பார்த்திபன் காதலி – 12 (1)

அவளின் மொத்த குழுவும் இணைய வழியில் அமர்ந்து பணியில் மூழ்கியிருந்தனர். அவள் மதியம் கணினி முன் அமர்ந்தாள். இப்போது மாலையாகி இருந்தது.

இரவு நெருங்கும் முன் ஒரு வழியாகத் தீர்வு கண்டு விட்டார்கள். அவ்வளவு நேரமும் கணினி திரையை வெறித்தபடி யோசித்ததில் அவளுக்குக் கண்கள் எரிந்தன. அப்படியே இருக்கையில் சாய்ந்து கண் மூடினாள்.

“பாரும்மா, மதியம் சாப்பிட்டியா இல்லையா?” ஏழு மணி போல அம்மா வந்துதான் அவளை எழுப்பி விட்டார். அப்படியே திரும்பி அம்மாவின் இடையைக் கட்டிக் கொண்டாள்.

“என்னடா..” நொடியில் கலங்கி விட்டார் காவேரி.

“பசிக்குதும்மா” என்று சூழலை எளிதாகச் சமாளித்து விட்டாள் பார்கவி.

“என்ன பொண்ணு நீ, இப்படித்தான் வேலை வேலைன்னு சாப்பிடாம இருப்பியா? போற வீட்ல இப்படி இருந்தீன்னா என்னைத்தான் பேசுவாங்க” என்று அலுத்துக் கொண்டார்.

“அப்போ நான் உங்களோடவே இருந்துக்கவாம்மா?”

“20 நாள்ல கல்யாணத்த வச்சுட்டு என்ன பேசுற பாரு நீ? உங்கப்பா முன்னாடி இப்படிச் சொல்லி வைக்காத. அவ்ளோதான், மனுஷன் உடனே என் பொண்ணு ஆசைன்னு ஆரம்பிச்சுடுவார்” என்று ஆரம்பித்து அப்பாவின் உடல்நிலையைச் சொல்லி அவர் புலம்ப, வருந்தினாள் அவள்.

“சாரிம்மா” என்றாள். நாளை அவளின் மண வாழ்க்கையும் மன்னிப்பு கோருவதிலேயே முடிந்து விடுமோ என்ற அச்சம் இப்போது அவளுக்கு வந்திருந்தது.

இன்றும் பெற்றோரிடம் அவளால் எதையும் பகிர முடியவில்லை.

காலை பாரிவேந்தனின் அக்கா வீட்டுக்குச் சென்றோம் என்பதை மட்டுமே சொன்னாள்.

பாரிவேந்தனை அவளுக்குப் பிடிக்குமா? என்ற கேள்வியைத் தாண்டி இப்போது வேறொரு கேள்வி முன்னே நின்றது.

இப்போதே இப்படிச் சந்தேகப்பட்டு அவளின் கடந்த காலத்தைக் கேள்விக்குள்ளாக்குபவன் நாளை அவர்களின் திருமணத்துக்குப் பிறகு இதையே தொடர்ந்தால் அவள் என்ன செய்வாள்? அந்த நினைப்பே அவளை மிரட்டியது.

அவளின் இயல்பை மீறி அவனிடம் வார்த்தைகளை விடும் தன்னையே வெறுக்க வைக்கும் அவனை எங்கனம் நேசிக்கப் போகிறாள்? என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி தவித்திருந்தாள்.

அவனை முடிவு எடுக்கச் சொல்லி விட்டாள். ஆனால் அவளும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என அவள் மனம் அறிவுறுத்தியது.

ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தவளின் மனம் சஞ்சலத்தில் ஆடிக் கொண்டிருந்தது. ‍

நேரம் இரவு பதினொன்றை தொட்டிருந்தது. அவளின் பெற்றோர் அப்போதுதான் உறங்கச் சென்றிருந்தார்கள்.

இன்றும் அவளுக்கு உறக்கம் வரும் என்று தோன்றவில்லை.

பெற்றோரின் அறைக் கதவு திறந்தே இருக்க, “அப்பா” என்று கதவை தட்டினாள்.

