“பிசினஸ் ஐடியான்னு சொன்னேன்தான். பட், நாங்க மட்டும் பண்ண போறதில்ல. நீயும் உள்ள வர்ற மச்சான்” என்று நண்பனையும் கூட்டு சேர்க்க விருப்பம் தெரிவித்தான் பிரபஞ்சன்.
“பாரு, நீயும்தான் வர்ற” என்று பிரியதர்ஷினி தோழியிடம் சொல்ல, பார்கவி அவளை அதிர்ந்து பார்த்தாள்.
“எனக்குப் புரியல. நீ என்ன சொல்ற ப்ரியூ? நான் எதுக்கு?” என்று அவள் குழப்பத்துடன் கேட்க, அவளுக்கான விளக்கத்தைப் பிரபஞ்சன் அளித்தான்.
அவர்கள் நால்வருமே கணினி பொறியியல் துறையில் பணியில் இருக்கிறார்கள். ஆளுக்கொரு துறையில் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.
ஆகவே நால்வரும் இணைந்து புதிய இணையதளங்கள் வடிவமைத்து கொடுக்கும் தொழிலில் இறங்கலாம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்ட வேலையைச் செய்ய வேண்டியிருக்கும். இறுதிக் கட்ட பணிகளை நால்வரும் சேர்ந்து பார்க்கலாம். லாப, நஷ்ட கணக்கும் அப்படியே பிரித்துக் கொள்ளலாம் என்று விளக்கினான் பிரபஞ்சன்.
அடுத்த ஒரு மணி நேரம் அது குறித்த விவாதத்தில் கழிந்தது.
பிரபாவதி கூடக் கேள்விகளும் சந்தேகங்களும் கேட்டுத் தெளிவு பெற்றாள்.
பார்த்திபன் இப்போதே அவளிடம் அபிப்ராயம் கேட்க, “ஐடியா நல்லாருக்கு. உங்களுக்கு டைம் இருக்கும்னா செய்யலாமே” என்றாள் புன்னகையுடன்.
அவளின் இருக்கையின் பின்னே கைப் போட்டு அவள் கண் பார்த்து, “நீங்க சொன்னா சரிதான்ங்க” என்றான் அவன். அவள் கன்னங்கள் செம்மையுற, அவளை ரசனையாய்ப் பார்த்திருந்தான்.
பிரபஞ்சன் வேண்டுமென்றே சத்தமாகத் தொண்டையைச் செரும, “நீ கேட்டு நான் முடியாதுன்னு சொல்வேனா மச்சா?” என்று சொல்லி நண்பனின் பக்கமும் நல்ல பிள்ளையாக நடித்தான் அவன்.
“அப்போ நான் கேட்டா முடியாதுன்னு சொல்ல மாட்ட அப்படித்தானே பார்த்தி?”
“என்னடா கேள்வி இது? கண்டிப்பா சொல்ல மாட்டேன்” என்று அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்ன நண்பனை, “மவனே என்கிட்ட மாட்டாமயா போவ, அப்போ இருக்கு உனக்கு” என்று முணுமுணுத்தான் பிரபஞ்சன்.
“பாரு நீ ஒன்னுமே சொல்லல?” என்று பிரியதர்ஷினி கேட்க, “நான் யோசிச்சு சொல்றேன் பிரியா. இப்போ ஆபீஸ்ல ஆல்ரெடி முக்கியமான ப்ராஜெக்ட்ல மாட்டிட்டு இருக்கேன். அது போக எங்க மண்டபம் புக்கிங், அது இதுன்னு எல்லாமே நான்தான் பார்க்கறேனா, அதுனால இப்போ என்னால இதுல கமிட் பண்ண முடியுமான்னு தெரியல. சாரி” என்று தயக்கமும், யோசனையுமாகச் சொல்வது போலச் சொல்லி விட்டாள் அவள்.
ஆனால், அவள் மனத்தில் இருந்தது வேறு. இனிமேல் பார்த்திபன் இருக்கும் இடத்தில் அவளால் இயல்பாக இருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.
காதல், கல்யாணம் என்று யோசித்தவனோடு நண்பனாக நடித்துக் கொண்டு அவளால் நட்பு பாராட்டி சாதாரணமாகப் பேச கூட முடியாது. இதில் சேர்ந்து வேலை செய்வதெல்லாம் அந்தக் கற்பனையே அவளுக்குத் திகிலூட்டியது.
“ஓகே. டேக் யுவர் டைம். நமக்கு டைம் இருக்கு. நீ பொறுமையா சொல்லு பாரு” என்றாள் பிரியதர்ஷினி.
