பார்த்திபன் நண்பனின் கேள்விக்குப் பதிலேதும் சொல்லவில்லை. மாறாக, “டைமாகுதுடா, நான் கிளம்பறேன்” என்று தன் பையைக் கையில் எடுத்துத் தோளில் மாட்டினான்.
பிரபஞ்சனின் கண்கள் நண்பனை கூர்மையாக ஆராய்ந்தன.
“என்னடா பார்த்தி? நான் பேசிட்டு இருக்கும் போதே பாதியில் எழுந்து போறேன்னு நிக்கற?”
“மேட்ச்க்கு டைமாகுது பிரபா, அதான். வேற ஒன்னும் இல்ல. உனக்கு ஈவ்னிங் போன் பண்றேன்” என்றவன் குரலில் இன்னுமே கரகரப்புக் கூடியிருந்தது.
அவன் கிளம்புகிறான் என்று சொல்லி பிரியதர்ஷினியை அழைத்தான் பிரபஞ்சன்.
“இந்தாங்கண்ணா” அவனுக்காக மதிய உணவு, குளிர்ந்த நீர் நிரம்பிய தண்ணீர் பாட்டில் என அனைத்தும் அடங்கிய பையை அவனிடம் நீட்டினாள் பிரியதர்ஷினி.
“எதுக்கும்மா..” என்று மறுத்தவன், கணவன் மனைவி இருவரும் முறைக்கவும், புன்னகையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றான்.
அவன் கீழே வந்து வண்டியை உருவி வெளியில் எடுக்க, “அண்ணா” என்று அந்த அபார்ட்மெண்ட் வளாகச் சிறுவன் ஒருவன் கத்த, வண்டியை நகர்த்தாமல் அப்படியே நிறுத்தி, “என்ன தம்பி?” என்று கேட்டான்.
அந்தச் சிறுவன் இவனுக்குப் பதில் சொல்லாமல், பின்னால் திரும்பி, “டேய் பிரேம், அன்னைக்கு நம்மளோட கிரிக்கெட் விளையாண்ட அண்ணா வந்திருக்காங்க டா” என்று மகிழ்ச்சியுடன் கத்தினான். அவ்வளவுதான், மறுநிடம் சிறுவர்கள் படை அவனைச் சூழ்ந்து கொண்டது.
பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் பந்து, மட்டை சகிதம் வந்து நின்று, “அண்ணா பிளீஸ், எங்களுக்கு ஒரே ஒரு ஓவர், பால் போடுங்க” என்று அவனிடம் கெஞ்சினார்கள்.
அதிலும் ஒரு சிறுவன் இவனின் கையைப் பிடித்துக் கெஞ்சலாக இழுக்க, அவனால் மறுக்க முடியவில்லை.
அங்கிருந்த பாதுகாவலரிடம் சொல்லி விட்டு வண்டியை ஓரமாக நிறுத்தி கீழிறங்கினான்.
“ஹேய் அண்ணா பவுல் பண்ண வர்றாங்கடா” என்று அவர்கள் ஆர்ப்பரிக்க, அவன் உதடுகள் தானாகப் பிரிந்து புன்னகைத்தன.
“பார்த்திபன் அண்ணா டா.” என்று ஒருவன் பெயர் சொல்ல, “பார்த்தி அண்ணா” என்று கத்தினார்கள்.
“பரவாயில்லையே டா பசங்களா என் பேரெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களே?” என்று அவன் ஆச்சரியப்பட, “தேர்ட் ப்ளோர்ல இருக்கப் பிரபஞ்சன் அண்ணா பிரெண்ட் தானே நீங்க?” என்று கேள்வி கேட்டான் ஒரு சிறுவன்.
“அட ஆமாடா”
“நீங்க அவங்க வீட்டுக்கு போகும் போது பார்த்தேன்” என்று சிரித்தான்.
“உங்க பேரு அன்னைக்கு நம்மளோட பேட் பண்ண அக்கா சொன்னாங்க இல்ல. அதுனால ஞாபகம் இருக்கு” என்று அவனே சொல்ல, “எந்த அக்கா?” என்று அந்தச் சிறுவனிடம் பார்த்திபன் கேட்கவில்லை.
