பார்த்திபன் காதலி – 9 (2)

பார்த்திபனுக்கு வீட்டில் அடைந்திருப்பது பிடிக்காமல்தான் நண்பனோடு வெளியில் வந்தான். ஆனால் இப்படிப் பார்கவியைப் பார்க்க அழைத்து வருவான் நண்பன் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

காரில் ஏறியதும் இருவரும் பேச்சில் மூழ்கி விட, எங்குச் செல்கிறோம் என்று நண்பனிடம் கேட்டிருக்கவில்லை அவன்.

“என்னடா பிரபா, இங்க வர்றோம்னு சொல்லவே இல்ல நீ?” என்று நண்பனை கடிந்தான்.

“ஏன்டா, நான்தான் காலையிலேயே ஈவ்னிங் ஷாப்பிங் போறோம்னு சொன்னேன் இல்லடா. நீதான் ரொம்ப ஆர்வமா பார்கவி பத்தி விசாரிச்சியா, அதான் நீயும் அவங்களை மீட் பண்ணுவேன்னு கூட்டிட்டு வந்தேன்” என்றான் பிரபஞ்சன்.

‘போடாங்க’ என்று அவனை மனத்தில் தாளித்தான் பார்த்திபன்.

ஒருவகையில் பார்கவியை நேரில் பார்த்தது கூட நல்லது என்றே அவனுக்குத் தோன்றியது.

தோழிகள் இருவரும் உள்ளே செல்லவும், அவர்களுடன் இணைந்தார்கள்.

மகளைக் கண்டதும், “மாப்ள கிளம்பிட்டாராம்மா?” என்று ரங்கராஜன் கேட்க, “இப்போதான் போனாங்கப்பா” என்று பதில் சொல்லி, அம்மாவின் பக்கத்தில் போய் அமர்ந்தாள் பார்கவி.

“எனக்கு மட்டும் புடைவை எடுக்கறம்மா, உங்களுக்கு, பெரியம்மாக்கு, ப்ரியாக்குலாம் எடுக்கல?” என்று அம்மாவின் கையில் இருந்த புடைவையைப் பிரித்துப் பார்த்தபடி கேட்டாள்.

“எங்களுக்குப் பொறுமையா இன்னொரு நாள் வந்து எடுத்துப்போம். இது உனக்குக் குடுத்து விட எடுக்கறோம்” என்றார் காவேரி.

“ஓகே, நீங்க எனக்குச் செலக்ட் பண்ணுங்க. நான் உங்க எல்லாருக்கும் செலக்ட் பண்றேன்” என்று அவள் சொல்லவும், மகளை வாஞ்சையாய் பார்த்தார் காவேரி.

“சாயந்தரம் நீங்க வரும் போது உன் முகமே சரியில்லையா, அம்மாக்கு ஒரே கவலையா போச்சு.” என்றார்.

“ஐயோ அம்மா, நாங்க படத்துக்குப் போனோம்மா. அந்தச் சவுண்ட் சேராம எனக்குத் தலைவலி வந்திருச்சு. இப்போ நான் ஓகே” என்றாள்.

“ம்ம்ம், சரி சரி. இந்தப் பச்சை சேலை உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லு?” என்று அவர் கேட்க, “இது உங்களுக்கு நல்லா இருக்கும்மா. அந்த எல்லோ பிரியாக்கு எடுங்க. லாவெண்டர் அக்காக்கு..” என்று அவள் அடுக்கிக் கொண்டே போக, அவள் சொன்ன அனைத்தையும் எடுத்து வைத்தார் காவேரி.

அப்போது, “பாரு” என்று அவளை இடித்துக் கொண்டு வந்து அமர்ந்தாள் பிரியதர்ஷினி.

“என்ன ப்ரியூ?”

“பிரபாக்கு ஷர்ட் எடுக்க மென்ஸ் செக்க்ஷன் போகணும். நீயும் வர்றியா?”

“உன் பிரபா, உன்னோட வரல?”

“அவருக்குத் தெரியாம வாங்கதானே உன்னைக் கூப்பிடுறேன்” என்று பல்லைக் கடித்தாள்.

“ஓஹோ, அப்போ வா போகலாம். நானும் அப்பாக்கு ஷர்ட் எடுக்கணும்னு நினைச்சேன்” என்றாள். அம்மாவிடம் சொல்லி விட்டு தோழியுடன் ஆண்கள் ஆடைகள் இருந்த பகுதிக்குச் சென்றார்கள்.

கணவனுக்குத் தெரியாமல் அவனுக்கு வாங்கிக் கொடுக்கும் ஆசையில் பிரியதர்ஷினி செல்ல, அவனோ அவளைப் பின் தொடர்ந்து வந்தான்.

