“ஹேய் பிரபா, என்ன இந்தப் பக்கம்?” என்று அவனுக்காகக் காத்திருந்த பிரபாவதியின் முன் சென்று நின்றான் பார்த்திபன்.
“என்ன திடீர்னு பார்த்திபன் மேல பாசம் பொங்குது பிரபாக்கு?”
“ஏன் பொங்க கூடாதா?” என்று கோபமாகக் கேட்டாள்.
“பார்த்தும்மா ஓவரா பொங்கி போலீஸ்கார் வரைக்கும் போயிட போற” என்று அவன் நக்கலாகச் சொல்ல, அவள் முகத்தில் வருத்தத்தின் சாயல்.
அவனை நெருங்கி, “சாரி” என்றாள்.
“என் மேல இன்னும் கோபமாதான் இருக்கீங்களா?”
“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா அதுக்குப் பேர் கோபம் இல்ல. உங்கப்பா பேசினது, என்னை ஒரு மாதிரி அவர் கன்ட்ரோல் பண்ண டிரை பண்ற மாதிரி இருந்தது. அது எனக்குப் பிடிக்கல. அவர் உன்னாலதான் அப்படி நடந்துக்கிட்டார்னும் போது உன் மேல ஆபிவியஸா கோபம் வரத்தானே செய்யும்?” என்று தன் மனத்தில் இருந்ததைப் பகிர்ந்தான்.
முன்தினம் முழுக்க அவன் அவளை அழைத்துப் பேசவேயில்லை. அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்குப் பதில் அனுப்பினான். அதில் இருந்தே அவனது கோபத்தைப் புரிந்து கொண்டாள் அவள்.
“நிஜமா சாரி. நான் வேணும்னு அப்பாகிட்ட சொல்லல. அப்பா உங்களைக் கேட்டாங்க, அப்போ அவர்கிட்ட எப்படிச் சொல்லாம இருக்க முடியும்?”
“இட்ஸ் ஓகே. விடு. இப்போ நீ இங்க வந்துருக்கறது உங்கப்பாக்கு தெரியுமா?” என்று குறுநகையுடன் கேட்டான்.
அந்தக் கேள்வியில் இருந்த கேலி அவளுக்குப் புரிந்திட, அவனை முறைக்க முயன்று தோற்றாள்.
“என்ன அப்பாகிட்ட அனுமதி வாங்கிட்டுதான் வந்தியா?” சிரிப்பை அடக்க மீசையை நீவியபடி கேட்டான்.
அவள் முகம் வாட, “எனக்கு அப்படியே பழகிடுச்சு” என்றாள்.
“நாங்க அப்பாகிட்ட சொல்லாம எதுவும் செஞ்சது இல்ல தெரியுமா? அப்படியே அவருக்குத் தெரியாம ஏதாவது செஞ்சோம்னா...” என்று அவன் தோளை வெறித்து, அதைச் சொல்லி முடிக்க முடியாத தயக்கத்துடன் நிறுத்தினாள்.
“நாங்கன்னா? நீயும், உங்கக்காவுமா?”
“அம்மா கூட..” என்றாள் உள்ளே போய் விட்ட குரலில்.
“ம்ம், பேரன்ஸ்கிட்ட இன்பார்ம் பண்றது பெரிய குத்தம் இல்ல. ப்ரீயா விடு” என்றான் அவளை இலகுவாக்கும் பொருட்டு. அவளோ அவனையே அசையாமல் பார்த்திருந்தாள்.
“என்ன பிரபா?”
“நாங்க சின்னப் பிள்ளைங்களா இருக்கும் போது அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்..”
“ம்க்கும், இப்ப மட்டும் என்னவாம்?”
“இப்போ முன்ன மாதிரி இல்லைன்னுதான் சொல்லுவேன். அப்போல்லாம் அப்பாக்குக் கோபம் வந்தா எங்களை அடிக்கக் கூடச் செய்வார்”
“வாட்? அடிப்பாரா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டிருந்தான்.
“ம்ம், அம்மா தடுக்க வருவாங்க. அப்போ அவங்களுக்கும் அடி விழும்” படபடவெனச் சொல்லி விட்டு அவன் முகம் பார்க்காமல் தவிர்த்தாள்.
