அந்தத் திருமண மண்டபம் காலை வேளையிலேயே முழுதாக அலங்கரித்து நின்றிருந்தது. மாலை அங்கு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. ஆகவே இப்போதே ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.
அந்த மண்டபத்தின் உரிமையாளர் ரங்கராஜன் தன் மகளுடன் அலுவலகம் இருந்த தரைத் தளம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
“கல்யாண மண்டபத்துக்குச் சொந்தக்காரன் நான். வருஷத்துக்கு நூறு கல்யாணம் என் மண்டபத்துல நடக்குது. ஆனா, என் ஆசையெல்லாம் என் ஒரே பொண்ணு கல்யாணத்தைப் பிரம்மாண்டமா இங்க நடத்திடணுங்கறதுதான். அது எப்போ நடக்கப் போகுதோ” என்று ரங்கராஜன் கண்ணில் கனவும், ஆசையும் மின்ன மகளைப் பார்த்து சொல்ல, சட்டென்று நடையை நிறுத்தி அவரைப் பார்த்து நின்றாள் மகள்.
“உடனே அப்பாவை முறைக்கக் கூடாதும்மா பார்கவி” என்று அவர் சிரிப்புடன் சொல்ல, “எப்போ இங்க வந்தாலும் இதையேதான்ப்பா சொல்றீங்க நீங்க. இதுக்குதான் நான் உங்களோட இங்க வர்றதே இல்ல” என்று முகத்தைத் திருப்பிய மகளை ஆதூரமாகப் பார்த்தவர், “நமக்கு ஒவ்வொரு கட்டத்திலயும் ஒவ்வொரு ஆசையும், கனவும் இருக்கும் பாரும்மா. நீ படிக்கணும்ன, வேலைக்குப் போகணும்ன, 25 வயசுக்கு மேலதான் நாங்க உன் கல்யாண பேச்செடுக்கணும்னு சொன்ன. அப்பா உன் கனவையும், ஆசையையும் மதிச்சு நடந்துக்கிட்டேன்தானே? நான் பதிலுக்குப் பதில் கேட்கல. ஆனா, அப்பாவுக்கு வயசாகுது, உடம்பும் முன்ன மாதிரி இல்ல” என்றார் உடைந்த குரலில்.
“ப்பா” வேகமாய் அவரின் கைப் பிடித்து அழுத்தினாள் பார்கவி.
அப்பாவின் உடல் நிலையைக் குறிப்பிட்டாலே அவளுக்குப் பதற்றமாகி விடும். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மைனர் அட்டாக், இதயக் குழாயில் அடைப்பு என ஸ்டன்ட் பொறுத்தியிருக்கிறார்கள். அப்போதிருந்து அவரைக் கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்கிறார்கள் அவளும், அம்மாவும்.
“ஆஃபீஸ் ரூமுக்குப் போகலாம் வாங்கப்பா” அப்பாவின் கையை விடாமல் பிடித்தபடி அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.
அவர்களின் கல்யாண மண்டபத்தின் முன்பதிவு நடைமுறைகளை இப்போது கவனிப்பது அவள்தான். அப்பாவின் வேலை பளுவை குறைக்கும் எண்ணத்தில் செய்கிறாள். அதற்கென ஆட்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அப்பா செய்ய வேண்டியதை எல்லாம் அவளும் ஒருமுறை சரி பார்த்து விட்டால் அவளுக்கு நிம்மதியாக இருக்கும்.
அன்று சனிக்கிழமை அவளுக்கு விடுமுறை நாள் என்பதால், அப்பாவுடன் வந்திருந்தாள். அப்பாவை அவரின் இருக்கையில் அமர்த்தி, அவருக்குப் பருக தண்ணீர் எடுத்து கொடுத்தாள்.
அவர் மேஜையில் இருந்த கோப்பை எடுத்து பிரித்து எதிர் இருக்கையில் அவள் அமர்ந்து வேலையில் இறங்கினாள்.
“பாரும்மா” என்றழைத்து, அவளின் கவனத்தைக் கலைத்தார் ரங்கராஜன்.
