பார்த்திபன் காதலி – 5 (1)

அந்த அறையின் திரைச்சீலைகள் காற்றுக்கு அசைந்தாடி பிரிந்து பிரிந்து சேர, நீண்ட கோடாய் அறைக்குள் வெளிச்சம் எட்டி எட்டிப் பார்த்தது. கனத்த போர்வைக்குள் கணப்பை தேடும் பூனைக் குட்டியாய் சுருண்டிருந்தவளின் முகம் மட்டுமே வெளியே தெரிந்தது. அவள் முகத்தில் விழுந்த முடி கற்றைகளைக் காற்று கலைத்திட, சூரியனின் கதிர்கள் அவள் முகத்தில் விழுந்து அவளின் உறக்கத்தைக் கலைத்தது.

உடனே அவள் கரம் போர்வையை முகம் வரை இழுத்துப் போர்த்தியது. மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்ந்தவளை அலைபேசியில் தொடர்ந்து வந்த குறுஞ்செய்திக்கான அறிவிப்பொலி தொந்தரவு செய்தது.

ஞாயிறுக்கே உரிய சோம்பல் அவளை நிறைத்திருக்க, உறக்கம் கலைந்தாலும் கண் மூடிக் கிடந்தாள். ஒருவித சுக மயக்க நிலை.

இப்போது அலைபேசியில் அழைப்பு வர, அவள் உதடுகள் புன்முறுவல் பூத்தன. தோழி பிரியதர்ஷினிக்கென்று பிரத்யேக அழைப்பொலியை வைத்திருக்கிறாள். ஆகவே அழைப்பது தோழி என்று தெரியும்.

அலைபேசியைக் கை நீட்டி எடுத்து, “ப்ரீயூ, நல்லா தூங்குறவங்கள எழுப்புறது பாவமாம் தெரியுமா? அதுவும் இப்படி விடியாம எழுப்பினா.. மகா பாவமாம்” என்று உறக்கம் சுமந்த குரலில் பார்கவி கேலி செய்ய அந்தப் பக்கம் கிளுக்கி சிரித்தாள் பிரியதர்ஷினி.

“என்னது விடியாமயா? தூங்கு மூஞ்சி பாரு, மணி என்ன தெரியுமா? எட்டு நாப்பது” என்றாள் பிரியதர்ஷினி கிண்டலாகச் சிரித்து.

“பத்து மணிக்கு முன்னாடி எழுந்தா சண்டேக்கு என்ன ப்ரியூ மரியாத?”

“அதுவும் சரிதான். ஆனா நாளைக்கு மாமியாரு வீட்ல போய் நீ இப்படிச் சொல்ல முடியாதே பாரு. இங்க பாரு, என் அத்தையெல்லாம் இப்போ வரை என்கிட்ட “என்ன சமையல் தர்ஷினி?” கேள்வியை விடவே இல்லை தெரியுமா?”

“உனக்குக் கல்யாணமாகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல. அதுக்குள்ள பெரிய மனுஷி போலப் பேசாத. உனக்குச் செட்டே ஆகல”

“செட்டாகலன்னாலும் உன்னை விடச் சீனியர் நான்.”

“சரிங்க சீனியர். இப்போ எதுக்குக் கால் பண்ணீங்க?”

“அதுவா, நேத்து உங்கம்மா கால் பண்ணாங்க. உனக்குக் கல்யாண ஷாப்பிங் போகணும்னு. சோ இன்னைக்கு நானும், பிரபாவும் உங்க வீட்டுக்கு வர்றோம்னு சொல்ல கால் பண்ணேன். நீ அம்மா கிட்ட சொல்லிடு ஓகே?”

“இன்னைக்குப் பெரியம்மா வீடு வேற வர்றாங்கன்னு சொன்னாங்க..”

“ஓ, அப்போ நான் வர வேணாமா பாரு?” என்று பிரியா கோபமாகக் கேட்க, “ஐயோ, நீ வா ப்ரீ. நீ வந்தா எனக்கு ரொம்பவே ஹெல்ப்புல்லா இருக்கும். இப்போல்லாம் எங்கம்மா, பெரியம்மா அடாவடி தாங்கல” என்று அலுத்துக் கொண்டாள் பார்கவி.

“பின்ன பொண்ணுக்குக் கல்யாணம்னா சும்மாவா?”

“ஷ்ஷ்ஷ்ஷப்ப்பா, பாட்டிம்மா நீங்க எப்போ வீட்டுக்கு வர்றீங்க?” என்று நக்கலாகக் கேட்டாள்.

“ஈவ்னிங் வந்துருவேன் செல்லக்குட்டி” என்று கிண்டலாகச் சொன்ன பிரியதர்ஷினி, “இப்போதான் பிரேக் பாஸ்ட் சமைக்கறேன் பாரு. அண்ணா மட்டன் எடுத்துட்டு வந்து குடுத்துட்டுப் போனான். அது இட்லிக்கு தண்ணி குழம்பா வச்சுட்டுட்டேன். மதியத்துக்குக் கொஞ்சம் மட்டன் சுக்கா செய்யலாம்னு கறி எடுத்து வச்சா, பார்த்தி அண்ணா வீட்ல இருந்து மீன் குழம்பு வந்திருக்கு.. இப்போ நான் மதியத்துக்கு டென்ஷன் இல்லாம..” என்று அவள் சொல்லிக் கொண்டே போக, பார்த்தி என்ற பெயர் அவள் செவியில் விழுந்ததும் படக்கென்று சொடக்கிட்டது போல எழுந்து அமர்ந்து விட்டாள்.