“இவரெல்லாம் போலீஸ். சொந்த குடும்பத்துக்கே நல்லவரா நடந்துக்க முடியாதவர்தான் நாட்டைக் காப்பாத்த போறாராக்கும்” கோபமும், வெறுப்பும், கசப்புமாகச் சொன்னான்.
எத்தனை முயன்றும் அவளைப் பார்த்த பார்வையில் கனிவு கூடியதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
“அதுக்காக எங்கப்பா ரொம்பக் கொடுமைக்காரர்னு நீங்க இமேஜின் செஞ்சுக்காதீங்க.” என்று அவள் சொன்னதும் அவன் உதடுகள் கேலியாக வளைந்தன.
“நீ இப்படிச் சப்போர்ட் செஞ்சா அவர் அப்படித்தான் இருப்பார்.” என்றான் கடுமையாக.
“இல்ல அப்பா அடிக்கிறத விட்டு ரொம்ப வருஷமாச்சு.”
“ஏன்னா அதுக்குள்ள உங்களுக்கு அவர் மேல ரொம்பப் பயம் வந்திருக்கும்” என்று சரியாகக் கணித்துச் சொன்னான்.
தலையை எல்லாப் பக்கமும் அசைத்தவள், “அப்பா எங்ககிட்ட ரொம்பப் பாசமா இருப்பாங்க. டெய்லி எனக்கும் அக்காக்கும் ஏதாவது வாங்கிட்டு வருவாங்க. எங்களைப் படிக்க வைப்பாங்க” என்று அடுக்கிக் கொண்டே போனாள்.
“ஒருத்தரை நம்மளுக்குக் கீழ அடக்கி வைக்கணும்னா அவங்களுக்கு நம்ம மேல பயமும், பாசமும் இருந்தாலே போதும்” என்றான் அவள் கண் பார்த்து.
எல்லா அடக்குமுறைக்குப் பின்னும் பயமும், பாசமும்தானே இருக்கின்றன.
“பிளீஸ், நான் இப்படிச் சொன்னேன்னு அப்பாவை தப்பா நினைக்காதீங்க. அப்பா எங்க மேல உயிரையே வச்சுருக்கார்.” அவளின் மனநிலை அவனுக்குப் புரிந்தது. அப்பாவை பற்றி வருங்காலக் கணவனிடம் ஏதோ ஓர் உந்துதலில் சொல்லி விட்டாள். இப்போது அதை மாற்ற அவள் போராடுவது புரிய, “போலீஸ்கார் பாசக்காரர்தான். நான் ஒத்துக்கறேன். ஓகே?” என்று ஒற்றைக் கையைத் தூக்கி, சரணடைந்து விட்டதாகச் சமிக்ஞை செய்தான்.
அவள் உதடுகள் புன்னகையில் பிரிய, அதன் தடம் அவன் உதட்டிலும் தொடர்ந்தது.
“வா, உன்னை வீட்ல ட்ராப் பண்றேன்” என்றான்.
அவள் தயங்கி நிற்கவும், “என்ன உங்கப்பா ஆட்டோ புக் பண்ணி வரச் சொன்னாரா?” என்று புருவம் உயர்த்தினான்.
“இல்லயில்ல..”
“அப்புறம்?”
“உங்களைப் பார்த்திட்டு கிளம்பும் போது கால் பண்ண சொன்னார்” என்றாள் தயக்கத்துடன்.
“ரைட்டு, அப்போ போனை போடு உங்கப்பாக்கு..”
“இல்ல, நான் உங்களோட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்னு நினைச்சு வந்தேன். நேத்து முழுக்க நீங்க என்கிட்ட பேசவேயில்லையே..” அந்தக் குரலும், அந்த வார்த்தைகளும் அவனை இளக்கின.
“இப்போ டின்னர் சாப்பிட்டுட்டே நேத்துப் பேசாததையெல்லாம் இன்னைக்குப் பேசுறோம். உனக்கு ஓகேவா?” என்று கேட்டான். விளக்கை எரிய விட்டது போல அவள் முகம் பளிச்சிட்டது.
“நீ எதுக்கும் உங்கப்பாக்கு இன்பார்ம் பண்ணிடு பிரபா. அவரும் டென்ஷன் இல்லாம இருப்பார். டின்னர் முடிச்சுட்டு நானே உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடுறேன்” என்றான். அப்பாவிடம் பேச அவளுக்குத் தனிமை தந்து தள்ளி நின்றான். அவள் பேசி முடித்து வந்ததும், அலுவகத்தின் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அவளை அழைத்துச் சென்றான்.
