பார்த்திபன் காதலி – 2 (1)

பார்கவி தன் எதிரே நெருக்கமாக நின்ற இருவரையும் உணர்ச்சிகளற்ற முகத்துடன் ஏறிட்டாள்.

“பேசு, புன்னகை” என அவள் மனம் எடுத்துக் கொடுத்தாலும் அவளால் செயலாற்ற முடியவில்லை. ஒற்றை விரலை அசைப்பது கூட அவளுக்குக் கடினமாக இருந்தது.

அவள் முன்னே வந்து நின்ற பிரபாவதி புன்னகையுடன், “ஹாய்” என்றாள் அவளிடம். பார்த்திபன் புதிரான, புரியாத பார்வையுடன் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

பிரபாவதியை போல அவளால் எளிதாகப் பேச முடியவில்லை. ஆனால் பேசாமலும் இருக்க முடியாதே.

பார்த்திபனை பக்கவாட்டில் நிமிர்ந்து நோக்கியவள் பட்டென்று அவனை விட்டு இரண்டடி விலகி நின்றாள். அவன் பார்வையில் இருந்து அது தப்பவில்லை. அவன் புருவங்கள் கேள்வியாக நெரிந்தன.

காதலின் கோட்டை தொடும் முன்னே அக்காதல் தோல்வியில் முடியுமா? தற்போது முடியும் என்றது அவள் மனம்.

அவனுக்குத் திருமணம் நிச்சயமாகப் போகிறது என்று அந்தப் பெண்ணுடன் வந்து நிற்பவனிடம் காதல் சொல்ல வந்து நிற்கும் அவளின் மடத்தனத்தை என்னவென்று சொல்வது? அவளுக்கே அவள் நிலையை நினைத்து சிரிப்பாகவும், துக்கமாகவும் இருந்தது.

“பார்கவி” பார்த்திபன் அழுத்தமாக அழைக்க, அந்த அழைப்பு அவளை உலுக்கியது. மேலும் ஓரடி பின்னகர்ந்து போனவளை‌ முறைத்தான் அவன்.

“வாங்க, கஃபேல வெயிட் பண்ணலாம்” என்றான்.

“ஓகே” என்றாள். அவர்கள் முன் உடைந்து விடக் கூடாது, இயல்பாக இரு எனத் தனக்குத்தானே திரும்பத் திரும்ப அறிவுறுத்தி கொண்டாள்.

அப்படி என்ன பெரிய சோகம் நேர்ந்து விட்டது அவளுக்கு. பார்த்திபனை பிடிக்கும், அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும், பிரியம் பகிர வேண்டும் என நினைத்திருந்தாள். அவ்வளவுதான். எல்லாப் பிரியங்களும் பிடித்து வைத்துக் கொள்ளும் உறவில்தான் போய் முடிய வேண்டுமா என்ன?

“இவங்க பார்கவி, என் ஃப்ரெண்ட்டோட வைஃப்க்கு இவங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்” என்று அவளை அறிமுகப்படுத்தியிருந்தான்.

அவனைப் பொறுத்தவரை தான் நண்பனின் மனைவியின் தோழி. அவ்வளவேதான். அதற்கு மேல் எதுவுமே இல்லை.

இல்லையா? என்று எதிர்கேள்வி கேட்டது அவள் மனம்.

“நாங்க ஒரே ஏரியால இருந்தோம். எனக்கு இவங்களைச் சின்ன வயசுல இருந்தே தெரியும். நாங்க ஃப்ரெண்ட்ஸ்” இப்படியல்லவா அவன் தன்னை அறிமுகம் செய்திருக்க வேண்டும். இல்லை, இனி எதுவும் முக்கியமில்லை என்ற முடிவுடன் ஆழ மூச்செடுத்து அவர்களோடு நடந்தாள்.

அதன் பிறகு பிரபாவதியோடு பேசுவது அவளுக்கு எளிதாகவே இருந்தது.

