பார்த்திபன் காதலி – 9 (1)

பார்த்திபன் பரிதவிப்புடன் அவளைப் பார்த்திருக்க, முகத்தை லேசாகத் திருப்பிய பார்கவி, கசிந்த கண்களைத் தோளில் துடைத்திருந்தாள். அவள் இதழ்கள் அந்தச் சூழலுக்குப் பொருத்தமாகப் புன்னகையைப் பூசிக் கொண்டன.

தனக்குப் பின்னால் நின்றிருந்த பாரிவேந்தனை தன் தோள் வழியே பார்த்தாள். அவன் உடனே முன்னே வர, “இவங்க பிரபஞ்சன் அண்ணா, பிரியதர்ஷனியோட ஹஸ்பண்ட்” என்று பிரபஞ்சனை பாரிவேந்தனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

பாரிவேந்தன் தன்னைத்தானே அவர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ள, அவனிடம் பார்த்திபனை, தன் நண்பன் என அறிமுகப்படுத்தினான் பிரபஞ்சன்.

சில நிமிட சம்பிரதாயப் பேச்சுக்கு பிறகு, “அப்போ பார்க்கலாம், பை” என்று பாரிவேந்தன் விடை பெற, அவனைப் பின் தொடர்ந்தாள் பார்கவி.

அவர்களை விட்டு விலகி போகும் இருவரையும் இமைக்காமல் பார்த்து நின்றிருந்தான் பார்த்திபன்.

பார்கவியின் கண்கள் கலங்கியிருந்ததை அவன் கண்டானே. ஆனால் நொடி நேரத்தில் அவன் கண்கள் கண்டது பொய்த்து போகும் அளவுக்குப் புன்னகை பூசிக் கொண்டு நின்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

அவனை இயல்பாக எதிர்கொண்டு அவள் பேசியது அவனுக்கு நிரம்ப ஆச்சரியத்தை அளித்தது.

அன்று அவன் பார்த்த போது அவள் கண்களில் தெரிந்த நெருக்கம் இன்று இல்லை. அவனைத் தூர நிறுத்தியது அவள் பார்வை.

அதே கண்கள் இன்று அவள் பக்கத்தில் நின்றிருந்த பாரிவேந்தனை பார்த்த பார்வையில் நிச்சயம் வித்தியாசம் இருந்தது. அதிலொரு சிறிய இளக்கம் இருந்தது. இல்லை, அவனுக்குத்தான் அப்படியெல்லாம் தோன்றுகிறதா என்று அவனுக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, அவள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று மனதார நினைத்துக் கொண்டான்.

பார்த்திபனின் பார்வை அவளைத் தொடர்வதைத் திரும்பிப் பார்க்காமலேயே பார்கவியால் உணர முடிந்தது. அது பெண்களுக்கே உரிய உள்ளுணர்வு.

அவளுக்குப் பல வருட பழக்கம். பிரியதர்ஷினியின் தோழி என்பதால் பார்த்திபனின் பார்வை அவர்களைப் பல காலம் பின் தொடர்ந்திருக்கிறது‌. நண்பன் பிரபஞ்சனுக்காக அவர்களைப் பார்த்துப் பாட்டெல்லாம் பாடியிருக்கிறான் அவன்.

“பார்கவி” பாரிவேந்தன் அழைக்க, சடாரென்று நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

அவனது காரை நெருங்கிருந்தார்கள். அதன் மேல் சாய்ந்து கைக் கட்டி நின்று அவளைப் பார்த்தான் அவன்.

அவள் தனக்கென முழுதாக ஒரு நிமிட அவகாசத்தை எடுத்துக் கொண்டாள்.

நம் வாழ்வில் சில முடிவுகளை மாற்ற முடியாது எனும் போது அதற்காக நாம் நம்மை மாற்றிக் கொள்ளத்தானே வேண்டும்.

இப்பொழுது அவள் அந்நிலையில்தான் இருந்தாள். அவள் மாறித்தான் ஆக வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது.

மருந்து கசக்கத்தான் செய்யும் என்றாலும் அதை அருந்தினால் வியாதி குணமாகி விடும்தானே?! இங்கே அவளுக்கு மருந்து மறதி! மறக்கத்தான் வேண்டும். மறந்தும் விடுவாள்.

அன்பும் மருந்தாகும்தானே? அந்த நம்பிக்கை அவளுள் வேரூன்ற, நிமிர்ந்து நின்றாள்.

“சொல்லுங்க”

“யாரு அவன்னு கேட்டேன்?”

“எவன்?” யாரைப் பற்றிக் கேட்கிறான் என்பது தெரிந்தே உறுதிப்படுத்திக் கொள்ளக் கேள்வி கேட்டாள்.

“உன்னோட எக்ஸ் யாருன்னு கேட்டேன்?” அவன் குரலில் தெரிந்த மாற்றம் அவளைக் கலவரப்படுத்தவில்லை.