“அந்தக்கா, உங்களோட வரலையா இன்னைக்கு?” அவனுக்கு இன்றைக்கும் சோதனை நாள் போலும், பார்கவியை விடாமல் யாரேனும் அவனுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
“அக்கா, உங்க ஃப்ரெண்ட் வீட்ல இருக்காங்களாண்ணா? நா போய் அவங்களைக் கூட்டிட்டு வரவா?” என்று ஆர்வமாக அவன் முகம் பார்த்து கேட்டான் ஒருவன்.
“இல்லடா. அந்தக்கா வரல இன்னைக்கு”
“ஓ” என்று ஒருமித்துச் சோகமாக இழுத்தார்கள். அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
மெலிதாக அரும்பிய முறுவலுடன், “என் ஃப்ரெண்ட் பிரபஞ்சன் கூடப் பிளேயர்தான். அவரை விளையாட கூப்பிடலையா நீங்க?” என்று சிறுவர்களிடம் கேட்டான்.
“அவருக்குக் கால் உடைஞ்சுருக்குல்ல? அப்புறம் எப்படி விளையாட வருவாரு?” என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு எதிர்கேள்வி கேட்டான் ஒருவன்.
“அந்த அண்ணா கீழ வந்தா, எங்களுக்கு எப்படி ஆடணும்னு சொல்லிக் கொடுத்துட்டு போவாங்க. எங்களோட ஆடுறது இல்ல” என்று கையை அசைத்து அதிருப்தியுடன் சொன்னான் சிறுவன்.
“சரி, வாங்க. நான் ஒரே ஒரு ஓவர் தான் போடுவேன். ஓகே? உங்களுக்கு டீல்ன்னா மட்டும் வர்றேன். இல்லையா, இப்படியே ஓடிடுவேன்” என்றான்.
அவனது இரண்டு கரங்களையும் நால்வர் பிடித்துக் கொண்டு, “வாங்க அண்ணா பிளீஸ். டபிள் டீல்” என்று அவனை இழுத்துப் போனார்கள்.
“அன்னைக்கு மாதிரி உங்களோட அந்த அக்காவும் வந்திருந்தா செம்மையா இருந்திருக்கும்ண்ணா” ஒரு ஆர்வக் கோளாறு ஆசையில் மீண்டும் மீண்டும் சொல்ல, “டேய்” என்று இவன் கண்ணை உருட்டி மிரட்டவும், ஓடிப் போய்த் தன் இடத்தில் நின்று கொண்டான் அவன்.
சிறுவர்களை இடம் பார்த்து நிற்க வைத்து, இரண்டு பந்துகளை வீசியிருப்பான். அதற்குள் அதிவேகமாக அவனது எண்ணங்களும் அந்தப் பந்தின் வேகத்தில் பறந்து பார்கவியைத் தொட்டு தொட்டு வந்தன.
அவன் சில வாரங்களுக்கு முன்னர்ப் பிரபஞ்சன் வீடு வந்த போது இதே சிறுவர்களுடன், அவனும் பார்கவியும் இணைந்து இங்கே கிரிக்கெட் ஆடியிருந்தார்கள்.
பிரியதர்ஷினிக்குக் கிரிக்கெட் ஆடுவது என்ன, பார்ப்பதில் கூட அத்தனை ஆர்வம் கிடையாது. அதனால் அவள் பிரபஞ்சனுடன் ஒதுங்கி நின்றிட, இவனும், பார்கவியும் சிறுவர்களுக்கு இணையாக உற்சாகமாகக் கிரிக்கெட் விளையாடினார்கள்.
அன்றைக்கு ஓரமாகத் தோழியுடன் நின்றிருந்த பார்கவி, “பார்த்திபன், நானும் வரவா பிளீஸ்” என்று அவனிடம் கெஞ்சி கேட்க, அவன் பதில் சொல்லும் முன்னே, “அக்கா வாங்கக்கா” என்று கத்தினார்கள் சிறுவர்கள்.
“தேங்க்ஸ் டா தம்பிங்களா” என்று உள்ளே வந்தவள், மறுநிமிடமே அவளை நோக்கி வந்த பந்தை பிடித்து ஒருவனை அவுட் செய்திருந்தாள்.
