பார்த்திபன் காதலி – 4 (1)

கணினி மேஜை மேலிருந்த தேநீர் கோப்பையிலிருந்து மேலெழுந்த ஆவி அலைபாய்ந்து காற்றில் கலந்தது.

பார்த்திபனின் பார்வை கோப்பையின் மேலிருக்க, அவன் மனமோ வேறெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.

மாலை மறைந்து இரவு கவிழ்ந்திருந்தது. அலுவலகத்தின் அனைத்து விளக்குகளும் உயிர்பெற்றுக் கண்ணைக் கூச செய்தன.

காலையில் இருந்து கழுத்தை நெறித்த வேலை பளுவில் அவனுக்கு நல்ல தலைவலி, தேநீர் கோப்பையை அவன் கையில் எடுத்த கணம் அவனது அலைபேசி அடித்தது.

அந்தச் சத்தமே தலைவலியை அதிகரிக்க, நெற்றி பொட்டை இரண்டு விரல்களால் அழுத்தி விட்டு, அலைபேசி திரையை நோக்கினான்.

“பிரபாவதி” என்ற பெயரைப் பார்த்ததும் பிரகாசமானது அவன் முகம்.

அவசரமாக அழைப்பை ஏற்று, “சொல்லு பிரபா” என்றான். இப்போது தேநீர் அவனது குரலை போலவே இதமாய் உள்ளிறங்கியது.

“ரெண்டு நாளா நீங்க போனே பண்ணல பார்த்தி”

“பாரேன், என்னைத் தேடினியா பிரபா?” சன்ன சிரிப்புடன் அவன் கேட்க, மறுபக்கம் மெளனத்தை மொழிந்தது.

“பிரபா..” என்று ரசனையுடன் அவள் பெயரை உச்சரித்தான்.

“என்ன கேட்டீங்க பார்த்தி?”

“சரியான கேள்வி கேட்டா உன் காது கேட்காதுன்னு எனக்குத் தெரியும். சரி, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு. நீயேன் ரெண்டு நாளா எனக்குப் போன் பண்ணல?”

“நீங்க பிஸியா இருக்கீங்க போல, உங்களைத் தொல்லை பண்ண வேணாமேன்னு நினைச்சேன்..”

“நீ போன் பண்றது.. உன்கிட்ட பேசுறது எனக்கு எப்பவுமே தொல்லை கிடையாது பிரபா, அதைப் புரிஞ்சிக்கோ. ஓகே?”

“ஓகே” என்றாள் அழுத்தமாக.

“இப்போ சொல்லு. என்ன பண்ற? உங்கம்மாவோட சேர்ந்து ஷாப்பிங்கா” என்று அவன் கேட்க, “இல்ல, இன்னைக்கு ஒர்க் இருந்தது. சோ எங்க டீம் எல்லாரும் ஆபீஸ் வரவும், நானும் வந்தேன். இப்பதான் ஒர்க் முடிச்சுச் சிஸ்டம் ஷட்டவுன் பண்ணேன்” என்றாள்.

“ஓ, நானும் ஆஃபீஸ்லதான் இருக்கேன். எப்படியும் உங்க ஆஃபீஸை க்ராஸ் பண்ணிதான் நான் வீட்டுக்கு போகணும், பேசாம நான் வந்து உன்னைப் பிக் அப் பண்ணி உங்க வீட்ல ட்ராப் பண்ணவா? அப்படியே போற வழியில காஃபி இல்லைன்னா டின்னர் சாப்பிட்டுப் போகலாம். ம்ம்?” என்று அவன் கேட்க, “நீங்க வர்றீங்களா? உங்களுக்கு லேட்டாகாதா?” என்று கேட்டாள்.

“நான் வரவா வேண்டாமா பிரபா? அதைச் சொல்லு”

“இப்போதான் அப்பா கிட்ட பேசினேன்..” என்று அவள் ஆரம்பிக்கவுமே அவனுக்குத் தலைவலி விண்ணென்று தெறித்தது.