மாறாக மெலிதான முறுவலை வரவழைத்தது.‌ “எனக்கு எக்ஸ், வொய்லாம் இல்லையே.” என்று தோள் குலுக்கினாள்.

“அப்போ உனக்கு ஏன் என்னைப் பிடிக்கல?”

“உங்களைப் பிடிக்கறதுக்கும், என் எக்ஸ்க்கும் என்ன சம்மந்தம்?” என்று பதில் கேள்வி கேட்டாள். அவன் எரிச்சல் அடைவது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

சிலவற்றை ஆரம்பத்திலேயே தெளிவுப்படுத்திக் கொண்டால் அவர்களின் உறவு வலுப்படும்தானே!

“அப்போ உனக்கு எக்ஸ் இருக்குன்னு.. இருக்கான்னு ஒத்துக்கற?” நிச்சயமாக அவன் குரலில் கோபமிருந்தது. அவனை நெருங்கி நின்றவள், “இதே கேள்வியை உங்ககிட்ட நானும் கேட்கலாமா?” என்று தலையைச் சாய்த்து கேட்டாள்.

“எந்தக் கேள்விக்கும் நேரா பதில் சொல்ல மாட்டியா நீ?” என்று எரிந்து விழுந்தான்.

“சரி, நானே சொல்லித் தொலைக்கறேன். எஸ், எனக்கும் எக்ஸ் இருக்கா. எங்களுக்குப் பிரேக் அப்பாகி ஒரு வருஷத்துக்கும் மேல ஆகிடுச்சு” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

“சாரி” என்றவள், “அப்பறம் எனக்கு எப்படி ஓகே சொன்னீங்க?” என்று புன்னகையுடன் புருவங்களை உயர்த்தினாள். ஒரு நொடி அயர்ந்து அவளைப் பார்த்தவன், “அதான் சொன்னேனே, நாங்க பிரிஞ்சு பல மாசம் ஆச்சுன்னு..” என்று முணுமுணுத்தான்.

“இப்போ நான் ஊருக்கு வர்றேன்னு சொன்னதும் வீட்ல கல்யாண பேச்சை எடுத்தாங்க. அவங்க காட்டின போட்டோஸ்ல உன்னைப் பார்த்ததும் பிடிச்சது. அதான் ஓகே சொன்னேன்” என்று இப்போது அவள் கண் பார்த்துச் சொன்னான்.

“எனக்கு எங்க வீட்ல பார்த்த முதல் பையனே நீங்கதான்” என்று அவள் சொன்னதும் அவன் கண்கள் இடுங்க, இதழ்கள் குறுநகை புரிந்தன.

“அப்போ அந்த எக்ஸ்?” கை கூடாமல் போன காதல் கதைகள் பாதிக்கப்பட்டவருக்கு வலியும், கேட்பவருக்குச் சுவாரசியமும்தான் என்றாலும், தன் இணை என்று வந்து விட்டால் சந்தேகம் தானாகவே வந்து விடும் போலும்.

“அதான் சொன்னேனே எக்ஸ்னுலாம் யாரும் இல்ல” என்றாள்.

சன்ன பெருமூச்சுடன், “எனக்கு ஒருத்தரை ரொம்பப் பிடிச்சது. ஆனா, நான் அவங்ககிட்ட அதைச் சொல்றதுக்கு முன்னாடி… அவங்களுக்குக் கல்யாணம் பிக்ஸாகிடுச்சு” என்று உண்மையைச் சொன்னாள். சில சமயங்களில் அலங்காரமான பொய்யை காட்டிலும் அப்பட்டமான மெய் மேலானதுதானே?!

அவள் விழிகள் அவனில் அழுத்தமாகப் பதிய, மெலிதாகப் புன்னகைத்தாள்.

“அச்சச்சோ” என்று போலியாக வருத்தப்பட்டான்.

“நீங்க என் கைய பிடிக்கற வேகத்துக்கு, எனக்கு உங்களைப் பிடிக்கும்னு சொல்ல முடியாது இல்ல?” என்று கேட்டாள். வலக்கரத்தால் காரை ஓங்கி தட்டி சத்தமாகச் சிரித்திருந்தான் அவன்.

“எனக்கு இது அரேஞ்ச்டு மேரேஜ்‌. உங்களைப் பிடிக்கிறதுக்கான டைம் அண்ட் ஸ்பேஸ் நீங்கதான் எனக்குக் கொடுக்கணும்” என்றாள்.

அவனுக்குப் புரிந்தது.

“அப்போ பழகி பார்ப்போம்னு

சொல்ற? ம்ம்ம்?” என்று இழுத்தான்.

“ம்ம், பிடிச்சு பழகுவோம்னு சொல்றேன். தெர் இஸ் அ டிபரன்ஸ்” என்றாள் கிண்டலாகச் சிரித்து.