“நாங்க, பார்த்தி அண்ணா கூடப் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுட்டு..”

என்று பிரியதர்ஷினி தொடர்ந்து கொண்டிருந்தாள்.

பார்கவிக்கு, ‘அவனைப் பற்றிப் பேசாதே’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. பிரியதர்ஷினியிடம் எதையும் மறைக்கும் பழக்கமில்லை அவளுக்கு. ஆனால் இப்போது என்னவென்று சொல்லுவாள்? அவனுக்கு நிச்சயமாகும் பெண்ணோடு பார்த்த பிறகு அவனிடம் தான் பிரியத்தைச் சொன்னதேப் பெரும் தவறு.

“பாரு..” சட்டெனச் சுயம் பெற்று, “என்ன பிரியா?” என்று கேட்டாள்.

“ஆஃபீஸ்ல ஆன் சைட் கேட்டுட்டியா?” என்று கேட்டாள்.

“ம்ம்”

“என்ன சொன்னாங்க?”

“உடனே எப்படி ப்ரியூ குடுப்பாங்க? சரியான ப்ராஜெக்ட் அமையணும் இல்ல? என்னை வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க.”

“அவங்ககிட்ட உனக்கு இன்னும் ஒரு மாசத்துல மேரேஜ்னு நீ சொன்னியா பாரு? உன் ஆளு யூஎஸ்ல இருக்காங்கன்னு சொன்னியா?”

“அதெல்லாம் சொல்லாம இருப்பேனா?” என்று சலிப்பும், கோபமுமாகக் கேட்டிருந்தாள்.

“இல்ல பாரு. உனக்கு விசா, அப்புறம் மத்த ப்ராசஸ்லாம் டைம் எடுக்கும் இல்ல? அதுக்காகக் கேட்டேன். அதுவும் இல்லாம கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நீ இங்க தனியா இருக்கறது கஷ்டமேன்னு..”

“ம்ம்ம்..”

“உன் ஆள் வீட்ல என்ன சொல்றாங்க?”

“என்ன சொல்லுவாங்க, என்னை வேலையை விட்டுட்டு அவங்க பையன் விசால, யூஎஸ் போகச் சொல்றாங்க.”

“அதுக்கும் டைம் எடுக்கும் இல்ல?”

“ஆமா, அப்படிப் போனா நான் அங்க வேலை பார்க்க முடியாதுன்னு நான் சொன்னா அவங்களுக்குக் கோபம் வருது”

“ஓஹோ. யார் கோபப்பட்டா? உன்னைத் திட்டினாங்களா சொல்லு? அவங்களை நான் வந்து பேசிக்கறேன்” என்று பிரியதர்ஷினி குதிக்க, “யாரு நீயி? நீ பேசுற அழகுக்கு அந்தம்மா.. நீ பேசாம இரு பாப்பான்னு உன்னைச் சொல்லிடும்” என்று கேலியாகச் சொல்லி சிரித்தாள் பார்கவி.

“ப்ச், பாரு”

“நீ நேர்ல வா, பார்த்துக்கலாம், பேசிக்கலாம்” என்று சிரிப்புடன் சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

மெதுவாகக் கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்துப் படுக்கையில் இருந்து கீழிறங்கினாள்.

மகளைக் கண்டதும், “உங்க மக எந்திரிச்சி வர்ற நேரத்தை பாருங்கங்க. நாளைக்கு இவ மாமியா வீட்ல என்னையத்தான் பேசப் போறாங்க” என்று காவேரி கணவரிடம் புலம்ப, “என் பொண்ணு அமெரிக்காலத் தனிக் குடித்தனம் பண்ண போறா. அங்க யாரு என் பொண்ணைக் கேள்வி கேட்க முடியும்?” என்று எதிர்கேள்வி கேட்டார் ரங்கராஜன்.

அவர்கள் பேச்சுக்கும், தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல, “அப்பா உங்களுக்குக் காஃபி தரவா?” என்று அப்பாவிடம் கேட்டாள் அவள்.

“உங்கப்பா காலையில எழுந்ததுல இருந்து ரெண்டு தடவ காப்பிக் குடிச்சாச்சு. நீ மொத சாப்பிட வா. அப்புறமா காப்பிக் குடிப்ப” என்றார் காவேரி.

“ப்பா, நீங்க சாப்பிட்டீங்களா?”

