பார்த்திபன் காதலி – 10 (2)

பார்கவி பணிபுரிந்த ப்ராஜெக்ட் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்தது. கடந்த நான்கு நாட்களாக அவள் நேரம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய சூழல்.

அதில் அவளின் பெற்றோருக்கு மிகுந்த மன வருத்தம்.

இரண்டு நாள்களுக்கு முன்னே திருமணப் பத்திரிக்கை வந்து விட்டது. அவளின் பெற்றோர், பெரியம்மா குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டு வந்தார்கள். இப்போது சென்னையில் இருந்த சொந்தங்களுக்குப் பத்திரிக்கை வைக்கத் தொடங்கி இருந்தார்கள்.

அன்று துணிக் கடையில் அவளின் முக மாற்றத்தை கண்டு கவலையுற்றிருந்த அவளின் தோழி பிரியதர்ஷினி, அதன் பிறகு பல முறை அவளை அலைபேசியில் அழைத்து விட்டாள்.

“பாரு, எல்லாம் ஓகேவா? எனக்கு உன்னைப் பார்க்கணுமே?” என்று இவள் மேலிருந்த அக்கறையில் அவள் கேட்க, “பிஸியா இருக்கேன் ப்ரியூ” என்று தோழியைத் தவிர்த்திருந்தாள்.

இவளுக்கே இப்போதுதான் ஒரு தெளிவு வந்திருக்கிறது. அதைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை பார்கவி.

தோழியிடம் எதையும் மறைக்க முடியாது அவளால். அவள் மாற நினைக்கும் போது எதற்குப் பழைய கதையெல்லாம் என்று தவிர்த்து விட்டாள்.

மற்றொரு பக்கம், “வா பழகி பார்ப்போம்” என்று பேசி பேசியே அவளைக் கரைத்துக் கொண்டிருந்தான் பாரிவேந்தன்.‌

“ஒர்க் பிஸி” என்று அவனுக்கும் அதே பதில்தான் சொல்லியிருந்தாள்.

காலையில் இருந்து கணினி முன்னிருந்தது அவள் கண்களுக்கு எரிச்சலை தந்திருந்தது. கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டாள்.

“ஏன்ப்பா கல்யாண பொண்ண கடல போட விடாம, இப்படிக் கண்ணு கலங்க வைக்கிறீங்க?” என்று அந்நேரம் அவளைக் கடந்த அவர்களின் குழுத் தலைவன் சொல்ல, அவனை முறைத்து வைத்தாள் அவள்.

அவளின் முறைப்பை பொருட்படுத்தாமல், “கோ ஹோம் பார்கவி.” என்றான் புன்னகையுடன். அவளின் வேலையும் முடிந்திருக்க, கணினியை அணைத்து, வேகமாக வெளியேறியிருந்தாள்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு வந்திருந்தாள். அப்பாடா என்று சோஃபாவில் பொத்தென்று விழுந்து கண் மூடினாள்.

“காஃபி தரவா பாரு” காவேரி மகளைக் கண்டதும் கேட்க, “ம்ம், நானே வந்து கலந்துக்கறேன்ம்மா” என்று பதில் சொன்னாள்.

“அப்பா எங்கம்மா?”

“மண்டபத்துக்குப் போய் இருக்கார் பாரு. நீ போன் போடு வந்துருவார்” என்றார்.

“அப்பா வேலையை முடிச்சுட்டு வரட்டும்மா” என்று சோம்பல் முறித்துச் சொன்னவள், அப்படியே காலை நீட்டினாள்.

காவேரி அவளை முறைத்து, “எழுந்து போய் முகம் கழுவிட்டு வா” என்றார் கண்டிப்புடன்.

“உங்களுக்குக் காவேரிக்குப் பதிலா கண்டிப்புன்னு பேர் வச்சுருக்கலாம்மா” என்றாள் கிண்டலாக. அவள் அம்மாவிடம் எப்போதும் சொல்வது அது. மற்ற நேரமாக இருந்திருந்தால், “இல்லன்னா உன்னைய சமாளிக்க முடியுமா என்னால?” என்று கோபித்திருப்பார்.

இன்றோ சன்ன சிரிப்புடன் அவளை நோக்கி, “எழுந்து போய் ட்ரெஸ் மாத்திட்டு வா, பாரு. அம்மா காஃபி போட்டு வைக்கறேன்” என்று சமையலறை சென்றார்.

ஓரமாகக் கிடந்த கைப்பையை எடுத்துக் கொண்டு மாடியேறினாள். அவள் கைகள் தானாக அலைபேசியைத் தேடின.

