பார்த்திபன் காதலி – 1 (1)

“அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது” என்ற பாடலை பாடியபடியே கண்ணாடி முன் நின்று தலை வாரி கொண்டிருந்தான் பார்த்திபன்.

வெளிர்நீல நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டை, கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்தான். அடர்ந்த கேசம் நெற்றியில் புரண்டது. அதை மெல்ல ஒதுக்கியவனுக்குத் தன் தோற்றத்தில் திருப்தி வரவும் மென்முறுவலுடன் கண்ணாடி முன்னிருந்து விலகினான். வலது கையில் வெள்ளிக் காப்பை எடுத்து அணிந்து கொண்டான். இடது கரத்தில் கைக் கடிகாரம் பொருத்தினான். இத்தனை அலங்காரமும், மெனக்கெடலும் அவன் இத்தனை ஆண்டுகளில் என்றுமே செய்ததே கிடையாது. ஆள் பாதி, ஆடை பாதி என்பதில் அவனுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் வார இறுதிகளில் அதையெல்லாம் அவன் பின்பற்றுவது கிடையாது. பின்னர் இந்த வார இறுதி மட்டும் என்ன வித்தியாசம் என்றால், இன்றைய நாள் அவனுக்குப் பிரத்யேகமானது.

அவனது வருங்காலத்தைக் காணப் போகிறான் அவன். ஏற்கெனவே வீட்டினருடன் சென்று அவளைப் பெண் பார்த்து விட்டு வந்தாகிற்று. இரண்டு வீட்டினருக்கும் பிடித்திருக்கிறது. பெண்ணுக்கும், பையனுக்கும் கூடப் பிடித்தம்தான். பிறகென்ன அவர்கள் இருவரும் அலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டார்கள். கடந்த மூன்று வாரத்தில் மூன்றே முறைதான் பேசியிருக்கிறார்கள்.

இப்போதுதான் அவனுக்குத் துணிச்சல் வந்து, “வெளியில் சந்திப்போமா?” என்று கேட்டு அதற்குப் பெண்ணும் சம்மதிக்கவே, இன்றைக்கு முதல் முறையாகத் தனியாகச் சந்தித்து மனம் விட்டு பேசிக் கொள்ளப் போகிறார்கள். அதற்காகதான் ஆவலுடன் கிளம்பிக் கொண்டிருக்கிறான் அவன்.

“பார்த்திபா” என்று அவனது அம்மா சத்யபாமா அழைக்கவும், “என்னம்மா?” என்று கேட்டபடியே கூடத்திற்குச் சென்றான்.

“என்னடா பார்த்தி” என்று வாயில் கை வைத்து மகனை ஆவென்று பார்த்தார் அவர்.

‘டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு எங்க கிளம்பிட்ட?’ என்று அவரின் பார்வையே அவனைக் கேள்வி கேட்டது. பின்னே அவனுக்குச் சனி, ஞாயிறு விடுமுறை என்றாலே கிரிக்கெட் மைதானத்தில்தான் விடியும். அதற்கான உடையுடன் அவசரமாக அரக்க பறக்க கிளம்பி சாப்பிடாமல் கூட விளையாடச் சென்றிடுவான். இன்றைக்குப் புதியதாக அலுவலகத்திற்குச் செல்வது போல இத்தனை திருத்தமாக அவன் வந்து நின்றால், அவரும் அதிர்ச்சியடையாமல் என்ன செய்வார்.

அம்மாவின் பார்வையைப் புரிந்து கொண்டவனாக, “அம்மா, பிரபாவ பார்க்க போறேன்ம்மா” என்றான் புன்னகையுடன்.

“சரி, அதுக்கேன்டா இத்தனை அலப்பறை? அந்த இத்துப் போன டிஷர்ட்டை போட்டுட்டு போக வேண்டியதுதானே?” என்று அவனது கிரிக்கெட் சீருடையை அவர் குறிப்பிட்டு சொல்ல, “ம்மா” என்று பல்லைக் கடித்தான் அவன்.

அவன் பிரபா என்று சொன்னதும் அவனது உயிர் நண்பன் பிரபஞ்சனை குறிப்பிடுகிறான் என்று புரிந்து கொண்டார் சத்யபாமா.

பார்த்திபன், பிரபஞ்சன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். அப்போது இருவரும் ஒரே பகுதியில் வசித்தார்கள். பள்ளி, கல்லூரி, தெருக் கிரிக்கெட் என நீண்டு பலமானது அவர்களின் நட்பு.

பிரபஞ்சனுக்குச் சமீபமாகத் திருமணம் முடியவும் அவர்களின் நட்பில் சற்றே இடைவெளி விழுந்திருக்கிறது. இல்லையென்றால் எல்லா வார இறுதிகளையும் நண்பனுடன்தான் கழிப்பான் அவன்.

“நான் நம்ம பிரபஞ்சனை சொல்லலம்மா. பிரபாவதிய சொன்னான்” என்றான்.

“அடடே, மருமகளைப் பார்க்க போறியா நீ? நல்லபடியா போய்ட்டு வா” என்றார், சட்டென உதித்த உற்சாகத்துடன்.

