பார்த்திபனின் மனத்தில் சிறிய சஞ்சலம் இருந்தாலும் இரவில் ஆழ்ந்து உறங்கியிருந்தான்.
காலையில் அம்மாவை கண்டதும் முந்தைய இரவு சத்தம் போட்டதற்கு மன்னிப்பு கேட்டு விட்டான்.
“நாங்களும் மண்டபம் புக் பண்ண முன்னாடி உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும், எங்க மேலயும் தப்புதான்ப்பா” என்றார் சத்யபாமா.
“என்னம்மா தப்பு அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க. விடுங்க. அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்றான் சமாதானமாக.
“அடுத்துன்னா.. அப்ப இந்த மண்டபம் வேணாம்ங்கறியா? புக் பண்ணத மாத்த வேணாம்ப்பா. என் மனசுக்கு நல்லதா படல”
“ப்ச், நான் ஒன்னும் சொல்லலம்மா” என்று அலுப்புடன் சொன்னவன், சோஃபாவில் சரிந்தான்.
அந்நேரம் வெளியில் சென்றிருந்த துரைராஜ் வரவும், “இனிமே அவங்க சொல்றதுக்கு எல்லாம் சரின்னு சொல்லாம, உங்க முடிவுப்படி செய்ங்கப்பா. அவங்களுக்கு நம்ம வசதி நல்லாவே தெரியும். அதுனால புரிஞ்சுப்பாங்க. அதுக்கும் மேல ஏதாவது டிமாண்ட் பண்ணாங்கன்னா என்கிட்ட சொல்லுங்க. உங்களோட நானும் வர்றேன், அவங்ககிட்ட நாம நேரா பேசிக்கலாம்” என்றான் தீர்க்கமாக.
“நம்ம பட்ஜெட்டை மீறி போனா நமக்குச் சிரமம்ப்பா. கல்யாணத்துக்காக நான் கடன் வாங்கினா நாளைக்கு அவங்க மகளும்தானே கஷ்டப்படணும்? அதெல்லாம் அவரும் யோசிப்பார். அதுனால நீங்க நேத்து மாதிரி டென்ஷனாகாம இருங்கப்பா” என்றான் அப்பாவிடம்.
துரை ராஜ் மகனின் தோளை தட்டி, “இனிமே அப்பா டென்ஷனாகல, நீ அமைதியாகு. அவங்க விரும்புற மாதிரி கல்யாணத்தைப் பெருசா செஞ்சுடலாம். விடுப்பா பார்த்திபா” என்றார்.
“இந்தா சத்யா, நீ கேட்ட மீனு” என்று பையை மனைவியிடம் நீட்டினார்.
“மீனை கழுவி தரவா சத்யா?” என்று அவர் கேட்க, “இல்ல, நான் பார்த்துக்கறேன். நீங்க வேற ஏதாவது வேலை இருந்தா பாருங்க” என்று பையை வாங்கிக் கொண்டு பின்பக்கம் சென்றார் சத்யபாமா.
அப்பாவும், மகனும் ஒன்றாக அமர்ந்து கணக்கு வழக்கை எடுத்து வைத்து சரி பார்த்து விவாதித்தார்கள்.
காலை உணவு முடித்ததும் கிரிக்கெட் விளையாட கிளம்பி விட்டான் பார்த்திபன். கிரிக்கெட் விளையாடுவது அவனது பல வருடத்தைய வழக்கம்.
அவனுக்குத் தெரிந்த கிரிக்கெட் அகாடெமியில் அவனும், பிரபஞ்சனும் உறுப்பினர்கள்.
வார இறுதி நாள்களில் அவர்களின் பொழுது போக்கே அதுதான். அதிகாலையில் விளையாட சென்று மாலையில்தான் வீடு திரும்புவார்கள்.
இன்றைக்கும் அதற்காகத்தான் கிளம்பினான்.
“பார்த்திபா, பிரபஞ்சன் வீட்டுக்குத்தானே போற? கொஞ்சமா மீன் குழம்பு தர்றேன் அவங்களுக்கு எடுத்துட்டுப் போ” என்று அவனை நிறுத்தி, மீன் குழம்பு, வீட்டில் பூத்த பூக்கள், பழங்கள் எனப் பையை நிறைத்து அவனிடம் நீட்டினார்.
அத்துடன் பிரபஞ்சனின் வீடு சென்றான் அவன்.
“வாங்கண்ணா” என்று அவனுக்குக் கதவை திறந்த பிரியதர்ஷினி, “பிரபா, பார்த்தி அண்ணா வந்திருக்காங்க” என்று கணவனை அழைத்தாள்.
