பார்த்திபன் காதலி – 3 (1)

அன்றைய பகல் பொழுது முழுக்க இருந்த வானிலை மாறி வானம் கருப்பு வெள்ளை, நீலம் கலந்து நவீன ஓவியனின் கை வண்ணத்தில் உயிர் பெற்றது போல அழகாகக் காட்சியளித்தது.

காற்றில் சற்றே குளுமை கூடியிருந்தது. பார்கவி வீட்டின் முதல் தளத்துக் கூடத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். அவளின் எண்ணங்களைப் போலவே ஊஞ்சலும் முன்னும் பின்னுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

“பாரு, மாடியிலயா இருக்க? காஃபி குடிக்கக் கீழயிறங்கி வா” என்று அவளின் அம்மா காவேரி அழைக்க, “இதோ வர்றேன்ம்மா” என்று பதில் குரல் கொடுத்தவள், அப்படியேதான் அமர்ந்திருந்தாள்.

மறுநிமிடம் காவேரியே படியேறி வந்து விட்டார்.

“இதான் நீ கீழயிறங்கி வர்ற அழகா பாப்பா. பாரு காஃபியே ஆறி போகப் போகுது” என்று மகளின் பக்கத்தில் அமர்ந்து இருவருக்கும் இடையில் அவர் எடுத்து வந்திருந்த சிற்றுண்டி தட்டை வைத்தார்.

பார்கவி காஃபி கோப்பையைக் கையில் எடுத்து, அதன் வாசத்தை ஆழ உள்ளிழுத்து இனிப்பும், துளி கசப்புமான அந்தச் சூடான பானத்தை ரசித்து அருந்தினாள்.

“சுண்டல் எடுத்துக்கோ” என்ற அம்மாவை பார்த்துக் கொண்டே ஒவ்வொரு சுண்டலாக எடுத்து வாயில் போட்டாள்.

“சேட்டையைப் பாரு” என்று செல்லமாகச் சலித்துக் கை நிறையச் சுண்டலை அள்ளி மகளுக்கு ஊட்டி விட்டு, “அப்பா கூடத்தானே மண்டபத்துக்குப் போன பாரு, அப்புறம் நீ மட்டும் திரும்பி வந்திருக்க? அப்பா எங்க?” என்று கேட்டார்.

“அப்பா உங்ககிட்ட சொல்லலையாம்மா?”

“என்ன சொல்லலையான்னு கேக்கற? அப்பா போன் போட்டு மதியம் சாப்பாட்டுக்கு வர மாட்டோம்னு சொன்னார். வேற ஒன்னும் சொல்லலையே” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் அப்பாவின் கார் சத்தம் கேட்டது.

“அப்பா வந்துட்டாங்கம்மா.‌‍ நீங்க ரொம்பத் தேடுனீங்களே, நான் போய் அப்பாவ கூட்டிட்டு வர்றேன்”

“இரு, நான் போறேன். அப்பாக்கு காஃபி போடணும்” என்று காவேரி எழப் போக, “நீங்க இருங்கம்மா. நான் பார்த்துக்கறேன்” என்று அம்மாவின் தோளில் அழுத்தி அவரை ஊஞ்சலில் அமரச் செய்தாள்.

அவள் வேகமாகச் சென்று கதவைத் திறக்க, ஒரே புன்னகை முகமாக வீட்டுக்குள் நுழைந்தார் ரங்கராஜன்.

“அம்மா உங்களுக்காக ஊஞ்சல்ல வெயிட் பண்றாங்கப்பா” என்று அவள் சொல்லவும், அங்குச் சென்றார் அவர்.

பார்கவி அப்பாவுக்குப் பிடித்த விதமாக இஞ்சி தேநீர் தயாரித்து எடுத்துச் சென்றாள்.

“இன்னைக்கு நாள் முழுக்கப் பேசி பேசியே அப்பாக்குத் தொண்டை வறண்டு போச்சு. அந்த டீய கொண்டா பாரும்மா” என்று தேநீரை வாங்கிப் பருகினார்.

