“பார்த்தி, கிளம்பலையா நீ?” என்று நண்பர்கள் கேட்க, “பொறுமையா போவோம். போலீஸ்கார் வெயிட் பண்ணட்டும்” என்று அங்கேயே கால் நீட்டி அமர்ந்து விட்டான் அவன். மற்றவர்கள் மதிய உணவைப் பிரிக்க, பிரியதர்ஷினி கொடுத்து விட்ட உணவை அவனும் வெளியில் எடுத்தான்.
நெய் சோறு, மட்டன் சுக்கா, வெங்காயப் பச்சடி கொடுத்து விட்டிருந்தாள்.
அவன் உணவை பிரித்ததும், “பிரியாணியாடா பார்த்தி? வாசம் தூக்குதே” என்று பிடுங்கிக் கொண்டார்கள்.
பிழைத்து போ என்று பாவம் பார்த்து அவனுக்கு மூடியில் கொஞ்சம் உணவை பங்கிட்டு நீட்டினார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேலாகக் கிரிக்கெட் ஆடி களைத்திருத்தான், நல்ல பசி. ஆகத் திருப்தியாக உண்டு விட்டே எழுந்தான்.
“நான் கிளம்பறேன் மச்சா. நீங்க கன்ட்டினியூ பண்ணுங்க” என்று பையை எடுத்துத் தோளில் மாட்டினான்.
“வீட்டுக்கு போய் மாமனார் கிட்ட மிதி வாங்கப் போறதுக்கு இம்புட்டு அவசரம் ஆகாது மச்சா” என்று அவர்கள் கேலி செய்ய, சிரிப்புடன் மைதானத்தை விட்டு வெளியேறி வாகன நிறுத்துமிடம் வந்து தன் வண்டியை உருவினான்.
கிரிக்கெட் பையை முன்னால் வைத்து அவன் வண்டியை ஆக்கிரமித்த கணம் மீண்டும் அவனது அலைபேசி அலறியது.
ஒருவித சலிப்புடன் அலைபேசியைக் கையில் எடுத்தான். அதன் திரையில் பிரபாவதியின் பெயர் ஒளிரவும் அவன் முகம் கனிந்தது.
“சொல்லு பிரபா”
“என் மேல கோபமா இருக்கீங்களா?”
“கோபமா? இல்லையே! ஏன் அப்படிக் கேக்கற? வீட்டுக்கு வந்துட்டு உனக்குக் கால் பண்ணலாம்னு இருந்தேன்” என்றான்.
“என் மேல கோபமா இருக்கீங்களோன்னு..”
“உன் மேல கோபப்படுற அளவுக்கு நீ என்ன பண்ண இப்போ?”
“இல்ல, அப்பாகிட்ட சொல்லிட்டேன்னு..”
“ஆமா, உங்கப்பா கிட்ட என்ன சொன்ன? எதுக்காக இப்போ எங்க வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தே ஆகணும்னு உட்கார்ந்துட்டு இருக்கார்?”
“அது..” என்று அவள் தடுமாற, “சொல்லு பிரபா” என்றான் அழுத்தமாக.
“உங்கப்பா கால் பண்ணதும் நான் ஆன்சர் பண்ணிடணுமா? ம்ம்? அப்படி ஆன்சர் பண்ணலைன்னா உடனே வீட்டுக்கு வந்துடுவாரா?” எரிச்சலுடன் கேட்டிருந்தான்.
“இல்ல பார்த்தி. அப்பா எனக்காகத்தான் வந்தார்” என்று படபடத்தாள் அவள்.
“புரியல..” வண்டியில் அமர்ந்தபடி தரையில் காலை அழுந்த ஊன்றி நெற்றியை கீறினான்.
“நீங்க அப்பா போனை எடுக்கலன்னு அவர் அங்க வரல..” என்று அவள் இழுக்க, அவனுக்குப் புரிந்து விட்டது.
“ஓஹோ.” என்றான் கோபமாக.
