பார்த்திபன் காதலி – 4 (2)

அவனுக்காக மதில் கதவை திறந்து விட்ட சத்யபாமா, “டிஃபன் எடுத்து வைக்கவா பார்த்தி?” என்று கேட்டார்.

“நான் வெளில சாப்பிட்டு வந்துட்டேன்ம்மா” என்றான்.

“சரி போய் மூஞ்சி கழுவிட்டு வா. அப்பா உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னார்”

“இதோ வந்துடுறேன்ம்மா” என்று அறைக்குள் சென்று மறைந்தான். அவன் உடை மாற்றி, துவாலையால் முகம் துடைத்தபடி வெளியே வர, அவன் பெற்றோர் கூடத்தில் அவனுக்காகக் காத்திருந்தார்கள். இருவரும் காரசாரமான விவாதத்தில் இருக்க, “என்னப்பா?” என்று அப்பாவின் பக்கத்தில் போய் அமர்ந்தான் அவன்.

“எல்லா இடத்துலயும் மாப்ள வீடுதானே ரொம்ப அலட்டிட்டு, அது வேணும், இது வேணும்னு டிமான்ட் பண்ணுவாங்க?”

“என்னன்னு சொல்லுங்கப்பா”

“இங்க எல்லாமே தலைகீழா இருக்குப்பா. பொண்ணு வீடு டிமாண்ட் பண்றாங்க. நாம எல்லாத்துக்கும் தலையாட்ட வேண்டியதா இருக்கு”

“இப்போ பொண்ணு வீடு உங்களை என்ன கேட்டாங்க? அது எதையும் என்கிட்ட சொல்லாம நீங்க இப்படிப் புலம்பினா என்னப்பா அர்த்தம்?” அப்பாவின் பேச்சிலிருந்து தலையும் புரியாமல், வாலும் புரியாமல் அவனுக்குக் கண்ணைக் கட்டியது.

“நான் அந்தப் போலீஸ்காரர் கிட்ட மொதவே தெளிவா சொல்லிட்டேன். நாங்க எங்க வசதிப்படிதேன் எல்லாம் செய்வோம்னு…”

“அ…ப்பா” என்றான் குரலை உயர்த்தி.

“நம்ம வீடுகள்ல நிச்சயதார்த்தம்லாம் சிம்பிளா வீட்டோட செய்யுறது. அவங்க என்னான்னா பெரிய மண்டபத்துல பெருசா பண்ணணும்னு சொன்னாங்க, சரின்னாச்சு.. இப்போ கல்யாணத்துக்கும்..” என்று அவர் கோபமாக இழுக்க,

“நீ சொல்லும்மா, இன்னைக்கு மண்டபம் பார்க்க போறேன்னுதானே சொன்னீங்க? அதுல என்ன பிரச்சினை? அவங்களுக்கு வசதிப்படுற மண்டபமா அவங்க புக் பண்ண சொன்னா சரின்னு சொல்ல வேண்டியது தானேப்பா?” என்று இருவரிடமும் கேட்டான்.

“எல்லாம் அவங்க முடிவுதானா‌டா பார்த்திபா? நம்ம தோது நாம பார்க்க வேணாமா?” என்று கோபமாகக் கேட்டார் துரை ராஜ்.

“அதையே அவங்களும் யோசிப்பாங்க இல்லப்பா?”

“டேய் அவரு ஆர்டர் போடுறாருன்னு சொல்றேன். நீ என்னன்னா..” என்று அவர் எகிற, “பேசாம இருங்கங்க” என்று கணவரை அமர்த்திய சத்யபாமா, மகனிடம் திரும்பி, “கல்யாணத்துக்கு அவங்க சொல்ற மண்டபத்தைப் புக் பண்ணணும்னு சொன்னாங்கடா. நாங்க அதையே புக் பண்ணிட்டு வந்துட்டோம். உங்கப்பா அப்போலாம் ஒன்னும் சொல்லாம இருந்துட்டு இப்போ வீட்டுக்கு வந்து குதிச்சுட்டு இருக்கார்” என்றார்.

“ஏன்ப்பா, எந்த மண்டபம் புக் பண்ணீங்க? என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல நீங்க?”

“உன்ட்ட சொன்னா மட்டும் நீ என்னா சொல்லியிருக்கப் போற? அவங்க சொல்றதை செய்யச் சொல்லி இருக்கப் போற? அவ்ளோதானே?” என்று துரை ராஜ் கோபமாகக் கேட்க, “முப்பது வருஷமா உங்க பேச்சு கேட்டு வளர்ந்தவன்ப்பா நான். முப்பது நாள்ல மாறிடுவேனா?” என்று கடுமையாகக் கேட்டான் அவன்.

துரை ராஜ் மௌனமாக மகனைப் பார்க்க, “எந்த மண்டபம்னு சொல்லும்மா” என்று அம்மாவிடம் கேட்டான்.

“பார்கவி..” என்று அவர் முடிக்கும் முன், இடையிட்டு, “பார்கவியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஆமாப்பா. உனக்கு அவங்களை ஞாபகம் இருக்குதானே? ரங்கராஜன் அண்ணே கல்யாண மண்டபம்.” என்றார் சத்யபாமா.

அந்த மண்டபத்தின் உரிமையாளர் பெயரை கேட்டதும் அவனுக்கு மண்டை குடைச்சல் எடுத்தது. தலையைக் கலைத்து கோதி கொண்டான். ஆனாலும் கோபம் கட்டுக்குள் வரவில்லை.