“நீங்க எங்க டீம்க்கா” என்று அவளோடு கை கோர்த்துக் கொண்டார்கள்.
இரண்டு ஓவர்கள் முடிந்ததும், “டேய் எனக்குப் பேட் பண்ண ஒரு சான்ஸ் குடுங்கடா” என்று அவள் கெஞ்சி கேட்க, “அக்கா நீங்க நம்ம டீம். இருங்க அவனுங்க ஆடி முடிச்சதும் நம்ம டர்ன் வரும்ல, அப்போ நீங்க ஓப்பனிங் பேட்ஸ்மேனா இறங்குங்கக்கா” என்று பெரிய மனிதன் போலச் சொன்னான் பன்னிரண்டு வயது சிறுவன்.
“டேய், எனக்கு லேட்டாகுது டா. வீட்டுக்கு போகணும். ஒரே ஒரு ஓவர் பேட் பண்ணிட்டு போய்டுறேன்டா, பிளீஸ்” என்று ராகம் இழுத்தாள்.
அவன் உடனே திரும்பி தன் நண்பர்களைப் பார்த்தான். பிறகு திரும்பி பார்த்திபனை பார்த்தான்.
அவனும் சரியென்று தலையசைக்க, “பவன், உன் பேட்டை அக்காகிட்ட குடுடா” என்று அவளைக் களத்தில் இறக்கினார்கள்.
“அக்கா பாஸ்ட்டா அடிக்கக் கூடாது. பால் பில்டிங் மேல பட்டது..” என்று அவன் பின்னால் இருந்த அபார்ட்மெண்ட்டை கை காண்பித்து எச்சரிக்க, “மொத டெட் பாடி நாமதான்” என்று முடித்தான் மற்றவன். சட்டென்று அங்கே சிரிப்பைலை பரவ, “எங்களுக்கு வீட்ல அடி வாங்கிக் கொடுக்கற மாதிரி அடிக்காதீங்கக்கா பிளீஸ்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
அவளோ அலுப்புடன் கண்ணை உருட்டி, அவர்களை முறைக்க, “கூல் டவுன்” என்று இரண்டு கைகளையும் மேலிருந்து கீழிறக்கி, அவளை ஆழ மூச்செடுக்கச் சொன்னான் பார்த்திபன்.
பதிலுக்குப் புன்னகைத்து, “ஓகே, ரெடி. பால் போடுங்க” என்று அவள் தயாராக நிற்க, சிறுவன் வீசிய முதல் பந்தே அவள் பின்னிருந்த ஸ்டம்ப்பை பதம் பார்த்து பறக்க விட்டிருந்தது.
“அக்கா அவுட்டே” என்று கத்தி, குதித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய, “டேய், அடங்குங்கடா” என்று புன்னகையுடன் அவர்களை அதட்டினான் பார்த்திபன்.
அவர்கள் வீசிய இரண்டாவது பந்தையும் அவள் அடிக்காமல் தவற விட, “அக்கா வீணா பாலை வேஸ்ட் பண்றீங்க கா” என்று கேலி செய்தார்கள் சிறுவர்கள்.
“டேய், டீவியில தோனி பேட்டிங் பார்த்து கத்த மட்டும்தான் டா எனக்குத் தெரியும். நான் முன்ன பின்ன பேட்டை தொட்டது கூடக் கிடையாதுடா. ரொம்பப் பண்றீங்க நீங்க” என்று இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்தாள் பார்கவி.
“இருங்கக்கா, உங்களுக்குப் பேட் பண்ண நான் சொல்லித் தர்றேன்” என்று முன் வந்தான் ஒருவன். அவளின் தோள் உயரமே இருந்தவன், அவளுக்குக் கிரிக்கெட் மட்டையைச் சரியாகப் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதைப் பார்த்திபன் புன்னகையுடன் பார்த்திருந்தான்.
“அக்கா பேட்டை க்ரிப்பா பிடிங்கக்கா” என்று சிறுவன் அதட்ட, “டேய் நீ ஒழுங்கா சொல்லி கொடுடா ஃபர்ஸ்ட்” என்று எகிறினாள் அவள்.
சன்ன சிரிப்புடன் அவர்களை நெருங்கி, பார்கவியின் கையில் இருந்த கிரிக்கெட் மட்டையை வாங்கினான் பார்த்திபன்.