“நான் பிரியாவ பார்க்க போனேன்ம்மா. நாங்க மால் போனோம்” என்று அவள் அம்மாவிடம் சொல்ல, “என்கிட்ட சொல்லிட்டுதான் போனா காவேரி. நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.” என்றார் ரங்கராஜன்.

“நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு மாப்ள பார்க்கற ஆர்வத்துல எனக்கு எல்லாமே மறந்து போச்சு” என்று சிரித்தார்.

“இல்லன்னா மட்டும் நீங்க எதையும் மறக்க மாட்டீங்க பாருங்க” என்று அவர் நொடிக்க, “என்னைக்கும் உன்ன மறக்க மாட்டேன் காவேரி” என்று மனைவியின் கைப் பிடித்துச் சொன்னார். காவேரி முகத்தில் ஒரே வெட்கப் புன்னகை.

பெற்றோர் இருவரும் ஊஞ்சலில் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து அவர்களைப் பார்த்திருந்தாள் பார்கவி.

மகள் திருமணத்திற்குச் சம்மதித்ததில் காவேரிக்கும் நிரம்ப மகிழ்ச்சி.

“இன்னைக்கே அஞ்சாறு வரன் விவரம் என் கைக்கு வந்தருச்சு. ஆனா எனக்கு ஒன்னும் பிடிக்கல. அதான் வீட்டுக்கு எடுத்துட்டு வரல. இன்னும் கொஞ்சம் நல்ல இடமா பார்க்க சொல்லியிருக்கேன்” என்றார்.

பெற்றோர் பேசுவதைக் கேட்டபடியே பார்கவி மெளனமாய்ச் சுண்டலை ஒவ்வொன்றாகக் கொறித்துக் கொண்டிருந்தாள்.

அவள் பெற்றோருக்கு அவள் மீது கொள்ளை பிரியம். பார்கவிக்கு முன்னே அவர்களுக்கு ஆண் பிள்ளை பிறந்து ஆறு மாத குழந்தையாகத் தவறியிருந்தான்.

பார்கவிக்குப் பிறகு இரண்டு முறை காவேரி கருத்தரித்து, இயற்கையாகக் கருக் கலைந்திருந்தது. அதற்கு மேல் அவரின் உடல்நிலை மோசமாகும் என்று ரங்கராஜன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அவர்கள் இருவரின் ஒட்டு மொத்த பாசத்தையும் ஒற்றை மகளான பார்கவியின் மேல் கொட்டி வளர்த்தார்கள்.

அவள் திருமணம் குறித்து அவர்களுக்கு எதிர்பார்ப்பும், கனவுகளும் ஏராளமாக இருந்தன. இப்போது அதையெல்லாம் நிறைவேற்றும் எண்ணத்தில் களத்தில் குதித்திருந்தார்கள். பெற்றோர் பேசுவதை வைத்து, அவளுக்கு வரன் அமைய எப்படிச் சில வாரங்கள் ஆகும் என அவள் நிம்மதி மூச்சு விட்டு அன்றாட வேலையில் மூழ்கினாள்.

ஆனால் அந்த வாரத் தொடக்கத்திலேயே, “பாரும்மா” என்று அவளை நிறுத்தி விட்டார் ரங்கராஜன்.

“பாரிவேந்தன்” என்று பையனின் புகைப்படமும் அவளிடம் நீட்டப்பட்டது.

தன் அதிர்ச்சியை மறைத்து அப்பாவை பார்த்தாள். அதற்குள் அம்மாவும் அங்கு வந்து விட்டார்.

“அப்பா நீட்டிட்டே இருக்காங்க, நீ என்னா பாப்பா பார்த்துட்டே இருக்க? ஃபோட்டோவ கையில வாங்கிப் பாரு” கணவரின் கையிலிருந்த புகைப்படத்தை வாங்கி மகளை இழுத்துப் பக்கத்தில் அமர்த்தி அவள் கையில் புகைப்படத்தைக் கொடுத்தார் காவேரி.

