பார்த்திபன் காதலி – 3 (2)

மறுநாள் காலையில் இருந்தே அவள் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

காவேரி இனிப்பு, காரம் என வீட்டிலேயே தயாரித்து வைத்து விட்டார்.

பார்கவி உடுத்த மெல்லிய ஜரிகையோடிய தாமரை வண்ண காஞ்சிப் பட்டை மகளுக்கு எடுத்து வைத்தார். அதற்குப் பொருத்தமான அணிகலன்கள் மகளின் உடை மாற்றும் மேஜையில் இருந்தன.

பார்கவியின் பெரியம்மா வீட்டினர் மதியமே வந்து விட்டார்கள். பெரியம்மாவின் இளைய மகள், கணவனுடன் வந்திருந்தாள். அக்கா அழகு நிலையம் வைத்திருக்கிறாள். அன்றைக்குப் பார்கவியின் அலங்காரம் எல்லாம் அவளின் பொறுப்பானது.

மாலை பொழுதில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர்.

பாரிவேந்தன், அவனது அம்மா பத்மாவதி, அப்பா சுந்தரம், அக்கா கவிதா, அவளின் கணவன், மகன் எனக் குடும்பமாக வந்திருந்தார்கள்.

அவர்கள் வந்த தோரணையும், அவர்களின் கையில் இருந்த கனமான பைகளையும் பார்த்ததும் பார்கவிக்கு விஷயம் விளங்கி விட்டது. இது சாதாரணப் பெண் பார்க்கும் படலம் அல்ல, அவர்கள் திருமணம் பேசி முடிக்க வந்திருக்கிறார்கள் என்று.

மனம் சட்டெனக் கனக்க அப்படியே அறையின் ஜன்னலை இறுக பற்றி அதன் மீதே சாய்ந்து நின்று விட்டாள்.

“பாரு, நேரா நில்லு. தலை கலையுது பார்” என்று அக்கா அதட்டவும், படக்கென்று விலகி நின்றாள்.

சினிமாவில் காண்பிக்கும் பெண் பார்க்கும் படலம் போல அல்லாது அனைவரும் இயல்பாகக் கூடத்தில் அமர்ந்து சிற்றுண்டி, தேநீருக்கு நடுவே தங்களின் பிள்ளைகளைப் பற்றிப் பேசினார்கள்.

பாரிவேந்தன், பார்கவிக்கு நேரெதிரே அமர்ந்திருந்தான். அவன் கண்கள் அவ்வப்போது அவளில் படிந்து படிந்து மீண்டன.

“பாரிக்கு இன்னும் ரெண்டரை மாச லீவ்தான் இருக்கு. அவனுக்கு அதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்னு நாங்க ஆசைப்படுறோம்.‌ ஒரு மாசத்துல கல்யாணத்தை வச்சுட்டோம்னா, அடுத்து பார்கவியைக் கூட்டிட்டு போக அவன் ஏற்பாடு பண்ண போதுமான டைம் இருக்கும்” என்றார் பாரியின் அம்மா பத்மா.

பார்கவி பணிபுரியும் நிறுவனத்தில் இருந்தே அவள் அமெரிக்கா, “ஆன் சைட்” வாங்கிச் செல்ல முடியும். அதற்கான ஏற்பாடுகள் சில வாரங்களில் இருந்து மாதங்கள் எடுக்கும் என்பதால் இப்போதே அதைப் பற்றியும் பேசினார்கள். அதற்காகத்தான் திருமணத்தை விரைவாக நடத்த விரும்புவதாகச் சொன்னார்கள்.

பார்கவியின் பெற்றோருக்கு மாப்பிள்ளை வீட்டினரை பிடித்து விட்டது. மகளின் விருப்பத்தை மட்டுமே முக்கியமாகக் கருதி அவளைப் பார்த்தார்கள்.

அவளைத் தனியாக அழைத்துக் காவேரி கேட்க, “உங்களுக்கும் அப்பாக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகேம்மா” என்று கிளிஷேவான பதிலைச் சொன்னாள் அவள்.

