அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருந்தாலும் இருள் அவர்களின் இருப்பை இல்லாமல் ஆக்கியிருந்தது.
பாரிவேந்தன் பார்கவியின் முகத்தை நெருங்கியிருக்க, செயற்கை குளிரூட்டப்பட்ட அந்த அரங்கத்திலும் அவளுக்கு வியர்த்தது.
இருவருக்கும் இடையே நூலிழை இடைவெளியே இருந்தது. அவளின் விருப்பமின்மையை முகத்தில் வெளிப்படுத்தி, அவன் தோளில் கை வைத்து அவனைப் பின்னே தள்ளினாள்.
“ஹாஹா, ஈஸி கவி” என்று கிசுகிசுத்துச் சிரித்தான் அவன்.
அவளுக்கு இன்னமும் படபடப்பு குறைந்திருக்கவில்லை. மெதுவாக அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள். சட்டெனக் கண்களைத் திருப்பி அவளைக் கேள்வியாகப் பார்த்தான் அவன். மீண்டும் அவன் முகம் அவளை நெருங்க, “என்ன?” என்று கேட்பதற்குள் அவளுக்கு நா உலர்ந்து போனது.
அவன் உதடுகள் கேலி சிரிப்பில் வளைய, அவள் முகத்தில் அவனது மூச்சுக் காற்றுப் படும் அளவுக்கு நெருங்கியிருந்தான்.
“இது சினிமா தியேட்டர், நம்மளை சுத்தி நிறையப் பேர் இருக்காங்கன்னு மறந்துட்டேன்” என்று அவள் காதோரம் கிசுகிசுத்துச் சிரித்தான். அவளின் கைப் பிடித்து, “உன் மேல பாஞ்சுட மாட்டேன் பயப்படாத” என்றான்.
அவளுக்கோ எப்போது படம் முடியும் வீட்டுக்குச் செல்வோம் என்றிருந்தது. படம் முடிவை நெருங்க படத்தில் நாயகனும், நாயகியும் பாய்ந்து அணைத்து முத்தமிட, பாரிவேந்தன் பார்வை அவள் மேல் அழுத்தமாகப் படிந்தது.
அவளுக்குத் திக்கென்றது. அவள் விழிகள் அவனை மிரட்சியுடன் நோக்க, திரையையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.
அவன் பார்வையை உணர்ந்தாலும் திரையை விட்டு பார்வையை நகர்த்தவில்லை பார்கவி.
திரைப்படமே சோதனை என்றால் அடுத்து வந்தது மதிய உணவு வேளை.
“எனக்குப் பசிக்கல” என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தாள்.
“ஏன் பசிக்கல?”
“பாப்கார்ன் சாப்பிட்டதே வயிறு புல்லா இருக்க ஃபீல்” என்று சமாளித்தாள்.
“ஓகே. அப்போ கொஞ்ச நேரம் ஷாப்பிங் போயிட்டு அப்புறமா சாப்பிடுவோம்” என்று அவளைத் துணி கடைக்கு அழைத்துச் சென்றான்.
ஐயோ என்றானது அவளுக்கு.
அவன் தேர்ந்தெடுத்த எந்த உடையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் தேர்வு அவனுக்கு ரசிக்கவில்லை.
“உனக்கு இந்தக் கலர் சூட்டாகாது” என்று முகம் சுளித்தான். வேண்டாம் என்று ஒதுக்கினான். ஒரு மணி நேர முடிவில் ஒன்றுமே வாங்கிருக்கவில்லை அவர்கள்.
“விடு கவி. இன்னொரு நாள் திநகர் போய் ஷாப்பிங் பண்ணுவோம்” என்று அவன் ஆறுதலாகச் சொல்ல, அவளால் மனத்தில் மட்டுமே புலம்ப முடிந்தது.
அவளுக்காக நேரம் ஒதுக்கி வந்திருக்கிறான். நாளை அவளை மணக்க போகிறான். ஆனால் அவனைத் தான் நடத்தும் முறை சரியல்ல என்ற குற்ற உணர்வு அவள் மனத்தை அழுத்தி அவளைச் சோர்வுற செய்தது.
அவனிடம் சிரித்துப் பேசுவது கூட அவளுக்கு அத்துணைச் சிரமமாக இருக்கையில் அவர்களின் எதிர்காலத்தை நினைத்தாலே பயப் பந்தொன்று தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் உருண்டு, நடுவில் இருந்த இதயத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் துடிப்பை எகிற செய்தது.
மிக இயல்பாக அவளுக்கு நெருக்கமாக நடந்து, அவளின் கை கோர்த்துக் கொண்டான். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவன் கையை விலக்காமல் அவனோடு நடந்தாள்.