“பிரபா உங்களுக்குக் காஃபி சொல்லவா?” அவள் அமர இருக்கையை இழுத்துப் போட்டு பார்த்திபன் கேட்க, பிரபாவதி பார்கவியிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“காஃபியா? நான் பிரியா வந்ததும் சொல்றேன்” என்று விட்டாள். பிரபாவதியின் அப்பா காவல்துறையில் பணிபுரிகிறாராம். ஆகப் பார்கவியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் காவல்துறையே தோற்று போகும் அளவில் அத்தனை கேள்விகள் கேட்டாள் அவள்.

பார்கவி வந்ததும் பார்த்திபனை நெருங்கி நின்றது அவளுக்கு நெருடி இருக்க வேண்டும். இல்லையென்றால் அவளின் இயல்பே அதுதானோ என்று பார்கவியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“என்ன பண்றீங்க? எங்க ஒர்க் பண்றீங்க? என்ன பொசிஷன்? இங்க எப்படி வந்தீங்க? வண்டியிலயா?” என்று அத்தனை கேள்விகள் அடுக்கடுக்காகக் கேட்டிருந்தாள்.‌‍ பார்கவி லகுவாய் இருக்கையில் சாய்ந்து பதிலளித்து முடிக்கையில் அவளின் தோழி பிரியதர்ஷினியும், அவளின் கணவன் பிரபஞ்சனும் வந்து விட்டார்கள்.

“ஹாய் பாரு” என்று அவளின் பக்கத்து இருக்கையை ஆக்கிரமித்தாள் பிரியதர்ஷினி. பிரபஞ்சன் மனைவியின் பக்கத்தில் அமர்ந்தான்.

“என்ன பாரு, டல்லடிக்கிற? ஆல் ஓகே?” அவளின் முகம் பார்த்ததும் கேட்டு விட்டாள் பிரியா. இதற்குதான் ஓர் உயிர்த்தோழி வேண்டும் என்பதோ.

“சென்னை வெயில் மொத்தமும் என் மூஞ்சில அடிச்சா டல்லடிக்காம என்ன செய்யும்? நீ என்ன இவ்ளோ லேட்டா வர்ற?” என்று பார்கவி கேட்க, பிரியதர்ஷினி முகத்தில் வெட்கப் புன்னகை.

“ஐயோ இந்தப் புதுசா கல்யாணமான தோழிகள் கூட ஃபர்ஸ்ட் பிரேக் அப் பண்ணணும்ப்பா, முடியல” என்று அவள் அலுக்க, அதற்கும் புன்னகைத்தாள் பிரியதர்ஷினி.

“உனக்குப் பேஷன்ப்ரூட் மோஜிட்டோ சொல்லவா பாரு” என்று தோழி கேட்கவும் தலையாட்டினாள்.

அப்போது பார்த்திபன், “பிரபா” என்று அழைக்க இரண்டு பிரபாக்களும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் பார்கவி பக்கென்று சிரித்திருப்பாள். இப்போது மௌன நாடகம் பார்ப்பது போல அவர்களை வேடிக்கை பார்த்தாள்.

“அச்சோ” என்று தடுமாறிய பார்த்திபன், “பிரபாவதி” என்று அவளின் கை தொட்டு நண்பனைக் கை காட்டி, “இது பிரபஞ்சன், என் க்ளோஸ் ஃப்ரெண்ட்” என்று அறிமுகம் செய்து வைத்தான்.

இருவரும், “ஹாய்” சொல்லி நலம் விசாரித்து அறிமுகம் செய்து கொண்டார்கள்.

பிரபஞ்சனின் பார்வையெல்லாம் பார்த்திபனின் மேலேயே இருந்தது.

“பார்த்திபன் படி தாண்ட மாட்டான்னு சொன்னியே டா” என்று சொல்லியே விட்டான் அவன். அதற்குப் பிரியதர்ஷினி கிளுக்கி சிரிக்க, பிரபாவதி குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தாள்.

“அடப்பாவி பிரபா, என் லைஃப் ஆரம்பிக்கும் முன்ன அணுகுண்ட போடாதடா” என்று அலறினான் பார்த்திபன்.