அவளுக்குப் பாரிவேந்தனிடம் இருந்து இரண்டு தவறிய அழைப்புகள் வந்திருந்தன.

“சாரி, வண்டியோட்டிட்டு இருந்தேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

உடனே அவளை அழைத்து விட்டான் அவன்.

“பாரு பாருன்னு ஒரு நாளைக்குப் பத்து முறைக்கும் மேல பாருக்கு கால் பண்றேன். எங்க பாருவை பார்க்கத்தான் முடியலன்னா, பாரு கூடப் பேச கூட முடியலையே” என்று எடுத்ததும் அலுத்துக் கொண்டான் அவன்.

“சாரி, எங்க ப்ராஜெக்ட் நெக்ஸ்ட் வீக் முடிக்கணும். அதுனால ஆபீஸ்ல ரொம்ப டைட்டா போகுது. இன்னைக்குத்தான் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வந்தேன்” என்று விளக்கம் சொன்னாள்.

“ம்ம், ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க இன்விடேஷன் ரெடி பண்ணிட்டேன். நீ பார்த்து பிடிச்சுருக்கான்னு சொன்னீன்னா நல்லாருக்கும்”

“எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. நான் பார்த்துட்டு சொல்றேன்” என்றாள்.

“ஓகே” என்று உடனே அழைப்பை துண்டித்திருத்தான். ஆனால், பத்திரிக்கையை அனுப்பவில்லை.

அவள் உடை மாற்றிக் கீழே சென்று அம்மா நீட்டிய காஃபியை அருந்தினாள்.

“மாப்ளயோட அம்மாவ விட உன் பெரியம்மா பண்ற அலம்பல்தான் ரொம்ப ஓவரா இருக்கு.” என்று மகளிடம் புலம்பினார் காவேரி.

“ஏன்ம்மா? பெரிம்மா என்ன பண்ணாங்க?”

“அவங்க கேட்கறதுக்கு முன்னாடியே அவங்ககிட்ட எல்லாக் கதையும் உன் பெரிம்மா ஒப்பிச்சுடுறா” என்றார் கோபமாக.

“உங்களுக்குப் பிடிக்கலைன்னா நேரா பெரிம்மா கிட்ட சொல்ல வேண்டியதுதானேம்மா?”

“உனக்கென்ன ஈசியா சொல்லுவ. உன் பெரியம்மா வாய் இருக்கே, அப்படியே பெருமை பேசணும் அதுக்கு..”

“உங்கக்காதானேம்மா”

“அடி வாங்கப் போற பாரு நீ. என் கவலை புரியாம பேசிட்டு இருக்க நீ. இது பாட்டுக்குப் பெருமை பேசி அவங்க இஷ்டத்துக்கு நம்மகிட்ட கேட்டு வைக்கப் போறாங்க.” என்று கவலையுடன் சொன்னார்.

“வாட்? கேட்டுன்னா? நீங்க வரதட்சணையாம்மா சொல்றீங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

சட்டெனச் சுதாரித்து, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ காப்பியை குடி. அம்மா போய் நைட்டுக்கு என்ன செய்யுறதுன்னு பார்க்கறேன்” என்று வேகமாக எழுந்து உள்ளே சென்றார்.

அவரின் பின்னே சென்று, “வரதட்சணை அவங்க கேட்டாங்களாம்மா?” என்று கேட்டாள்.

“அதான் இல்லன்னு சொன்னேன் இல்ல. போ, நீ போய் உங்கப்பாக்கு போன் பண்ணி எப்போ வீட்டுக்கு வர்றார்னு விசாரி.” என்று அவளை விரட்டியடித்தார்.

“ம்ம், நான் அப்பாகிட்டயே விசாரிச்சுக்கறேன்ம்மா” என்று அவள் பின்னோக்கி நடக்க, காவேரி சிரித்து விட்டார். அந்நேரம் வீட்டின் அழைப்பு மணி இசைக்கவும், “அப்பா வந்தாச்சு” என்று கத்தியபடியே சென்று கதவை திறந்து வெளியே சென்று பார்க்க, அங்கே வண்டியில் சாய்ந்து நின்றிருந்தான் பாரிவேந்தன்.

“வீட்டுக்கு வந்தா கேட்டை திறந்து விட்டு வாங்கன்னு வாயார அழைக்கணும்” என்றான், அவளைப் பார்வையால் வருடியபடி.

“வாங்க” என்று மதில் கதவை திறந்து விட்டாள்.