“கேப் புக் பண்ணி வர்றேன்னு சொல்லியிருந்தேன். நான் அப்பாகிட்ட கேட்டுட்டு சொல்லவா?” என்று அவள் தயங்கி இழுக்க, “உங்கப்பா கிட்ட நான் பேசவா?” என்று அவனே முன் வந்தான்.

“இல்லயில்ல, நானே அப்பாகிட்ட சொல்லிக்கறேன். நீங்க கிளம்பி வாங்க. நான் வெயிட் பண்றேன்” என்றாள்.

“சுயரா வரவா?”

“பிளீஸ் வாங்க..” என்று அவள் சொன்னதும்தான், அவன் இருக்கையை விட்டு எழுந்தான்.

அவன் அலைபேசியில் மீண்டும் அழைப்பு வர, அந்தச் சத்தத்தை வைத்தே யாரென்று தெரிந்துக் கொண்டவன், கணினியை அணைத்துக் கொண்டே அழைப்பை ஏற்றிருந்தான்.

“சொல்லு பிரபா”

“என்னடா டிசைட் பண்ணியிருக்க?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் பிரபஞ்சன்.

“பொண்ணு வீட்ல பேசிட்டுதான் என்னால எந்த முடிவுக்கும் வர முடியும் பிரபா”

“ஏன் அவங்க வேணாம்னு சொல்லுவாங்கன்னு நினைக்கறியா நீ? இது உனக்குக் கிடைச்சிருக்கப் பெஸ்ட் ஆப்ஷன்டா பார்த்தி. டோண்ட் லூஸ் இட்” என்றான் அவன் நண்பன் அக்கறையாக.

“எனக்கு இப்பத்தான் எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிருக்கு. இந்நேரம் போய்ச் சொன்னா அவங்க என்ன சொல்லுவாங்களோன்னு டென்ஷனா இருக்கு பிரபா. அதுலயும் அந்தப் பிரபா அப்பா போலீஸ்காரர் இருக்காரே..” என்று அவன் சலிக்கவும் சிரித்து விட்டான் பிரபஞ்சன்.

“ம்ம், என் மாமனார் மாதிரியே எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்களா என்ன?”

“டேய் பிரபா, ரெண்டு பச்ச மண்ண ஏமாத்தி கல்யாணம் பண்ணவன்டா நீ. நீயெல்லாம் பேசாத” என்றான் போலி கோபத்துடன்.

“ஹாஹா, அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும்டா மச்சா. உன் மூஞ்சிக்கெல்லாம்.. உனக்கு, நான்தான் காலத்துக்கும்னு எழுதி இருக்கும் போல”

“டேய் டேய் பிரபா.. என் பிரபா முன்னாடி என்னைக்காவது இப்படிப் பேசி தொலைச்சுடாதடா பாவி. போலீஸ்காரன் பொண்ணு ஓவர் பொசசிவ். என்னை அடி பிச்சுடுவா” என்று அலறினான்.

“எனக்கு ஐடியாவ நீயே எடுத்து கொடுக்கிறியே மச்சா. அடுத்தத் தடவ உன் பிரபாவ பார்க்கும் போது எப்படிப் பெர்பார்மன்ஸ் பண்றேன்னு மட்டும் நீ பாரு”

“அடப்பாவி பிரபா. உன் கால்ல கூட விழறேன்..”

“அட மானஸ்தா. அன்னைக்குத்தான் உன் பிரபாவதி கால்ல கூட விழ மாட்டேன்னு வீராப்பா வசனம் பேசின. இப்போ என்னான்னா, என் கால்ல விழறேன்னு சொல்ற? கல்யாணம் நிச்சயமானதுக்கே இந்த நிலைமையாடா? உன் எதிர்காலம் பிரகாசமா தெரியுதுடா பார்த்தி” என்று கிண்டலாகச் சிரித்தான்.

“என் எதிர்காலம்.. ஐயோ டேய் பிரபா, என் பிரபா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா. நான் உன் கூடப் பேசிட்டு நிக்கறேன் பாரு ச்சே. ஐயோ லேட்டா போனா என்னைய திட்டி தொலைக்கப் போறா..”