“உங்களுக்குப் பசிக்கலையா?” என்று அவள் கேட்டதும், “அப்பாடா நல்லவேளையா கேட்ட, எங்க அதைப் பத்தி கேட்காமயே விட்டு இன்னைக்கு நீ என்னைப் பட்டினியா சுத்த விட்ருவியோன்னு பயந்துட்டேன்” என்று அவன் சொல்லவும், “சாரி” என்றாள் மனதார.
“இங்க புட் அப்படியொன்னும் நல்லா இருக்காது. வெளில போய்ச் சாப்பிடலாமா?”
“சூயர்.” என்றான் புன்னகைத்து.
இருவரும் கீழிறங்கி கார் நிறுத்துமிடம் சென்றார்கள். அவள் காரில் ஏறியதும் அவள் பக்கமாகச் சரிந்தான். சட்டென்று பின்வாங்கி அவனை வெறித்துப் பார்த்தாள் அவள்.
அவன் கரம் நீண்டு அவளை அவனை நோக்கி இழுத்தது.
“வீ ஆர் எங்கேஜ்டு பார்கவி. நான் பக்கத்துல வந்தாலே பாம்பை பார்த்த மாதிரி ஏன் பின் வாங்கற?” குற்றம் சாட்டும் தொனியில் வினவினான்.
அவன் கண்கள் அவளில் அழுத்தமாகப் படிந்து, அவளைக் குற்றம் சாட்டின.
“சா..ரி” என்றாள், அவன் கண் பார்த்து.
“இட்ஸ் ஓகே.” என்று அவளை மேலும் நெருக்கமாக இழுத்தான். அவள் மனத்தினுள் பெரும் போராட்டம் நிகழ, அவளால் அவன் கண்களை எதிர்நோக்க முடியாமல் இறுக மூடினாள்.
அவள் கண் மூடவும் சன்ன சிரிப்புடன் அவளை நெருங்கினான். அவளின் இரண்டு கைகளும் இறுக மூடின. நகங்கள் உள்ளங்கையைப் பதம் பார்க்கும் அளவுக்கு இறுக்கமாக மூடியிருந்தாள்.
அவன் மூச்சு காற்று அவள் முகத்தில் மோத, அழுத்தமாக அவள் கன்னத்தில் முத்தமிட்டிருந்தான். அதற்கு மேல் அவன் முன்னேறும் முன் பட்டென்று விலகி விட்டாள் அவள்.
அவன் முகத்தில் குறும்பு புன்னகை. அதற்கு மேல் அவளைச் சோதிக்காமல் விட்டுவிட்டு காரை இயக்கி நகர்த்தினான்.
அதன் பிறகான பொழுதுகள் அவன் உல்லாச மனநிலையுடன் பேச, அவளுக்குத்தான் சோதனையாக இருந்தது.
அவனுடன் இயல்பாகப் பேச விரும்பினாள், பழக விரும்பினாள். அதற்காகக் கொஞ்சம் முயற்சிகள் கூடச் செய்தாள். ஆனால் உதடு பிரித்துப் புன்னகைப்பதே அவளுக்குப் பெரும்பாடாக இருந்தது.
தன் மனத்துடன், உணர்வுகளுடன் போராடியவளால் நெடுநேரம் தாக்கு பிடிக்க முடியாது, உடலின் சக்தியெல்லாம் வடிந்து சோர்ந்து போனாள்.
அப்பொழுது காவேரி அவளை அழைக்கவும் ஆசுவாசமாக உணர்ந்தாள்.
“எங்க இருக்கீங்க பாரும்மா? என்ன பண்றீங்க? மணி ஆகுதே, எப்போ வருவீங்கன்னு அப்பா கேட்கறார்டா. உங்க பெரியம்மா வீடு வேற வந்துட்டாங்க. நாங்க கடைக்குக் கிளம்பறோம். நீயும் வந்துட்டீன்னா உன்னையும் கூடக் கூட்டிட்டு போகலாம்னு பார்த்தோம்” என்றார்.
“எந்தக் கடைன்னு சொல்லுங்கம்மா. நான் நேரா அங்க வந்துடுறேன்” என்றாள்.
அவர் கடையின் பெயரை சொன்னதும், “எங்க வீட்ல இன்னைக்கு ஷாப்பிங் பிளான் பண்ணியிருக்காங்கன்னு நான் மார்னிங் சொன்னேன் இல்ல? அப்பாம்மா கடைக்குக் கிளம்பிட்டாங்க. நான் நேரா அங்க வந்துடறேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டேன்” என்று அவனிடம் சொன்னதும், “ஓகே, வா போகலாம்” என்றவனை அயர்ந்து போய்ப் பார்த்தாள்.