“பாரு.. என்னடா..” வேகமாக வந்து கதவை திறந்து மகளின் முகத்தைக் கரிசனத்துடன் ஏறிட்டார் காவேரி.

“நான் உங்களோட படுத்துக்கவாம்மா?” என்று கேட்டாள்.

ரங்கராஜன் படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்து, “உள்ள வாடா பாரு” என்றார்.

அவர் எழுந்து தரையில் விரித்துப் படுக்க, படுக்கையில் அம்மாவுடன் சுருண்டாள்.

“தூங்கு” என்று மகளின் தலைக் கோதி கொடுத்தார் காவேரி. அவளிடம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்.

மனைவியின் முதுகை சுரண்டி, ‘என்னவாம்?’ என்று ரங்கராஜன் செய்கையில் விசாரிக்க, ‘தெரியலையே’ என்று உதடு பிதுக்கினார் காவேரி. அதற்குள் உறங்கியிருந்தாள் பார்கவி.

மறுநாள் காலையிலேயே அவளின் பெற்றோர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவளைக் கண்டதும் காஃபியை நீட்டிய காவேரி, “நேத்து என்னடா ஆச்சு?” என்று அவளிடம் கேட்டார்.

“இன்னும் 19 நாள்ல வேற வீட்டுக்கு போய்டுவேன் இல்லம்மா. அது வரைக்குமாவது உங்களோட படுத்துக்கலாம்னு..” என்று அவள் சொல்லவும் பெற்றவளுக்கு உருகி விட்டது.

“நாங்க எப்பவும் உனக்காக இருப்போம் பாரு..”

“ஆனா நான் இங்க இருக்க மாட்டேனேம்மா” என்றாள் தளுதளுத்த குரலில்.

“அட கழுத, காலையிலேயே என்னாச்சு உனக்கு?” என்று மகளின் பக்கத்தில் வந்தமர்ந்தார்.

“ரெண்டு வருஷம்தானே பாரு. அப்புறம் இங்க வந்துடுவீங்க இல்ல?” என்று கேட்டார்.

அந்தக் கேள்விக்கு அவளுக்குப் பதில் தெரியவில்லை. அது குறித்துப் பாரிவேந்தனிடம் அவள் பேசியிருக்கவும் இல்லை.

அமெரிக்கா என்று இல்லை, எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அவ்வளவு விரைவில் யாரும் திரும்பி வருவதில்லை. பலருக்கு அது ஒரு வழிப் பாதையாகவே மாறி விடுகிறது.

விரும்பியும், விரும்பாமலும்! வாழ்க்கையின் வலுக்கட்டாயத்தினாலும் வெளிநாடே வாழ்க்கை என்றாகி விடுகிறது.

“பாரும்மா” அப்பாவின் குரல் அவளைச் சுயம் பெற செய்தது.

“அம்மாவும், நானும் பத்திரிக்கை வைக்கக் கிளம்பறோம்.‌ இன்னைக்கு உனக்கு வேலை இருக்காடா?”

“ஒர்க் இல்லப்பா.”

“அப்போ உன்னை உங்க பெரியம்மா வீட்ல விடட்டுமா?”

“வேணாம்ப்பா. நான் நம்ம மண்டபத்துக்குப் போகலாம்னு இருந்தேன்” என்றாள்.

“ம்ஹும், இனிமேட்டு நீ அங்க போய்த் தனியா வேலை பார்க்கறதுலாம் சரியா வராது பாரு” என்று காவேரி கண்டிப்புடன் சொல்ல, “அப்போ நான் பிரியா வீட்டுக்கு போறேன்ம்மா.” என்றாள்.

“சரி, அப்போ போய்க் கிளம்பு” என்றார். அவள் கிளம்பி வருகையில், “இந்தப் பத்திரிக்கைங்கள்ல நீ இன்னும் பேர் எழுதலையா காவேரி?” மனைவியைக் கடிந்தார் ரங்கராஜன்.