“ஹாஹாஹா மிஸ்டர் பார்த்திபன். உங்களால நான் பொண்டாட்டி கிட்ட எத்தனை தரம் மிதி வாங்கி இருப்பேன் தெரியுமா?”

“அது உன் விதிடா”

“அப்போ நீயும் போய் மிதி வாங்கு.” என்று சத்தமாகச் சிரித்தான் பிரபஞ்சன். அவனிடம் பேசிக் கொண்டே கீழிறங்கி அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடம் வந்திருந்தான் பார்த்திபன்.

தன் இரு சக்கர வாகனத்தை ஆக்கிரமித்தவன், “பிரபா, நான் என்னடா பண்ணட்டும்?” என்று தீவிரமாகக் கேட்டான்.

“யுவர் லைஃப், யுவர் டெசிஷன்ஸ் பார்த்தி. நாளைக்கு நீ ரெக்ரெட் பண்ற மாதிரியான எந்த முடிவையும் இப்போ எடுக்காத. அவங்க வீட்ல ஒப்பீனியன் கேளு. பட் டெசிஷன் உன்னோடதா இருக்கட்டும்” என்றான் பிரபஞ்சன்.

“என் லைஃப்ல பாதி முடிவை நீ எடுத்துட்டு இப்போ நல்லவன் மாதிரி டயலாக் பேசாதடா பிரபா” என்று பார்த்திபன் நக்கலாகச் சொல்ல, “நீ இன்னைக்கு அந்தப் பிரபா கிட்ட அடி வாங்கப் போறது கன்பார்ம்டா” என்று கேலியாகச் சிரித்தான் பிரபஞ்சன்.

“ஐயோ எனக்கு லேட்டாச்சு, போனை வைடா” என்று கத்தி அழைப்பை துண்டித்து வண்டியை இயக்கி நகர்த்தினான்.

சென்னையின் மாலைப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவன் பிரபாவதியின் அலுவலகம் செல்வதற்கு அரை மணி நேரமாகி இருந்தது.

“சாரி பிரபா, வெயிட் பண்ண வச்சுட்டேனா?” அவள் முகம் பார்த்து கரிசனத்துடன் கேட்டான்.

“இல்ல, அப்பாகிட்ட பேசிட்டு இருந்தேன். அதுனால..”

“வண்டியில ஏறுங்க” என்றான் பின் இருக்கையைக் கண் காட்டி. அவள் பேச்சுப் பாதியில் நிற்க, தலையசைத்து வண்டியில் ஏறினாள்.

“டின்னர் சாப்பிட்டு போகலாம்தானே பிரபா? பிளீஸ் அப்பா கிட்ட பெர்மிஷன் வாங்கணும்னு ஆரம்பிக்காதீங்க”

“இல்ல அப்பாகிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேன். அப்பா ஓகே சொல்லிட்டாங்க”

“அப்பாடா” என்று ஆழ மூச்செடுத்து வண்டியை நகர்த்தினான். பத்தாம் நிமிடம் உணவகத்தில் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்.

“நம்ம எங்கேஜ்மெண்ட் ஃபோட்டோ வந்துருச்சுன்னு அப்பா சொன்னாங்க” என்று அவள் புன்னகையுடன் ஆரம்பிக்க, “எனக்கு ஆன் சைட் ஆஃபர் வந்திருக்கு” என்று அன்றைய நாள் முழுக்க அவன் மனத்தைப் போட்டு அழுத்தியதை அவள் கண் பார்த்து சொல்லி விட்டான்.

“ஆன் சைட்டா?”