“நமக்கு ஒவ்வொரு கட்டத்துலயும் ஒவ்வொரு விதமான ஆசை கனவு இருக்கும்னு சொன்னேன் இல்லம்மா? உன் வயசுல அப்பாக்கு என்ன ஆசை இருந்தது தெரியுமா? எங்கப்பா சின்னதா கட்டின இந்த மண்டபத்தை எடுத்துப் பெருசா கட்டணும்னு ஆசைப்பட்டேன். அது நிறைவேறினதும் வேற தொழில்ல இறங்குவோம்னு கேட்டரிங் காண்ட்ராக்ட் எடுத்தேன். அப்புறம் நீ பிறந்ததும் வேலையெல்லாம் பின்னாடி போய் என் பொண்ணு, அவ எதிர்காலம், நாளைக்கு அவ படிப்பு, அவ வாழ்க்கை, அவளுக்கு நகை சேர்க்கணும்னு எங்க கனவெல்லாம் உன்னைச் சுத்திதான்டா இருந்தது. இப்போ உனக்குப் பொருத்தமானவனா ஒருத்தனை பார்த்து நல்லபடியா உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும். பேரப் பிள்ளைங்கள பார்க்கணும்..”என்று தன் ஆசையை அவர் வெளிப்படுத்த, “அப்பா..” என்றாள் கோபம் போல. ஆனால் முகம் முழுக்கப் புன்னகைதான் இருந்தது.
“நீ ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்டா பாரும்மா, மத்ததை அப்பா பார்த்துப்பேன்”
“ஓகேப்பா. பட்..”
“அப்பாடா என் பொண்ணு ஓகே சொல்லிட்டா..” என்று அவர் ஆர்ப்பரிக்க, “அப்பா..” என்று அதிர்ந்து கத்தியவளுக்கு அவரின் மகிழ்ச்சியைக் கலைக்க மனம் வரவில்லை.
“பட், பையனை எனக்குப் பிடிச்சா மட்டும்தான்..” என்று அவள் இழுக்க, “உனக்குப் பிடிக்காத பையனை உன் பக்கத்துல கூட அப்பா வர விட மாட்டேன் பாரும்மா” என்றார் திட்டவட்டமாக.
“அப்போ எனக்குப் பிடிச்சா உங்களுக்கு ஓகே. அப்படித்தானேப்பா?” என்று மகள் முன்னேற்பாடாகக் கேட்கவும், “உனக்குப் பிடிச்சிருந்தா போதும்டா, அவன்தான்.. இல்லயில்ல அவர்தான் என் மாப்ள” என்றார் உறுதியாக. மகளின் புன்னகை அவரையும் தொற்றிட, அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து மனைவிக்கு அழைத்து மகள் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லி விட்டாள் என்று கிட்டத்தட்ட கத்தினார்.
அடுத்த அழைப்பு அவருக்குத் தெரிந்த திருமணத் தகவல் மையத்துக்குப் பறந்தது. அப்பாவின் பேச்சைக் கேட்டபடியே அவள் அலுவலை கவனித்தாள்.
என்னதான் திருமணத்துக்குச் சம்மதம் என அப்பாவிடம் சொல்லி விட்டாலும் அவள் மனத்தில் சின்னதாய் ஒரு நெருடல்.
அப்பா எதற்காகவும் தன்னை வற்புறுத்த மாட்டார் எனத் தெரியும். அவளுக்குப் பிடித்தவனை மாப்பிள்ளையாக நிச்சயம் ஏற்றுக் கொள்வார் எனத் தெரியும். ஆனால் முதலில் அவளது விருப்பத்தை உரியவனிடம் தெரிவிக்க வேண்டும்தானே?
அவனை நினைத்ததும் அவள் இதழோரம் சிறு புன்னகை உதயமாகியது.
அவளுக்கு அவனைச் சிறு வயதில் இருந்தே தெரியும். அவளுக்கு மட்டுமல்ல அவளின் மொத்த குடும்பத்துக்கும் தெரியும். இருவரும் ஒரே பகுதியில்தான் வசித்தார்கள். இரண்டு குடும்பத்துக்கும் அந்த விதத்தில் பேச்சும், பழக்கமும் உண்டு.