இரண்டு வீட்டினருக்கும் பிடித்திருக்கிறது. மேற்கொண்டு பேசலாம் என்று களத்தில் குதித்தார்கள்.

பூ, பழம், பட்டுப்புடவை, அத்துடன் மங்கல பொருட்கள் தட்டில் வைத்து பார்கவியின் வீட்டினரிடம் கொடுத்தார்கள்.

அவர்கள் கொடுத்த புடைவையை மாற்றுகையில், தன் எதிர்காலம் முடிவாகி விட்டதை உணர்ந்தாள் பார்கவி. அவள் வாழ்க்கையை யாரோ பாஸ்ட் பார்வர்ட் செய்தது போலிருந்தது அவளுக்கு.

பார்த்திபனை நினைக்கவே கூடாது, அவனை மறக்க வேண்டும். அவனை விட்டு விலகிட வேண்டும். அவனை எந்த விதத்திலும் தொல்லை செய்யக் கூடாது என்று எண்ணத்துடன்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தாள். ஆனால், அவனது திருமண நிச்சயத்தன்றே தனக்கும் திருமணம் நிச்சயமாகும் என்று சத்தியமாக அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

“வாம்மா, பார்கவி. இப்படி வந்து உக்காரு” என்று இயல்பாக அவளை அழைத்துத் தன் பக்கத்தில் இருத்தி கொண்டார் பத்மாவதி. இயல்பாக அவளிடம் பேச்சுக் கொடுத்தார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பாரிவேந்தன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“வர்ற மாசத்துல ஏழு முகூர்த்தம்தான் இருக்கு. இதுல உங்களுக்கு எது செட்டாகும்னு சொன்னீங்கன்னா அதையே முடிவு பண்ணிக்கலாம்” என்று சுந்தரம் சொல்ல, ரங்கராஜன், காவேரியை அழைத்தார். உடனே பத்மாவதியும் எழுந்து சென்று அவர்களோடு இணைந்து கொண்டார்.

அப்போது அதே தெருவில் வசிக்கும் பிரியதர்ஷினியின் பெற்றோர் ராதா, மாணிக்கவேல் இருவரும் அவளின் வீடு வந்தார்கள்.

அவளின் பெற்றோருடன் பேசி, மாப்பிள்ளை வீட்டினருடனும் பேசினார்கள்.

காவேரி, அவரின் அக்கா மற்றும் ராதா மூவரும் இணைந்து அனைவருக்கும் இரவு உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினார்கள்.

பார்கவிக்குக் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டேயிருந்தாள் பிரியதர்ஷினி. இப்போதோ அவளை அழைத்தே விட்டாள்.

அவளிடம் பேச தனிமை வேண்டி மாடிக்குச் சென்றாள் அவள்.

“பாரு, உனக்குப் போட்டோ அனுப்பியிருக்கேன் பாரு” என்றாள். பார்கவி எதையும் யோசிக்காமல் அந்தப் புகைப்படத்தைத் தொட்டு விட்டாள். அது திரையில் முழுமையாக விரிய, அவன் இருந்தான். அவள் விழிகளில் முழுமையாய் அவன் விழுந்தான்.

பார்த்திபன்!

கம்பீரமாக, கழுத்தில் மாலையும், முகம் நிறைத்த மகிழ்வும், பற்கள் தெரிய புன்னகைத்து, புகைப்படத்திலும் அவளை வசீகரித்தான்.

அவனுக்குப் பக்கத்தில் பச்சை நிற பட்டுடுத்தி நின்றிருந்தாள் பிரபாவதி. இப்போதே அவர்களை மாலையும் கழுத்துமாக ஜோடியாகப் பார்க்க பார்க்க அவள் மனத்தில் பாரமேறி நெஞ்சை அடைத்தது.

சட்டென அந்தப் புகைப்படத்தை மூடினாள்.

அவனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயமாகி விட்டது. இனிதான் அவனை இப்படி ஆவென்று பார்ப்பது கூடத் தவறு. அந்நிமிடம் அசிங்கமாக, அவமானமாக உணர்ந்தாள்.

பல காலமாக அவள் கண் முன்னே இருந்தான் அவன். அப்போதெல்லாம் அவள் மனம் இப்படித் தவிக்கவில்லை. இன்று அவளுக்கு இல்லை, அவள் அவனை நெருங்கவே முடியாது என்றான பிறகு எதற்காக இப்படித் துடிக்கிறது அவள் மனம்.

அவளின் பார்வை வட்டத்தில் இருந்தவனிடம் பிரியம் பகிராமல் போன பொழுதுகளைச் சபித்தாள் பார்கவி.

“பாரு..” என்று பிரியதர்ஷினி அழைக்க, சட்டென நினைவு சங்கிலியை அறுபட, “சொல்லு பிரியா” என்றாள்.

பார்கவியின் புகைப்படங்களை அனுப்ப சொல்லி அவள் கேட்க, பின்னர் அனுப்புகிறேன் என்றாள்.

தனக்குத் திருமணம் முடிவாகி விட்டதைத் தோழியிடம் பகிர்ந்தாள்.

பார்த்திபனை முழுக்க முழுக்க மனத்தில் இருந்து அந்தக் கணம் வெளியேற்றி பாரிவேந்தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள்.

“நாளைக்கு உனக்கு லீவ்தானே. நாம நாளைக்கு மீட் பண்ணி பேசுவோம். இப்போ நீ அவங்களைப் பாரு” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள் பிரியதர்ஷினி.

பார்கவி ஊஞ்சல் கம்பியில் சாய்ந்து நின்றிருக்க, பின்னால் இருந்து அவளை நெருங்கி, “ஹாய் கவி” என்றது கரகரக் குரல்.

அவள் பதறி திரும்ப, “ஹேய் ஈஸி” என்று அவளின் தோள் பிடித்து நிறுத்தினான் பாரிவேந்தன்.

பார்கவி நெளிந்து மெதுவாக அவன் கையை விலக்க முயன்றாள்.

அவள் முகம் பார்த்து முறுவலித்து, “ஈஸி கவி” என்றான். அவளின் இருபக்க தோளிலும் கைப் போட்டு, “உட்காருங்க” என்று அவளை ஊஞ்சலில் அமர்த்தினான். அப்படியே அவள் முகம் பார்த்து அவன் நிற்க, அவளுக்கோ அவஸ்தை என்றால் என்னவென்பதின் பொருள் அந்நிமிடம் செயல் முறை விளக்கமாக விளங்கியது.

அவளே அவன் கைகளை விலக்கி அவன் முகம் பார்த்தாள்.

என்னவென்று கண்களால் வினவி புருவங்களை உயர்த்திப் புன்னகை செய்தான். அவளிடம் எதிர்வினை இல்லாமல் போகவும், “மே ஐ?” என்று கேட்டு அவள் பதில் சொல்லும் முன்னே, அவளை உரசிக் கொண்டே பக்கத்தில் அமர்ந்திருந்தான்.

பார்கவி பட்டென நகரப் போக, நொடியில் நீண்ட அவன் கரம் அவள் கையை மென்மையாகப் பற்றியது.

“நம்மளோட இந்த ஓல்ட் ஸ்கூல் பொண்ணு பார்த்து மேரேஜ் ஃபிக்ஸ் பண்ற ட்ரேடிஷன் கூட நல்லாத்தான் இருக்கு. இல்ல பார்கவி?” என்று கேட்டான். அதில் நிச்சயமாய்க் கேலி இல்லை. ஒருவித ஆச்சரிய தொனி.

‘ஏன்டா நீங்க அமெரிக்கா போனா, நாங்க இங்க எல்லாத்தையும் மாத்திக்கணுமா?’ என்று நக்கலாகக் கேட்கும் பார்கவி, இன்று பேசும் நிலையிலேயே இல்லை.