“பிரபா மேடம் போனை நான் எடுக்கலைன்னு அவங்களோட போலீஸ் அப்பா என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்திருக்கார் போலயே. சிறப்பு மேடம். அடுத்து என்ன என்னை விசாரிப்பாரா? அப்புறம்…”
“சாரிங்க. நான் வேணும்னு பண்ணல. உங்களோட காலையில் இருந்து பேசலைன்னு பேச்சு வாக்குல அப்பாகிட்ட சொல்லிட்டேன். நீங்க போனை எடுக்கலைன்னு பதட்டமாகிட்டேன்.”
“இதுல பதற என்ன இருக்கு பிரபா. இன்னைக்குச் சண்டே. நான் கிரிக்கெட் விளையாட போவேன்னு உன்கிட்ட சொல்லியிருக்கேன்தானே?”
“சொன்னீங்கதான். ஆனா..”
“என்ன ஆனா? ஒவ்வொரு வாரமும் உன்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டுதான் வெளியில போகணுமா நான்? இல்லன்னா உங்கப்பா என்னைக் குற்றவாளி போல விசாரிக்க வீட்டுக்கு வந்துடுவாரா?” என்று கடுப்புடன் பல்லைக் கடித்துக் கேட்டான்.
“சாரி”
“ப்ச், சும்மா சும்மா ஏன் சாரி சொல்ற? போனை வை. நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபர்ஸ்ட் உங்கப்பாக்குப் பதில் சொல்லிட்டு அப்புறம் உனக்குப் போன் பண்றேன்” என்றான், முயன்று வருவித்த நிதான குரலில்.
“நீங்க போனை எடுத்து பேசியிருந்தா..”
“பிரபா, ஸ்டாப்” என்றான் ஆழ்ந்த அமைதியுடன்.
“எனக்கு ஒரு மெசேஜாவது போட்டிருக்கலாம் இல்ல நீங்க?” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.
அவனுக்குக் கோபம் சுள்ளென்று உச்சியில் ஏறியிருந்தது.
“நான்தான் கிரிக்கெட் விளையாட வந்திருக்கேன்னு சொல்றேன் இல்ல?”
“விளையாட போனா போனை எடுக்கக் கூடாதுன்னு ரூலா என்ன?” என்று அவளும் கோபமாகக் கேட்க, கையை மடக்கி வண்டியில் ஓங்கி குத்தினான்.
“போனை பாக்கெட்லயே போட்டுட்டு சுத்துவோம்னு நினைச்சியா நீ? போலீஸ்கார் பொண்ணு போன் பண்ணதும் பதறி அடிச்சுட்டு எடுக்கறதுக்கு? ஒத்த ரன் எடுக்க ஓடி போய்க் கீழ விழுந்தேன்னா போன் நொறுங்கிடும்” என்றான் நக்கலாக.
“இல்ல, உங்க போனை பார்த்துக்க ஆள் இருக்க மாட்டாங்களா?” என்று அடுத்தக் கேள்வியை அசராமல் கேட்டாள்.
அவனுக்குக் கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
“இப்படிக் கேள்வி கேட்க உங்கப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டியா?” என்று கிண்டலாகக் கேட்டான்.
“ஆமா” என்று வேகமாகச் சொன்னவள், “அச்சச்சோ இல்ல” என்று அதைவிட அதிவேகமாக மறுத்திருந்தாள்.
“ஓகே, போனை வை. நான் மொட்டை வெயில்ல நின்னு பேசிட்டு இருக்கேன். மொதல்ல வீட்டுக்குப் போய் உங்கப்பாக்குப் பதில் சொல்லிட்டு அப்புறமா பொறுமையா வீடியோ கால்ல வந்து உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றேன் சரியா?” என்று தீவிரமாகக் கேட்டான்.
“சாரி” என்றாள்.
“இப்பத்தானே சும்மா சாரி சொல்லாதன்னு சொன்னேன்” என்று அவன் அதட்ட, “இல்ல, அப்பா இப்படி உங்க வீட்டுக்கு போவாங்கன்னு நான் நினைக்கல. எல்லாம் என்னாலதான். அதான் சாரி சொன்னேன். பிளீஸ் கோபப்படாதீங்க. அப்பாகிட்ட நான் பேசறேன்” என்று அவள் சமாதான கொடியை நீட்டவும், “நீ ஒன்னும் பண்ண வேணாம். நான் வீட்டுக்கு போய் அவர்கிட்ட பேசிக்கிறேன்” என்று அதை வாங்க மறுத்திருந்தான்.