இப்போதுதான் அவன் குடும்பம் வேறொரு பகுதியில் சொந்த வீடு வாங்கிக் குடியேறியிருந்தார்கள். இரண்டு குடும்பத்துக்கும் ஏற்கனவே அறிமுகம் எனும் போது எல்லாமே எளிதாக நடந்து விடும் என்று எளிய கணக்கை போட்டு புன்னகையுடன் நிமிர்ந்தாள்.
அந்நேரம் அவளின் அலைபேசி அழைக்க, திரையில் ஒளிர்ந்த தோழியின் பெயரை கண்டதும் வேகமாக அழைப்பை ஏற்றாள்.
பிரியதர்ஷினி, அவளின் நெருங்கிய தோழி. இருவரும் பள்ளி காலம் தொட்டே தோழிகள். இப்போதும் அவளின் பெற்றோர் வீடு அவர்கள் தெருவில்தான் இருக்கிறது.
ஒரே தெரு, ஒரே பள்ளி, ஒரே டியூஷன் வகுப்பு, ஒரே கல்லூரி என அவர்களின் வரலாறு மிகவும் நெருங்கியது.
“ப்ரியூ” என்றாள் வாஞ்சையுடன்.
“பாரு, எங்க இருக்க நீ? நாங்க ஷாப்பிங் மால் போறோம். நீயும் வர்றியா பிளீஸ். உன்கிட்ட ஒரு முக்கியமான, ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று பரபரபத்தாள் அந்தப் பக்கம் பிரியதர்ஷினி.
அதைக் கேட்டதும் இவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. பிரியதர்ஷினி வெகுளி. அவளுக்கு அவள் வீட்டுப் பால்கனியில் குருவி கூடு கட்டி, குஞ்சு பொரித்தால் கூட உலக அதிசயம்தான், அதை மிக முக்கியமான விஷயம் எனப் பகிர்வாள். இப்போது என்னவோ என்ற எண்ணம் தந்த புன்னகையுடன், “நான் ஃப்ரீ தான் ப்ரியூ. அப்பா கூட மண்டபத்துக்கு வந்திருக்கேன்” என்றாள்.
“ஓகே. அப்போ மாலுக்கு எப்போ வர்ற? பார்த்தி அண்ணா கூட வர்றாங்க” என்று அவளிடம் கேள்வி கேட்டு, கூடுதல் தகவல் சொன்னாள் பிரியதர்ஷினி.
அந்தக் கூடுதல் தகவல் இவளுக்குக் கூடுதலான உற்சாகத்தை அளித்தது. தேடிப் போக இருந்த தெய்வம் அவளைத் தேடியே வருகிறது. அந்த வாய்ப்பை நழுவ விட அவள் என்ன முட்டாளா?
“ஒரு ஃபார்ட்டி பைவ் மினிட்ஸ் டைம் குடு ப்ரி வந்துடுறேன்” என்றாள். அப்பாவிடம் சொல்லிக் கொண்டு நாளை கண்டிப்பாக வேலையைப் பார்த்து விடுவேன் என்று அவருக்கு வாக்குறுதி அளித்து வெளியேறினாள். அவரோ மகளின் திருமணத்தை முடிவு செய்யும் வேலையில் இருக்க, கல்யாண மண்டப வேலையெல்லாம் பின்னுக்குப் போய் விட்டது.
பார்கவி அடுத்த ஒரு மணி நேரத்தில் தோழி வரச் சொன்ன வணிக வளாகத்தில் இருந்தாள். ஆனால் அவளை அங்கு வரச் சொன்னவள் இன்னமும் வந்திருக்கவில்லை.
“இந்த லவ் பேர்ட்ஸை நம்பி சீக்கிரமா வந்த என்னைச் சொல்லணும்” என்று புலம்பிக் கொண்டே தோழியை அழைத்தாள்.
“சாரி பாரு, நாங்க ட்ராஃபிக்ல சிக்கிட்டோம். டென் மினிட்ஸ்ல அங்க இருப்போம்.” என்ற பிரியதர்ஷினி, “பார்த்தி அண்ணா கிட்ட சொல்லி இருக்கேன். நீ அவரோட பேசிட்டு இரு. அதுக்குள்ள நாங்க வந்துடுவோம்” என்றாள்.