“என்ன திடீர்னு வந்திருக்கீங்க?”

“இதுக்கு நீ டைரக்ட்டா ஏன்டா வந்தன்னு கேட்டிருக்கலாம் கவி”

“சாரி, உள்ள வாங்க” என்று வழி விட்டு நின்றாள்.

அதற்குள் அவர்கள் குரல் கேட்டு காவேரியும் வந்து விட்டார்.

“வாங்க மாப்ள, வாங்க” என்று சேலைத் தலைப்பில் கைத் துடைத்து அவனை வரவேற்றார்.

“உக்காருங்க, பாரு கிட்ட பேசிட்டு இருங்க. உங்களுக்குக் காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று பரபரத்தார்.

“எங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு கொடுக்கப் பத்திரிக்கை ரெடி பண்ணேன் அத்த. அதைப் பார்கவிகிட்ட காட்டி அவளுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்க வந்தேன்” என்று அலைபேசியைத் திறந்து பத்திரிகையை எடுத்து அவரிடம் நீட்டினான்.

அதை மேலோட்டமாகப் பார்த்து, “நல்லாருக்கு” என்றார் அவர்.

மகளுக்குக் கண் காட்டி விட்டு சமையல் அறை சென்றார்.

“உக்காருங்க” என்று பார்கவி அவனிடம் சொல்ல, “மேல வைஃபை ஒர்க் ஆகுமா? அங்க போகலாமே. அந்த ஊஞ்சலுக்கு” என்று மாடியை தலையசைப்பில் குறிப்பிட்டு அவன் சொல்ல, “இல்ல இங்கேயே வைஃபை நல்லாருக்கும்” என்றவள், அவன் பார்வை கடினமுறவும், வேறு வழியின்றி மாடி ஏறினாள்.

“அம்மா மேல ஊஞ்சல்ல இருக்கோம்” என்று அம்மாவுக்கும் அறிவித்தாள்.

ஊஞ்சலின் நடுவே மடிக்கணியைத் திறந்து வைத்து அமர்ந்தான் பாரிவேந்தன். அவள் மறுபக்கமாக அமரவும், “அங்க இருந்துட்டு எப்படிப் பார்ப்ப? இந்தப் பக்கம் வா” என்றழைத்தான்.

அவன் புறம் சென்றாலும் அவனை நெருங்கி அமராமல் அப்படியே நின்று விட்டாள். அவளின் இடையில் கைப் போட்டு இழுத்து அவன் முன்னே அவளை அமர்த்தியிருந்தான் அவன்.

அவளின் பிடித்தமின்மையை அப்பட்டமாக வெளிக்காட்டி, அவனைத் திரும்பி முறைத்து நகர்ந்து அமர்ந்தாள். அவள் உண்டாக்கிய இடைவெளியை அவன் நிரப்பினான்.

“பாருவை பார்க்கணும், பழகணும்னு ஆசையா வந்தா ரொம்பப் பண்ற நீ” அதில் நிச்சயமாக இரட்டை அர்த்தம் இருந்தது.

அதைப் புரிந்து கொண்டவள், “அதுக்கு முதல்ல பிடிக்கணும். அதான் முக்கியம்” என்று இறுக்கமாகச் சொன்னாள்.

அவன் முகம் மாற, “என்ன பிடிக்கல உனக்கு இப்போ? இல்ல, என்னையே பிடிக்கலயா?” என்று கோபமாகக் கேட்டான்.

“முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க பாரி” பட்டென்று சொன்னவள், ஊஞ்சலில் இருந்து குதித்துக் கீழே இறங்கினாள்.

மறுபக்கம் சென்று கம்பி பிடித்து அவள் நிற்க, “அவனை ரொம்பப் பிடிக்குமோ?” என்று கேட்டான்.

“எவனை?”

“அதான் உன் எக்ஸ்?” என்றான் எரிச்சலுடன். அதே எரிச்சலுடன் அவனை ஏறிட்டாள்.

“நீங்க இப்படித்தான் பேச போறீங்கன்னா, இதே கேள்வியை நானும் உங்களைத் திருப்பிக் கேட்பேன் பாரி” என்றாள், வலிந்து வருவித்த புன்னகையுடன்.

நொடியில் அவன் முகம் மாறியது.

“சாரி” என்றான்.

“நீ இந்த இன்விடேஷனை பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு” என்று கணினியை அவளுக்கு வாகாகத் திருப்பி வைத்தான். தன்னைச் சமநிலை செய்து கொள்ள ஆழ்ந்த மூச்சுக்களை அமைதியாக எடுத்தவள், கணினி திரையை வெறித்தாள்.