ஒற்றை நிமிட நடை தூரம் அவனுக்குள் ஒரு நூறு கேள்விகளை உண்டாக்கியது.
“ஏன் பிரபா, இதுவரைக்கும் உங்கப்பா கிட்ட சொல்லாம, அவரை மீறி எதுவுமே செஞ்சது இல்லையா நீ?” என்று சந்தேகம் கேட்டான். இல்லை என்று தலையை எல்லாப் பக்கமும் அசைத்தாள்.
“உனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்னா கூடவா?” என்று நம்ப முடியாமல் கேட்டான்.
“லைக் சின்னச் சின்னச் சில்லியான திருட்டுத்தனங்கள் சொல்றேன். லைக் காலேஜ் கட் அடிச்சுட்டு பசங்களோட வெளில போறது. ஃப்ரெண்ட்ஸ் கூட மூவி இப்படி”
“எதுவுமே செஞ்சது இல்ல. அப்படியே தெரியாம செஞ்சாலும் அப்பா கண்டுபிடிச்சுடுவார். அது எப்படின்னே தெரியாது. அக்கா அப்படித்தான் ஒரு டைம் ஃப்ரெண்ட்ஸோட தீம் பார்க் போய் அப்பாகிட்ட மாட்டிட்டா. அம்மாக்குதான் பயங்கரத் திட்டு விழுந்தது அன்னைக்கு..”
“பிள்ளைங்கள ஒழுங்கா வளர்க்கலன்னா?” என்று நக்கலும், கோபமுமாகக் கேட்டிருந்தான்.
அவள் முறைக்கவும் சிரித்து, “சரி விடு. உங்கப்பா பேச்ச விட்டுட்டு நாம நம்மைப் பத்தி பேசுவோம்” என்று வண்டியின் மேல் சாய்ந்து நின்று, அவளைப் பக்கத்தில் இழுத்தான்.
“உன் ஆசையெல்லாம் என்கிட்ட சொல்லு. பார்த்தியால பூர்த்திச் செய்ய முடியுதான்னு பார்ப்போம்” என்றான் பற்கள் தெரிய புன்னகைத்து.
“உங்கப்பா செய்யக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டு வச்சிருப்பார் இல்ல? அந்த ஆசையைக் கேட்கறேன்” என்றான். அவளிடம் மெல்லிய தயக்கம், இவனிடம் சொல்வதா வேண்டாமா என்பது போலவே அவனைப் பார்த்தாள்.
“அட சொல்லு பிரபா..”
“இப்படித் திடீர்னு கேட்டா என்ன சொல்ல? எனக்கு எதுவுமே தோனல”
“சரி, பொறுமையா யோசி” என்று வண்டியை ஆக்கிரமித்து, ஏறு என்று அவளுக்குக் கண் காட்டினான்.
ஐந்து நிமிடங்கள் பயணித்து இருப்பார்கள். அவன் காதோரம் முகம் பதித்து, “திநகர், பாண்டி பஜார் போய்ப் பொறுமையா நடந்து பிளாட்பார்ம் கடைங்கள்ல என் இஷ்டம் போல எனக்குப் பிடிச்சது வாங்கிக்கணும்” என்றாள்.
மெதுவாகத் தலையைத் திருப்பி, “இன்ட்ரெஸ்டிங், அப்புறம்?” என்று கேட்டான். எங்கே அவன் இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்டு விடுவானோ என்று தயக்கத்துடன் அவள் சொல்ல, அவனது பதில் அவளை மேலே பேச தூண்டி விட்டது.
“பீச்சுக்கு போகணும், மொளகா பஜ்ஜி சாப்பிடணும். கடல்ல கால் மட்டும் இல்ல தல வரைக்கும் நனையற அளவுக்கு ஆட்டம் போடணும்” என்று ஆர்வம் கொப்பளிக்கும் குரலில் அவள் சத்தமாகச் சொல்ல, அடுத்து வந்த போக்குவரத்துச் சமிக்ஞையில் வண்டியை வந்த வழிக்கே திருப்பியிருந்தான் அவன்.