“பைவ் மினிட்ஸ் குடுங்கப்பா, நான் எழுதறேன்” என்று அப்பா நீட்டிய பேனாவுடன் எழுத அமர்ந்தாள்.

அப்பா கொடுத்த பட்டியலில் இருந்த பெயர்களை எழுதிக் கொண்டே வந்தாள்.

“சத்யபாமா – துரைராஜ்” என்று ஏதோ ஒரு கவனத்தில் அவள் எழுதிக் கொண்டிருக்க, “முன்னாடி நம்ம பக்கத்து தெருவுல இருந்தாங்க இல்ல பாரும்மா, அவரு போஸ்ட் ஆபீஸ்ல வேலை பார்த்தாரே..” அப்பா சொல்லவும் பெயரை ஊன்றி கவனித்தாள்.

“அவங்க பொண்ணுக்குத் தனியா பத்திரிக்கை வைக்கணும்ங்க. அந்தப் பொண்ணு பேரு லிஸ்டுல இருக்கான்னு பாரு” என்று காவேரி சொல்லவும், பெயர் பட்டியலை பார்த்து விட்டு மறுப்பாகத் தலையசைத்தாள்.

“இப்போ கூட ப்ரொபசர் பையன் கல்யாணத்துல பார்த்தோமே. எனக்கு அவங்க பையன் பேருதான் ஞாபகம் இருக்கு.. ஆனா..” என்று மண்டையைச் சொரிந்தார் ரங்கராஜன்.

“பார்த்திபன் ப்பா” என்றாள், தொண்டையடைக்க.

“ஆங் அதேதான்”

“ரேணுகா அவங்க தங்கச்சி பேர்” என்று சொல்லி, ஒரு பத்திரிக்கையில் பெயர் எழுதி வைத்தாள்.

அவளது திருமணப் பத்திரிக்கை அவனைத் தேடி செல்கிறது.

எத்தனை முயன்றும் தவிர்க்க முடியாமல் மனம் சட்டென்று கசங்கி விட்டது. கண்கள் கலங்கி விடாமல் இருக்கப் பெருமுயற்சி செய்தாள்.

“இன்னைக்கு அவங்களுக்கு மறக்காம பத்திரிக்கை வச்சுடணும் காவேரி. இல்லனா கோபிச்சுக்கப் போறாங்க” என்ற அப்பாவின் பேச்சை கவனிக்காமல் படபடவெனப் பெயர்களை எழுதி அப்பாவிடம் நீட்டினாள்.

அவளைப் பிரியதர்ஷினியின் வீட்டில் விட்டுவிட்டு அவள் பெற்றோர் கிளம்பியிருந்தார்கள்.

“வா, பார்கவி” என்று வாஞ்சையோடு அவளை வரவேற்றார் பிரியதர்ஷினியின் மாமியார் மரகதவல்லி. அவளின் முன்னாள் ஆசிரியர்.

“நான் கோச்சிங் சென்டர் கிளம்பிட்டேன். ஈவ்னிங் வந்துடுவேன். என்ன?” என்று அவளின் கன்னம் தட்டி சொல்லிச் சென்றார்.

பிரியதர்ஷினியின் கணவன் பிரபஞ்சனும், அவளை வரவேற்று சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வெளியில் சென்று விட்டான்.

“அச்சோ அண்ணா, நான் வந்ததால நீங்க வெளில கிளம்பறீங்களா?” அவள் பதறி கேட்க, “அட இல்ல பார்கவி. இங்க பக்கத்து தெருல கிரிக்கெட் அகாடெமி இருக்கு. அங்க சின்னப் பசங்களுக்கு ட்ரெயின் பண்ண ஆள் கேட்டாங்க. நம்ம பார்த்திப் போக வேண்டியது. அவன் பிஸியா இருக்கான்னு நான் போறேன். டூ ஹவர்ஸ்ல வந்துடுவேன்” என்றான்.

எப்படியாவது அவன் பெயரை யாரேனும் அவளுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

கிரிக்கெட் பயிற்சி என்றதும் அவளுக்கு, அவன் கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த கணங்கள் கண்ணில் வந்து நின்றது.