“வாடா மச்சா, என்னடா காலையிலேயே என்னைப் பாக்க வந்துருக்க? வீடு மாறி வந்திட்டியா என்ன? பிரபாங்கற பேர்ல குழம்பிட்டான் போலப் பய” என்று நண்பனின் தோளில் கைப் போட்டு கேலி பேசினான் பிரபஞ்சன்.
“உங்களுக்குப் பயம் விட்டு போச்சு மிஸ்டர் பி, உங்க பச்ச மண்ணைக் கூப்பிடவா?” என்று பார்த்திபன் எட்டி சமையல் அறையைப் பார்க்க, “நீ என்ன கூப்பிடுறது, நானே கூப்பிடுறேன்டா” என்று சிரிப்புடன் சொன்னவன், “பிரியா” என்று உள்நோக்கி குரல் கொடுத்தான்.
“இதோ வந்துட்டேன் பிரபா” என்று உள்ளிருந்து பிரியதர்ஷினி குரல் கொடுக்க, “இந்தப் பார்த்திப் பைத்தியக்காரனும் பிரபாங்கற பேர்ல கன்பியூஸாகிட்டேன் போலப் பிரியா. இல்லடா? காதலிய தேடி போகாம என்ன மிஸ்டர் பார்த்தி, உங்க காத்து இன்னும் எங்க பக்கம் வீசுது?” என்று நக்கலாகக் கேட்டான் பிரபஞ்சன்.
“காதலிய விடக் கள்ளக்காதலி தனிக் கிக் மச்சா” என்று நண்பனை உரசி அவன் அமர, “ச்சே, தள்ளி உக்காருறா. என் பிரியா பார்த்தா என்னைக் கொல்ல போறா” என்று நண்பனை இடித்துத் தள்ளினாள்.
“அண்ணா டீ” என்று கூடத்துக்கு வந்த பிரியதர்ஷினி நண்பர்கள் இருவரையும் கண்ணைச் சுருக்கி குறுகுறுவெனப் பார்த்தாள்.
“அச்சோ.. டேய்..” என்று பிரபஞ்சன் நகர்ந்து அமர, பார்த்திபன் பக்கென்று சிரித்திருந்தான்.
“டீய வாங்குடா” என்று பிரபஞ்சன் மிரட்ட, தேநீரை வாங்கி அருந்தினான்.
பிரபஞ்சனின் அம்மா மரகதவல்லி வீட்டில் இல்லை. அவரைக் குறித்து விசாரித்தான்.
“அம்மா மீன் குழம்பு குடுத்தாங்கம்மா, இந்தாங்க” என்று சத்யபாமா சூடாகச் சமைத்துக் கொடுத்திருந்த மீன் குழம்பை கொடுத்தான்.
அதை வாங்கிய பிரியதர்ஷினி, “மட்டன் குழம்பு ரெடிண்ணா, நீங்க பிரேக் பாஸ்ட் எங்களோடதான் சாப்பிடணும்” என்றாள்.
“நான் வீட்ல சாப்பிட்டுட்டுதான் மா வந்தேன். எனக்கு மேட்ச் இருக்கு. நான் கிளம்பறேன்”
“பரவாயில்ல, எங்களோட உக்கார்ந்து ரெண்டு இட்லி சாப்பிடுங்க. அப்புறமா மேட்ச் ஆட போவீங்க” என்று அன்பு கட்டளை இட்டாள்.
அவன் மறுக்கப் போக, “ரொம்பப் பண்ணாத மச்சா” என்று அவனை முறைத்தான் பிரபஞ்சன்.
அதற்குள் பிரியதர்ஷினி அனைத்தையும் உணவு மேஜையில் எடுத்து வைத்திருந்தாள்.
“டேய், பிரபா. நீ சாப்பிடு. எனக்கு வேணாம்” என்றான் நண்பனிடம்.
“இப்போ நீதான் டா என்னைச் சின்ன வீடு போல ட்ரீட் பண்ற. ரொம்பப் பிகு பண்ணாம எழுந்து வாடா” என்று பிரபஞ்சன் சொல்லவும், “ச்சைக்” என்று முகம் சுழித்தான் அவன்.
“அடப்பாவி பார்த்தி, உனக்குக் கல்யாணம் நிச்சயமாகவும், என்னை ச்சைக்ன்னு சொல்லிட்டியேடா, அநியாயம் டா மச்சா. நாம அப்படியா டா பழகினோம். முப்பது வருஷ பழக்கத்தை இப்போ வந்த ஒருத்திக்காக ச்சைக்ன்னு சொல்லிட்டியேடா. என் மனச சல்லி சல்லியா நொறுக்கிட்டியேடா மச்சா” என்று தீவிரமாகப் புலம்பினான்.