“ஒன்னும் அவசரமில்ல, பொறுமையா வா” என்றாள் நமுட்டு சிரிப்புடன். தோழி வரும் முன் அவனிடம் பேசி விடும் ஆர்வம் கொப்பளிக்கத் துள்ளித் திரும்பினாள் அவள்.
பிரியதர்ஷினி அவள் இருக்குமிடம் விசாரித்துப் பார்த்திபனிடம் தெரிவித்திருந்தாள்.
“அண்ணா வருவாங்க. நீ அங்கேயே வெயிட் பண்ணு பாரு” என்று இவளிடமும் சொல்லியிருக்க, அவனுக்காகக் காத்திருப்பது இனிமையான இம்சையாக இருந்தது பார்கவிக்கு.
பார்த்திபனை அவளுக்குப் பல வருடங்களாகத் தெரியும் என்றாலும் இப்போதுதான் அவர்கள் நெருங்கி பழக வாய்ப்புக் கிட்டியது. அதைப் பழக என்று சொல்லிட முடியாது.
பேசியிருந்தார்கள். அவ்வளவுதான். அவன் பேசுவதைக் கேட்டாலே பிடித்து விடும். பேச்சில் பிடித்து வைக்கும், பிடிக்க வைக்கும் ரகம் அவன்.
குழந்தையைப் போல ஆர்வத்துடன் ஆவலே உருவாகக் கண்களைச் சுழற்றி அவனைத் தேடினாள். அந்த வணிக வளாகக் கூட்டத்தில் அவள் கண்களுக்குச் சிக்கவில்லை அவன்.
தன் பதற்றத்தை மறைக்க அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினாள். ஐந்தே நிமிடங்களில் ஏதோ ஓர் உந்துதலில் அவள் நிமிர, அவன் வந்து கொண்டிருந்தான். அதுவும் அவளை நோக்கி புன்னகையுடன் நடந்து வந்தான்.
இருவருக்கும் இடையில் பத்தடி தூரம்தான் இருந்தது.
அவள் முகம் சூரியனை கண்ட அல்லியாய் மலர்ந்து விரிய, “ஹாய்” என்று சத்தமாகச் சொல்லி கையசைத்தாள். அவனை நோக்கி நகர்ந்தன அவள் கால்கள்.
“பார்த்தி, எப்படி இருக்கீங்க?” அவனை நெருங்கி நின்று கேட்டாள். தோள் உரசும் அளவு நெருக்கம். அவனை நிமிர்ந்து நோக்கிய கண்களில் அப்பட்டமான காதல் இருந்தது.
அவள் விழிகளோடு போட்டி போட்டு இதழ்களும் விரிய அவனைப் பார்த்திருந்தாள்.
“ஹாய், பார்கவி” என்றான் புன்னகையுடன்.
அவளின் புன்னகை இன்னுமே விரிந்தது. மறுகணம் அவன் பின்னே சிறியதாக அசைவு தெரிந்தது. அவன் பின்னே நடந்து வந்த பெண் தடுமாறி கீழே அமர, அவன் பதறி திரும்பி அவளைப் பிடித்து நிறுத்தினான்.
அதன் பின்னும் அவளின் கையை விடவில்லை அவன்.
அந்தப் பெண்ணின் வெட்கப் புன்னகையைக் கண்டதும் குழம்பினாள் பார்கவி.
பார்த்திபன் மெல்ல பக்கவாட்டில் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்துப் புன்னகைத்தான்.
ஒற்றைப் புன்னகையில் இதயத்தை உறைய வைக்க முடியுமா? அவனால் முடிந்தது. அவள் இதயம் அதன் இஷ்டத்திற்குத் துடிக்க அவனைப் பார்த்தாள்.
“பார்கவி, இவங்க பிரபா, பிரபாவதி. எங்களுக்கு வர்ற ப்ரைடே எங்கேஜ்மெண்ட்” என்று அவளுக்குப் பிரபாவதியை புன்னகையுடன் அறிமுகப்படுத்தினான்.
நமக்கு ஒருவரை அறிமுகப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட மறந்து போனவளாக விழிகள் நிலைகுத்தி அவனில் நிலைத்திருக்கச் சிலையாக நின்றாள் பார்கவி.
அந்தப் பார்வை பார்த்திபனை திடுக்கிட வைத்தது.