தான் செய்த காரியத்தின் வீரியம் உறைக்க, “வீட்ல அத்த, மாமாலாம் இருப்பாங்க இல்ல? அவங்க…” என்று அவள் தடுமாற, “நான் பார்த்துக்கறேன் பிரபா. கூல் டவுன்” என்றான்.
“அச்சோ அவங்க தப்பா நினைக்கப் போறாங்க”
“இனிமே உங்கப்பா கிட்ட எதையும் சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சு சொல்லு, அது போதும். இப்போ ரொம்ப டென்ஷனாகாம ரிலாக்ஸா இரு. உங்கப்பாதானே? அவரை நான் சமாளிக்க மாட்டேனா?” என்று சிரிப்புடன் கேட்டிருந்தான்.
“அவரு மகள் மேல இருக்கப் பாசத்துல என்னைப் பார்க்க வந்திருக்கார். நானும் போய்ப் பாச மழை பொழிஞ்சுடுறேன்” என்று அவன் சொல்லவும் மெலிதாகச் சிரித்திருந்தாள்.
அந்தச் சிரிப்புச் சத்தம் அவன் செவியைத் தீண்ட, அவன் உதடுகளும் முறுவலித்தன.
சற்றே லகுவான மனத்துடன், “பிரபா மேடம் என்னை ரொம்பத் தேடினீங்க போலவே?” என்று அவளைச் சீண்டினான்.
“ம்ம்”
“எதுக்குத் தேடின?”
“உங்ககிட்ட பேசணும் போல இருந்துச்சு”
“அவ்ளோதானா?” என்றான் ஏமாற்றம் அப்பட்டமாகத் தொனித்த குரலில்.
“பார்க்கணும் போல இருந்துச்சு”
“ம்ஹும். பார்த்ததுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு பிளான்?” என்று அவன் கரகரத்த குரலில் சீண்ட, “பேசலாம்ன்னு..” என்று புரியாமல் பதில் சொன்னாள். அதுவரை இருந்த மனநிலை முற்றிலுமாக மாறிட சத்தமாக வாய்விட்டுச் சிரித்திருந்தான்.
“பார்த்திபன், எதுக்கு இப்படிச் சிரிக்கறீங்க?”
“சிரிச்சது குத்தமா போலீஸ்கார் பொண்ணே” என்று அதையும் சிரிப்புடன் கேட்டு, “ஈவ்னிங் பார்க்கலாம் ஓகே? இப்போ பை” என்று சொல்லி அழைப்பை துண்டித்திருந்தான்.
அவன் நேராக வீடு செல்ல அவன் வீட்டு வாசலில் காவல்துறை வாகனம் நின்றிருந்தது.
அதைக் கண்டதும் கண்கள் இடுங்க, ‘நான் என்ன குற்றவாளியா?’ என்று கோபம் வந்தது.
அவரிடம் இயல்பாகப் பேச வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்தவன் முகம் கடுமையானது.
வண்டியில் இருந்து இறங்கியவன் விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்தான்.
“ம்மா, தண்ணி குடுங்க” என்று கத்தியவன், வருங்கால மாமனாரை புன்னகையுடன் நோக்கி, “வாங்க, எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தான்.
“ஏதாவது முக்கியமான விஷயம் பேசணுமா? அப்பாவ கூப்பிடவா?” என்று தீவிரமாகக் கேட்டான்.
“இல்ல மாப்ள. நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். இவ்ளோ நேரம் அப்பாகிட்டதான் பேசிட்டு இருந்தேன்” என்றார் பிரபாவதியின் அப்பா கோவிந்தன்.
அதற்குள் சத்யபாமா மகன் கேட்ட தண்ணீருடன் வந்து விட்டார். கோவிந்தனுக்கு நீர்மோர் கொண்டு வந்து கொடுத்தார்.
“என்னப்பா இன்னைக்குச் சீக்கிரமே வந்துட்ட?” என்று கேட்டபடி வீட்டின் பின்பக்கத்தில் இருந்து வந்தார் துரை ராஜ்.
பார்த்திபன் அப்பாவை முறைத்தான்.