பார்த்திபன் காதலி – 8 (2)

“சம்மந்தி ரொம்ப நேரமா உன்னைப் பார்க்கத்தான் காத்துட்டு இருக்காரு” என்று அவர் சொல்ல, மெல்ல திரும்பி கோவிந்தனை பார்த்து, “சொல்லுங்க” என்றான்.

அவனது கிரிக்கெட் சீருடை வியர்வையில் குளித்து அவனது உடலோடு ஒட்டியிருந்தது. தலை கலைந்து, முகமெல்லாம் கருத்து, வெயிலில் வாடி வந்திருந்தான்.

எப்போதும் விளையாடி விட்டு வீடு வந்தால் நேராகக் குளியல் அறைக்குத்தான் செல்வான்.

இன்றைக்கு அது மாறியிருந்தது. கூடத்தில் சுழன்ற காற்றாடியின் வேகம் போதவில்லை அவனுக்கு.

அவனையே ஆராய்ச்சியாகப் பார்த்திருந்த கோவிந்தன், “எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தனுக்கு உங்க கம்பெனியில வேலைக்கு ஏற்பாடு பண்ணணும். அதான் உங்களைப் பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்” என்றார். அவனை மகளுக்காகப் பார்க்க வந்து விட்டு, இப்போது ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி சப்பை கட்டு கட்டுகிறார் என்று அவனது அனுபவம் சொன்னது.

“ஓ, அப்படியா? என்ன படிச்சிருக்கான்? எத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு?” என்று கேட்டு, “நான் ஹெச்ஆர் ஈமெயில் தர்றேன், ரெசியூம் பார்வேர்ட் பண்ண சொல்லுங்க” என்றான். அவரும் சரியெனத் தலையசைக்க, “இதுக்கா வீடு வரைக்கும் வந்தீங்க?” என்று நேரடியாகக் கேட்டிருந்தான்.‌

“ஆமா, மாப்ள. இதெல்லாம் போன்ல சொன்னா சரியா இருக்காதுல்ல?” என்று அவர் சாமர்த்தியமாகச் சமாளிக்க, “என் போன் நம்பர் கொடுத்து எனக்குப் பேச சொல்லுங்க. நான் அவனுக்குக் கைட் பண்றேன்” அவருக்கும் மேலாக இருந்தான் அவன்.

“அப்போ நான் வர்றேன் சம்மந்தி” என்று அவனது பெற்றோரிடம் விடை பெற்று அவர் வெளியேற, அவரைப் பின் தொடர்ந்தான் பார்த்திபன்.

கோவிந்தன் காரில் ஏற போக, “என்கிட்ட என்னமோ கேட்கணும்னு வந்துட்டு கேட்காமயே போறீங்களே?” என்று கேட்டு அவரை நிறுத்தியிருந்தான்.

அவரோ அலட்டி கொள்ளவே இல்லை.

“வாரா வாரம் மிஸ் பண்ணாம கிரிக்கெட் விளையாட போய்டுவீங்களா மாப்ள?” அந்த மாப்பிள்ளையில் அழுத்தம் கொடுத்து, கடினமான குரலில் அவர் கேட்க, அந்தக் குரலும் தொனியும் அவனுள் தணிந்திருந்த புகையை ஊதி விட்டு எரிய செய்தது.

அவன் காற்சட்டை பையில் கை நுழைத்து நின்று அவரை நேர்பார்வை பார்த்து, “என்னைப் பத்தி ஏற்கனவே நல்லா விசாரிச்சு ரிப்போர்ட் வாங்கி இருப்பீங்களே, நான் என்னைக்கு என்ன செய்வேன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டுப் புருவம் உயர்த்தினான்.

“தெரியும்தான். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் இப்படிப் பொறுப்பில்லாம விளையாட போய்ட்டுப் போனை எடுக்காம என் பொண்ணைத் தவிக்க விட்டீங்கன்னா..” என்று எச்சரிப்பது போல அவர் சொல்ல, “இன்னும் கல்யாணமே ஆகலையே. அதுக்குள்ள என்னைக் கன்ட்ரோல் பண்ண நினைக்காதீங்க” என்று தீர்க்கமாகச் சொல்லியிருந்தான்.