“ம்ம், சரிம்மா” என்று அவன் நகரப் போக, “நீங்க ரெண்டு பேரும் பார்க்க போறது அந்தப் பொண்ணு வீட்டுக்கு தெரியுமா? எங்க வச்சு பார்க்க போறீங்க? நீ திரும்ப எப்போ வீட்டுக்கு வருவ?” என்று அவனிடம் அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டு அவன் அனைத்திற்கும் சரியான பதில் சொன்னதும்தான் அவனை வெளியே செல்ல அனுமதித்தார் அவர்.

“அப்பாடா” என்று பெருமூச்சுடன் வீட்டுக்கு வெளியே வந்து தன் இரு சக்கர வாகனத்தை வெளியே உருவி, ஆக்கிரமித்து இயக்கினான் அவன். சென்னையின் சாலையில் மிதவேகத்துடன் விரைந்தது அவனது வாகனம்.

அவர்கள் சந்திக்கத் திட்டமிட்டிருந்த காஃபி ஷாப்பின் முன் சென்று வண்டியை நிறுத்தி, உள்ளே சென்று கண்களைச் சுழற்றினான்.

அவனது கண்கள் தேடியவள் அங்கில்லை. அவள் இன்னமும் வரவில்லை என்பது புரிந்து அவளுக்கொரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு அங்கிருந்த இருவர் அமரும் மேஜையை நெருங்கி ஓர் இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

சரியாக முக்கால் மணி நேரம் தாமதமாக வந்தாள் பிரபாவதி.

அவள் காஃபி ஷாப்பின் கதவை திறந்து உள்ளே வரும் போதே அவன் கண்களும் சட்டென நிமிர்ந்து அவளை நோக்கின. அவன் உதடுகள் தாமாக விரிந்து புன்னகை சிந்தின.

இடது கரத்தை உயர்த்தி, அசைத்து தன் இருப்பை அவளுக்கு உணர்த்தினான்.

அவனை நெருங்கியதும், “ஹாய், ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?” என்று கண்ணைச் சுருக்கி வினவினாள்.

அடர்மஞ்சள் நிற சிக்கன்கரி வேலைப்பாடு செய்த சுடிதாரில், தோள் வரை வழிந்த கூந்தலை சிறிய கிளிப்புக்குள் அடக்கி, முகம் முழுவதும் அவனைக் காக்க வைக்க நேர்ந்த தவிப்பு தெரிய நின்றிருந்தவள் அவன் கண்களுக்கு அழகாகத் தெரியாமல் போனால்தான் ஆச்சரியம்.

“இல்லங்க, நான் இப்போதான் வந்தேன்” பிடித்த பெண்ணிற்காகப் பொய் சொன்னான் பார்த்திபன்.

“சாரி, நான் நேத்தே நம்ம மீட் பத்தி வீட்ல சொல்லிட்டேன். பட் திடீர்னு மார்னிங் அப்பா வந்து, உன்னை நான் ட்ராப் பண்றேன்மான்னு சொல்லவும்… லேட்டாகிருச்சு” என்று கண்ணைச் சுருக்கி கெஞ்சலாகச் சொன்னாள்.

“இட்ஸ் ஓகே, ஃபர்ஸ்ட் உட்காருங்க” என்று எதிர் இருக்கையைக் கைக் காட்டினான்.

அவள் அமரவும், “அப்புறம் எப்படி வந்தீங்க?” என்று அவளிடம் விசாரித்தான்.

“அதுவா..” என்றவள், நுனி நாக்கை கடித்துப் புன்னகைத்தாள்.

“அதான் சொன்னேனே. அப்பாதான் என்னை ட்ராப் பண்ணாங்க. ஈவ்னிங் அப்பாவே வந்து பிக் அப் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்காங்க” என்றாள்.

“ஓ, உங்கப்பா வந்தாரா? அவரை உள்ள கூப்பிட்டு வந்திருக்கலாம் இல்ல? நான் பேசியிருப்பேனே”

“ஈவ்னிங் பார்க்கலாம்னு அப்பா சொன்னாங்க. அப்போ பேசுங்க”

“அப்போ சரி. ம்ம்ம், என்ன சாப்பிடுறீங்க? உங்களுக்குச் சாண்ட்விச், காஃபி ஓகேவா? ஆர்டர் பண்ணட்டுமா? இல்ல, இட்லி தோசை வேணும்னா பக்கத்துல வெஜ் ஹோட்டல் இருக்கு. அங்க போகலாம்” என்று அவளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வினவினான்.

“சாண்ட்விச் ஓகேதான். ஏன்னா இட்லி தோசை சாப்பிட போனா அங்க நம்மள மணிக் கணக்கா உட்கார்ந்து ஃப்ரீயா பேச விட மாட்டாங்களே” என்று அவள் சொல்லவும், சடாரென்று நிமிர்ந்து அமர்ந்தான் அவன்.

சன்ன சிரிப்புடன், “நீங்க சொல்றதும் சரிதான். இங்க ஒரு காஃபி வாங்கிட்டு ஒரு நாள் முழுக்க உட்கார்ந்தாலும் ஒருத்தனும் கேள்வி கேட்க மாட்டானுங்க” என்றான்.

