இரவு முழுதாய்க் கவிழ்ந்திருக்க, சாலையோர விளக்குகள் நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன.
அவனுக்காகக் கரிசனப்பட்டால் அவளையே பேசுகிறானே என்ற கோபத்துடன் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தாள் குறிஞ்சி, காற்று அவள் முகத்தில் மோதி விளையாட கண்கள் சொருகி அப்படியே உறங்கியும் விட்டிருந்தாள்.
திடீரென்று, “குறிஞ்சி” என்று தயாவின் குரல் அவளுக்கு மிக நெருக்கமாகக் கேட்டது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள், “என்ன?” என்று பதறி கண் விழித்தாள்.
“ஹோட்டல்ல நிப்பாட்டி இருக்கேன், இறங்கு” என்றான். அவனை இமைகளைச் சிமிட்டி சிமிட்டி பார்த்து, “ஹோட்டலுக்கு எதுக்கு?” என்று கேட்டாள்.
“ம்ம்ம், சாமி கும்பிட வேற எதுக்கு” என்று நக்கலாகச் சொன்னவன், “ஹோட்டலுக்கு எதுக்கு வருவாங்க? சாப்பிடத்தானே, இறங்கு” என்று அதட்டினான்.
“நான் பசிக்குதுன்னு சொன்னப்ப, பட்னியா கிடன்னு சொன்னீங்க?”
“நல்லா பசியில இருக்கும் போதே இவ்வளவு பேசுறியே. நீயெல்லாம்..” என்று முறைத்தவன், கதவைத் திறந்து கீழிறங்கி அவள் பக்கம் வந்து நின்றான். அப்போதும் அசையவில்லையே அவள்.
அவள் பக்கக் கதவை பட்டென்று திறந்து, “நான் கூப்பிட்டுட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு உக்கார்ந்துருக்க? இப்போ சாப்பிட வர்றியா இல்லையா?” அவள் முகம் நோக்கி குனிந்து கேட்டான்.
“நீங்க ஊர்ல இருந்து டிரைவ் பண்ணி வந்தது டையர்டா தெரியறீங்களேன்னு, நீங்க சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பீங்கன்னு உங்களுக்காக நான் கேட்டா, அதுக்கு என்னைத் திட்டிட்டு இப்போ மட்டும் என்ன ரொம்ப அக்கறையா பேசுறீங்க?”
“அடி சக்கை, குறிஞ்சியாத்தாக்கு என் மேல அக்கறையா? நம்ப முடியலையே?” என்று சந்தேகமாகச் சொன்னவன், அவள் கண்களைக் கூர்ந்தான்.
“நான் காலையில அத்தனை தரம் போன் பண்ணியும் நீ எடுக்கல. நீ ஒரே ஒரு டைம் போனை எடுத்து பேசியிருந்தா நான் இவ்ளோ தூரம் அலைய வேண்டியதே இருந்திருக்காது. இதுல உனக்கு என் மேல அக்கறை? ம்ம், கேக்க நல்லாத்தான் இருக்கு குறிஞ்சி” அந்தக் கடைசி வரிகளைச் சொல்லும் போது முறைப்பாய் ஒரு பார்வை பார்த்தான். அதில் துளி ரசனை போன்றதொரு உணர்வு இருந்தது போல அவளுக்குப் பிரம்மை. அவனையே விழியெடுக்காமல் பார்த்திருந்தாள்.
கணத்தில் அவன் நின்றிருந்த தோரணை மாறிட, “நான் ஊர்ல இருந்திருந்தா அக்கா வீட்டை விட்டு போய் இருக்க மாட்டா”
என்றான் கடினமான குரலில்.
“ஓ, அப்போ எல்லாம் என்னாலதான்னு சொல்ல வர்றீங்களா தயா? நானா உங்களை இன்னைக்குச் சென்னைக்கு வரச் சொன்னேன். என் மேல நம்பிக்கை இல்லாம கிளம்பி வந்தது நீங்க.. இதுல என்னைக் குத்தம் சொன்னா..”
“உன்னைக் குத்தம் சொல்லாம வேற யாரை குத்தம் சொல்ல சொல்ற? நமக்குக் கல்யாணம் நிச்சயமாகி எவ்ளோ நாள் ஆச்சுன்னு நீயே சொல்லு. நான் கேட்டப்போ, உனக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம்னு சொல்லிட்டு.. அதுக்கு அப்புறம் ஒரு நாளாவது என்னை விருப்பத்தோட பார்த்திருப்பியா நீ? இல்ல தெரியாமதான் கேக்கறேன், நாலு நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு இன்னைக்குக் காலையில ஊருக்கு வர வேண்டியவ வராம இருந்தா நான் என்ன நினைக்க?”
“பதில் சொல்லு குறிஞ்சி. நம்ம ரெண்டு பேரோட குடும்பச் சூழல் தெரிஞ்சும் நீ பண்ண நினைச்சது சரியா? உன்னைத் தேடி நாங்க உன்னோட ஹாஸ்டலுக்கு வருவோம்னு வேற இடத்துக்கு மாற இருந்திருக்க. இல்லையா? என்ன பிளான்ல அதெல்லாம் பண்ண இருந்த? எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு நிமிஷம் உங்கம்மாவை யோசிச்சியா?” என்றான் கடுமையாக.
அம்மாவை குறிப்பிட்டதும் குறிஞ்சி எச்சில் கூட்டி விழுங்கினாள்.
அவளின் முகவாயை பற்றி, “வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க” என்று கேட்டான்.