“வார்த்தையில விளையாடாத கவி” என்று வாய் விட்டுச் சிரித்திருந்தான் அவன்.

“ஓகே ரைட், நான் கொஞ்சம் வேகமா போறேன்னு எனக்கே தெரியுதுதான்”

“கொஞ்சம்தானா?”

“ஓகே ஓகே, ஈஸி கவி. இனிமே உன்னைத் தொடாம பேசறேன்? சரியா?” என்று கேட்டு மெல்ல கரம் நீட்டி அவள் கைப் பிடித்தான்.

அவளின் உள்ளுணர்வு எச்சரிக்க, அவனிடமிருந்து கையை உருவாமல் அப்படியே நின்றாள்.

“ம்ம், பெட்டர் இம்ப்ரூவ்மெண்ட்” என்று சிரித்தவன், “ஆமா, அந்த உனக்குப் பிடிச்ச அவன் என்ன பண்றான்?” என்று அவள் புறமாகச் சரிந்து கேட்டான்.

“ஆமா, உங்க எக்ஸ் என்ன பண்றாங்க?” உதடு வளைத்துப் பதில் கேள்வி கேட்டாள்.

அவளை முறைத்து பல்லைக் கடித்து, “அவ வேற ஒருத்தன் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கா. அவளைப் பத்தி பேச நான் விரும்பல” என்று கோபமாகச் சொன்னான்.

“உங்களை மாதிரிதான் நானும், அவரை மறக்க நினைக்கறேன். நீங்களே அவரைப் பத்தி கேட்டு எனக்கு அவரை ஞாபகப்படுத்தி விடாதீங்க” என்றாள் தீர்க்கமாக.

அவளின் பேச்சை அவன் ரசிக்கவில்லை என்பது அவனது இறுகிய உடல் மொழியில் தெரிந்தது.

அவன் பற்றியிருந்த அவள் கரத்தில் அழுத்தம் கூட்டினான்.

அவளுக்கு வலித்திட, “என் கை..” என்று அவள் முகம் சுளிக்கவும், “சாரி” என்று பிடியை தளர்த்தினான்.

“உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க இன்விடேஷன் ரெடி பண்ணணும்னு சொன்னீங்களே. அது எப்போ செய்யப் போறீங்க?” மதிய உணவு நேரத்தில் அவன் பேசியதை நினைவுப்படுத்திக் கேட்டாள்.

“நாளைக்குச் செய்யணும். நான் டிசைன் பண்ணிட்டு உனக்கு அனுப்பறேன். உனக்குப் பிடிச்சிருந்தா நாம ரெண்டு பேருமே அதையே யூஸ் செஞ்சுக்கலாம்” என்றான்.

“எனக்குப் பிடிச்சிருந்தாதானே?” என்று புன்னகையுடன் கேட்டவள், “இதையே எல்லாத்துக்கும் நீங்க மெயின்டெய்ன் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும்” என்றாள் அவன் கண்களை ஊடுருவி. பக்கென்று சத்தமாகச் சிரித்திருந்தான்.

சிரிப்பினூடே, “டன், டன்” என்றான்.

அவனிடம் மனம் விட்டுப் பேசியதில் அவளின் மன இறுக்கம் தளர்ந்திருந்தது.

அவர்களின் எதிர்காலம் முன்னை போல அவளை மிரட்டவில்லை.

வசந்த கால மரங்களின் தளிர்களைப் போல அவளுள் நம்பிக்கையைத் துளிர்க்க செய்தது.

“உன் ஃப்ரெண்ட் உனக்காக வெயிட்டிங்” என்று தலையை மட்டும் லேசாக அசைத்து பிரியதர்ஷினியை கண் காட்டினான்.

அவர்கள் மட்டுமல்ல, அவளின் பெற்றோரும், அவளைத் தேடுவார்கள் என்றாள்.

“நாம ரொம்பச் சீக்கிரமாவே திரும்ப மீட் பண்றோம் ஓகே? உனக்கு என்னைப் பிடிக்க வச்சு அப்புறமா பழகறோம். ம்ம்” என்று அவளைப் போலவே சொன்னான். பதிலாகப் புன்னகைத்தாள். அவள் புறமாக அவன் சாய, அவளையும் அறியாமல் பின்னகர்ந்து விட்டாள்.

“பை” என்று கிசுகிசுத்து, கலையாத சிரிப்புடன் காரில் ஏறியிருந்தான் பாரிவேந்தன். அவளே எதிர்பார்க்காத விதமாக அவள் மனம் லகுவாக உணர, அவள் உதடுகள் பிரிந்து முறுவலித்தன.

பாரிவேந்தன் கிளம்பவும் பிரியதர்ஷினி அவளை நெருங்கினாள். அவளோடு கடைக்குள் நுழைந்தாள் பார்கவி.

error: Content is protected !!
Scroll to Top