“ம்ம், யூஎஸ் தான். உனக்குதான் ஃபர்ஸ்ட் சொல்றேன். இன்னும் வீட்ல கூடச் சொல்லல”

“ஓ” என்றாள் மெல்ல அவன் சொன்னதை உள்வாங்கி. அவன் அவளையே பார்த்திருக்க, “என்ன டிசைட் பண்ணியிருக்கீங்க? ஓகே சொல்லிட்டீங்களா?” என்று கேட்ட கண்களில் குழப்பம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

“உன்னைக் கேட்காம எப்படி ஓகே சொல்லுவேன்? ம்ம்ம் நீ சொல்லு. நான் என்ன செய்யட்டும்? ஓகே சொல்லிடவா?” என்று மேஜையில் இருந்த அவள் கரத்தின் மேல் தன் கரம் பதித்துக் கேட்டான்.

அவனுக்குப் பதிலாக வேகமாகத் தலையசைத்தவள், “உங்க வீட்ல என்ன சொல்லுவாங்க? நான் அப்பாகிட்ட.. இல்ல, நீங்க என்கிட்ட கேட்கறதை விட அப்பாகிட்ட இதைப் பத்தி கேட்கறது பெட்டர்” என்றாள்.

அவளின் கரத்தை மென்மையாக அழுத்தி, “எங்க வீட்ல என் முடிவுக்குதான் மதிப்பு கொடுப்பாங்க பிரபா. அவங்களுக்குத் தெரியும் நான் தப்பான முடிவெடுக்க மாட்டேன்னு. அண்ட் எனக்கு இந்த ஆன் சைட் ஆஃபர் உண்மையா பினான்சியலா ரொம்பவே ஹெல்ப் பண்ணும். அதுவும் எங்க வீட்டுக்கு தெரியும். அதுனால அவங்க கண்டிப்பா என் முடிவை ஆதரிப்பாங்க. ஆனா, எனக்கு உன் முடிவு முக்கியம். நீ சொல்லு, என்ன செய்யலாம்..” என்று கேட்டான்.

“நீங்க ஓகே சொன்னா உடனே விசா பிராசஸ் ஸ்டார்ட் பண்ணிடுவாங்களா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க அங்க போற மாதிரி இருக்குமா?”

“அதை அப்புறமா பார்ப்போம். ஃபர்ஸ்ட் நான் போகவா வேண்டாமாங்கறது நீ என் கூட வர்றியாங்கறதை பொறுத்துதான் இருக்கு. உன் ஆஃபீஸ்ல நீ கேட்டுப் பார்க்க முடியுமா? உன்னை ஆன் சைட் அனுப்புவாங்களா?” என்று அவளிடம் கேட்டான்.

“அப்பா..” என்று அவள் ஆரம்பிக்கவும், பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து விட்டான் அவன்.

என்னாச்சு என்று அவள் அதிர்ச்சியுடன் அவனை நோக்க, இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி மேஜையைச் சுற்றி வந்து அவளின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.

“நாம யூஎஸ் போலாமா பிரபா”

“அப்பாகிட்ட கேட்டுட்டு..”

“ஒரு கிஸ் பண்ணிக்கவா பிரபா” என்று தீவிரமாகக் கேட்டு, குறும்பு புன்னகையுடன் மீசையை உதட்டோடு சேர்த்து உள்மடித்துச் சிரிப்பை அடக்கினான்.

“அப்பா” என்று தொடங்கியவள், “அச்சோ.. நாம ரெஸ்டாரண்ட்ல இருக்கோம்” என்று பதற்றத்துடன் பதில் சொன்னாள்.

“இல்லன்னா ஓகேவா உனக்கு? இல்ல அப்பவும்..”

“அப்பான்னு ஆரம்பிக்க மாட்டேன். ஆனா அப்பாக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன் நான்” என்றாள் தீர்க்கமாக.

“உங்கப்பாக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு லிஸ்ட் வாங்கி வை. பியூச்சர்ல எனக்குப் பயன்படும்” என்று கடுப்படித்தான்.

“எனக்கே தெரியும்” என்றாள் கோபமாக.

“கோபப்படாத பிரபா. நான் இதுவரைக்கும் ஆன் சைட் போகணும்னு நினைச்சதே இல்ல. ஆனா இப்போ ஆஃபர் தானா வரும் போது மறுக்க மனசு வரல எனக்கு.” என்று உண்மையைச் சொன்னான்.