“ப்ச், பிரபா” என்று அவள் முறைக்க, “நீ குடுக்கும் போது நான் சர்ப்ரைஸ் ஆகிக்கறேன். இப்போ போய் ஷர்ட் பார்க்கலாம், வா” என்று அவளின் கையோடு கை கோர்த்து நடந்தான். செல்ல முறைப்பும், சிணுங்கலுமாக அவனை இடித்துக் கொண்டு நடந்தாள் பிரியதர்ஷினி.

அவர்களுக்குள் இருந்த அந்த அந்நியோன்யம் கண்டு தாமாகப் பிரிந்து புன்னகைத்தன அவள் இதழ்கள்.

“வாடா நல்லவனே” என்று நண்பனை அழைத்தான் பிரபஞ்சன்.

“உனக்குச் சட்டை வாங்க நான் எதுக்குடா? நீ போய் எடு. நான் இப்படி ஓரமா நின்னு ரெஸ்ட் எடுக்கறேன்” என்று அங்கேயே ஓரமாக நின்று விட்டான் பார்த்திபன்.

“நான் அப்பாக்கு ஷர்ட் பார்க்கறேன் ப்ரியா” என்று வேறு பக்கம் நகரப் போன பார்கவி, பார்த்திபனின் பார்வையில் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் அப்படியே நின்று விட்டாள்.

“நீங்க பாருக்கு ஹெல்ப் பண்ணுங்க அண்ணா” என்று அவனுக்குக் கட்டளை இட்டு விட்டு விலகிச் சென்றாள் பிரியதர்ஷினி.

அவர்களின் தலை மறைந்ததும், பார்கவியின் புறமாகத் திரும்பி நின்றான் பார்த்திபன்.

“பார்கவி”

“சொல்லுங்க”

“ஆர் யூ ஓகே?” என்று அக்கறையுடன் கேட்டான். அவனை நிமிர்ந்து நோக்கி,

“ஐ அம் சாரி” என்றாள் உளமார.

“எதுக்குச் சாரி சொல்ற பாரு?”

என்று கண்களைச் சுருக்கியவன், “இட்ஸ் ஓகே” என்றான் மெலிதாக முறுவலித்து.

“நோ.‌ இட்ஸ் நாட் ஓகே. அண்ட் ஐ அம் ரியலி சாரி” கெஞ்சல் குரலில் மனதார மன்னிப்பு கேட்டாள்.

“உங்களைப் பிடிக்கும்னு சொன்னதுக்காக நான் மன்னிப்பு கேட்கல. அன்னைக்கு.. தப்பான டைமிங்ல சொன்னதுக்குச் சாரி சொல்றேன். உங்களுக்கு எங்கேஜ்மெண்ட்ன்னு தெரிஞ்சு நான் சொன்னது உங்களை ஹர்ட் பண்ணியிருக்கும்”

“ச்சே ச்சே ஹர்ட்டா.. அப்படியெல்லாம் இல்ல பார்கவி” என்று வேகமாக மறுத்தான்.

“ஹர்ட் இல்லன்னா கில்ட்டியா ஃபீல் பண்ணுவீங்க இல்ல?” இம்முறை அவனால் மறுக்க முடியவில்லை.

“அதுக்குத்தான் சாரி சொன்னேன். ரியலி சாரி” என்று அவன் பெயரை தவிர்த்து மன்னிப்பை வேண்டினாள்.

அவளைப் பொறுத்தவரை அவள் செய்தது, சரி தவறுக்கு அப்பாற்பட்டதொரு செய்கை. அது அந்த நொடியில் நிகழ்ந்த நேசத்தின் வெளிப்பாடு. அவ்வளவுதான்.

“நீங்க கேட்டப்போ உங்ககிட்ட சொல்லணும்னு தோனுச்சு, யோசிக்காம சொல்லிட்டேன். உங்களை ஹர்ட் பண்றதோ.. உங்க கல்யாணத்துல பிரச்சனை பண்றதோ.. இல்ல வேற எந்த மோட்டிவோ எனக்குச் சத்தியமா கிடையாது. அதை நீங்க புரிஞ்சுக்கணும்..”

“பார்கவி பிளீஸ்.”

“சாரி” என்றாள் மீண்டும் மீண்டும். அவள் காதலை சொன்ன தருணத்திற்காக‌, அந்தத் தவறான தருணத்திற்காக‌ மட்டுமே மன்னிப்பு கேட்டாள்.

அன்றைக்குத் தான் நேசித்தவனை இழக்க போகிறோம் என்ற தவிப்பில், தன் அன்பை ஒருநாளும் அவனோடு பகிர முடியாது என்ற ஆதங்கத்தில், வருத்தத்தில் நொடி நேர உந்துதலில் நேசத்தை வெளிப்படுத்தி இருந்தாள்.

