அவள் இரண்டு இட்லிகளை உண்டு முடிப்பதற்குள் அவன் நான்கு இட்லி, மூன்று சப்பாத்தியும் உண்டு முடித்திருந்தான். அதற்குள் அவன் கேட்டிருந்த உணவு வந்திருந்தது. இட்லியை தனக்கு எடுத்துக் கொண்டவன், “உனக்கு இடியாப்பம் பிடிக்கும் இல்ல? சாப்பிடு” என்று அவள் தட்டில் பரிமாறினான்.
“எனக்கு இட்லி போதும்” என்று அவள் அலற, “எது ரெண்டு இட்லியா?” என்று புருவம் உயர்த்தி, “வீட்ல மட்டும் நாலு இட்லி சாப்பிடுற?” என்று கேட்டான்.
“அது வீடு”
“அதென்ன வீடுன்னா மட்டும் உனக்கு வயிறு பெருசாகிடுமா? பசிக்குதுன்னு சொன்னதானே? ஒழுங்கா சாப்டு” என்று அப்பட்டமாக அதட்டினான். அவனை முறைத்துக் கொண்டே இடியாப்பத்தை உள்ளே தள்ளினாள்.
“அக்கா” என்று கையசைத்து அவர்களுக்கு உணவு பரிமாறிய பெண்மணியை அழைத்து, “சாப்பிட வேற என்ன இருக்கு?” என்று வினவினான்.
“டிபன் அயிட்டம் இல்லாம வேறென்ன இருக்கு? இந்த இட்லி, தோசை சாப்பிட்டாலாம் பசி அடங்காதுக்கா. நைட் சோறு கிடைக்காதா இங்க?” என்று விசாரித்தான்.
அந்தப் பெண்மணி புன்னகையுடன், “அதுங்க தம்பி பிரியாணி, பிரைட் ரைஸ் இருக்கு. கொண்டு வரவா?” என்று கேட்டார்.
“சோறு குழம்புன்னு இல்லையாக்கா?” ஏமாற்றத்துடன் கை வீசி அவன் கேட்க, “இதென்ன நம்ம கடைன்னு நினைப்பா உங்களுக்கு?” என்று குரலை தழைத்து கேட்டாள் குறிஞ்சி. அதுவரை அவன் முகத்தில் மண்டிக் கிடந்த எரிச்சல் நொடியில் மாயமானது.
நக்கல் நகைப்பு உதட்டோரம் நெளிய, “நம்ம கடைன்னு தெரிஞ்சா சரிதான்” என்றான். அந்த நகைப்பின் தடயமே இல்லாமல் திரும்பி, “பிரியாணி, பிரைட், ரைஸ்லாம் வேணாம்க்கா. அதெல்லாம் நமக்குச் செட்டாகாது. இன்னும் நாலு இட்லி குடுங்க, போதும்” என்றான்.
“போதுமாமே” என்று மனதிற்குள் சொல்லி, “எதுக்கு இப்படிப் பஞ்சத்துல அடிபட்ட மாதிரி சாப்பிடுறீங்க?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டாள்.
“அடிங்க, என்னைப் பஞ்சத்துல அடிபட்டவன்னா சொல்ற? விட்டா சோத்துக்குச் செத்தவன்னு கூடச் சொல்லுவ போலயே” என்று அவன் கோபமாகச் சொல்லும் போதே சிரித்து விட்டாள் அவள்.
“இப்போ எதுக்குச் சிரிக்கற நீ? பல்ல தட்டி கையில குடுக்கப் போறேன் பாரு” என்று மிரட்டினான்.
“முதல்ல சாப்பிட்டு முடிங்க, அப்புறம் பல்லை தட்டுறதைப் பத்தி பாக்கலாம்” என்றாள் அலட்டிக் கொள்ளாமல். கண்ணைச் சுருக்கி கோபமாக அவளைப் பார்த்தவன் மறுகணம் வேகமாக உண்ண ஆரம்பித்தான்.
அவள் அறிந்த தயாபரன் இப்படித்தான். மகிழ்ச்சி, கோபம், வருத்தம், துக்கம் என அனைத்து உணர்வையும் உணவு வழியே கடப்பவன். எந்தவொரு உணர்வென்றாலும் உணவிருந்தால் போதும் அவனுக்கு. அவனது மனநிலையை மாற்ற உணவு ஒன்றே போதுமானது.
அவன் அதிகமாக அதீதமாக அளவில்லாமல் உண்ணுகிறான் என்றால் அதன் பின்னான காரணம் மேற்கூறியவற்றில் ஒன்றாகத்தான் இருக்க முடியும். இப்போதல்ல, அவன் சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே அப்படித்தான்.