“நீங்க இன்னைக்கு இருக்க மாதிரிதானே கல்யாணத்துக்கு அப்புறமும் இருப்பீங்க? நீங்க என்ன சின்னப் பையனா? இப்பவும் கிரிக்கெட் விளையாட போய்ட்டு இருக்கீங்க?” என்று கடுமையாகக் கேட்டிருந்தார்.

வீட்டின் மதில் சுவரில் ஒற்றைக் காலை உயர்த்தி வைத்து அவரைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான். அவரின் கேள்விக்குப் பதில் சொல்ல மெனக்கெடவில்லை அவன்.

“உங்களைத்தான் கேட்கிறேன் மாப்ள. இப்படிப் பதில் சொல்லாம நின்னா என்னா அர்த்தம்?”

“பதில் இல்லன்னு அர்த்தம், பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம்” என்றான் திட்டவட்டமாக.

“என்ன சொன்ன..” என்று எகிறியவர், அவன் அசையாமல் அப்படியே நிற்கவும், “இல்ல மாப்ள” என்று தணிந்து இறங்கி வந்தார்.

அவன் உதடுகள் சிரிப்பில் வளைய, “சண்டேயானா நீங்க பாட்டுக்க இப்படி விளையாட போய்ட்டா.. என் பொண்ணு தனியா வீட்ல இருப்பாளேன்னு எனக்குக் கவலையா போச்சு. உங்களைக் கேள்வி கேக்கணும், கட்டுப்படுத்தணும்னு நான் நினைக்கல. ஆனா உங்களுக்குக் கிடைக்கிறதே ஒரு நாள் லீவு. அத இப்படி விளையாட போய் வீணாக்கறீங்களேன்னு சொல்றேன் மாப்ள. நீங்க கொஞ்சம் யோசிங்க” என்றார்.

அவர் அவனையே கூர்ந்து பார்த்திருக்க, “என் பொறுப்பை நான் என்னைக்கும் தட்டிக் கழிக்க மாட்டேன். உங்க பொண்ணோ, நீங்களோ போன் பண்ணா இனிமே கண்டிப்பா எடுத்துப் பேசுவேன். நீங்க அதைப் பத்தி யோசிச்சு பயப்பட வேணாம். அப்புறம் நான் கிரிக்கெட் விளையாட போறது பத்தி கல்யாணத்துக்கு அப்புறம் நானும் உங்க பொண்ணும் பேசி முடிவு பண்ணிக்கறோம்” என்று முடிவாகச் சொல்லி விட்டான்.

அதற்கு மேலே அதைப் பற்றிப் பேச அவருக்கும் தயக்கமாக இருந்தது. அவன் பதில் சொன்ன விதமே அவனை ரொம்பவும் நெருக்கக் கூடாது என்று அவருக்கு மனத்தில் எச்சரிக்கை விதையை விதைக்க, “சரிங்க மாப்ள. நான் பேசினதத் தப்பா எடுத்துக்காதீங்க. என் பொண்ணு கிட்ட பேசுங்க, நான் அவங்களுக்காகத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்று புன்னகையுடன் அவன் தோளில் தட்டினார்.

அவனும் இறுக்கமாகப் புன்னகைத்தான். கோவிந்தன் போன பிறகு கோபமாக வீட்டினுள் வந்தான்.

சத்யபாமா அவன் முன் வந்து நின்று, “என்னடா நினைச்சிட்டு இருக்காங்க அவங்க? நீ போனை எடுக்கலைன்னா இப்படித்தான் திடுதிப்புன்னு வீட்டுக்கு வந்து நிப்பாரா அவரு?” என்று கோபமாகக் கேட்டார்.

“அவன் ஏற்கெனவே கோபத்துல இருக்கான். இதுல நீ வேற அவனைக் கேள்வி கேட்டு கோபப்படுத்தாம பேசாம இரு சத்யா” என்று மனைவியை அடக்கினார் துரைராஜ்.