“மிஸ்டர் பி, உனக்கு என்ன அவார்ட்டா இப்போ குடுக்கறாங்க? என்னத்துக்கு இப்படிச் சீன் போட்டுட்டு இருக்க?” என்று நண்பனின் தோளில் அடித்து, அப்படியே சுற்றி அவன் கழுத்தை இறுக்கினான்.
அந்நேரம், “பிரபா..” என்று பிரியதர்ஷினி வரவும், பட்டென்று இருவரும் பிரிந்து நின்றார்கள். அவளின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
பிரியதர்ஷினி மூவருக்கும் தட்டு வைத்து உணவை பரிமாறினாள்.
பார்த்திபன் ஒரேயொரு இட்லியோடு உண்டதாகப் பேர் செய்து அவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
அவர்களும் உண்டு முடித்ததும், “இந்தாங்கண்ணா, பாயாசம். சூடா இருக்கு. உங்களுக்குப் பிடிக்கும் இல்ல? சாப்பிடுங்க” என்று சிறிய கிண்ணத்தில் அவனுக்குப் பாயாசம் கொண்டு வந்து கொடுத்தாள் பிரியதர்ஷினி.
பிரபஞ்சனுடன் சோஃபாவில் அமர்ந்தபடி, “என்னம்மா ஸ்பெஷல்? இன்னைக்குக் காலையிலேயே பாயாசம் செஞ்சுருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே ஒரு கரண்டி பாயாசத்தை ரசித்து உண்டான்.
“நாங்க ஈவ்னிங் பார்கவி வீட்டுக்கு போறோம்ண்ணா. அவளுக்குப் பாயாசம்ன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் சில்லுன்னு சாப்பிட அவளுக்குப் பிடிக்கும். அதான் இப்பவே செஞ்சு பிரிட்ஜ்ல வச்சுட்டா, ஈவ்னிங் எடுத்துட்டு போக சரியா இருக்கும்னு செஞ்சேன்” என்றாள்.
பார்கவிக்காகச் செய்த பாயாசம். அந்தப் பெயரை கேட்டதும் அவன் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றன.
“ஸ்வீட் சரியா இருக்காண்ணா?”
“ம்ம்ம்” என்றவனுக்கு மேலே பேச்சே வரவில்லை. நான் என்ன செய்தேன்? எப்படி அவள் மனத்தில் இடம் பிடித்தேன்? என் மேல் அவளுக்கு எப்படிப் பிரியம் உண்டானது? என்று பார்கவியைச் சுற்றியே அவன் எண்ணங்கள் சுழன்றன.
“எங்கப்பா என் கல்யாணத்தைப் பத்தி பேச்செடுத்ததும் உங்க முகம் ஞாபகம் வர்ற அளவுக்கு எனக்கு உங்களைப் பிடிக்கும் பார்த்தி” பார்கவியின் வார்த்தைகள் பசுமையாய் அவன் மனத்தில் வந்து போனது. அவனுக்கு அந்த வார்த்தைகள் எப்படி மறக்கும்? நம்மை ஒருவர் நேசிக்கிறார் என்பதே நிரம்ப விசேஷமானதுதானே!
அதிலும் அவனை நேசிப்பதாகச் சொன்ன முதல் பெண் பார்கவி.
அவனுக்கு நன்கு தெரிந்த ஒருத்தி. இது எப்படிச் சாத்தியம்? எப்படி என் கண்ணில் படாமல் போனது? என்னை ஒருத்தி நேசிப்பதையே கண்டுகொள்ளாமல் எப்படி இருந்தேன் நான்? என்ற கேள்வியே தற்போது அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது.
அவனது நண்பன் பிரபஞ்சனது பல வருடத்தைய காதல். அதுவும் சொல்லாத காதல். அவனது காதலை பெற்றோர் நிச்சயித்த திருமணமாக நிகழ்த்திக் கொண்டான் அந்தக் கள்ளன். நடுவில் அவன் பட்ட காதலின் அவஸ்தையெல்லாம் உடனிருந்து கண்டவனுக்குக் காதல் என்றால், இந்தப் பழம் புளிக்கும் கதைதான்.
“நீங்க பேசிட்டு இருங்க அண்ணா. எனக்குக் கிச்சன்ல வேலையிருக்கு” என்று பிரியதர்ஷினி நகர, “நான் ஹெல்ப் பண்ணவா பிரியா?” என்று மனைவியிடம் கேட்டான் பிரபஞ்சன்.
