்கவில்லை போலும்.

அதனால்தான் தற்போது அவளுக்குத் தடை போடுகிறார்.

“நான் இத்தனை வருஷமா வேலை வேலைன்னு ஓடி என்னால அவனை நல்லா கவனிக்க முடியாமயே போய்டுச்சு. நான் பண்ணதையே நீயும் பண்ணாத. அவனோட இருந்து அவனைப் பார்த்துக்கோ, பதிலுக்கு அவன் உன்னை நல்லா பார்த்துப்பான்” என்று அவள் வேலைக்குப் போவதற்குப் பெரிய முட்டுக்கட்டை போட்டிருந்தார். ஆனாலும் அவர் சொன்ன அந்தக் காரணம்தான் அவளுக்கு மிகவும் முரண்டியது.

அவர் இன்னும் பள்ளி ஆசிரியர்தான். இப்போதும் நாள் தவறாமல் வேலைக்குச் செல்கிறார். மாலை நேரத்தில் சில மாணவர்களுக்கு டியூஷனும் எடுக்கிறார். ஆனால், அவள் மட்டும் வேலைக்குச் செல்ல கூடாதாம். அவர் மகனை கவனித்துக் கொள்ள வேண்டுமாம். இதென்னடா நியாயம்? என்று கொந்தளிக்கத் தோன்றியது அவளுக்கு. ஆனால், ஆசிரியராக அவர் பேச்சுக்கு, “ஆமாம் சாமி” போட்டு பழகியவளுக்கு, அவரிடம் எதிர்த்து பேசுவது அத்தனை எளிதாக இல்லை.

அதற்காக அப்படியே மண்டையாட்டியும் விடவில்லை அவள். தன் விருப்பத்தை விவரமாக வெளிப்படுத்தி விட்டாள்.

“நான் சொன்னா சரின்னு கேட்டுக்கணும் பிரியதர்ஷினி. உன் நல்லதுக்குதான் நான் சொல்லுவேன். புரிஞ்சுதா?” என்று கையில் குச்சி இல்லாமலே மிரட்டுவது போலக் கேட்டார்.

ஆக, மறுநாள் கணவனைத் துணைக்கு அழைத்து வந்தாள் பிரியதர்ஷினி.

“டெய்லி எப்படி அவ்ளோ தூரம் போயிட்டு வருவா? அலைச்சல்ல அசந்து போய்ட மாட்டாளா? அதுக்குதான் வேணாம்னு சொன்னேன். அவளுக்குதான் புரியலன்னா, உனக்குமா புரியல? கொஞ்ச நாள் போன பிறகு இங்க பக்கத்துல ஏதாவது பாக்கட்டும்.” என்று பெரிய மனதாக அனுமதி தந்தார். ஆனால், பக்கத்தில் அவளுக்கு எதுவும் அமையாது என்று அவருக்கும் நன்றாகத் தெரியும். அவளுக்கு ஏனோ அயர்ச்சியாக இருந்தது.

“நான் போயிட்டு வர்றேன்.” என்று மகனிடம் சொன்னவர், “நீ ரெஸ்ட் எடும்மா” என்று மருமகளிடம் சொல்லிச் சென்றார். அவருக்குச் சற்று நேரத்தில் பள்ளி பேருந்து வந்து விடும்.

பிரியதர்ஷினி பொத்தென்று இருக்கையில் அமர, “சில்ல்ல்” என்றான் அவன். அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

“சாப்பிடு” என்று தட்டை எடுத்து வைத்து அவளுக்கு உணவை பரிமாறினான். மௌனமாக உண்டு எழுந்தாள்.

“பகல்ல அத்தை பேசணும்னு எனக்குக் கால் பண்ணா, நான் வீட்ல இல்லைன்னு கண்டுபிடிச்சுட மாட்டாங்களா?” அவள் சந்தேகமாகக் கேட்க, “ரொம்ப யோசிக்காம சாப்பிடு” என்று அதட்டினான்.

Scroll to Top