“என்னைப் பார்த்ததும் என்ன தோனுச்சு உங்களுக்கு?” என்று கேட்டான்.

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரியாது என்று சொல்லி விட முடியாதே. அப்புறம் பரீட்சையில் தேர்வு பெறவில்லை என்று திருமணத்தை அல்லவா நிறுத்தி விடுவார்கள். ஆக, “என்ன?” என்று புரியாமல் விழி விரித்தாள்.

“நீ ரொம்ப அழகு தெரியுமா? எங்கம்மா என்னடா காலண்டர்ல இருக்கப் பொண்ணு மாதிரி இருக்குன்னு உன்னைப் பார்த்ததும் சொன்னாங்க” என்றான் குறுநகையுடன்.

“ஆனா எனக்கு உன்னைப் பார்த்ததும் என்ன தோனுச்சுன்னா..” என்று இழுத்து நிறுத்தினான்.

அவளின் விழிகள் அசையாமல் அவனில் நிலைத்திருக்க, “என் கேள்விக்கான ஆன்சர் உன் கண்ணு சொல்லிடுச்சு” என்று அவளை நெருங்கி அவள் கண்களுக்குள் கூர்ந்து கிசுகிசுத்தான். பார்கவி அனிச்சையாகப் பின் வாங்க, “ஈஸி, கீழ விழுந்துட போற” என்று அவளின் இடையில் கை கோர்த்து அவள் விழுந்து விடாமல் தடுத்துப் பிடித்தான். அவளின் முக மாற்றத்தை வெட்கம், கூச்சம், பிடித்தம் என மொழி பெயர்த்துக் கொண்டான்.

அவன் உதடுகளில் குறும்பு புன்னகை, கண்களைச் சிமிட்டி சிரித்து, மறுகையால் அவள் கன்னத்தை வருடி அவளை விடுவித்தான்.

ஊஞ்சலில் இருந்து குதித்துக் கீழிறங்கியவன், “வா, கீழ போகலாம்” என்று அவளுக்குக் கை நீட்டினான். அவளோ விறுவிறுவென்று அவனுக்கு முன்னே கீழிறங்கி இருந்தாள். சன்ன சிரிப்புடன் அவளைப் பின் தொடர்ந்தான் அவன்.

ஒரு திருமணம் இருவரை மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களையும்தானே இணைக்கிறது.

அங்கே இரண்டு குடும்பங்களும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்படியாகப் பார்கவியின் திருமணம் பாரிவேந்தனோடு முடிவானது.

இட்லி, வெண்பொங்கல், உளுந்து வடை, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, டிஃபன் சாம்பார், பைனாப்பிள் கேசரி என இரவு உணவு உண்டு, கை நனைத்த பிறகே, மாப்பிள்ளை வீட்டார் விடை பெற்றார்கள்.

அவர்கள் கார் கிளம்பிய மறுநொடி பார்கவியின் அலைபேசிக்கு, “ஹாய்” என்ற குறுஞ்செய்தி பாரிவேந்தனிடம் இருந்து வந்தது.

பார்கவி மனத்தளவில் பெரும்பாடுபட்டு அந்தப் பாதையில் பயணிக்கத் தயாரானாள்.

அடுத்த மூன்றாம் நாள் அவளின் திருமணத் தேதி முடிவானது. அவளுக்கு ஒன்றரை மாதத்தில் திருமணம்.

பெண் வீட்டாருக்குச் சொந்தமாகப் பிரம்மாண்டமான திருமண மண்டபம் இருக்கையில் அது குறித்த கவலையெல்லாம் அவர்களுக்கு இல்லையே.

உடனடியாகக் கல்யாண பத்திரிக்கை அடிக்கக் கொடுத்து விட்டார்கள்.

பிரியதர்ஷினி அவளைச் சந்திக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப அழைக்க, பார்கவிக்கு வீடு, அலுவலகம் தவிர எங்கேயும் செல்ல, யாரையும் சந்திக்க மனமில்லை.

