நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 4 (3)

கைப்பேசியில் நடராஜனை அழைத்துக் கடை திறந்தாகிற்றா என்று கேட்டறிந்து கொண்டான்.

வீடு நெருங்க நெருங்க குறிஞ்சியின் நெஞ்சுக்குள் ரயில் ஒன்று தடதடக்கத் தொடங்கியது. அம்மாவை எதிர்கொள்ளவெல்லாம் அவளுக்கு அதிகம் பயமில்லை.

அவளுக்கும் அம்மாவுக்கும் அனைத்துமாக இருந்தவர்கள் நாச்சம்மை, பழனியப்பன் தம்பதியர். அவளைத் தங்கள் வீட்டு மருமகளாக்க பிரியப்பட்டதற்கு முன்பே அவள் மேல் அத்துணைப் பாசமும் பிரியமுமாக இருந்தவர்கள் அவர்கள். அந்தப் பிரியத்துக்குப் பதிலாக என்ன கொடுக்கவிருந்தாள் அவள்.

அவளின் மனசாட்சியே அவளைக் கேள்விகளால் துளைத்தெடுக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

காரை ஓரமாக நிறுத்தி, “மூஞ்சி கழுவிக்கோ” என்று தண்ணீரை நீட்டினான். அவள் கண்களைச் சுருக்க, “ஒரு தடவ சொன்னா உடனே செய்ய மாட்டியா?” என்று எகிறினான்.

படக்கென்று பாட்டிலை அவனிடம் இருந்து பறித்துக் கொண்டு கீழிறங்கி முகம் கழுவினாள். அவனும் கீழிறங்கி கையை உயர்த்திச் சோம்பல் முறித்தான். அதில் அவனது வேட்டி ஒரு பக்கம் விலக, “இது வேற புது மாப்ள போல..” என்று அவன் புலம்பலுடன் வேட்டியை இறுகப் பற்ற, அதைக் கண்டவளின் கண்களில் சிரிப்பின் சாயல்.

இருவரும் காரில் ஏறிய ஐந்தாம் நிமிடம் வீட்டுக்கு முன்னிருந்தார்கள்.

குறிஞ்சியின் கண்கள் முதலில் தங்கள் வீட்டின் மேல் பாய, “அத்த இங்கதான் இருக்காங்க. அவங்க செருப்பு வாசல்ல இருக்கு பாரு.” என்றான்.

கார் சத்தத்தைக் கேட்டதும் வாசலுக்கு ஓடி வந்து எட்டிப் பார்த்த ரோஜா, “மாமா” என்று மகிழ்ச்சி மிகுதியில் உரக்கக் கத்தினாள்.

அவள் பின்னேயே பழனியப்பனும் துர்காவும் வர, அதுவரை அவன் மனதிற்குள் இருந்த தவிப்பு முகத்திற்குத் தாவியது. “ரோஜா, அக்கா” எனப் பதறி அடித்துக் கொண்டு அவனுக்கு முன்பு மனம்தான் அவர்களின் அருகே சென்று நின்றது, அடுத்துதான் அவன் சென்று நின்றான். அக்காவின் முகத்தைக் கண்ட கணம் அவன் நெஞ்சை நிறைத்தது நிம்மதி. ஆழ மூச்சிழுத்துப் பொறுமையாக வெளியேற்றி, “ரோஜா குட்டி” என்று கைகளை விரித்துப் புன்னகைத்தான்.

அதிவேகமாக அவன் கைகளில் தஞ்சமானாள் ரோஜா.

“வாம்மா குறிஞ்சி” வாஞ்சையுடன் அவளை வரவேற்றார் பழனியப்பன். அவருக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்து, துர்காவை நெருங்கினாள்.

குறிஞ்சியை நன்கு அறிந்தவளாக அவளின் கரம் பற்றித் தனியாக இழுத்துப் போனாள் துர்கா.

“என் கல்யாணத்துக்குக் கண்டிப்பா வருவேன்னு சத்தியம் செஞ்சியே துர்கா, ஞாபகம் இருக்கா?” என்று சீறினாள் குறிஞ்சி.

“ரோஜாவை யாரும் உன்கிட்டயிருந்து பிரிக்க விட மாட்டேன்னு நீ கூடத்தான் என்கிட்ட வாய் சவடால் விட்ட” நிதானமாகத் துர்கா சொல்ல, “துர்கா” என்று தடுமாறினாள் குறிஞ்சி.

“என் தம்பி உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு ரோஜாவை அவன் வளர்ப்பான். நான்.. எவனையோ கல்யாணம் பண்ணிட்டு எங்கேயோ என் பொண்ணைப் பிரிஞ்சி போகணும்னா.. என்னை என்ன செய்யச் சொல்ற குறிஞ்சி?” கலங்கிய கண்களுடன் அவள் கேட்க, எட்டி அவள் கரத்தை இறுக்கமாகப் பற்றினாள் குறிஞ்சி.

“குறிஞ்சி, வந்துட்டீங்களா?” என்று கேட்டபடி பரபரப்பாக நாச்சம்மை வர, அவரின் பின்னேயே அலமேலுவும் வந்தார்.

“வீட்டுக்குள்ள வராம என்ன இங்க நின்னுட்டு பேசிட்டு இருக்கீங்க? உள்ள வா குறிஞ்சி, நைட்டுலாம் கார்ல வந்தது அசதியா இருக்கும். காப்பிக் குடி வா” என்றார் நாச்சம்மை.

அப்படியே வாசலை நோக்கி, “தயா, வாப்பா.” என மகனையும் அழைத்தார்.

மற்றவர்கள் வீட்டினுள் செல்ல, குறிஞ்சி தப்பித்து உள்ளே செல்லும் முன் அவளைப் பிடித்துக் கொண்டார் அலமேலு.

“கல்யாண பொண்ணு நீ பத்து நாளைக்கு முன்னாடி வீட்டுக்கு வர வேணாமா குறிஞ்சி? முகூர்த்தக்கால் நடுறதுக்கு முன்னாடி கண்டிப்பா வீட்டுக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டு.. இதுதான் நீ வீட்டுக்கு வர லட்சணமா? அம்மா போன் பண்ணா எடுக்காம.. மாப்ள கூப்பிட்டாலும் எடுக்காம..

இப்படித்தான் பொறுப்பில்லாத பொண்ணா உன்னை வளர்த்தேனா நானு?” கோபமும் வருத்தமும் போட்டி போட படபடத்து, பளிச்சென்று அவளின் முதுகில் அடித்திருந்தார்.

அம்மாவிடம் அடி வாங்கியெல்லாம் அவளுக்குப் பழக்கமே இல்லை. வலியில் முகம் சுருங்கிட, “ம்மா” என்று முனங்கினாள்.

அந்நேரம் வீட்டுக்குள் நுழைந்த தயாபரன் பார்வையில் அந்தக் காட்சி படவும், அவன் கண்கள் அதிர்ந்து விரிந்தன.

அவனை உணர்ந்து தலையைத் திருப்பியவளின் கண்கள், “கோபத்துல கைய கிய நீட்டிற போறாங்கன்னு வாய வச்சீங்க இல்ல. பாருங்க பலிச்சிடுச்சு” என்று முறைப்புடன் மொழிந்தன.

error: Content is protected !!
Scroll to Top