“நான்தான் அப்பவே சொன்னேனே. நீங்களா எதையாவது நினைச்சுட்டு பேசினா…”
அவன் ஆத்திரத்துடன் கையை உதறி, “கொன்றுவேன் ராஸ்கல். உன் பிரெண்ட் என் மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போறா, உனக்கு நானா எதையாவது நினைச்சுட்டு பேசுறேனா?” என்று அடிக்குரலில் சீறினான்.
“வேற பிஜி போறதா இருந்தேன்தான். ஆனா, அது கல்யாணத்துக்கு அப்புறம்..”
“ஓ, கல்யாணத்துக்கு அப்புறம் குறிஞ்சியாத்தா எதுக்குச் சென்னைக்கு வரப் போறீங்களாம்? இங்க பாரு குறிஞ்சி, நான் கல்யாணம் பண்றது குடும்பம் நடத்த. உன் கனவையெல்லாம் நிஜமாக்கி காட்டுவேன்னு வசனம் பேச நான் சினிமா ஹீரோ இல்ல. புரிஞ்சுதா? எனக்கு என் பொண்டாட்டி என்னோட என் வீட்ல இருக்கணும். என் அம்மா, அப்பா, அக்கா.. நாளைக்கு என் பிள்ளைங்க..” என்று அடுக்கி கொண்டே போனவன், அவள் ஆச்சரியமாக அவனை நோக்கவும் அமைதியானான்.
“என் கனவை நிஜமாக்கி தாங்கன்னு உங்ககிட்ட நான் கேட்டேனா?” ரோஷமாகக் கேட்டாள்.
“முதல்ல என் கேள்விக்குப் பதில் சொல்லு, எதுக்கு வேற இடம் மாறுறதா இருந்த? ம்ம்? இப்போ பேச்சு வராதே உனக்கு? இரு, ஊருக்குப் போனதும் உன்னைப் பேசிக்கறேன்” என்றான் அவள் விழிகளுக்குள் நோக்கி. அவர்களைக் கடக்கும் கூட்டமெல்லாம் அவர்களை ஆர்வமாகப் பார்க்க, கண்ணை உருட்டினாள் குறிஞ்சி.
அவளின் பார்வையைப் பின் தொடர்ந்து, “அட ச்சே. இவளால எங்க இருக்கோம்னே மறந்துட்டேன் பாரு” என்று முணுமுணுத்துப் பின்னால் நகர்ந்தான் தயாபரன்.
குறிஞ்சி கீழிறங்கவும் காரை பூட்டி விட்டு, அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினான். கொஞ்சமாகத் தண்ணீர் குடித்து அவனிடம் திருப்பிக் கொடுத்தாள். அவளுக்கு முழுமையாக உறக்கம் கலைந்திருக்கவில்லை.
“பாத்ரூம் போயிட்டு வா. நான் வெயிட் பண்றேன்” என்று அவளை அனுப்பி விட்டு அவளுக்காக வெளியில் காத்திருந்தான். அவள் ஓய்வறைச் சென்று முகம் கழுவி திருத்தமாக வெளியே வந்ததும் தன் கைக் குட்டையை நீட்டினான். அதில் முகத்தை ஒற்றி எடுத்தாள்.
அந்நேரம் அவளுக்குக் கொட்டாவி வர, அவனது ஈர கைக்குட்டையால் வாய் பொத்தி கொட்டாவி விட்டாள்.
“கெட்ட ஆவி கூடத் தனியா போய்டுமாம் குறிஞ்சியாத்தா, இந்தக் கொட்டாவி மட்டும் தனியா போகாதாம். ஏற்கெனவே எனக்குத் தூக்கமா வருது, இதுல நீ வேற கொட்டாவி விட்டு என்னைய கெடுத்து விடாத” என்று கடுகடுத்து, அவளிடம் இருந்து கைக்குட்டையைப் பிடுங்கிக் கொண்டான்.
சென்னையின் புகழ் பெற்ற உணவகத்தின் கிளை அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் இருக்க அதற்கு முன்பு நிறுத்தியிருந்தான். உணவகத்தின் மத்தியில் அவளை இடம் பார்த்து அமர்த்தி, இருவருக்கும் வேண்டிய உணவை சொல்லி விட்டு அவனும் ஓய்வறை சென்று வந்தான்.
“இன்னுமா உனக்கு இட்லி வரல குறிஞ்சி?” மிக இயல்பாகக் கேட்டு, அதைவிட இயல்பாக அவளின் துப்பட்டாவை எடுத்து முகம் துடைத்தான்.
அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டு, “என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.
“நான் என்னோட கர்சீப் உனக்குக் குடுத்தப்போ, எதுக்குன்னு நீ கேட்டியா? கமுக்கமா வாங்கி யூஸ் பண்ணதானே?”
“என்னைச் சொல்லிட்டு நீங்கதான் ரொம்பப் பேசுறீங்க”
“யாரு நானு?” என்று இருக்கையை அவளுக்கு நெருக்கமாக இழுத்து போட்டான்.
“தயா” என்று அவள் திணற, அதற்குள் இருவருக்குமான உணவு வந்து விட்டது.
அவள் இட்லி மட்டுமே சொல்லியிருந்தாள். அவனுக்கு இட்லி, அத்துடன் சப்பாத்தி சொல்லியிருந்தான். இப்போது, “இன்னொரு பிளேட் இட்லியும், இடியாப்பமும் கொண்டு வாங்க” என்று கூடுதலாகச் சொன்னான்.
அவனும் காலையில் இருந்து உண்ணவில்லைதானே? நிரம்பப் பசி போல என்று எண்ணிக் கொண்டாள் அவள்.