அது போகாத ஊருக்கான வழி எனத் தலையை உதறிக் கொண்டாள்.

பிரபஞ்சன் செல்லவும், “நீ உள்ள வா பாரு” என்று அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் பிரியதர்ஷினி.

“ஏய் ப்ரியூ, இங்க ஹால்லயே இருக்கலாம்.” என்று கையை உருவினாள்.

“அட வா பாரு” என்று அவளைப் படுக்கை அறைக்குள் இழுத்துச் சென்றாள் பிரியதர்ஷினி.

பால்கனியில் நின்றிருந்தார்கள் இருவரும்.

“கீச் கீச்” என அங்கிருந்த கூட்டில் இருந்த குருவி குஞ்சுகளின் கீச்சிடலை கேட்கவே இதமாக இருந்தது.

அவள் பால்கனி சுவரில் சாய்ந்து நின்று சத்தமில்லாமல் பறவைகளைப் பார்த்திருக்க, “இப்படி வந்து உக்காரு பாரு” எனப் பால்கனியை பார்த்திருந்த சோஃபாவில் அவளை அமர்த்தினாள்.

பார்கவிக்குப் பிடித்த சூடான சாக்லேட் ப்ரௌனியுடன் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அவளிடம் நீட்டினாள்.

ஒரு கரண்டி எடுத்துக் கண் மூடி ரசித்து உண்டவளுக்கு உணவின் வழியே மனத்தைத் தொட்டு விடலாம் என்பது உண்மையே என்று தோன்றியது.

“பாரு என்ன பிரச்சனை?” பிரியதர்ஷினி நேரடியாகக் கேட்டு விட, பார்கவி பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

இருவரும் ஐஸ்கிரீமை அமைதியாக உண்டனர்.

“ப்ரியூ..”

“சொல்லு பாரு”

“ப்ரி..” என்று தயங்கி இழுத்தாள்.

“பாரு.. என்ன?”

“ப்ரி..”

“உன்ன கொல்ல போறேன். என்னன்னு சொல்லு” என்று கடுப்பானாள் பிரியதர்ஷினி.

“அங்க பாரேன்” என்று பார்கவி கைக் காட்ட, பால்கனி விளிம்பில் ஜோடி புறாக்கள் எப்போதும் போலக் காதலித்துக் கொண்டிருந்தன.

“இதுங்களுக்கு இதே வேலையா போச்சு பாரு” என்று குரலை தழைத்து அலுத்தாள்.

“கிஸ் பண்ணுதுங்க பிரி”

“ஆமா” என்றாள் சிரிப்புடன்.

“பிரி”

“பாரு, இப்போ நீ என்னான்னு சொல்லலன்னா நான்..” என்று அவள் கோபமாகச் சொல்லி முடிக்கும் முன், “நான் ஒன்னு கேட்பேன். ஆனா நீ திட்ட கூடாது” என்று முன்னேற்பாடெல்லாம் பலமாக இருந்தது.

“ஒன்னு என்ன நாலு கூடக் கேளு. திட்ட மாட்டேன்” என்று கத்தினாள்.

அவள் புறமாகத் திரும்பாமல், “கல்யாணத்துக்கு முன்னாடி கிஸ் பண்ணியிருக்கீங்களா ப்ரி?” என்று கேட்டே விட்டாள்.

“ஆ என்ன கேட்ட?”

“உன் காதுல சரியாதான் விழுந்தது. ஷாக்காகாம பதில் சொல்லு” புறாக்களைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

ஆண் புறா, பெண் புறாவின் பின்னேயே சுற்றுவதைப் பார்க்க ரசனையாக இருந்தது. அது கெஞ்சிக் கொண்டே சுற்றுவதைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள்.

இந்தப் பொறுமை ஏன் பாரிவேந்தனுக்கு இல்லை? என்ற கேள்விதான் மனத்தில் எழுந்தது.

