“எனக்கு ஒருத்தரை பிடிச்சிருந்தது பிரி. ஐ லவ்டு ஹிம்”
“வாட்? லவ்வா, யாரு?”
“என்னைப் பேச விடு பிரியா. எனக்குப் பிடிச்சுருந்ததுன்னுதானே சொன்னேன்? அவர்கிட்ட நான் லவ் சொன்னதும் ஷாக்கானார். நான் லவ் சொன்னதும் ரொம்பத் தப்பான நேரத்துலன்னு வச்சுக்கோயேன். அன்னைக்கு அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுன்னு நான் ரெக்ரெட் பண்றேன் பிரி. பட் இட் வாஸ் டூ லேட்…”
“யாருன்னு சொல்லு பாரு. நீ லவ் சொன்னதும் என்ன பதில் சொன்னாங்க?” பதற்றத்துடன் கேட்டாள் பிரியதர்ஷினி.
“பிரி, அவர் வேற ஒரு பொண்ணோட கமிட்டட். நான்தான் சொன்னேனே, நான் சொன்னது ரொம்பத் தப்பான நேரம்னு..”
“அச்சோ பாரு” என்று தாவி தோழியின் தோளில் கைப் போட்டு அவள் தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
பார்கவியின் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.
“என்கிட்ட நீ சொல்லவே இல்லையே பாரு? என்கிட்ட ஷேர் பண்ணியிருக்கலாம் இல்ல?”
“அந்நேரம் அப்பா கல்யாணம் பத்தி பேசவும், அவர மறக்க சரின்னு சொல்லிட்டேன்”
“பைத்தியம் பாரு நீ”
“அது எனக்கே தெரியுது. நான்தான் சந்தோஷமா இல்ல, அம்மாப்பாவாவது என்னால சந்தோஷமா இருக்கட்டுமேன்னு கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். உடனே பாரியை கொண்டு வந்து நிறுத்துவாங்கன்னு எதிர்பார்க்கல நான். அது நான் அவசரமா எடுத்த முடிவுதான்னாலும்.. தப்பான முடிவா எனக்குத் தோனல ப்ரியா”
“கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம் நீ”
“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு பிரியா. உனக்குக் கல்யாணமாகி ஒரு வருஷமாகப் போகுது. எங்க வீட்ல நான் ஒரே பொண்ணு. இன்னும் எவ்வளவு நாள் நான் கல்யாணம் வேணாம்னு சொல்ல முடியும்? நீயே சொல்லு? என்னைக்கா இருந்தாலும் யாரையாவது கல்யாணம் பண்ணித்தானே ஆகணும்?”
“அதுக்காக இந்தப் பாரியை பிடிக்காமலே ஓகே சொல்லுவியா?”
“பிராக்டிகலா பேசு பிரியா”
“இந்தப் பாரியை வேணாம்னு சொல்லிட்டு அடுத்து சூரி வந்தா என்ன சொல்றதுன்னு யோசிக்கிறியா?” பிரியா கேட்க மௌனமாகத் தலையசைத்தாள்.
“பாரியை போகப் போகப் பிடிச்சிரும்னு நினைச்சேன். இப்போ அது முடியவே முடியாதோன்னு..” என்று அவள் தொண்டையடைக்க நிறுத்தவும், அவளின் முகத்தை நிமிர்த்தி என்னவென்று கண்களால் வினவினாள்.
“எப்பவும் தொட்டு தொட்டு பேசுறார். அது ஒரு மாதிரி அன்ஈஸியா இருக்கு எனக்கு.”
“பாரு, அதெல்லாம் இப்போ நார்மல்..”
“என்ன நார்மல்? தியேட்டர்ல கிஸ் பண்ண டிரை பண்ணார். அப்புறம் கார்ல.. அப்புறம் எங்க வீட்ல.. நேத்து திரும்பவும் எங்க வீட்ல வச்சு.. நான் தடுக்கவும் கோபம் வந்து கத்திட்டார். உன் எக்ஸ் உன்னை என்ன பண்ணான்னு கேட்கறார் பிரியா. இத்தோட தேர்ட் டைம் இந்தக் கேள்வியைக் கேட்கறார். இப்பவே இப்படின்னா நாளைக்குக் கல்யாணத்துக்கு அப்புறம் காலம் முழுக்க இதையே சொல்லி காட்டினா என் லைஃப் நரகமாகிடாதா?”
“நீ அவர்கிட்ட உன் லவ்வை பத்தி சொல்லிட்டியா? என்கிட்ட கூடச் சொல்லல..”
“நானே ஏன்டா பாரிகிட்ட சொன்னோம்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். அந்நேரம் எனக்குப் பொய் சொல்ல தோனல. நான்தான் சொன்னேனே, எனக்கு மட்டும்தான் அவரைப் பிடிச்சது. அவர் என்னை அந்தப் பார்வையில் பார்த்ததே கிடையாதுன்னு சொல்லிட்டார்”
“சாரி பாரு. என்கிட்ட சொல்லியிருக்கலாம் நீ” என்று பிரியதர்ஷினி திரும்பத் திரும்பச் சொல்ல, அவளிடம் எப்படி உண்மையைச் சொல்வாள் அவள்? உன் கணவன் பிரபஞ்சனின் நண்பன் பார்த்திபனை, நாம் சிறு வயதில் வெறுத்த ஒருவனை நான் நேசித்தேன் என்று எவ்வாறு சொல்வாள்?