“வேணாம் பிரபா” என்று உள்ளே சென்றிருந்தாள் அவள்.
“என்னடா பாயாசத்தைப் பாய்சன் போல மிரண்டு போய்ப் பாக்கற? நல்லா இல்லையா?” நண்பனின் கையாலேயே ஒரு வாய் தனக்கு ஊட்டிக் கொண்ட பிரபஞ்சன், “என் பொண்டாட்டி செஞ்ச பாயாசம் நல்லா இல்லாம போகுமா?” என்று பெருமை பீற்றினான்.
“டேய்” என்று பார்த்தி முறைக்க, “பாரு, பொண்டாட்டியை பாராட்டினா சின்ன வீட்டுக்குக் கோபம் பொத்துட்டு வருது” என்று அவன் சிரிப்பை அடக்கி சொல்ல, “அடங்குடா டேய்” என்று பல்லைக் கடித்த பார்த்திபன், அந்தப் பொய் கோபத்தைக் கூட நெடுநேரம் பிடித்து வைக்க முடியாமல் சிரித்து விட்டிருந்தான்.
“என்னடா மச்சா பிரச்சனை? அந்தப் பிரபா வீட்ல எதுவும் பிரச்சினை பண்றாங்களா?” நண்பனின் கண் பார்த்துக் கேட்டிருந்தான் பிரபஞ்சன்.
நொடி நேர தாமதத்திற்குப் பிறகு, “பிரச்சினைன்னு பெருசா இல்ல மச்சா. ஆனா சின்னச் சின்ன விஷயத்தையும் அவங்கதான் டிசைட் பண்றாங்க. அது அப்பாவை அப்செட் பண்ணுது” என்றான்.
“பொண்ணோட அப்பா போலீஸ்காரர் இல்லையா? சோ இதெல்லாம் நார்மல்டா. நான் முன்னாடியே சொன்னதுதான் யுவர் லைஃப், யுவர் டெசிஷன்ஸ். இது உன் கல்யாணம், சோ உன்னோட முடிவுகளா இல்லைன்னாலும் உனக்குப் பிடிச்ச முடிவுகளா மாத்திக்கோ. அவ்ளோதான் சொல்லுவேன்” என்று நண்பனாக அறிவுரை சொன்னான்.
“நேத்து கூட அம்மாப்பா மண்டபம் புக் பண்ண போய் இருந்தாங்க. அவங்க வேற ஒரு மண்டபம் புக் பண்ண இருந்த நேரத்துல, பிரபா அப்பா போன் பண்ணி அவரு சொல்ற மண்டபத்தை அவங்களைப் புக் பண்ண வச்சிருக்கார்”
“ஓ?”
“அது.. நம்ம பார்கவியோட மண்டபம்..” நம்ம பார்கவி என்று மிக இயல்பாக உச்சரித்த பின்னே, அதை உணர்ந்து திடுக்கிட்டான்.
“பார்கவி வீட்டு மண்டபமா? எங்க கல்யாணம் கூட அங்கதானே டா நடந்தது? ஏன் உனக்கும் அப்பாம்மாக்கும் அந்த மண்டபம் ஓகே இல்லையா?”
“பிரச்சனை அந்த மண்டபம் புக் பண்ணதுல இல்ல பிரபா. அப்பா வேற நாலு மண்டபம் பார்க்க போன நேரத்துல, பிரபா அப்பா போன் பண்ணி நம்ம பாரு வீட்டு மண்டபத்தைப் புக் பண்ண சொன்னதுதான் அப்பாக்குக் கோபம்”
“சரிடா, இப்போ என்ன பண்ண போற? அவங்கப்பா கிட்ட இது பத்தி பேச போறியா? புக் பண்ண மண்டபத்தைக் கேன்சல் பண்ண பெரியவங்க யோசிப்பாங்கடா. சோ நீயும் அப்பா போல யோசிக்காம பிராக்டிகலா யோசிச்சு முடிவெடு”
“பிரபா, இவங்க மண்டபம் புக் பண்ண போனப்போ பாருவும் அங்க இருந்திருக்காடா. அவ கையால என் கல்யாணத்துக்கு மண்டபம் புக் பண்ணியிருக்காங்க” என்றான் கரகரத்த குரலில்.
“ஓகே. அதுனால என்னடா?” என்று குழப்பத்துடன் கேட்டான் பிரபஞ்சன்.
“அவதானேடா ஓனர் பார்த்தி? அப்புறம் அவ புக் பண்ணாம வேற யார் புக் பண்ணுவா?” கூர்மையாய் வந்து விழுந்த கேள்வியில் கண்களை இறுக மூடித் திறந்தான் பார்த்திபன்.