பார்த்திபன் காதலி – 5 (2)

அவள் கண்கள் திரையை வெறித்தன.

“என்ன பண்ற கவி?” என்று தொடங்கி, “என்னை என்னமோ பண்ற கவி” என்று கண்ணடித்து முடித்து வைத்திருந்தான். அந்தக் குறுஞ்செய்திகளை இரண்டு முறை வாசித்து விட்டாள். அது அவளில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை என்பதே அவளுக்குக் கவலையைத் தந்தது.

இந்த மாதிரியான காதல் ரசம் சொட்டும் இரட்டை அர்த்த செய்திகளை நாளை அவள் மணக்க போகிறவன் அனுப்புகிறான் என்றால் என்னவெல்லாம் வேதியியல் மாற்றங்கள் அவளுள் நிகழ வேண்டும்?

கண்கள் கனிய வேண்டாமா? கன்னங்கள் குழைந்து செம்மையுற வேண்டாமா? இதழ்கள் இளகி வெட்கப் புன்னகை சிந்த வேண்டாமா? ம்ம், அவளிடம் எந்த மாற்றமுமில்லை.

அவளுக்கும் சில கற்பனைகள் இருந்தது. ஆனால் தற்போது அவளுக்குத் தன்னைக் குறித்தே கவலையானது.

அவள் குறுஞ்செய்திகளைப் பார்த்து விட்டால் என்று தெரிந்ததும், “எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்கு. இன்னைக்கு நாம மீட் பண்ணலாமா?” என்று கேட்டு அடுத்தச் செய்தியை அனுப்பினான் பாரிவேந்தன்.

அந்தச் செய்தியை படித்து விட்ட பிறகு எப்படிப் பதிலளிக்காமல் தப்பிப்பது என்று தடுமாறியவள், “அம்மா இன்னைக்கு ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க. பெரியம்மா அண்ட் என் ஃப்ரெண்ட் ஃபேமிலி கூட எங்களோட வர்றாங்க. அதுனால இன்னைக்கு நான் ரொம்பவே பிஸி” என்று பதில் அனுப்பி வைத்தாள்.

“ஓகே. அப்போ நாளைக்கு ஈவ்னிங் பார்க்கலாமா? டின்னர்? இல்லன்னா காஃபி டேட்?” பாரியும் பின் வாங்குவதாக இல்லை.

“எனக்கு நாளைக்கு ஆபீஸ் இருக்கே” என்று அனுப்பி விட்டு அவனைத் தவிர்க்கிறோம் என்பது அப்பட்டமாக அவனுக்குத் தெரிந்து விடுமோ என்ற சங்கடத்துடன் நாக்கை கடித்தாள்.

“ஐ வில் பிக் யூ அப் ஃப்ரம் ஆபீஸ் பியூட்டிபுல்” என்று அலட்டாமல் பதில் அனுப்பினான். இப்போது சரியென்று சொல்வதைத் தவிர அவளுக்கு வேறு வழிகள் இல்லையே.

“ஓகே” என்று அனுப்பினாள். பதிலாக இதயம் சுமந்து சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பினான். பார்கவியின் விழிகள் அதிர்ந்து விரிய, தொண்டைக் குழி அவஸ்தையாய் ஏறியிறங்கியது.

நாளைதான் வருவான் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக அமர்ந்திருந்தாள்.

பத்து நிமிடங்களில் அவளின் பெரியம்மா வீடு வந்து விட்டார்கள்.

“காவேரி, கல்யாண பத்திரிக்க என்னைக்குத் தர்றேன்னு சொல்லியிருக்காங்க?” என்று பெரியம்மா விசாரிக்க, “ரெண்டு நாள்ல வந்துரும்னு சொன்னாருக்கா” என்றார் காவேரி.

அம்மா, பெரியம்மா பேச்சை கேட்டபடி அமர்ந்திருந்தாள். பெரியம்மா அவளுக்குத் தலை பின்னி பூ வைத்து விட்டார்.

“ஆமா, பையனுக்கு எத்தன பவுன் போட போறீங்க காவேரி?” என்று அவர் கேட்க, அந்தப் பேச்சே அவளுக்குப் பிடிக்கவில்லை. சத்தமாகச் சலித்துக் கொண்டாள்.

“பாரும்மா இங்க பாரு. பொண்ணு கல்யாணம்னா இதெல்லாம் சகஜம், நாம சும்மா பேச்சுக்கு என்ன வேணாலும் புரட்சி பேசலாம். ஆனா பெரும்பாலும் சாதி பாக்காம இருக்க மாட்டாங்க. சீரு, செனத்தி, நகை, நட்டுன்னு, வரதட்சணை வாங்காமயும் இருக்க மாட்டாங்க. தெரிஞ்சுக்கோ” என்றார்.

“நாம மொதல்ல வரதட்சணை குடுக்க மாட்டோம்னு கட் அண்ட் ரைட்டா சொல்லணும் இல்ல பெரிம்மா? அதை விட்டுட்டு நாமளே எல்லாத்தையும் அவங்களுக்கு வசதியா எடுத்து நீட்டினா..”

“பார்கவி” என்று மகளை அதட்டி அடக்கினார் காவேரி.

“போம்மா. இதுக்குதான் நான் வாயே திறக்கறது இல்ல.” என்று வாடிய முகத்துடன் எழுந்து உள்ளே சென்று படுக்கையில் விழுந்து கண்களை மூடினாள். அவள் அப்படியே உறங்கியிருக்க, “பாரும்மா” என்று அவளின் தோளை பிடித்து உலுக்கி எழுப்பினார் காவேரி.