“அது ஒன்னும் இல்லம்மா” என்று பிரபஞ்சன் பிரபாவதியிடம் விளக்கம் சொல்ல எத்தனிக்க, “அவன் அப்பப்போ இப்படித்தான் புரியாதது போலப் பேசுவான். டீச்சர் பையன், ஆனா கொஞ்சம் மக்கு.‌” என்று பதற்றத்துடன் சொன்னான் பார்த்திபன்.

பிரியதர்ஷினி கோபத்துடன் அவனை முறைக்க, “பிளீஸ்” என்று கண்ணால் கெஞ்சினான் அவன்.

“முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்களே என்ன விஷயம் சொல்லுங்க?” என்று அவனே பேச்சையும் மாற்றிட முனைந்தான். ஆனால் பிரியதர்ஷினி இயல்பாகப் பிரபாவதியிடம் பேசினாள்.

“உங்கப்பா போலீஸா? சூப்பர். எங்கப்பா ப்ரபசர். பிரபா, பார்த்திபன் அண்ணா ரெண்டு பேருமே அவரோட ஸ்டூடண்ட்ஸ்தான்” என்றாள்.

“உங்களுக்கு எங்கேஜ்மெண்ட் ஷாப்பிங் முடிஞ்சதா?” பிரியா கேட்க, “முடிஞ்சது. நேத்துதான் அப்பா கூடப் போய் ஷாப்பிங் முடிச்சோம்” என்றாள் பிரபாவதி.

“ஆஹா, உனக்கு வாய்ச்சதும் டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் தானா? சிறப்புடா மச்சா” என்று சிரிப்புடன் நண்பனிடம் சொன்னான் பிரபஞ்சன்.

“நான் என்ன உன்னை மாதிரி கால்ல விழுந்து கெடப்பேன்னு நினைச்சியா?” என்று பார்த்திபன் கேட்ட நேரம் பிரபாவதி அவன் பக்கம் திரும்பி, “என்ன?” என்று கண்ணால் வினவ, “லஞ்ச் ஆர்டர் பண்ணவாம்மா?” என்று அவளிடம் கேட்டான் அவன்.

“படுத்தே விட்டானடா” என்றான் பிரபஞ்சன். அவன் வேகமாக மீசையை நீவி தொண்டையைச் செரும, “பிரபா, அண்ணாவை சும்மா ஓட்டாதீங்க. அந்தப் பிரபா தப்பா எடுத்துக்கப் போறாங்க” என்று அவனிடம் கிசுகிசுத்தாள் பிரியா.

பிரபஞ்சன் மேடை ரகசிய குரலில், “என் லைஃப்ல எப்பவும் பிரபாவுக்கு இடம் இருக்கும்னு சொன்னான் பிரியா. இப்போ பார்த்தா…” என்று அவன் சோகம் போல இழுக்க, “இன்னொரு பிரபா வந்துட்டாங்க. அவ்ளோதானே? பேசாம இருங்க” என்று அவன் இடையில் குத்தினாள்.

பிரபாவதி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்குக் கொஞ்சம் புரிவது போல இருந்தது.

“என்ன நடக்குது இங்க?” என்று நேரடியாகப் பார்த்திபனிடம் அவள் கேட்டே விட, “உனக்குப் பிரியாணி ஓகேவா? இல்ல புளியோதரை சொல்லவா?” என்று உளறினான் அவன்.

“பத்த வைக்காதீங்க பிரபஞ்சன். பாவம் அவங்க” என்று மனைவி கடியவும்தான் அமைதியானான் பிரபஞ்சன்.

“நான் என்னன்னு அப்புறமா டீட்டெய்லா உங்களுக்குத் தனியா சொல்றேன். ஓகே?” என்று பிரபாவதியிடம் விளக்கம் சொன்ன பார்த்திபன், அனைவர்க்கும் மதிய உணவு சொன்னான்.

பார்த்திபன், பிரபாவதியை கவனிக்க, பிரபஞ்சன் கவனமெல்லாம் மனைவியின் மீதே இருந்தது. அவர்கள் நால்வரும் கலகலப்பாக எதை எதையோ பற்றிப் பேசிக் கொண்டே உண்டார்கள்.