“உங்க பெரியம்மாவோட நாத்தனார் இருக்காங்க இல்லடா. அவங்களோட..” என்று காதை சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டு அவர் சொன்ன உறவு முறை எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. முதலில் மனத்தில் பதிந்தால் அல்லவா அவளுக்குப் புரியும்.

அம்மாவின் அக்கா வழி உறவில் இருந்து வரன் வந்திருக்கிறது, அவ்வளவுதான் என அப்பா எளிமையாக விளக்கி விட்டார்.

“நீ போட்டோ பாருடா” என்று காவேரி கண்ணை உருட்ட, அவள் கண்கள் கீழே நோக்கின.

அந்தச் சாலையின் இரண்டு பக்கமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் சீராகச் செர்ரி பழ மரங்கள் நின்றிருந்தன. அதில் ஒற்றை இலைகள் கூட இல்லை. மரம் முழுக்க அடர் ரோஜா நிறத்தில் பூக்கள் பூத்துக் கிடந்தன. அதைப் பார்த்ததும் அந்தப் புகைப்படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டது என்று சொல்லி விடலாம்.

வாஷிங்டன் செர்ரி பிளாச பருவத்தின் போது எடுக்கப்பட்ட படம் போலும், அந்தச் செர்ரி மரம் முழுக்கப் பூக்கள் மட்டுமே இருந்தன.

“என்ன பாரும்மா?” காவேரி கேட்கவும்தான் அவள் கண்கள் அந்தப் புகைப்படத்தில் புன்னகையுடன் நின்றிருந்தவன் மீது பதிந்தன.

“பாரின்ல இருக்காங்க போலப்பா?” என்று கேட்டாள்.

“ஆமாடா யூஎஸ்ல ஒர்க் பண்றாப்லயாம். உன்னைப் போலக் கம்ப்யூட்டர் இன்ஜினியர் தான். அங்க செட்டிலாகற ஐடியா இல்லையாம். இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் ப்ராஜெக்ட் முடிச்சுட்டு இங்க வந்துடுவாப்லயாம். மூனுல இருந்து ஆறு மாசம் இங்க சென்னையில அவங்க கம்பெனில ஒர்க் பண்ணிட்டு திரும்ப அமெரிக்கா போயிடுவாராம்.‌ அப்பா அதுனாலதான் சரின்னு சொன்னேன். இல்லன்னா உன்ன வெளிநாடு அனுப்ப எங்களுக்கு எப்படிடா மனசு வரும்?” என்றார். இதுவே முன்னர் என்றால் இதையே காரணம் சொல்லி தன் மறுப்பைப் பதிவு செய்திருப்பாள் அவள். ஆனால் இப்போதோ அவள் கல்யாணத்திற்குச் சம்மதிக்க இதுவே காரணமாகி போனது.

அவள் கையில் இருந்த புகைப்படத்தைக் குனிந்து பார்த்து, பின் நிமிர்ந்து பெற்றோரை பார்த்தாள்.

“உங்க பெரியம்மாக்கு நல்லா தெரிஞ்ச குடும்பம்டா.‌‍ அப்பாவும் விசாரிச்சுட்டேன். நீ சரின்னு சொன்னா இந்த வெள்ளிக்கிழமை அவங்களை வீட்டுக்கு வரச் சொல்லி, நாம பார்த்துப் பேசிடலாம்” என்றார் ரங்கராஜன்.

“வெள்ளிக்கிழமையா?”

“ஆஃபீஸ்ல லீவ் சொல்லிடு பாரும்மா” என்றார் காவேரி.

“ம்ம்” என்றாள். அதற்குப் பிறகு பெற்றோர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவளின் பதில், “ம்ம்” என்றானது.