பார்த்திபன் குடும்பம் மத்திய தர வர்க்கத்தினர். அவன் அப்பா போஸ்ட் ஆபீஸ் கிளார்க். அம்மா குடும்பத் தலைவி. அவன்தான் மூத்தவன். அவனுக்கு ஒரு தங்கை ரேணுகா இருக்கிறாள். பார்த்திபன் வேலைக்குச் சென்ற பிறகுதான் பெற்றோரின் சேமிப்பு மொத்தத்தையும் வழித்துப் போட்டு ரேணுகாவை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

அந்தச் சமயம் பெற்றோரின் பல வருட கனவை நிறைவேற்ற வங்கிக் கடன் பெற்று, புது வீடு வாங்கியிருந்தான் அவன். அந்தக் கடனை அடைக்க இன்னும் சில ஆண்டுகள் அவனுக்கு எடுக்கும். அதுவே அமெரிக்கா சென்று வந்தான் என்றால் அதன் மூலம் வரும் பணம் அவனுக்குப் பேரூதவியாக இருக்கும்.

அவளுக்கு நிலைமையை விளக்கிச் சொன்னான். அவள் அப்பாவிற்கு அவனது சூழ்நிலையும், சொத்து நிலவரமும் தெரியாதா என்ன? எப்படி அவனை மருமகனாக தேர்ந்தெடுத்தார் என்பது அவனுக்கு இன்னமுமே புரியாத புதிராக ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அவன் பெற்றோரை கேட்டால், “அவங்க தான்ப்பா மொதல்ல கல்யாண பேச்செடுத்தாங்க. அவங்க பொண்ணுக்கு உன்னைப் பிடிச்சுருச்சுன்னு சொன்னாங்க அவங்கம்மா” என்றிருந்தார் அவன் அம்மா சத்யபாமா. அவனுக்கும் அதனால்தான் பிரபாவதியை பிடித்தது. பிரபா என்ற பெயர் கொண்டவளை அவனுக்குப் பிடிக்காமல் போனால்தானே ஆச்சரியப்பட வேண்டும்!

“இப்போ சொல்லு பிரபா? நான் என்ன செய்யட்டும்?” என்று அவன் கேட்கையில் உணவு வந்து விட்டது.

“சாப்பிடு” என்று அவளுக்கு உணவை நகர்த்தியவன், அவள் உண்டு முடிக்கும் வரை அதைப் பற்றிப் பேசாமல் பொதுவான மற்ற விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தான்.

“அப்பாக்கு என்னை வெளியூர்ல கல்யாணம் பண்ணி குடுக்கக் கூட விருப்பம் கிடையாது. நீங்க சென்னை. எங்க பக்கத்து ஏரியா, எப்போ வேணாலும் வந்து பார்த்துக்கலாம்னுதான் அப்பா உங்களுக்கு ஓகே சொன்னதே” என்று உண்மையை உடைத்து சொல்லி விட்டாள். இது அவனுக்கும் தெரிந்த விவரம்தான்.

“நீ பொறுமையா யோசிச்சு உன் முடிவை சொல்லு பிரபா. ஓகே? உன் முடிவை பொறுத்துதான் நானும் டெசிஷன் எடுப்பேன். சோ டோண்ட் வொர்ரி.” என்றான். அதுவரை அவள் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகள் குறைந்தன. மெலிதாக முறுவலித்தன அவள் உதடுகள்.

“உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்லுங்க முதல்ல”

“நான்தான் சொன்னேனே பிரபா. ஒரு ரெண்டு வருஷ கான்ட்ராக்ட் முடிச்சுட்டு வந்தா எனக்கு ரொம்பவே ஹெல்ப்புல்லா இருக்கும்”

“ஓகே. அப்போ நாம போகலாம், நானும் எங்க ஆஃபீஸ்ல ஆன் சைட் கேட்கறேன். இல்லனா நீங்க போயிட்டு எனக்கு டிபன்டென்சி விசா அனுப்புங்க, நான் வந்துடுறேன்” என்றாள். அவனுக்காக அந்தக் கணமே முடிவெடுத்திருக்கிறாள். அதுவும் அவனுக்குப் பிடித்த விதமாக, அவளைப் பார்த்த கண்களில் பிரியம் கூடுதலாகத் தெரிந்தது.