பார்கவியைக் கவனிக்க மறக்கவில்லை பிரியதர்ஷினி.‌

“பாரு, சிக்கன் எடுத்துக்கோ. இந்தா பிரியாணி” என்று அவள் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டேதான் உண்டாள் அவளின் தோழி. ஆனால் அந்த ஜோடிகளுக்கு நடுவே தான் தனித்து விடப்பட்டது போலிருந்தது அவளுக்கு.

அவர்கள் உணவோடு சேர்த்து பரிமாறும் அன்பும், அக்கறையும் அக்கணம் அவளால் பார்க்கவே முடியவில்லை. அதிலும் தான் நேசிக்கும் ஒருவனை, அவன் நேசிக்கும் பெண்ணுடன் நெருக்கமாக நேசத்துடன் காண நேர்வதெல்லாம் எத்தனை கொடுமை.

தட்டில் இருந்து தலையை நிமிர்த்தாமல் உண்பது போலப் பெயர் செய்து கொண்டிருந்தாள்.

ருசியான உணவு, தொண்டையை அடைப்பது போலிருந்தது. எத்தனை முறை தண்ணீரை குடித்து விழுங்கி வைப்பது. அப்படி முயற்சி செய்வதே தொண்டை அடைத்து கண்ணீரை வரவைத்தது.

“ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே பிரபா” என்று பார்த்திபன் கேட்க, “ம்ம், பார்த்திச் சின்னதா ஒரு பிசினஸ் ஐடியா. உன் பிரெண்ட்டுக்கு வெப்சைட் டிசைன் செஞ்சு கொடுத்தோம் இல்ல? அதையே பெருசா பண்ணலாம்னு பிரியா சொல்றா. நீயென்ன நினைக்கிற?” என்று கேட்டான் பிரபஞ்சன்.

“சூப்பர் டா பிரபா. செம்ம ஐடியா. என் ஃப்ரெண்ட்டே இன்னும் ரெண்டு பேருக்கு வெப்சைட் டிசைன் பண்ணனும்னு கேட்டுருந்தானே”

“ம்ம், அவர் கேட்கவும்தான் இந்த ஐடியா வந்தது அண்ணா” என்றாள் பிரியா.

பார்கவி பக்கம் திரும்பி, “நான் உன்கிட்ட சொன்னேன் இல்ல பாரு?” என்று அவள் கேட்க, “ம்ம்ம்” என்றாள் அவள்.

“நீங்க என்ன அண்ணா நினைக்கிறீங்க?”

“நல்ல ஐடியா. இதெல்லாம் என்ன கேள்வி, யோசிக்காம இறங்குங்க. நல்லா வரும்டா பிரபா, நீ பண்ணு” என்றான் நண்பனை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒரு கணம் தயங்கி பிரபாவதியை பார்த்தான் பிரபஞ்சன்.

“நீங்க பார்த்திபன் பிரபாவாகிட்டீங்க. இனிமே நீங்களும் எங்க கேங். சோ இதை உங்களை வச்சுட்டே பேசுறோம். உங்களுக்கு ஓகேதானே?” என்று அவன் கேட்க, புன்னகைத்தாள் பிரபாவதி. அவர்கள் நட்பு கரம் நீட்டும் போது அவள் மட்டும் எப்படி மறுப்பாள்?.

“நீங்க பேசுங்க. நானும் என்னன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்” என்றாள்.

“சொல்லு பிரபா” என்று பார்த்திபன் சொல்ல, இரண்டு பிரபாக்களும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தார்கள்.

பார்த்திபன் அதைக் கண்டு சத்தமாகச் சிரித்து, பிரபாவதியை நெருங்கி அமர, பார்கவி தன் பார்வையை வெளிப்புறம் திருப்பினாள்.

இன்றைக்கு நான் இங்கு வந்திருக்கவே கூடாது என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் அவள்.

error: Content is protected !!
Scroll to Top