“என்னம்மா?” அலங்க மலங்க விழித்துக் கேட்டாள்.

“எந்திரி, மூஞ்சி கழுவிட்டு வெளில வா. மாப்ள வந்திருக்கார்”

“என்னம்மா..” என்று அதிர்ந்தவளை இழுத்துப் போய்க் குளியல் அறைக்குள் விட்டார் காவேரி.

பாரிவேந்தன் அவளைப் பார்த்ததும் பற்கள் தெரிய புன்னகைத்தான்.

அவனுக்கு மாப்பிள்ளை உபசாரம் எல்லாம் பலமாக இருந்தது.

இம்முறை அவளிடம் அனுமதி கேட்டு நிற்காமல் நேரடியாகக் காவேரியிடம் பேசி அனுமதி வாங்கியிருந்தான் அவன்.

அவளிடம் வந்து, “நான் அப்பாகிட்ட சொல்லிட்டேன். நீ மாப்ளயோட போய்ட்டு வா பாரு” என்றார் காவேரி.

“அப்போ ஷாப்பிங்ம்மா?”

“அது நாங்க பார்த்துக்கறோம். நீ கிளம்பு” என்று அவளைப் பாரிவேந்தனுடன் அனுப்பி வைத்தார்.

அவள் காரில் ஏறியதும், மிக இயல்பாக அவள் பக்கம் சாய்ந்து அவளுக்குச் சீட் பெல்ட்டை போட்டு விட்டான் அவன். பார்கவி மூச்சை இழுத்து உடலை உள்ளிழுத்து அமர்ந்தாள்.

“நாம மால் போய்ட்டுக் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே அங்கேயே லஞ்ச் சாப்பிட்டுட்டு வரலாமா? உனக்கு ஓகேவா?” என்று அவன் கேட்க, “ஓகே” என்றாள். மறுநிமிடம் காரை வேகமாக நகர்த்தினான் அவன்.

“மால், ஷாப்பிங்” என்று சொன்னவன் நேராக அவளை அப்போது வெளியாகி இருந்த புதுப் படத்துக்கு அழைத்து வந்திருந்தான்.

“மூவியா?” என்று ஆச்சரியமாக அவள் கேட்க, “ம்ம், பின்ன மால்ல வேறென்ன என்டர்டெயின்மென்ட் இருக்கு நீயே சொல்லு? கேம் சோன் போக நாம என்ன கிட்ஸா” என்று அவன் கேலிச் சிரிப்புடன் கேட்க, கண்களாலேயே தன் மறுப்பைத் தெரிவித்தாள் அவள்.

“பிளீஸ், கவி. நான் ஆல்ரெடி டிக்கெட் புக் பண்ணிட்டேன்” என்று கெஞ்சலாகச் சொன்னான்.

அவளின் கைப் பிடித்து விரல் கோர்த்து, “நாம ஃபர்ஸ்ட் டைம் வெளில வந்திருக்கோம். நீ இப்படி மூட் ஆஃப் ஆனா ஐ வில் ஃபீல் பேட். பிளீஸ் கவி, நெக்ஸ்ட் டைம் உன்னைக் கேட்காம எதுவும் செய்ய மாட்டேன் ஓகே?” என்று அவளின் கையை அழுத்தி சொன்னான். அவன் கையை அப்படியே உதறி விட்டு ஓடி விட வேண்டும் போலிருந்த மனத்தை மிகுந்த சிரமப்பட்டு அடக்கினாள்.

மெதுவாக அவள் கரத்தை இழுத்தான். அவனோடு இழுபட்டாள் அவள்.

பொதுவாக அவளுக்குத் திரை அரங்கில் படம் பார்ப்பது அவ்வளவு பிடிக்காது. இருளும், அரங்கம் அதிர சத்தமும், அடைக்கப்பட்ட இடமும் என ஒருவித ஒவ்வாமைதான் அவளுக்கு.

இப்போதும் இருளில் இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.

பாரிவேந்தனின் தோள் இயல்பாக அவள் தோளை உரசியது. அவள் புறமாகச் சாய்ந்து அவளின் கைப் பற்றி வருடி விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.

அதுவொரு ஆங்கிலப் படம். காதல் காட்சிகள் கொஞ்சம் அதீதமாகவே இருந்தது.

அவனது பெருவிரல் அவள் கையை வருடியபடியே இருக்க, பல்லைக் கடித்தாள் அவள். அவன் மென்மையாக வருடினாலும் அவன் பிடி அழுத்தமாக இருந்தது.

அவள் கரத்தின் பூனை முடிகள் அனைத்தும் புல்லரிப்பில் சிலிர்த்து நின்றன. அதை உணர்ந்து சன்னமாய்ச் சிரித்தான் அவன்.

அவளுக்குச் சிலிர்த்தது நிச்சயமாகப் பிடித்தத்தினால் அல்ல என்று பார்கவி அவனிடம் எப்படிச் சொல்வாள்.

இடைவேளை முடிந்து படம் இறுதியை நெருங்க, பாரியின் முகம் பார்கவியை நெருங்கியிருந்தது. அந்த இருளில் அவன் முகம் வசீகரிக்க, அவளைக் கண்ணெடுக்காமல் பார்த்து மெல்ல கண் சிமிட்டி அதன் வசீகரத்தை மேலும் கூட்டினான்.

அத்தனை நெருக்கத்தை எதிர்பாராதவள் சட்டென்று திகைத்து விழி விரித்து அவனைப் பார்த்தாள்.

error: Content is protected !!
Scroll to Top