“யாரைக் கேட்டும்மா அந்த மண்டபத்தைப் புக் பண்ணீங்க?” என்று கத்தினான்.

“உன் மாமனார் அந்தப் போலீஸ்காரர் சொல்லித்தான்னு இப்போத்தானேப்பா சொன்னேன். நீ கூட அவங்க வசதி பார்க்கணும்னு சொன்னியே” என்று அப்பா சொல்ல அவரை முறைத்தான்.

“என்கிட்ட கேட்கணும்னு தோனலயாப்பா உங்களுக்கு?”

“இன்னைக்கு மண்டபம் பார்க்க போறோம்னு உன்கிட்ட சொல்லிட்டுத்தானே பார்த்திபா போனோம்”

“அப்பா.. நீங்க சொன்னது இந்த மண்டபம் இல்ல” என்று கத்தினான்.

“ஆமாப்பா.‌ நாங்க வேற நாலு மண்டபம்தான் பார்க்க போனோம். காலையில உன் மாமியா போன் போட்டு பேசினாங்க. அப்புறம் அப்பாக்கு சம்மந்தி போன் போட்டு இந்த மண்டபத்தைப் புக் பண்ணுங்கன்னு சொல்லவும்..”

“நீங்க புக் பண்ணிட்டீங்க இல்லம்மா?” என்று கடுமையாகக் கேட்டான்.

“நீ என்னா உங்கப்பா மாதிரியே கத்துற? அந்த மண்டபம் ரொம்பப் பெருசு. அவங்க பக்கம் ஆளுங்க அதிகம் வருவாங்க. அதுக்கு வசதியா இருக்கும்னு அவங்க அபிப்பிராயப்பட்டாங்க. மண்டப ஓனர் நமக்குத் தெரிஞ்சவங்கன்னு நான் சொல்லவும், அப்போ நல்லதா போச்சு இப்போவே புக் பண்ணிடுங்க. இப்போ விட்டா மண்டபம் கிடைக்காதுன்னு சம்மந்தி சொன்னாருடா” என்று விளக்கம் கொடுத்தார்.

அவன் திரும்பி அப்பாவை பார்க்க, “நாங்க அப்போ அந்த ஏரியால வேற ஒரு மண்டபம் பார்த்திட்டு இருந்தோம்ப்பா. அது கொஞ்சம் சின்னது. அதான், அவர் சொல்லவும் சரின்னு அந்த மண்டபம் பக்கத்துலதானே இருக்குன்னு பார்க்க போனோம். அவரு ரங்கராஜனும் அவர் பொண்ணும் மண்டபத்துல இருந்தாங்க..” என்றார்.

பார்கவி அங்கே இருந்திருக்கிறாள் என்றதும் அவனது இதயத் துடிப்பில் சட்டென ஒரு மாறுதல் வந்தது.

“நம்ம வீட்டு கல்யாணம்னவும் உடனே தேதி கேட்டு புக் பண்ணிட்டார் அந்த அண்ணே” என்ற சத்யபாமா, அங்கிருந்து கோப்பை திறந்து அதில் இருந்த திருமண மண்டப ரசீதை தேடி எடுத்து மகனிடம் நீட்டினார்.

“பணம் கூடப் பாதிதான் வாங்கினாங்கப்பா. நாங்க வேணாம்னு சொன்னாலும் கேட்கல” என்றார் சத்யபாமா.

“உங்களை யாரு என்னைக் கேட்காம அந்த மண்டபத்தைப் புக் பண்ண சொன்னதுப்பா?” என்று அப்பாவை பார்த்துக் கத்தினான்.

“அப்பாவை எதுக்குடா கத்துற? பொண்ணோட அப்பா சொல்லித்தான் நாங்க புக் பண்ணோம். இவ்ளோ கோபப்படுற நீயி லீவ் போட்டு வந்திருக்க வேண்டியதுதானே” என்று சத்யபாமா கோபமாகக் கேட்க, அதை விடக் கோபமாக எழுந்து வெளியே சென்று விட்டான் அவன்.

“பார்த்திபா..”

“அவனை விடு சத்யா..” என்று மனைவியை அடக்கினார் துரை ராஜ்.

அவன் வீட்டுத் தோட்டத்தில் வந்து நின்றான். அந்த ரசீதை பார்த்தான். அதில் பார்கவியின் பெயரையும், கையொப்பத்தையும் பார்க்க பார்க்க அவனது பதற்றம் அதிகமானது.

அவனை நேசிப்பதாகச் சொன்ன பெண்ணிடம் அவனது திருமணத்திற்காக மண்டபம் முன்பதிவு செய்திருக்கிறார்கள். அவள் கைப்பட அதைச் செய்ய வைத்திருக்கிறார்கள். அதிலும் அவள் குடும்பத்துக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் அவன் திருமணம் நடக்கப் போகிறது.

அவளின் மனநிலையை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவளிடம் குரூரமாக நடந்து கொண்டது போலக் குற்ற உணர்ச்சி கொண்டான் அவன். வீட்டு மதில் சுவரில் கண்களை மூடி சாய்ந்து நின்றான். அக்கணம் அவன் மேனி உணர்ந்த மாருதத்தால் அவன் மனத்தைச் சரி செய்ய முடியவில்லை.

error: Content is protected !!
Scroll to Top