“நானும் இங்கதானே நிக்கறேன். உங்க மகளுக்கு என்னைய கண்ணு தெரியல பாருங்க.” என்று காவேரி அங்கலாய்க்க, “ம்மா, பசிக்குதும்மா” என்று அவரின் முந்தானையை இழுத்து தன் கையில் சுற்றினாள்.‌

“இப்போ மட்டும் அம்மான்னு வா” என்று கோபித்தாலும், அவளை இழுத்து இருக்கையில் அமர்த்திக் காலை உணவை பரிமாறினார்.

“நீ சாப்பிட்டியாம்மா?”

“நாங்க நேரத்துக்குச் சாப்பிட்டு மாத்திரை போட்டாச்சு. நீ சாப்பிடு” என்று செல்லமாக அதட்டினார்.

அவள் தட்டில் இட்லி வைத்து, ஆட்டுக்கறி குழம்பும், சுவரொட்டி வறுவலும் வைத்தார்.

“ம்மா, இந்தச் சுவரொட்டியை எடும்மா. நான்தான் சாப்பிட மாட்டேன்னு தெரியும் இல்ல?”

“உன் மூஞ்சி வெளிறி போய்த் தெரியுது பாப்பா. ரத்தம் கம்மியா இருக்குமா இருக்கும். அதான் அப்பாவை சுவரொட்டி வாங்கிட்டு வரச் சொன்னேன். ஒழுங்கா சாப்பிடு” என்று எடுத்து ஊட்டி விடப் போனார். அவளோ முகம் சுளித்துத் தலையைப் பின்னுக்கு இழுத்தாள்.

“சாப்பிடணும் பாரும்மா” என்று அப்பா சொல்லவும் வாயை திறந்து வேண்டா வெறுப்பாக வாங்கி மென்றாள்.

அவள் தலைக்குக் குளித்துக் கூந்தலை சிறிய கிளிப்பில் அடக்கியிருந்தாள். அந்தக் கிளிப் ஈரத்தில் கீழே நழுவி விழுந்திட, ரங்கராஜன் அதைக் குனிந்து எடுத்து, மகளின் முடியை கையால் கோதி சீராக்கி, அவளுக்கு அழகாகக் கிளிப் போட்டு விட்டார்.

அப்பாவை நிமிர்ந்து நோக்கி புன்னகைத்தாள்.

“அப்பாக்கு மண்டபத்துல வேலை இருக்குடா. நான் போய்ட்டு மதியம் வந்துடுவேன்” என்று மகளிடம் சொல்லி விட்டு மனைவிக்குச் சிறிய தலையசைப்பை தந்து வெளியேறினார் அவர்.

அவளின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பொலி கேட்க, “ம்மா, நீங்க பிரியாவை வீட்டுக்கு கூப்பிட்டீங்களா?” என்று காவேரியிடம் கேட்டாள்.

“ஆமா, உனக்கு என்ன பிடிக்கும்னு அவதான் சரியா பார்த்து எடுப்பா. அதுக்குத்தான் அவளைக் கூப்பிட்டேன்” என்றார். அதற்குக் கண்ணை உருட்டினாள்.

“அடி வாங்க போற நீ. இப்போல்லாம் என்ன கேட்டாலும் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு.. என்ன பாரும்மா.. உன் மாமியா எதிர்பார்க்கறதுல பாதியாவது நாங்க உனக்குச் செய்யணும் இல்ல?”

“செய்ய வேணாம்னுதான் சொல்றேன்ம்மா. நீங்கதான்..” என்றவளின் வாயில் இட்லியை திணித்து அவளைப் பேச விடாமல் செய்தார் காவேரி.

இட்லியை முழுங்கி, “வரதட்சணை கொடுக்கிறது கூடத் தப்புதான்ம்மா தெரியுமா?” என்று கேட்டாள்.

“எங்களுக்குத் தெரியாது. நீ சாப்பிடு” என்று மிரட்டினார். அதற்கும் கோபமாகக் கண்ணை உருட்டி, “பிரியா ஈவ்னிங் வர்றேன்னு சொன்னா. நாம எப்போ கடைக்குப் போறோம்னு சொல்லுங்க. அவ ஹஸ்பன்ட்டோட வந்துடுவா” என்றாள். மீண்டும் அவளின் அலைபேசி சத்தமிட, மகளின் கையில் சுற்றியிருந்த தன் சேலையை உருவி விட்டு அவள் கையில், அலைபேசியைத் திணித்து, “யாருன்னு பாரு” என்றார்.

“சாப்பிடும் போது செல்போன் பாக்க கூடாதுன்னு எப்பவும் மிரட்டிட்டு, இப்போ மட்டும் யாருன்னு பாக்க சொல்றம்மா?” நமுட்டு சிரிப்புடன் அவள் கேட்க, “நாளைக்கு இப்படிப் போய்ப் பேசி வைக்காத” என்று காவேரி புலம்பலாகச் சொல்லவும், “போம்மா” என்று உதடு சுழித்து அலைபேசி திரையை நோக்கினாள்.

பாரிவேந்தன் பத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தான்.

“ஹல்லோ பியூட்டிபுல்” என்று காலை வணக்கத்துடன் முத்தம் கொடுக்கும் ஸ்மைலி திரையை நிறைத்து முத்தமிட்டது.

error: Content is protected !!
Scroll to Top