அவளுக்கு முன்னே சென்று நின்று, மட்டையை எப்படிப் பிடித்து நிற்க வேண்டும் என்று செய்து காண்பித்தான். அவளோ தொலைக்காட்சியில் பார்த்தது போலவே ஸ்டைலாக மட்டையைப் பிடிக்க, முறைத்தார்கள் சிறுவர்கள்.
“டேய் இங்க வாங்கடா” என்று அவர்களை அழைத்து, அவர்களுக்குப் பந்து வீசும் நுணுக்கங்களைச் சொல்லித் தந்தான் பிரபஞ்சன்.
அந்த இடைவெளியில், “பேட் ஹேண்டில ரெண்டு கையாலயும் பிடிங்க பார்கவி. கால இப்படி வைக்கணும்” என்று அவள் பின்னே சென்று நின்று அவளின் கைப் பிடித்து மட்டையைப் பிடிக்கச் சொல்லிக் கொடுத்தான்.
அவளின் வாசனை திரவியத்தின் வாசம் அவன் நாசியை நெருடும் அளவுக்கு நெருக்கம்.
“இப்படி” என்று அவளின் கைப் பிடித்து, “காலை ஸ்டெடியா வச்சு நிக்கணும். பால் வந்ததும்தான் அதை அடிக்கக் காலை தேவைப்பட்டா நகர்த்தணும்” என்று சொல்லித் தந்தான். ஐந்தே நிமிடத்தில் அவன் கற்ற நுணுக்கங்களை எல்லாம் அவளுக்குப் போதித்தான். அன்றைக்கு அவள் பார்த்த பார்வை, அந்தப் புன்னகை இப்போது அவன் நினைவில் வந்து தொந்தரவு செய்தது.
“ரைட், நீங்க பால் போடுங்க பார்த்தி. நான் சரியா அடிக்கறேனான்னு பார்ப்போம்” என்றாள் புதிதாகத் துளிர்த்த நம்பிக்கையுடன். அவன் பந்து வீச, அவள் தலைமுடி முன்னே பறந்து வந்து அவள் முகத்தில் மோதியது. அதனால் பந்தை அடிக்காமல் தவற விட்டிருந்தாள் அவள்.
“இருங்க வர்றேன்” என்று ஓடி மிக இயல்பாக, தன் அணியினருக்கு எப்போதும் உதவுவது போல அவளுக்கும் உதவினான் அவன்.
அவளின் தலைமுடியை மொத்தமாகக் கையில் அள்ளி, சுருட்டினான்.
“அச்சோ பார்த்தி, என்ன பண்றீங்க” தலையைச் சற்றே திருப்பி அவனைப் பார்த்து பதறினாள்.
“இரு பாரு” அவளின் தலையில் இருந்த கிளிப்பை எடுத்து, மொத்தமாய் முடியை அள்ளி கொண்டையிட்டு, கிளப்பில் அடக்கினான்.
“இப்போ பேட் பண்ணுங்க” என்றான், புன்னகைத்தாள் அவள்.
அந்தப் பந்தை சரியாக எதிர்கொண்டு அடித்து விட்டாள். மறுகணம் அந்தப் பந்தை போலவே அவள் முடியும் பறந்து முகத்துக்கு வந்தது.
“அட..” என்று சலித்து அவளிடம் ஓடி வந்து, மீண்டும் அவளுக்கு உதவினான் பார்த்திபன்.
அவனைத் திரும்பி நோக்கிய விழிகளில் வித்தியாசமான உணர்விருக்க, “என்ன?” என்றான் கண்களால்.
“எங்கப்பா நான் சாப்பிட உட்கார்ந்தா இப்படித்தான் எனக்குக் கொண்டை போட்டு விடுவார்” என்றாள்.
“ஓ” என்று புன்னகைத்து, அவளுக்குப் பந்து வீசச் சென்றான். அவள் விழிகள் அவனை ஆழமாக ஊடுருவின. அது பந்தை எதிர்நோக்க பார்வையை அப்படிக் குவிக்கிறாள் என்றே நினைத்திருந்தான் அவன். இன்று அந்தப் பார்வைக்கான அர்த்தம் வேறு விதமாக விளங்கியது.