பார்த்திபன் பார்வை அவள்மேல் சந்தேகமாகப் படிவதை அவளால் உணர முடிந்தது. இதற்கு முன் சில முறை இப்படிச் சந்தித்திருக்கிறார்கள் அவர்கள். அப்போதெல்லாம், “பார்த்தி, பார்த்தி” என்று அவனை அழைத்து இயல்பாகச் சிரித்துப் பேசும் பெண்ணுக்கு இன்று என்னவானது என்ற குழப்பம் அவன் மனத்தை ஆக்கிரமித்துக் குழப்பியது.
அவள் கண்கள் அவனைத் தவிர்ப்பதை அவனும் இடைப்பட்ட நேரத்தில் கண்டு கொண்டானே.
அவனைப் பார்த்ததும் கண்ணில் மின்னல் அடித்ததென்ன, இப்போது என்னவென்றால் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அல்லவா அமர்ந்திருக்கிறாள். அவன் அறிந்த பார்கவி இவள் அல்லவே. அவனது உள்மனம், “சம்திங் இஸ் ராங்” என்று அவனுக்கு எச்சரிக்கை மணி அடித்தது.
“ஓகே. பார்கவி முடிவு சொன்னதுக்கு அப்புறம் நாம டிசைட் பண்ணலாம் பிரபா” என்று அவன் சொல்ல, அனைவரும் சரியென்றார்கள்.
அவள் பெயரை அவன் உச்சரித்த நொடி, அவள் உடல் இறுகுவதைக் கண்டவனின் கண்கள் அவளைக் கூர்ந்து பின் விலகின.
“பார்த்திபன்” என்று பிரபாவதி அவனை அழைக்க, அவள் புறம் திரும்பினான் அவன்.
அவள் ஏதோ வாங்க வேண்டும் என்று சொல்லவும், அவளுடன் வெளியேறினான். இருவரும் இயல்பாக நெருக்கமாகச் சிரித்துப் பேசிக் கொண்டே நடக்க, இதுதான் எதார்த்தம் என்று திரும்பத் திரும்பத் தன் மனத்தில் பதிய வைத்தாள் பார்கவி.
“பாரு, ஈவ்னிங் மூவி போகலாமா? பிரபாவை டிக்கெட் புக் பண்ண சொல்லவா?” என்று பிரியா கேட்க, “அய்யோ இதுக்கு மேல என்னால முடியாது” என்று அலறி விட்டாள் அவள்.
“என்னாச்சு பார்கவி?” என்று பிரபஞ்சன் கேட்க, “இல்ல அண்ணா. பிரியா போன் பண்ணும் போதே நான் அப்பா கூடதான் இருந்தேன். எங்க மண்டபத்துல எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் கிளம்பறேன்.” என்று எழுந்தே விட்டாள்.
பிரியா அவளின் கைப் பிடித்து மீண்டும் அமர வைத்தாள்.
“நீங்க மூவி போங்க ப்ரியூ. பிளீஸ், கோபிச்சுக்காத” என்று அவள் கெஞ்சலாகச் சொல்ல, “சரி மூவி வேணாம். நீ உக்காரு. பார்த்தி அண்ணா வந்ததும் போகலாம்” என்றாள் பிரியதர்ஷினி.
ஐயோ பார்த்திபன், பார்த்திபன் என்று அவன் பெயரை கேட்டாலே அவளுக்கு மனத்தை என்னவோ செய்தது.
மூவரும் எழுந்து வெளியே வந்தார்கள். பிரபஞ்சன் அவர்களுக்கு, “ஐஸ்கிரீம்” வாங்கித் தந்தான். அவள் மறுத்தாலும் கேட்கவில்லை அவன்.
“ஐயோ என்னை விட்டுடுங்களேன்” என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
சற்று நேரத்தில் முகம் நிறைத்த மகிழ்வுடன் சிரித்துப் பேசிக் கொண்டே அவ்விடம் வந்தார்கள் பார்த்திபனும், பிரபாவதியும். இருவரின் கையிலும் ஏதோ பரிசு பொருட்கள் இருந்தன. ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொண்டார்கள் போலும்.
அந்த வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் பிரபாவதியின் அப்பா வந்து அவளுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லி விடைப் பெற்றாள் அவள். அவர்கள் மூவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றாள்.
அவளை அனுப்பி விட்டு வருகிறேன் என்று அவளோடு பார்த்திபன் செல்ல, “அப்போ நானும் கிளம்பறேன்” என்றாள் பார்கவி.
“சரி வா, போவோம்” என்று பிரியதர்ஷினி அவளின் கைக் கோர்க்க, “நான் ஆட்டோ எடுத்துப்பேன் ப்ரியூ. என்னால நீங்க கிளம்ப வேணாம். யூ கைஸ் கேரி ஆன்” என்றாள்.