சில முடிவுகளை எடுத்ததற்காக வருந்துகிறோம்.

சில முடிவுகளை எடுத்த பிறகு வருந்துகிறோம்.

சில முடிவுகள் நிலைக்க வேண்டுகிறோம்.

பார்கவியின் நிலையும் அப்படியாகத்தான் இருந்தது. அவளின் எண்ணங்களைப் போலவே கலங்கி, குழம்பி இருந்தாள் அவள்.

பார்த்திபன் மேல் அவளுக்கு இருந்தது பிடித்தம், ஈர்ப்பு. அதை எளிதாக மறந்து வேறொரு வாழ்க்கைக்குள் நுழைந்து விடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அது அத்தனை எளிதாக இல்லை. குற்ற உணர்ச்சியுடன் மனத்துள் மருகி தனக்குள் தவித்துக் கொண்டிருந்தாள்.

அந்த வார இறுதியில் அப்பாவுடன் எப்போதும் போலத் தங்களின் மண்டபத்துக்குக் கிளம்பியிருந்தாள் அவள்.

“அம்மா, உனக்காக ஏதோ ஷாப்பிங் போகணும்னு சொல்லிட்டு இருந்தா பாரும்மா. நீ என்னன்னா அப்பா கூட வர்றேன்னு கிளம்பி நிக்கற?” என்று ரங்கராஜன் மகளிடம் கேட்க, அவர் கையில் இருந்த கடிகாரத்தை வாங்கி அவருக்குக் கட்டி விட்டாள்.

“அம்மா மதியத்துக்கு மேலதான்ப்பா போகணும்னு சொன்னாங்க. அதான் இப்போ நான் உங்களோட வரலாம்னு” என்று அவள் கெஞ்சலாகச் சொல்ல, “சரி வாம்மா” என்று மகளை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

காவேரி, “சீக்கிரம் வந்துடணும் பாரு” என்று சொல்லியே மகளை அனுப்பினார்.

அவள் மண்படத்தின் அலுவலகம் சென்றதும் அப்பாவுடன் பேசிக் கொண்டே வேலையைக் கவனித்தாள்.

அப்பா, வேலை என்று அது மட்டுமே அவள் மனத்தில் இருக்கக் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தாள்.

“சார், உங்களைப் பார்க்க ஆள் வந்திருக்கு” என்று ரங்கராஜனின் உதவியாளர் வந்து சொன்னார்.

மறுநிமிடம் உள்ளே வந்தவர்களை, “வாங்க, வாங்க. எப்படி இருக்கீங்க? உட்காருங்க” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் ரங்கராஜன்.

அவரிடம், “பையன் கல்யாணத்துக்கு மண்டபம் புக் பண்ண வந்திருக்கோம்” என்றார் சத்யபாமா.

“கல்யாணத்துக்கு நாலு மாசம் இருக்கு. ஆனா மண்டபம் முன்னாடியே புக் பண்ணிடுறது நல்லதுன்னு இப்பவே வந்துட்டோம். அதுவும் நம்மளுக்குத் தெரிஞ்சவங்க நீங்க, உங்க மண்டபம் இருக்கும் போது வேற எங்கேயும் போகத் தோனல” என்றார் துரை ராஜ்.

“சரிதான், நீங்க தேதியை சொல்லுங்க, புக் பண்ணிடுவோம்.” என்று பார்த்திபனின் பெற்றோரிடம் சொன்னவர், மெதுவாகத் திரும்பி, “நீ தேதியை நோட் பண்ணிக்கோ பாரும்மா” என்று மகளிடம் சொன்னார்.

பார்த்திபன், பிரபாவதி பெயரை எழுதி, அவர்களின் திருமணம் நிச்சயத்திருக்கும் தேதியை குறித்து, அன்றைய நாளுக்கு மண்டபத்தை முன் பதிவு செய்தாள் பார்கவி. அவள் விரல்களின் நடுக்கத்தை அவளாலே உணர முடிந்தது.

error: Content is protected !!
Scroll to Top