அவனோ சீட்டி அடித்தபடி காரை நகர்த்தினான்.
இருவரும் ஒன்றாகக் கடைக்குச் சென்றார்கள். பாரிவேந்தனை வழியனுப்ப ரங்கராஜன் முனைய, “இருக்கட்டும் மாமா, வாங்க” என்று அவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் அவன்.
அம்மா, பெரியம்மா அங்கிருந்தாலும் பிரியதர்ஷினியை பார்த்ததும் அவளிடம் சென்றாள் பார்கவி.
அவள் முகத்தைப் பார்த்ததும், “என்ன பாரு? ஏன் டல்லா இருக்க?” என்று கேட்டிருந்தாள் பிரியதர்ஷினி. தோழியின் கரத்தை அழுந்த பற்றினாள்.
அவள் ஒருநாளை நகர்த்துவதற்குள் மூச்சு திணறி போய் இருந்தாள். எதிர்காலத்தை எண்ணி பார்க்கவும் துணிவில்லை அவளுக்கு.
தோழியின் கேள்வியில் மனம் கலங்கி கண்கள் மளுக்கென்று உடைந்தன. கண்ணைச் சிமிட்டி சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்தாள்.
இப்பொழுது பார்த்திபன் மேல் எந்தவித எண்ணமும் அவளுக்கு இல்லை. அவன் பிரபாவதியை மணக்க போகிறான். அவனை நெஞ்சில் நினைப்பதும் தவறு என்பதில் தெளிவாக இருந்தாள்.
பாரிவேந்தனையும், அவளையும் குறித்து மட்டுமே தற்போது சிந்தித்தது அவள் மனம். அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதே அவளுக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை. இப்போது அவனது வேகம் கண்டு மிரண்டு போய் இருந்தாள். அவனது எதிர்பார்ப்புப் புரிந்தாலும் அவளால் ஏதும் செய்ய முடியாத நிலையை வெறுத்தாள்.
அக்கணம் தன்னைத்தானே வெறுத்தாள் அவள்.
தனக்குள் மூழ்கியிருந்தவளை, “பாரு” என்று பிரியதர்ஷினி உலுக்க, “மூவிக்குப் போனோம். அதான் தலை வலிக்கிற மாதிரி இருக்கு ப்ரியூ” என்றாள். அவள் சொன்னதை நம்பவில்லை என்றது தோழியின் பார்வை.
“நீ அப்புறமா என்னன்னு என்கிட்ட சொல்லு பாரு. ஓகே? இப்போ வா உனக்குச் சேரி பார்ப்போம். எல்லாரும் நம்மளையே பார்க்கறாங்க, மூஞ்சியை நார்மலா வை பாரு” என்று புன்னகையுடன் அவள் முகம் பார்த்துச் சொன்னாள்.
பார்கவியின் பெற்றோர், பெரியம்மா வீட்டினர் அனைவரும் அங்கிருக்க, அவர்கள் முன்னே புடைவைகளைப் பிரித்துப் போட்டிருந்தார்கள். இருவரும் அங்குச் சென்று அமர, ரங்கராஜனிடம் பேசிக் கொண்டிருந்த பாரிவேந்தன், இயல்பாகப் பார்கவியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.
காவேரி அவர்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருந்த பட்டுப் புடைவைகளை ஒவ்வொன்றாக எடுத்து மகளிடம் நீட்டினார்.
அதைப் பிரித்து அவள் தோளில் வழிய விட்டாள் பிரியதர்ஷினி.
“இது நல்லா இருக்கு. இது வேணாம்” என வீட்டினர் அனைவரும் அவரவர் கருத்தை சொல்ல, பாரிவேந்தனும் அவர்களோடு இணைந்து கொண்டான்.
அவளை நெருங்கி அமர, அவளின் கைப் பிடிக்க, அவள் தோளில் புடைவையை வைத்து அழகு பார்க்க என அவனது நடவடிக்கைகளில் இருந்த நெருக்கத்தை இயல்பாக ஏற்க முடியாமல் பார்கவி நெளிந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கு மூச்சு முட்டியது. அதிலும் பெற்றோர் முன் எதையும் செய்ய இயலாது தவித்திருந்தாள்.
பிரியதர்ஷினியின் பார்வையில் இருந்து அது தப்பவில்லை. அவர்களுக்கு நடுவே சென்றால் அது நாகரிகமாக இருக்காது என்று அவளும் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழல்.
“நார்மலா இரு பாரு.” என்று அவளின் காதில் கிசுகிசுத்தாள். அவளும் முயல்கிறாள், ஆனால் முடியவில்லையே. எச்சில் கூட்டி விழுங்கி கண்ணை மூடித் திறந்தாள் பார்கவி.