“உன்னை ஆட்டோ ஏத்தி விட்டுட்டு நாங்க கிளம்பறோம் பாரு, வா” என்று அவளின் கையோடு கை கோர்த்தாள்.
“இல்ல பிரியா” என்று அவள் மறுக்கையில், “என்னாச்சுப் பார்கவி? எதுவும் பிரச்சனையா?” என்று அவளின் முகம் பார்த்து கூர்மையாய் கரிசனத்துடன் கேட்டான் பிரபஞ்சன்.
அவள் எச்சில் கூட்டி விழுங்கினாள்.
நான், உன் நண்பனை நேசிக்கிறேன். அவன் நேசிக்கும் பெண்ணோடு நெருக்கமாக அவனை என்னால் பார்க்க முடியவில்லை என்று எப்படிச் சொல்வாள்? அந்தக் காட்சி கண்ணை உறுத்த, நினைவு நெஞ்சை அழுத்த, அவளுக்கு வீட்டுக்குப் போனால் போதும் என்றிருந்தது. வேறு எதையும் யோசிக்க முடியாத நிலை.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா.” என்று சமாளித்தாள்.
“பிரியாவை உங்கள வீட்ல ட்ராப் பண்ண சொல்லட்டுமா?” என்று அவன் கேட்கும் போதே பார்த்திபன் அங்கு வந்து விட்டான்.
அந்தப் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டான்.
“நீங்க கிளம்புங்க. நான் இவங்களை வீட்ல ட்ராப் பண்ணிடுறேன்.” என்றவனை முறைத்தாள் பார்கவி.
காரியம் கெட்டது போ. நெருப்புக்கு பயந்து அடுப்பில் குதித்த கதையானது.
“இல்ல, நானே..” என்று அவள் ஆரம்பிக்க, அவளைப் பேச விடவில்லை பிரியதர்ஷினி.
“அண்ணா உன்னை ட்ராப் பண்ணுவாங்க பாரு. அவங்களும் உன் பக்கத்து ஏரியாதானே? சோ பிரச்னை இல்ல. டோண்ட் வொர்ரி” என்றாள்.
‘அவன்தான் பிரச்சனை. அவனோடு பயணிப்பதுதான் தனக்குப் பிரச்சனை’ என்று யாருக்கும் தெரியப் போவதில்லை.
பார்த்திபனும் அவளை வற்புறுத்தி அழைக்க, பிரியதர்ஷினி அவளையே பார்த்திருக்க, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று அவளே காட்டி கொடுத்தது போலாகி விடும் என்று வேறு வழியின்றி அவனோடு செல்ல சம்மதித்தாள்.
ஊதா நிற குர்தி, பொன்னிற ஜெக்கிங்ஸ் என இயல்பான தோற்றத்தில் இருந்தாள். அவளின் தோளில் வழிந்த கூந்தல் அவளுக்குத் தனி அழகை தந்தது.
பார்த்திபன் இரு சக்கர வாகனத்தை அவள் முன் நிறுத்த இருவருக்கும் இடையில் பாலம் போட்டாலும் போதாத அளவுக்கு இடைவெளி விட்டு அமர்ந்திருந்தாள்.
சென்னையின் போக்குவரத்தில் நீந்தியது அவர்களின் வாகனம்.
பார்த்திபன் சிக்னலில் பச்சை விழ காத்திருந்த நேரத்தில், “பார்கவி, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று அவளிடம் இரண்டு முறை கேட்டு விட்டான். அவள் ஒன்றுமில்லை என்று தலையசைத்து மௌனமாகப் பயணித்தாள்.
ஆனாலும் மனம் கேளாமல், “உடம்பு முடியலையா? தல வலியா? டேப்லெட் வாங்கித் தரவா?” என்று திரும்பவும் கேட்டான்.
“வேணாம். என்னை இங்கேயே விட்டுருங்க. நான் வீட்டுக்கு போய்க்கறேன்” என்று அவள் அழுத்தமாகச் சொல்லவும் அவன் வண்டியின் வேகத்தைக் குறைத்து ஓரமாக நிறுத்தி விட்டான்.
“பிளீஸ், கீழ இறங்குங்க” என்றான். உடனே வேகமாக இறங்கியவள், “தேங்க்ஸ், பை” என்று அவசரமாகச் சொல்லி அவனை விட்டு விலகி நடந்தாள்.
சட்டென நீண்ட அவன் கரம் அவளைப் பிடித்து நிறுத்தியது.