“பாருக்கு பிடிச்சிருக்கா?” எப்போது எழுந்து வந்தான், அவளுக்கு நெருக்கமாக நின்றான் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் குரல் காதோரம் உரசவும், ஊஞ்சலின் கம்பியை இறுக பற்றி அவனை நோக்கி திரும்பினாள்.

அவன் மூச்சு காற்று அவள் முகத்தில் மோதியது.

“பாரி பிளீஸ்” திடமாக மறுத்தாள்.

“என்னை ஃபர்ஸ்ட் பார்த்ததும் உனக்கு என்ன தோனுச்சுன்னு அன்னைக்குக் கேட்டேனே, உனக்கு ஞாபகம் இருக்கா?” இப்போது எதற்கு இதைக் கேட்கிறான் என்ற குழப்பம் அவள் கண்களில்.

“எனக்கு உன்னைப் பார்த்ததும் பிடிச்சது. இந்த முகம்.. என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு. இந்தக் கண்ணு, இந்த லிப்ஸ்..” அவனது ஒற்றை விரல் உயர்ந்து அவள் முகம் வருட அப்படியே பின்னகர்ந்து பொத்தென்று ஊஞ்சலில் அமர்ந்து விட்டாள்.

அந்நேரம் அம்மா வந்து விடுவாரோ என்ற பயமும், வந்து விட மாட்டாரா என்ற எதிர்பார்ப்புமுமாக அமர்ந்திருந்தாள். அவளுக்குப் படபடவென்று வந்தது. அந்த நொடியை அவள் மேல் திணித்த அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை.

“உன்னைப் பிடிக்க வேண்டும்” என்று சொல்கிறாள், அதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் இப்படி முன்னேறுபவனை என்ன சொல்ல?

“சும்மா பார்த்துட்டே இருந்தா எப்படிப் பிடிக்கும் பார்கவி?” என்று கேட்டான். படபடப்பை குறைக்க எச்சில் கூட்டி விழுங்கினாள்.

அவளின் முகத்தை நெருங்கி விட்டான். உதடு உரசும் நெருக்கத்தில் நின்றவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவள், “அப்பா வந்துட்டாங்க” என்றாள்.

கீழே ரங்கராஜனின் கார் சத்தம் கேட்டது.

அவன் பட்டென்று விலகி நிற்க, “இந்த இன்விடேஷன் எனக்குப் பிடிக்கணும்னு இவ்ளோ தூரம் மெனக்கெட்டு எங்க வீட்டுக்கு வந்த நீங்க.. எனக்கு உங்களைப் பிடிக்கணும்ங்கறத புரிஞ்சிக்கிட்டா ரொம்ப நல்லாருக்கும்” என்றாள், அவன் கண் பார்த்து.

“என்னைப் பிடிக்கலன்னா கல்யாணத்துக்கு எதுக்கு ஓகே சொன்ன? மயிலே மயிலேன்னு உன் பின்னாடி நான் கெஞ்சிட்டே திரியணுமா?” என்று பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான்.

“நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா பாரி? பிசிக்கல் இன்டிமெசிக்கு கொஞ்சமாவது நமக்கு நடுவுல ஈர்ப்பு, எதிர்பார்ப்பு, அபெச்ஷன் இதெல்லாம் வேணாமா?” என்று அழுத்தமாகக் கேட்டவளை முறைத்து அவனது மடிக் கணினியை அடித்து மூடினான்.

சரியாக அந்நேரம் அவளின் பெற்றோர் மேலே வர, அவளுக்குப் பதில் சொல்லும் அவசியமின்றி, அவர்களிடம் பேசி, சிற்றுண்டி முடித்துக் கிளம்பியிருந்தான் அவன்.

அங்கிருந்து போகும் முன் அவளை நெருங்கி, “ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சுதான் தொடணும்னா இங்க பாதிக் கல்யாணம் நடக்காது பார்கவி” என்று அவள் முகத்துக்கு நேராகச் சொல்லிச் சென்றிருந்தான்.

அப்படியே திகைத்து நின்று விட்டாள் அவள்.

இரவு உணவுக்குப் பிறகு, “என்ன, இன்னைக்கு என் பொண்ணுக்கு பலமான யோசனையா இருக்கு?” என்று ரங்கராஜன் கேட்கவும், அப்பாவை பார்த்தாள். அவள் மனத்தின் போராட்டத்தை அப்பா புரிந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அவள் கண்களில் ஏகத்துக்கும் இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top