“என்னாச்சு ஏன் யூ டர்ன் எடுத்தீங்க? எங்க போறோம்?” அவளின் எந்தக் கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை.
முப்பது நிமிடங்களில் பதிலுக்கு முன் அவளைக் கொண்டு சென்று நிறுத்தியிருந்தான்.
அவனைப் பார்த்த அவள் கண்களில் மகிழ்ச்சியின் அலையடித்தது.
அவளின் கைப் பையை வாங்கிக் கொண்டு, காலை அகற்றி வைத்துக் கரையோரம் நின்றவன், “போ” என்றான் கடலை கண் காட்டி.
அவனை நோக்கி நீண்டது அவள் கரம்.
“நான் மட்டுமா? நீங்களும் வாங்களேன். தனியா போக என்னவோ போல இருக்கு” என்றாள்.
“தனியா போனா தொலைஞ்சுட மாட்ட பிரபா” என்றான் குறுநகையுடன்.
“எனக்கு நாலு வயசு இருக்கும் போது மெரினா பீச் கூட்டிட்டு போனாரு அப்பா. அப்போ நான் கூட்டத்துல தொலஞ்சுட்டேனாம். போலீஸ்காரன் பொண்ண தொலைக்க இருந்தியேன்னு அம்மாவை பயங்கரமா திட்டினாராம் அப்பா. அதுக்கு அப்புறம் எங்களைப் பீச் கூட்டிட்டு போனாலும் அப்பா கண்ணு முன்னாடியே நிக்கச் சொல்லுவார். அதுக்குப் போகாமயே இருக்கலாம்னு நாங்களும் கூட்டிட்டுப் போகச் சொல்லி அப்பாவை கேட்கறது இல்ல. காலேஜ் படிக்கும் போது ஃப்ரெண்ட்ஸ்லாம் சேர்ந்து போவாங்க. நான் மட்டும்..”
“அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கணும்னு சொல்லியிருப்ப, உன்னை விட்டுட்டு அவங்க எல்லாரும் போய் இருப்பாங்க. சரியா?” அவள் ஆமென்று தலையசைக்க, “அந்தக் கதையை அப்புறம் பேசுவோம். இப்போ போய்க் கடலுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு வா” என்று அவளின் தோளின் இருப்புறமும் கைப் போட்டு அவளைத் திருப்பிக் கடலை காணச் செய்தான்.
“போ, பிரபா” என்று முன்னால் தள்ளி விட்டான்.
“நீங்களும் வாங்க”
“நோ” என்றான் அழுத்தமாக.
“பிளீஸ்”
“இனி காலம் முழுக்க என் கைப் பிடிச்சுதான் நடக்கப் போற. இன்னைக்கு நீ நீயா இரு” என்றான்.
அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே முன்னேறினாள்.
கடல் காற்று சில்லென்று அவள் மேனி மோதி அவளைச் சிலிர்க்க செய்தது. அலையொன்று சேட்டை செய்யும் சிறு பிள்ளை போலக் கடல் நீரை அவள் மேல் தீவிரமாகத் தெளித்துச் சென்றது.
முகம் நிறைத்த புன்னகையுடன் முன்னேறினாள். அது பௌர்ணமிக்கு மறுநாள். நிலவு செம்பவள நிறத்தில் வானில் ஒளி வீசிக் கொண்டிருந்தது.
அவள் பாதங்கள் முன்னேற அலை அவளைத் தொட்டு தொட்டு தீண்டி சென்றது. மெல்ல அவனைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்தே கையசைத்துப் புன்னகைத்தான். அவளின் அலைபேசியில் அவளைப் புகைப்படங்கள் எடுத்தான்.
அவர்களின் நிச்சயதார்த்த விழாவில் கூடப் பிரபாவதியின் முகம் இத்தனை பிரகாசமாக இருக்கவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது.
அந்த நேரத்திலும் கடற்கரையில் கூட்டமிருந்தது. அவளுக்குப் பக்கத்தில் ஒரு குடும்பமிருக்க, அவர்கள் செல்லும் தூரம் வரை கடலுக்குள் அவளும் சென்று வந்தாள்.
மார்பளவு தூரம் வரை அவள் சென்றதும் மிரண்டு திரும்பினாள். அவளில் இருந்து அசையவில்லை அவன் பார்வை.