காதலின் உச்சபட்ச வெற்றி அதனை உரியவரிடம் சேர்ப்பதுதானே!

அவனிடம் வேறெந்த எதிர்பார்ப்பும் அவளுக்கு இல்லையே.

அவனை மறந்து கடந்து வரத்தானே அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்கிறாள். அதில் விரைவில் வெற்றியும் பெற்று விடுவாள்.

“பாரு, பிளீஸ். நான் உன்னைத் தப்பா நினைக்கல. என்னைக்கும் நினைக்கவும் மாட்டேன். நான் பல வருஷமா பிரபஞ்சனை, அவனோட காதலை பக்கத்துல இருந்து பார்த்தவன். உனக்கு எப்படிச் சொல்ல.. உன்னோட இந்தக் கல்யாணம்.. உன்னோட அவசர முடிவு என்னாலதானோன்னு..”

“பிளீஸ் அந்தக் கில்ட் உங்களுக்கு வேணாம். எனக்கு உங்களைப் பிடிச்சதுக்கு நீங்க பொறுப்பாக முடியாது. நான் நல்லா இருக்கேன். நீங்களும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கறேன்” என்றாள் தழுதழுத்த குரலில்.

பிரியமானவர்களின் நலனுக்காகப் பிரார்த்திப்பதை விடப் பெரிதாக வேறென்ன செய்து விடப் போகிறது பிரியம்.

“பாரு”

“சில விஷயங்களை ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம அப்படியே விட்டுடுறது நல்லது.” என்று அவன் கண் பார்த்து சொன்னவள், “பிளீஸ், டோண்ட் ஃபீல் கில்ட்டி பார் மீ” என்று அழுத்தமாகச் சொல்லியிருந்தாள்.

அவன் காரில் இருந்து இறங்கும் போது அவள் கண்கள் கலங்கி இருந்தனவே. அதைக் குறித்துக் கேட்க முடியாமல் தடுமாறினான். அவள் சொன்னது போலச் சிலவற்றை ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே விடுவது சிறந்தது என்று உணர்ந்து மௌனமானான்.

“உங்க மண்டபம் புக் பண்ணது..”

“நீங்க அந்த ரூட்ல போனீங்கன்னா நாம மாறி மாறி சாரி சொல்லிட்டேதான் இருக்கணும். சோ பிளீஸ், அந்தப் பேச்சை விடுங்க” என்றாள் திட்டவட்டமாக.

“சில விஷயங்கள் இப்படித்தான் நடக்கணும்னு இருக்கும், அதே போல நடந்திருக்கும். அந்தச் சூழ்நிலையை மட்டும்தான் நாம ப்ளேம் பண்ண முடியும். சம்திங்ஸ் ஆர் நாட் மென்ட் டு பி அண்ட்..” என்று இழுத்து, அதைச் சொல்லி முடிக்க முடியாமல் தொண்டை அடைக்க நிறுத்தினாள்.

நமக்குப் பிடித்தவை எல்லாமே நம் கை சேர்வதில்லையே. அவை நமக்கானது அல்ல. நாம் நேசிக்கும் மனிதர்களும் நமக்கானவர்களாக மாறுவதில்லை.

நம் பிடித்தங்களைப் பிடித்து வைத்துக் கொள்ளப் பிரியப்படுவோம்தான் என்றாலும் அது எல்லோர்க்கும் விதிப்பதில்லையே. நம் விருப்பங்கள் விதியில் இல்லாது போகும் போது நடப்பவைகளை ஏற்றுக் கொள்வதுதானே மனித மனம்.

அப்படியாக நடப்பவைகளை ஏற்கும் அவளின் இன்றைய மனநிலை அவள் பேச்சில் தெளிவாய் தெரிய, அவள் பேசாமல் விட்ட வார்த்தைகளை எல்லாம் இவன் வார்த்தைகள் கொண்டு நிரப்பினான். அதில் ஓர் ஆசுவாசம் அவன் மூச்சை நிறைக்க, அதையொரு பெருமூச்சால் சரி செய்தான்.

அந்தப் புரிதலுடனேயே பிரிந்தார்கள். இம்முறை கூடுதலாகப் புன்னகையுடன்.

மறுநாள் மாலை அவன் அலுவலகத்தில் மும்முரமாக வேலையில் மூழ்கியிருக்க, அவனைத் தேடி அலுவலகம் வந்திருந்தாள் பிரபாவதி.

மறுநிமிடம் அவனுக்கு வேலை அதன் முக்கியத்துவத்தை இழந்திருந்தது. கணினி திரையை வெறித்திருந்த கண்களின் சோர்வு நீங்கிட, காதல் குடியேறியது.

error: Content is protected !!
Scroll to Top