அவள் எதிர்பாராத நேரம் பாரிவேந்தன் அவளின் தோளில் கை வைக்கவும் உடலை உதறி, திரும்பினாள்.
அவன் கை பட்டென விலகிட, கண்கள் அவளைத் துளைத்தன.
“எதுக்கு நான் பக்கத்துல வந்தாலே இப்படிப் பதறுற பார்கவி?” அவள் புறமாகச் சரிந்து கேட்டான். அப்போதும் அவள் அனிச்சையாக விலக, அவன் முகம் இறுகியது. அவள் வேண்டுமென்று செய்யவில்லை.
ஆனாலும் அவனைக் காயப்படுத்துகிறோம் என்பது அவளுக்கும் புரிந்திட, “சாரி” என்றாள் உணர்ந்து.
“உனக்குப் பிடிச்சுதான் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொன்னியா?” அந்தக் கேள்வியில் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“நான் உன் கைய பிடிச்சா கூட உனக்குப் பிடிக்கலன்னு தோனுது. பக்கத்துல வந்தாலே உன்னை என்னமோ பண்ணிடுவேன் ரேஞ்சுல ரியாக்ட் பண்ற நீ” அவன் பேச பேச அவளின் பதட்டம் அதிகமானது. வெளியில் இருந்து பார்க்க அவர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக் கொள்வது போலிருந்தது. அதனால் யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை.
“உனக்கு என்னைப் பிடிக்கலையா?”
“ஹாங்…” என்று அவள் அதிர, “இல்லன்னா வேற யாரையாவது பிடிச்சிருக்கணும். சரிதானே?” என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டிருந்தான்.
அவள் மனத்தின் திடுக்கிடலை கண்கள் அப்பட்டமாகக் காட்டி கொடுத்தன.
விரிந்த அவள் விழிகளை இமைக்காமல் பார்த்து, விரல்களைக் கோர்த்தான். அவள் உடல்மொழியில் உண்டான இறுக்கத்தை அவனால் உடனடியாக உணர முடிந்தது.
அவனுக்குப் பதில் சொல்லவும் முடியாது, அவனிடம் இருந்து கையை விலக்கவும் முடியாது, அனல் மேல் அமர்ந்திருக்கும் நிலையில் இருந்தாள் பார்கவி.
அப்போது, “பாரு..” என்று பிரியதர்ஷினி அவளை அழைக்கவும், நிம்மதி பெருமூச்சுடன் திரும்பினாள்.
பிரபஞ்சன் வந்திருக்கிறான், நான் போய் அவனை அழைத்து வருகிறேன் என்று அவளிடம் தகவல் சொன்னாள்.
பார்கவி, உன்னோடு நானும் வருகிறேன் என்று கிளம்ப, “அப்படியே நானும் வீட்டுக்கு கிளம்பறேன்” என்று பாரிவேந்தனும் அனைவரிடமும் விடை பெற்று அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அப்போதும் பார்கவிக்கு நெருக்கமாகத்தான் நடந்து வந்தான்.
மூவரும் கீழே வர, “என் கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லல பார்கவி.” என்று அவளை நிறுத்திச் சொன்னவன், “எனக்குப் பதில் தெரிஞ்சாகணும்” என்றான் தீர்க்கமாக.
பார்கவி இமைக்காது அவனைப் பார்த்து மெதுவாகத் தலையசைத்தாள்.
அவள் மனம் கண்ணாடி பாத்திரம் போன்ற நிலையில் இருந்தது.
“பிரபா..” என்ற பிரியதர்ஷினியில் குரலில் அவள் திரும்ப, பிரபஞ்சன் காரில் இருந்து இறங்கினான்.
அவர்கள் இருவரையும் பார்த்து, “ஹாய் பாரு” என்று புன்னகைத்தான். பதிலுக்குப் புன்னகைக்கப் போனாள். ஆனால் காரின் மறுபக்கம் இருந்து இறங்கியவனைக் கண்டதும் அவள் உதடுகள் உறைய, கண்கள் மளுக்கென்று கலங்கி விட்டன. அவனை இங்கு எதிர்பாராத அதிர்ச்சி அவள் விழிகளில் வெளிப்பட்டது.
“யாரு அவன்?” பாரிவேந்தன் விடாமல் அவன் கேள்வியைத் தொடர, அவள் பார்வை பார்த்திபனின் மேலிருந்தது.
கண்களில் மின்னிய கண்ணீர்த் துளியுடன் அவனைப் பார்த்த பார்கவியை அதிர்ச்சியுடன் பார்த்தான் பார்த்திபன்.