அவளின் விழிகளைச் சந்தித்ததும் புன்னகைத்தான். அந்த இருளிலும் அவனது புன்னகை அவள் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அப்படியே அவனை நோக்கி நடந்து விட்டாள்.
“செம்மையா என்ஜாய் பண்ணேன். நீங்களும் என்னோட வந்திருக்கலாம்” என்று கண்ணைச் சுருக்கினாள். உடையின் ஈரத்தை அவள் உதறி விட, “விடு, கொஞ்ச நேரம் நடந்தோம்னா காஞ்சுடும்” என்று முன்னே நடந்தான். அவளாகவே அவனை நெருங்கி அவன் கைக் கோர்த்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ்” என்றாள் லேசாக அவன் மேல் சாய்ந்து. தலையைச் சாய்த்து ஓரக் கண்ணால் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
கடற்கரையைக் கால்களால் அளந்து, இருவரின் மனங்களையும் நெருங்கியிருந்தார்கள்.
“உனக்கு லேட்டாகுது பிரபா, போகலாமா?” என்று அவன்தான் கேட்டு அவளைக் கிளப்பினான்.
“இன்னும் கொஞ்ச நேரம்” என்று கெஞ்சினாள்.
“டின்னர் சாப்பிட்டுட்டுப் போகலாம் வா” என்றான்.
பெரிய உணவகம் எல்லாம் தேடிச் செல்லவில்லை அவன். கடற்கரையோரம் ஒரு பெண்மணி நடத்தும் சிறிய கடையில் சூடாக ஆப்பம், குருமா மற்றும் இட்லி, காரச் சட்னி வாங்கிக் கொடுத்தான். ரசித்து உண்டாள்.
“இப்படியெல்லாம் ரோட்ல நின்னு சாப்பிட்டேன்னு தெரிஞ்சது, அப்பா என்னைத் தொலைச்சுடுவார்” என்று சிரிப்புடன் சொன்னவள், அவன் முறைக்கவும் நாக்கை கடித்தாள்.
அவர்கள் உண்டு முடிக்க அவளின் உடையும் ஓரளவு உலர்ந்திருந்தது.
செருப்பில் இருந்த மண்ணைச் சிரத்தை எடுத்து தட்டி விட்டாள்.
“பிரபா, உங்கப்பா கிட்ட போய்ப் பீச் போனேன்னு சொல்லு. ஓகே? நான்தான் உன்னைக் கூட்டிட்டு போனேன்னு சொல்லு. இல்லன்னா அவர்கிட்ட நானே சொல்லிடவா?” என்று அவன் கேட்கவும், மறுப்பாகத் தலையசைத்து வண்டியில் ஏறினாள். இருவருக்கும் இடையில் இடைவெளி குறைந்திருந்தது. அவனை நெருங்கி அமர்ந்திருந்தாள் அவள்.
அவளின் மகிழ்ச்சியை மௌனத்தால் வெளிப்படுத்தினாள்.
அவள் வீட்டு வாசலில் சென்று அவன் வண்டியை நிறுத்த, அங்கே கோவிந்தனின் வண்டி நின்றிருந்தது.
“அச்சோ அப்பா வந்துட்டாங்க” என்று பதறினாலும், உடனே வீட்டினுள் ஓடவில்லை அவள்.
“வா, நானும் உள்ள வர்றேன்” என்று அவன் இறங்க போக, “அப்பா என்னைத் திட்ட மாட்டார்” என்றாள் திடமாக.
“நீ சமாளிப்பன்னா சரிதான்” என்றான் குறுநகையுடன்.
“நீங்க இப்படி நக்கல் பண்றததான் என்னால சமாளிக்க முடியல” என்று அவள் சொன்ன விதமே அவனுக்குச் சிரிப்பை மூட்டியது.
“சீக்கிரம் சமாளிக்கக் கத்துத் தர்றேன்” என்று கண் சிமிட்டினான். சட்டென்று அவனை நெருங்கி நின்றாள்.
“பிரபா” என்று பதறி அந்தத் தெருவை கண்களால் சுழற்றினான் அவன்.
அவனை நெருங்கி நின்று, “பை” என்று கத்தி விட்டு கதவைத் திறந்து உள்ளே ஓடியிருந்தாள் அவள்.
அந்த இரவு இருவருக்கும் இதமான மனநிலையைத் தந்திருந்தது.