தன்னால் தோழியிடம் இருந்து மறைக்க முடிந்தது. ஆனால் பிரியதர்ஷினி நிச்சயமாகப் பிரபஞ்சனிடம் சொல்வாள். அவன் மனைவியின் உயிர் தோழிக்காக ஏதேனும் செய்ய நினைத்தால் பார்த்திபனுக்கு அது எத்தனை பெரிய பிரச்சினையை, சங்கடத்தை உண்டாக்கும். இதையெல்லாம் யோசித்துதான் எதையும் சொல்லவில்லை அவள். இப்போதும் யாரென்ற உண்மையைத் தன் மனத்துக்குள் அழுத்தி மறைத்தாள்.
“அம்மாகிட்ட கூடச் சொன்னேன் பிரியா”
“எது உன்னோட லவ் ஃபெயிலியரையா?”
“ப்ச், பாரியை பத்தி..”
“ஓ என்ன சொன்னாங்க?”
“எனக்கு அட்வைஸ் பண்ணாங்க. எங்கேஜ்மெண்ட்டானா க்ளோஸாகறது நார்மல்தானே?”
“அன்னைக்கு நாம ஷாப்பிங் போனப்போவே கவனிச்சேன். நீ ரொம்ப அன்கம்பர்ட்டபிளா இருந்த. ப்ச், என்ன பாரு பண்றது? அப்பாகிட்ட அந்தப் பாரி உன்னைச் சந்தேகப்பட்டுப் பேசுறான்னு சொல்லிடலாமா?” என்று அக்கறையுடன் கேட்டாள்.
“அப்பா ஹெல்த் பத்திதான் உனக்குத் தெரியுமே பிரியா. அவர்கிட்ட இந்தக் கல்யாணம் வேணாம்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி கூடச் சொல்லணும்னு நினைச்சேன் பிரி. ஆனா அதுனால அவருக்கு எதுவும் ஆகிட்டா? அப்பா இல்லாம… யோசிக்கவே முடியல பிரி. பயமா இருக்கு” குரல் உடைய கண்களைத் தேய்த்துக் கொண்டாள். கண்ணீர் சரசரவெனக் கன்னம் தொட்டிருந்தது.
“ஒரே ஒரு நிமிஷம் கண்ணை மூடி சகிச்சுட்டு இருந்துடலாம்னு நினைச்சாலும் என்னால முடியல. நான் என்ன செய்ய? எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்கன்னாலும் அவருக்குப் புரியல” என்று தேம்பினாள்.
“இந்தக் கம்பளி பூச்சி கையில ஊருன மாதிரி..” முடிக்க முடியாமல் நிறுத்தி விட்டாள். அக்கணம் எதிர்கால வாழ்க்கை அவளை முழுமையாய் மிரட்டியது.
“நான் நோ சொன்னாலே பாரிக்குக் கோபம் வந்துடுது. உடனே “உன் எக்ஸ்” அப்படின்னு அவரை இழுத்து ஏதாவது சொல்லி என்னை அப்செட் பண்ணிடுறார். நானும் கோபத்துல கண்ணா பின்னான்னு வார்த்தையை விட்டுடுறேன். இத்தனைக்கும் அவரும் ஒரு பொண்ணை லவ் பண்ணி ஒரு வருஷத்துக்கு முன்னாலதான் பிரிஞ்சுருக்கார். ஆனாலும் என்னைப் புரிஞ்சுக்காம..”
“என்ன பாரு. இவ்வளவு நடந்திருக்கு, நீ என்கிட்ட எதுவுமே சொல்லல? என் ஞாபகமே உனக்கு வரலையா பாரு?”
“பிரி, புரியாம பேசாத. எப்படியாவது பாரியை எனக்குப் பிடிக்க வச்சுடணும்னு என்னோட நானே போராடிட்டு இருந்தேன். ஆனா நேத்து அவர் நடந்துக்கிட்ட விதத்த யோசிச்சா இனிமே முடியுமான்னு சந்தேகமாக இருக்கு பிரியா”
“பிரபஞ்சனை பாரிகிட்ட பேச சொல்லவா?”
“இல்ல, வேணாம். அண்ணா பேசினா அதுக்கும் ஏதாவது அசிங்கமா பாரி சொல்லிட்டா என்னால தாங்கிக்க முடியாது பிரியா”
“என்ன பாரு, அவ்ளோ மோசமாவா பேசுறார்?”
“ப்ச் பிரி. பாரி எப்படிப் பேசுவார்னே என்னால சொல்ல முடியாம.. அண்ணாவை எப்படிப் பேச சொல்றதுன்னு வேணாம்னேன்”
“எங்க அத்தையைப் பேச சொல்லுவோமா? அவருக்குக் குட் டச் சொல்லி தருவாங்க.. நல்லா அடி வெளுத்து..” என்றாள் கோபமாக.