“என்னங்க இவன் இப்படிச் சாப்பிடுறான்?” பத்து வயது தயாபரன் உண்பதை கண்டு ஒருமுறை நாச்சம்மையே மிரண்டு போய்க் கணவரை கூட்டி வந்து காட்டினார்.
“புள்ளைக்குப் பசிச்சுருக்கும் நாச்சியா, சாப்பிடட்டும் விடு” என்று விட்டார். ஆனால் நாள்கள் செல்ல செல்ல கோபம், வருத்தம் மட்டுமல்லாது சந்தோஷமாக இருந்தால் கூட அவன் அதிகமாகச் சாப்பிடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். சிறிது நாள்களில் அவனது இந்த வழக்கம் அவர்களுக்கும் பழகி போனது.
குறிஞ்சியின் அப்பா முத்தையா தவறிய போதுதான் முதல் முறையாகத் தயா அதிகமாக உண்பதை நேரடியாகக் கண்டிருந்தாள் அவள்.
“சோகமா இருந்தா அவனுக்குச் சோறு வேணும்” என்று அவளிடம் துர்காதான் விளக்கம் சொன்னாள்.
இப்போது என்னவாம் இவனுக்கு? எதற்காக இப்படி அளவில்லாமல் உண்கிறான்? தன் மேல் கோபமாக இருக்கிறானா? இல்லை துர்காவின் செயலினால் விளைந்த வருத்தமா? என்ற குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவன் அச்சமயம் சட்டெனத் திரும்பி அவளைப் பார்க்க, நொடி நேரம் இருவரின் பார்வையும் தொட்டு தழுவின. மறுநொடி அவன் பார்வையைத் திருப்பிப் பரிமாறும் பெண்ணை அழைக்கப் போனான். அவசரமாக அவன் கையைத் தடுத்து பிடித்து விட்டாள்.
“போதும் தயா” என்றாள் கெஞ்சலாக. அவளையும், அவள் பற்றியிருந்த தன் கரத்தையும் மாறி மாறி பார்த்தவன் உடல்மொழி மறுகணம் அவளே அதிசயிக்கும் வண்ணம் மாறிப் போனது.
“இந்த ஒரு இட்லியை மட்டும் நீ சாப்பிட்டுடு குறிஞ்சி. சாப்பாட்டை வீணாக்க வேணாம்” என்று சொல்லி உணவை அவள் புறமாக நகர்த்தி வைத்தான்.
“சத்தியமா என்னால முடியாது தயா. என் வயித்துல இடம் இல்ல” என்று உதடு பிதுக்கினாள். உடனே வேகமாக அவன் தட்டை இழுக்கவும், “ஐயோ குடுங்க” என்று அவன் தட்டையும் சேர்த்தே இழுத்து அதில் இருந்த சட்னியை தொட்டு இட்லியை வேகமாக வாயில் இட்டாள்.
“ம்ம், பரவாயில்லயே. நாளைக்குத் தயா திண்டாட வேண்டியதில்லன்னு தோனுது” என்றான். அவன் சொன்னதின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தால்தானே? ஆக, அமைதியாக உண்டு முடித்து எழுந்தாள்.
“எனக்கு ஒரு காப்பிக் கண்டிப்பா வேணும். இல்லனா என்னால காரோட்ட முடியாது” என்று அவன் சத்தமாகச் சொல்ல, “அது வயிறா இல்ல..” என்று சந்தேகம் கேட்கப் போனவள், அவன் பார்வையில் அப்படியே வாய் மூடினாள்.
அவன் அசட்டையான தோள் குலுக்களுடன் காப்பிச் சொன்னான்.
“எனக்கு எதுக்குப் பால் சொன்னீங்க?”
“பால் குடிச்சா நல்லா தூக்கம் வரும் குறிஞ்சி. காப்பிக் குடிச்சா தூக்கம் வராது. அதுனால பால் உனக்கு. காப்பி எனக்கு” என்று சொல்லி, சூடான ஆவி பறக்கும் காப்பியை எடுத்து அருந்தத் தொடங்கினான்.
“என்னைச் சொல்லிட்டு இவர்தான் ஓவரா பேசுறார்” உதட்டுக்குள் உச்சரித்து, மிகவும் கடினப்பட்டு அந்தப் பாலை குடித்து முடித்தாள்.
பதினைந்து நிமிடங்கள் கழித்துப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். குறிஞ்சி காரில் ஏறியதும் அவனது சிகரெட், லைட்டர் இரண்டையும் எடுத்து தன் பக்கமாக வைத்துக் கொண்டாள்.
“என்னைப் பிடிக்காதவல்லாம் என்னைப் பிடிச்சு வைக்க நினைக்கக் கூடாது, சொல்லிட்டேன்” என்று அவள் கண் பார்த்து கடுகடுத்து காரை நகர்த்தினான்.