“ப்ரி, பிரபஞ்சனை பார்த்ததும் உனக்கு எப்படிப் பிடிச்சது?”

“இன்னைக்கு நீ கேள்வியா கேக்குறதுன்னு முடிவு பண்ணியிருக்கியா?”

“சொல்லு பிரி. எனக்கு ஒரு கிளாரிட்டி தேவைப்படுது”

“உனக்குத் தெரியாததா? பிரபாவை நமக்கு ரொம்ப வருஷமா தெரியும் இல்லையா? ஆனா, அன்னைக்கு மழையில் நனைஞ்சு எங்கப்பாவோட எங்க வீட்டுக்கு வந்து என் பேர் சொல்லி கூப்பிட்டார். அத்தனை வருஷம் இல்லாம அன்னைக்கு அவரைப் பார்த்ததும் ஒருமாதிரி வித்தியாசமான ஃபீல்.. மனசுல..”

“மணி அடிச்சதா பிரி? பல்ப் எரிஞ்சுதா? வயித்துல பாட்டாம் பூச்சி படை எடுத்துச்சா?” என்று ஆர்வமாக அவள் முகம் பார்த்தாள்.

பிரியதர்ஷினி சிரிப்புடன், “சத்தியமா இல்ல பாரு. ஆனா போகப் போக அப்படித்தான் ஃபீல் பண்ணேன்” என்றாள்.

“எனக்கு இப்போ வரைக்கும் அப்படி எதுவுமே ஃபீல் ஆகலையே, இஸ் தட் நார்மல்? பாரி பக்கத்துல வந்தாலே பதட்டமாகிடுறேன் பிரி. நானும் நார்மலா இருக்கணும்னு எனக்கு நானே எத்தனை டைம் சொல்லிக்கிட்டாலும்.. என் பாடி தானாவே பிடிக்கலைன்னு ரியாக்ட் பண்ணிடுது” என்றாள், குற்ற உணர்வுடன்.

பிரியதர்ஷினிக்கு அப்போதுதான் புரிந்தது போலும், “ஏன் அப்படி ரியாக்ட் பண்ணுது? நீ முன்னாடி எதுக்குக் கிஸ் பத்தி கேட்ட?” என்று அவள் முகம் பார்த்து கேட்டாள்.

பார்கவி தயங்கவும், “பாரு” என்று அவளை உலுக்கினாள்.

“நானும், பிரபாவும் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு நாலைஞ்சு டைம்தான் மீட் பண்ணோம். பிரபா பெருசா என் கை கூடப் பிடிச்சது இல்ல. ஆனா காலை பிடிச்சார்” என்று சிரிப்புடன் சொன்னாள்.

“பாரிக்கு என்னைத் தொடாம பேசவே தெரியல பிரி. பொண்ணு பாக்க வந்த அன்னைக்குக் கூட ரொம்பக் கேஷுவலா அவரால இருக்க முடிஞ்சது. நான் ஊஞ்சல்ல இருந்தேன், கீழ விழ போறேன்னு இடுப்புல பிடிச்சார்” என்று சொல்லும் போதே அந்த நினைவில் உடலை உதறி சிலிர்த்து கொண்டாள்.

“சீ பிரி, என் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கு. ஏதோ வேண்டாதது மேல விழுந்தா மாதிரி..”

“பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கேவா? அப்போவே அவரைப் பிடிக்கலன்னா அம்மாப்பா கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல பாரு?”

“ப்ச், அரேஞ்ச்டு மேரேஜ்‌ இப்படித்தான் இருக்கும்னு நானே நினைச்சுக்கிட்டேன் பிரியா” என்று தலையைக் கைகளில் தாங்கினாள்.

அவள் கைகளில் உருகியிருந்த ஐஸ்கிரீமை வாங்கி ஓரமாக வைத்தாள் பிரியதர்ஷினி.

“பாரு..” என்று அழுத்தமாக அழைத்தாள். பார்கவிக்கு அதற்கு மேலும் எதையும் மறைக்கத் தோன்றவில்லை.

error: Content is protected !!
Scroll to Top