இருவருக்குமான உணவை சொல்லி விட்டு, “மீட் பண்ணணும்னு சொன்னீங்க, பார்த்திபனை பார்த்தாச்சு. ம்க்கும், நீங்க என்ன பேச போறீங்களோன்னு எனக்குப் பதட்டமா இருக்கு. எதுவா இருந்தாலும் கொஞ்சம் பட்டுன்னு போட்டு உடைச்சுட்டீங்கன்னா நான் கொஞ்சம் ரிலாக்ஸாகிடுவேன்” என்று அவன் சொல்லவும் மெல்ல புன்னகையில் பிரிந்தன அவள் உதடுகள்.

“பார்த்திபனை பிடிச்சுருக்குன்னு பார்க்க வந்தேன். அவர பார்க்க மட்டும்தான் செய்யணுமா? பேசவும் செய்யலாமேன்னு..” என்று அவள் குறும்பாக இழுக்க, அவன் இதழ்கள் மெல்ல பிரிந்து வளைந்து முறுவலித்தன.

“பார்க்க, பேச என்னங்க.. நீங்க என்னை என்ன வேணாலும் செய்யலாங்க பிரபா” என்றானே பார்க்கலாம். அவள் கண்கள் அதிர்ந்து விரிய, அதற்கு நேர்மாறாக இதழ்கள் வெட்கப் புன்னகையைச் சிந்தின.

இருவருக்குமான உணவு வர, “சாப்பிடுங்க ஃபர்ஸ்ட்” என்றான். அவர்கள் உண்ணத் தொடங்கும் நேரம், அவனது அலைபேசி ஒலித்தது.‌ திரையில் ஒளிர்த்த பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்காமல் துண்டித்தான். மீண்டும் மீண்டும் அழைப்பு வர, “எடுத்து பேசுங்க” என்றாள் அவள்.

சிறிய தலையசைப்புடன் அழைப்பை ஏற்று, “நான் வெளில முக்கியமான வேலையா இருக்கேன். ஈவ்னிங் பேசுறேன், போனை வை” என்று அடிக்குரலில் சீறினான்.

“அடிங்க, அப்படியென்ன முக்கியமான வேலை பார்த்திபனுக்கு? ஒழுங்கு மரியாதையா அரை மணி நேரத்துல வீடு வந்து சேரு சொல்லிட்டேன்” என்று அந்தப் பக்கமிருந்து கத்தினான் அவனது நண்பன் பிரபஞ்சன்.

“டேய்.. ரொம்ப முக்கியமான..”

“இருக்கட்டும்டா பார்த்தி. நான் சொல்லப் போறதும் ரொம்ப முக்கியம்தான். வீட்டுக்கு வா”

“பிரபா” என்று பார்த்திபன் கோபமாக அழைக்கவும், “என்ன?” என்று அவனது கோபத்தின் காரணம் புரியாத குழப்பத்துடன் கேட்டாள் அவன் எதிரே இருந்த பிரபாவதி.

“ஒன்னும் இல்லங்க” என்று அவன் தடுமாற, அந்தப் பக்கம் வெடிசிரிப்புச் சிரித்தான் அவன் நண்பன்.

“சரி, பொழச்சு போடா” என்று அழைப்பை துண்டிக்கப் போனான் பிரபஞ்சன்.

“இப்போ என்னால வீட்டுக்கு வர முடியாது. சொன்னா புரிஞ்சிக்கோ பிளீஸ்” என்றான் குரலை தழைத்து.

“என்னடா ஹஸ்கி வாய்ஸ்ல பேசுற? நான் என்ன உன் பொண்டாட்டியா பார்த்தி, சத்தமா பேசுடா டேய்”

அதில் கடுப்பாகி, “பிரபா..” என்று சீறியவன், சட்டெனக் குரலை இயல்பாக்கி, “என்னால இப்போ எங்கேயும் வர முடியாது. நீ.. இல்ல நீயும், உன் பிரியாவும் வெளில வாங்களேன். நாம மீட் பண்ணலாம். உங்க ரெண்டு பேருக்கும் ஒரு முக்கியமான ஆளை இன்ட்ரோ குடுக்கணும்” என்று அதி அவசரமாக நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.

பிரபஞ்சனுக்கு இவனிடம் பகிர முக்கியமான விஷயம் இருந்தது. பார்த்திபனுக்குத் தன் வருங்காலத்தை நண்பனிடம் அறிமுகம் செய்யும் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆகவே இருவருக்கும் பொதுவாக வெளியே சந்திப்பது என முடிவு செய்து கொண்டார்கள்.

அவன் முன்னெச்சரிக்கையாக முதலில் பிரபாவதியிடம் அவளின் கருத்து கேட்டு பின்னரே நண்பன் குடும்பத்தை வரச் சொல்லியிருந்தான்.

இருவரும் உணவை முடித்து, பார்த்திபனின் இரு சக்கர வாகனத்தில் பக்கத்தில் இருந்த வணிக வளாகத்திற்குச் சென்றார்கள்.

error: Content is protected !!
Scroll to Top