“இனிமே இப்படி வர மாட்டார்ம்மா. விடுங்க” என்று அம்மாவிடம் சொன்னவன், தன் அறைக்குச் சென்று விட்டான்.

அவனது நண்பன் பிரபஞ்சன் வாழ்க்கையிலும் இந்த விளையாட்டு ஒரு புயலை கிளப்பியிருந்தது. இப்போது அதுவே அவனது வாழ்விலும் நடக்கவும் அவனுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது.

பிரபஞ்சனது காதல் திருமணம் என்பதால் அவன் கிரிக்கெட் விளையாடுவதை மனைவிக்காக விட்டிருந்தான். ஆனால், இவனைப் பற்றி எல்லாம் விசாரித்துதானே அவர்கள் பெண்ணுக்குத் திருமணம் பேசினார்கள். அவன் வாரா வாரம் கிரிக்கெட் விளையாட செல்வான் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன? பிறகென்ன இப்போது வந்து கேள்வி கேட்பது? என்று மனத்திற்குள் கொந்தளித்தான்.

அப்போது பிரபாவதி அவனை அழைக்க, “இப்பத்தான் உங்கப்பா இங்கருந்து கிளம்பினார். நீ அவருக்குப் போன் பண்ணி பேசு முதல்ல. நான் வெயில்ல காஞ்சு கருவாடா வந்திருக்கேன். எனக்குக் குளிச்சுட்டு, குட்டி தூக்கம் போடணும். ரொம்ப டையர்ட்டா இருக்கு. நான் உனக்கு ஈவ்னிங்கா கால் பண்றேன். ஓகே?” அவள் மறுத்து பேச இடம் தராமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

குளிர்ந்த நீரில் குளித்தும் அவன் மனத்தின் சூடு குறையவில்லை.

இப்போதே இப்படி என்றால் கல்யாணத்திற்குப் பிறகு இன்னும் எத்தனை கட்டுப்பாடுகள் விதிப்பார்களோ என்ற எண்ணமே அவனை நிம்மதி இழக்கச் செய்தது.

அப்போது அவனுக்குப் பிரபஞ்சனிடம் இருந்து அழைப்பு வர, திரையைப் பார்க்காமல், “என்ன பிரபா, திரும்பத் திரும்ப எதுக்குக் கால் பண்ற?” என்று கோபமாகக் கத்தியிருந்தான்.

“டேய்.. பார்த்தி. என்னடா..?” என்று பிரபஞ்சன் அதட்டலாகக் கேட்கவும்தான், தன் தவறு புரிந்து, நெற்றியை கீறி, “நீயாடா?” என்று சிரித்தான்.

“நான்தான். ஆனா அந்தப் பிரபாகிட்ட இந்த டோன்ல நீ பேசினா, போலீஸ் உனக்கு லாடம் கட்ட போறார்” என்று அவன் கேலியாகச் சொல்ல, இவன் அமைதியாகி விட்டான்.

“பார்த்தி, ஆல் ஓகே? நீ மேட்ச் பாதியில வந்துட்டன்னு எனக்கு மெசேஜ் வந்தது. அதான் என்னனு கேட்போம்னு கூப்டேன்”

“நத்திங் பிரபா” என்றான்.

“ஓகே. அப்போ சம்திங் இஸ் பாதரிங் யூ”

“நத்திங் டா. சண்டே அதுவுமா வீட்ல இருக்கறது கடுப்பாகுது”

“உனக்கென்ன இப்போ வெளில போகணும், அவ்ளோதானே? வெயிட் பண்ணு. நான் ஈவ்னிங்கா வர்றேன்” என்று பிரபஞ்சன் சொல்ல, “எனக்காக நீ ஒன்னும் அலைய வேணாம்” என்று கடுப்படித்தான். ஆனால் நண்பன் அவனுக்காக வந்து நின்றான்.

error: Content is protected !!
Scroll to Top