“என்னாச்சு உங்களுக்கு?” அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
“காலையில என்னைப் பார்க்கும் போது நல்லாதானே பேசினீங்க? அப்புறம் என்னாச்சு?”
“எதுவும் ஆகல. என் கையை விடுங்க. நான் வீட்டுக்கு போகணும்”
“எதுவும் ஆகலன்னா? ஓ, அப்போ கண்டிப்பா ஏதோ இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்கவி” என்று அவள் கையை விடாமல் அழுத்திக் கேட்டான்.
“உங்க முகமே சரியில்ல. பிரியா ஃப்ரெண்ட் நீங்க..”
“பிரியா ஃப்ரெண்ட் நான். அவளோதானா பார்த்திபன்? என்னைத் தெரியாதா உங்களுக்கு?” என்று கோபமாகக் கேட்டாள்.
“என்ன பிரச்சனைன்னுதானே கேட்டீங்க? எனக்கு உங்களைப் பிடிக்கும். அதை உங்ககிட்ட சொல்லத்தான் இன்னைக்கு உங்களைப் பாக்க வந்தேன். போதுமா?” என்று அவளின் பிரியத்தை அவன் முன் பட்டென்று போட்டு உடைத்தாள் அவள்.
“பிடிக்கும்னா?” தான் சரியாகத்தான் கேட்டோமா என்ற சந்தேகம் அவனுக்கு.
“பிடிக்கும்னா என்னன்னு தெரியாத அளவுக்குச் சின்னப் பையனா நீங்க பார்த்திபன்? பிடிக்கும்னா உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னைக்குக் காலையில எங்கப்பா என் கல்யாணத்தைப் பத்தி பேச்செடுத்தப்போ உங்க முகமும், பேரும் ஞாபகத்துக்கு வர்ற அளவுக்கு உங்களைப் பிடிக்கும் எனக்கு.” என்றாள் அவன் கண் பார்த்து.
அதிர்ச்சியுடன் அவளை நோக்கினான் அவன்.
“எனக்கு அஞ்சு நாள்ல எங்கேஜ்மெண்ட்.. இப்போ வந்து இப்படிச் சொல்றீங்க பார்கவி” என்றான் அடர்ந்த குரலில்.
“நீங்கதான் கேட்டீங்க பார்த்தி” என்றாள் உடைந்த குரலில். அவளுக்கு மனம் கலங்கிட கண்களும் தளும்பின.
“நான் உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா இன்னைக்கு உங்ககிட்ட என் மனசை நான் சொல்லாம போய் இருந்தா.. இந்த வலியே என்னைக் கொஞ்ச கொஞ்சமா கொன்னுருக்கும்” என்றாள். அவள் கண்களில் வைரமாய் மின்னிய கண்ணீர்த் துளி அவனை நிரம்பத் தொந்தரவு செய்தது.
அதை மறைக்க, “உங்க வலிய.. எனக்குத் தல வலியா கொடுத்துட்டு போறீங்களா?” என்று கோபமாகக் கேட்டிருந்தான்.
இன்னமும் அவன் வசமிருந்த தன் கையைக் கோபத்துடன் பட்டென்று உதறி உருவினாள் பார்கவி.
“நான் பிரபாவதிய பிடிச்சுதான் இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். எனக்கு அவங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு”
“நான் உங்களை ஏதாவது கேட்டேனா பார்த்தி? இப்போ எதுக்கு இந்த எக்ஸ்ப்ளனேஷன்? நீங்க நார்மலா இருங்க” என்று புன்னகைத்துக் கண் சிமிட்டி, “என் மனசை உங்ககிட்ட சொல்லிட்டேன். இனிமே உங்களை எந்த விதத்திலும் நான் தொல்லை பண்ண மாட்டேன். ம்ம், இனி நாம எதுக்குப் பார்த்துக்கப் போறோம்? இல்ல? பை பார்த்திபன். ஆல் த பெஸ்ட்” என்று மனதார அவனை வாழ்த்தினாள்.
அவள் பார்வை அவனில் அழுத்தமாகப் பதிந்திருக்க, அவன் கோபமாக அவளைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான்.
பாவை அவள் பார்வையே பிரியம் பகிர்ந்து அவனைப் பிடித்து வைத்தது.
அவளிடம் இருந்து பார்வையை விலக்கி, தலைக் கோதினான். பார்கவி அவனைப் பிரிந்து சாலையில் அவளைக் கடந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறியிருந்தாள்.
மறுகணம் அவனும் தன் இரு சக்கர வாகனத்தை ஆக்கிரமித்தான்.
இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்தார்கள். சில பாதைகள் என்றும் இணைவதில்லையே. அதற்கு வாய்ப்புமில்லை, வழியுமில்லை.