“எனக்காகச் சட்டுனு டிசைட் பண்ணாத. சில முடிவுகளை ரொம்பவே யோசிச்சு எடுக்கறது நல்லது பிரபா. டேக் யுவர் டைம்‌. உங்கப்பா கிட்ட பேசிட்டு பொறுமையா ஒரு முடிவுக்கு வா, சரியா? ஒன்னும் அவசரம் இல்ல. நீ வேணாம்னு சொன்னா, நாம போகல. ஓகே?” என்று கேட்டான். அவளின் விருப்பத்துக்கு, முடிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் பக்கமாக வளைந்தது அவள் மனம்.

“எனக்கு ஓகே தான். இருந்தாலும் நீங்க சொல்றதுக்காக இன்னைக்கு நைட் முழுக்க யோசிச்சுட்டு நாளைக்கு என் முடிவை சொல்றேன்” என்றாள் புன்சிரிப்புடன். அதன் பிரதிபலிப்பு பார்த்திபன் முகத்திலும் புன்னகையாகப் பரவியது.

இருவரும் உணவு முடித்து அங்கிருந்து கிளம்பினார்கள்.

அவள் வீட்டு முன் சென்று வண்டியை நிறுத்தினான்.

அவள் வீட்டு வாசலில் மரமல்லி மரம் நின்றிருந்தது. காற்றுக்கு அசைந்த மரம் சாலையில் பூக்களைக் கொட்டி வைத்திருந்தது. அப்பூவின் நூதன மணத்தை நுகர்ந்தவன், “செம்ம ஸ்மெல்” என்றான். அவளின் தோளில் பூ விழ, அதை எடுத்து வாசம் பிடித்து, அவளிடம் நீட்டினான்.

“என்னமோ நீங்களே பூ வாங்கி ப்ரபோஸ் பண்ற மாதிரி சீன் போடுறீங்க?”

“அவ்ளோதானே நாளைக்கே பூவும் ப்ரபோஸலும் பிரபாவுக்குப் பார்சல்” என்று கண் சிமிட்டினான்.‌

அவள் வீட்டு இரும்பு மதில் கதவை எட்டிப் பார்த்தவன், “உங்கப்பா இன்னும் வீட்டுக்கு வரலையா?” என்று கேட்டான்.

“ஸ்டேஷன்ல இருக்காரு”

“சரிதான். அவர் வர்றதுக்கு முன்னாடி நான் கிளம்பறேன்” என்று வண்டியை முறுக்கினான்.

“எங்கப்பா இப்போ வந்தாலும் உங்களை என்ன பண்ண போறாராம்?”

“கல்யாணத்துக்கு முன்னாடி அவர் பொண்ணுகிட்ட கிஸ் கேட்டேன்னு தெரிஞ்சா எனக்கு லாடம் கட்டிட மாட்டார்?” அவள் முகம் நோக்கி குனிந்து கேட்டான்.

அவன் தோளில் செல்லமாகக் குத்தினாள்.

“அ..ப்பா” என்று கத்தினான்.

“நான் எங்கப்பாவை கூப்பிட்டேன்மா, உங்க வீட்டு வாசல்ல நின்னு கத்தினா உங்கப்பா வந்திட மாட்டாரோ?” என்று தோளை தேய்த்துக் கொண்டே கேட்டான். அவள் முறைக்க, ஒற்றை விரலால் அவள் முகம் வருடி, “வீட்டுக்குள்ள போ, நல்லா பொறுமையா யோசிச்சு உன் முடிவை சொல்லு. ஓகே?” என்றான். அவனைப் பார்த்துக் கொண்டே மதில் கதவை திறந்து உள்ளே சென்றாள்.

இருபது நிமிடங்களில் வீடு வந்து விட்டான்.

error: Content is protected !!
Scroll to Top