சிரித்த பார்கவி, “பிரியா யோசிச்சு பேசு. இதுவே கல்யாணமானான்னு யோசி” என்றாள்.
“அய்யோடா” என்று தலையில் அடித்துக் கொண்டாள். ஒரு மஞ்சள் கயிறு போதும் எல்லாமே நியாயமாகி விடுமே என்ற அயர்ச்சி இருவரின் முகத்திலும் தெரிந்தது.
“இப்பவும் அப்பாவை நினைச்சா பயமா இருக்கு பிரியா. நான் எடுத்த ஒரேயொரு அவசர முடிவு என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. திரும்ப அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேணாம்னு நினைக்கறேன். நான் என்ன பிரியா செய்ய? அப்பாகிட்ட சொன்னா எனக்காகக் கல்யாணத்தை நிறுத்திடுவார்தான். ஆனா அதுக்கு அப்புறம் என்னாகும்? இவரு கல்யாண மண்டபத்துல இத்தன கல்யாணம் நடக்குது. ஆனா இவர் பொண்ணுக்கு கல்யாண ராசி இல்லையேன்னு பேசுவாங்க இல்ல? அப்பாவால தாங்கிக்க முடியுமா தெரியல?”
“நாம அம்மா கிட்ட பேசுவோம் பாரு”
“என்ன ஆனாலும் என்னைத்தானே குத்தம் சொல்லுவாங்க. பொண்ணு சரியில்ல. எவனையோ லவ் பண்ணாளாம்னு.. பசங்க என்ன செஞ்சாலும் தப்பு சொல்ல மாட்டாங்களே.”
“அதெல்லாம் யோசிக்காத பாரு. யார் என்ன பேசினா நமக்கு என்னன்னு காது கேட்காத மாதிரி கடந்துடணும்.”
“அப்போ அம்மாகிட்ட சொல்லுவோமா?”
“இன்னைக்கே சொல்றோம் ஓகே?” என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் பிரியதர்ஷினி.
“ஆமா, நீ ஆன் சைட் கேட்டியா ஆஃபீஸ்ல?”
“உன்கிட்ட ஆல்ரெடி சொன்னேன் இல்ல பிரியா. நான் கேட்டிருக்கேன். அவனுங்க இன்னும் ப்ராப்பரா பதில் போடல. இந்த ப்ராஜெக்ட் முடிச்சாதான் ரிலிவ் பண்ணுவானுங்க. நானும் பெருசா அவங்களைப் பிரஸர் பண்ணல. பொறுமையா அவனுங்க அனுப்பட்டும்னு இருக்கேன். பாரியை நம்பி அவர் விசால போய் அங்க வேலை இல்லாம உக்காருறத பத்தி நான் யோசிக்கக் கூட விரும்பல.” என்றாள் திட்டவட்டமாக.
“நாம ஆல்மோஸ்ட் டெய்லி பேசுறோம். ஆனா என்கிட்ட எவ்வளவு விஷயங்களை மறைச்சுருக்க நீ? யூ ஆர் ஹார்ட் ப்ரோக்கன்னு நினைச்சாலே எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள் மெய்யான வருத்தத்துடன் தளுதளுத்த குரலில்.
“நீ நேசிச்ச ஆள் யாரா இருந்தாலும்..”
“நல்லாருப்பார் பிரியா. பிளீஸ் வேற எதுவும் சொல்லிடாத. அவராவது நல்லா இருக்கட்டும்” என்றாள் உளமார.
“அவர் லாஸ்னு சொல்ல வந்தேன் பாரு”
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல பிரியா. அவருக்கு நான் ஒருத்தி இருக்கறது கூடத் தெரியல பிரி. நான்தான் லூசு மாதிரி போய் என் மனசை சொல்லி அவரை ரொம்பச் சங்கடப்படுத்திட்டேன். நான் என்ன மாதிரியான சிட்டுவேஷன்ல அவர்கிட்ட அதைச் சொன்னேன்னு சொன்னா. நீயே என்னை அசிங்கமா திட்டுவ..”
“நெவர். ஏன்னா நீ என்னோட பிரெண்ட். அதுனால மட்டும் இல்ல, நாம சாதாரண மனுஷங்க பாரு. எர்ர் இஸ் ஹியூமன். தவறுவது மனித இயல்பு” என்ற தத்துவம் பேசினாள்.
பார்கவி புன்னகையும் பெருமூச்சுமாகப் பால்கனிக்கு பார்வையைத் திருப்பினாள். அங்கே புறாக்கள் இரண்டும் அலகை உரசி கொஞ்சி கொண்டிருந்ததைக் காணவே கொள்ளை அழகாக இருந்தது.
இப்படி இயல்பான ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறாள், இப்படியொரு இணக்கம் அவளிடம் வர வேண்டும். அதற்குப் பாரிவேந்தனும் உதவினால் நன்றாக இருக்கும் என்று இப்போது நேர்மறையாகத்தான் சிந்தித்தாள்.
மதிய உணவை நெருங்கும் வேளையில் பிரபஞ்சன் வந்து விட்டான். அதன் பிறகு பொழுது நன்றாகவே கழிந்தது.