மகளின் விருப்பத்தை ஒன்றுக்கு நான்கு முறையாகக் கேட்டறிந்த பிறகே பையன் வீட்டுக்கு தகவல் சொன்னார்கள்.

வியாழக்கிழமை வரைக்கும் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை அவள்.

அன்று காலை அலுவலகம் சென்றதும் பிரியதர்ஷினிக்கு அழைத்தாள்.

“ப்ரியூ”

“பாரு, நானே உனக்குப் போன் பண்ணணும்னு நினைச்சுட்டு இருந்தேன். பார்த்தா நீயே கால் பண்ணிட்ட. நாளைக்கு நீ வர்றதானே? நீ என்ன கலர் சேரி கட்டப் போறேன்னு சொல்லு. நானும் அதே கலர்ல கட்டிட்டு வர்றேன்” என்று தன் போக்கில் படபடத்தாள் பிரியதர்ஷினி.

“உன் பிரபா என்ன கலர் சட்டை போட போறார்னு பார்த்து அதுக்கு மேட்சா தானே நீ போடுவ?” என்று அவள் கிண்டலாகக் கேட்க, “ப்ச், நான் உன்னைத்தானே கேட்டேன். நீ எதுக்கு என் பிரபாவ இழுக்கற?” என்று கோபித்தாள்.

“பாரேன், பிரியா செல்லத்துக்குக் கோபமெல்லாம் வருது”

“பாரு..” என்று அதட்டினாள் பிரியதர்ஷினி.

“நாளைக்கு நான் வரல பிரியா”

“ஏன், பார்த்தி அண்ணா வீட்ல இருந்து உங்களை இன்வைட் பண்ணலயா? எங்க வீட்டுக்கு சொல்லியிருக்காங்கன்னு அம்மா சொன்னாங்களே. அதெப்படி உங்கள கூப்பிடாம இருப்பாங்க”

“ப்ரியூ, நாளைக்கு.. எங்க வீட்டுக்கு.. பையன் வீட்ல இருந்து வர்றாங்க” என்றாள்.

“எந்தப் பையன்?” என்று புரியாமல் கேட்டவள், நொடியில் விஷயத்தைக் கிரகித்து, “உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்களா பாரு” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

“ம்ம், அடி கள்ளி. என்கிட்ட நீ சொல்லவே இல்ல”

“அதான் இப்ப சொல்லிட்டேனே”

“அதெல்லாம் செல்லாது. நீ முன்னாடியே ஏன் சொல்லல. போ, நான் கோபமா போனை வைக்கறேன்”

“ஏய் பிரியா பிரியா.. பிளீஸ், பிளீஸ்.. சாரி”

“சரி, விடு” என்று விசாரணையில் இறங்கி விட்டாள்.

“உனக்கு நெர்வஸ்ஸா இருக்கா பாரு. நான் வேணா நாளைக்கு உங்க வீட்டுக்கு வரவா?”

“அய்யோ வேணாம் பிரியா. நீ.. அவங்க எங்கேஜ்மெண்ட்டுக்கு போ” என்று வலியுறுத்தினாள்.

“ஃபர்ஸ்ட் உங்க வீட்டுக்கு வந்துட்டு அப்புறமா நானும் பிரபாவும், பார்த்தி அண்ணா பங்ஷன் போறோம்”

“சொன்னா கேளு பிரியா. அவங்க சும்மா என்னைப் பார்த்திட்டுப் போகத்தான் வர்றாங்க. நிச்சயம் வரைக்கும் போனா.. அதுக்கு அப்புறம் சொல்றேன். நீ வா” என்றாள் அழுத்தமாக.

“ஓகே ஓகே. நீ பையனை பாரு. பேசு. பிடிச்சிருக்கா சொல்லு, நாம நாளைக்கு நைட்டு பேசுவோம்.” என்று பேசி வைத்தாள் பிரியதர்ஷினி.

error: Content is protected !!
Scroll to Top