இருவரும் எப்போதுமே அதிகமாகப் பேசிக் கொண்டதில்லை. இப்போதும் அவர்களுக்கு இடையே தயக்கம் வந்து தங்கிக் கொள்ள, “தூங்கு” என்றான் தயா.
“இல்ல, நான் முழிச்சுருக்கேன். நான் தூங்கினா உங்களுக்கும் தூக்கம் வரும்ல? கார் ஓட்டுறது கஷ்டம்” என்று பெரிதாகப் பேசியவள், அடுத்தப் பதினைந்தாம் நிமிடம் இருக்கையில் தலை சரிய உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள். தயா முறைப்புடன், “முழிச்சுட்டு வர்ற மூஞ்சியைப் பாரு” என்று முணுமுணுத்துச் சாலையில் கவனம் பதித்தான்.
சற்று நேரத்தில் ஶ்ரீகாந்த் அழைத்து, “இப்பத்தான் பஸ்ல இருந்து இறங்கினோம் தயா. வீட்டுக்கு போக நடக்கறோம்” என்றான்.
“தேங்க்ஸ் மச்சா. இரு, நீங்க வந்துட்டீங்கன்னு நான் அப்பாவுக்கு அடிச்சு சொல்றேன்” என்று தயா பரபரக்க, “மாமா.. உங்கப்பாக்கு நானே போன் பண்ணி சொல்லிட்டேன். அவர் வெயிட் பண்றேன்னு சொன்னார்” என்றான் ஶ்ரீகாந்த்.
மெலிதான ஆச்சரியத்துடன், “ஓ, அப்போ சரி” என்றான் தயா.
பத்து நிமிடங்கள் கழித்துப் பழனியப்பன் அவனை அழைத்தார்.
“அக்கா பத்திரமா வீட்டுக்கு வந்துட்டாப்பா தயா” அப்பாவின் வார்த்தைகள் அவனுக்குத் தந்த ஆசுவாசத்தை அவனால் வார்த்தைகளில் வடித்திட முடியாது.
தொண்டையைச் செருமி, “சரிங்கப்பா” என்றான்.
“தம்பி” அவன் எதிர்பாராத கனம் துர்கா இணைப்பில் வந்திருந்தாள்.
“தயா, நான் என்ன சமாதானம் சொன்னாலும் நான் செஞ்சது சரின்னு ஆகிடாது. இப்பவும்.. எனக்கு என்ன சொல்லி என்னை நியாயப்படுத்தன்னு தெரியல.” அந்தக் குரலில் இருந்த கலக்கம் அவனைக் கலங்கடித்தது.
“அக்கா, நீ ஒன்னும் சொல்ல வேணாம். எனக்கு உன்னை நல்லா தெரியும். நீ இப்படியொரு முடிவெடுத்திருக்கன்னா அதுக்கு நாங்கதானே காரணம்? என் கல்யாணம்தானே காரணம்?”
“அச்சோ இல்லடா தம்பி” துர்கா பதற, “தப்பு என் மேலதான்க்கா. நாம பொறுமையா நாளைக்குப் பேசலாம். இப்போ நீ போய்த் தூங்கு. ரோஜா குட்டியை தூங்க வை. எதையும் யோசிக்காதக்கா. உன்னைக் கஷ்டப்படுத்துற மாதிரி நான் என்னைக்கும் எதுவும் செய்ய மாட்டேன். சத்தியமா” என்றான் உள்ளார்ந்து உணர்ந்து.
அதைக் கேட்டு துர்காவின் குற்ற உணர்ச்சி மிக, “தயா” என்று பாச பரிதவிப்புடன் அழைத்தாள். “ரொம்ப லேட்டாகிடுச்சுப் போய்ப் படுக்கா பிளீஸ்” என்றான் அவன்.
தன்னால் தான் தம்பி ஓய்வில்லாமல் பயணிக்கிறான் என்ற குற்ற உணர்வு துர்காவை ஆக்கிரமிக்க, “கவனமா கார் ஓட்டு தயா” என்றாள் நடுங்கும் குரலில்.
“சரிக்கா” என்றான். அவனது பேச்சுச் சத்தத்தில் தூக்கத்தில் இருந்த குறிஞ்சி லேசாகக் கண் திறந்து, “துர்காவும் ரோஜாவும் பத்திரமா வீட்டுக்கு வந்துட்டாங்களா?” என்று விசாரித்தாள். அவன் பதிலாக, “ம்ம்” எனவும் அவள் கண்கள் மீண்டும் மூடிக் கொண்டன.
மறுநாள் விடியலில் அமராவதிபுதூர் வந்து விட்டார்கள். அவர்களின் கடையைக் கடந்துதான் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கே காரை நிறுத்தாமல் நேராக வீட்டுக்கு காரைச் செலுத்தினான்.