நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 3 (2)

குறிஞ்சி சத்தமாக மூச்சை உள்ளிழுத்தாள்.

“என்ன?” தயா புருவங்களை உயர்த்திக் கேட்க, “அஞ்சு நிமிஷம் பேசாம இருங்க” என்று அவனிடம் கண்டிப்பாகச் சொல்லி கண்ணை உருட்டினாள்.

“என்கிட்ட இப்படிப் பேசுற வேலை வச்சுக்கிட்ட..” என்று கோபமாக ஆரம்பித்தவன், சூழல் உணர்ந்து நாக்கை மடித்து ஒற்றை விரல் நீட்டி அவளை எச்சரித்தான். மீண்டும் கண்ணை உருட்டி அவனை அசட்டையாகப் பார்த்து அவன் கோபத்துக்குத் தூபம் போட்டாள் அவள்.

“உங்களுக்குப் பதில் சொல்லணுங்கற அவசியம் எனக்கில்ல” துர்கா கோபமாகச் சொல்ல, “இந்தா இருக்க மதுரைக்கு ஓடி வந்துட்டா உங்களை யாராலயும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா? எதுக்காக இங்க வந்து இப்படித் தனியா உக்காந்துருக்கீங்க? அதுவும் ரோஜாவை தூக்கிட்டு வந்துருக்கீங்க. குழந்தையைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா?” அவனும் விடாமல் கேள்வி கேட்க, “என் குழந்தையை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும். அவளுக்கு இனிஷியல் குடுக்க யாரும் வரத் தேவையில்லை” காட்டமாகச் சொல்லி விட்டாள். ஶ்ரீகாந்த்தின் முகம் வெளிறி விட்டது.

“ரோஜா, துர்கா பொண்ணு, அவ்ளோதான். நான் வாழ்க்கையில பெரிய தப்புப் பண்ணியிருக்கலாம். ஆனா தப்பான அம்மாவா இருக்க விரும்பல, இருக்கவும் மாட்டேன்” என்று அவள் அழுத்தமாகச் சொல்ல, அதைக் கேட்டிருந்த குறிஞ்சியின் கண்ணில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.

“என்ன?” அவளையே பார்த்திருந்த தயா கேட்டு, வேகமாகக் கைபேசிக்காகக் கை நீட்ட, அவனை விட வேகமாகச் செயல்பட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் அவள்.

“ப்ச், எதுக்குக் குறிஞ்சி காலை கட் பண்ண? அக்கா என்னதான் சொல்றா?” என்று கேட்டபடி மீண்டும் ஶ்ரீகாந்த் எண்ணிற்கு அழைத்தான்.

துர்கா அழைப்பை ஏற்காமல் வெரிக்க, “என் மேல இருக்கக் கோபத்தை உங்க தம்பி மேல காட்டாதீங்க” என்றான் ஶ்ரீகாந்த்.

ரோஜா அவனிடம் நகர்ந்து வர, மகளை முறைத்து அவளைத் தன்னோடு அணைத்துப் பிடித்தாள் துர்கா.

“உங்க மேல கோபமா இருக்கேனா நான்?”

“நீங்க என்னை ஒரு ஆளாவே மதிக்கல. உங்க மனசுல எண்ணத்துல எதுலயும் நான் இல்ல. எனக்கு நல்லா புரிஞ்சுது துர்கா, போதுமா? இப்போ தயசு செஞ்சு உங்க தம்பிகிட்ட பேசுங்க. அவனுக்கு நாலே நாள்ல கல்யாணம். இப்படி அவனை ஆளாளுக்கு அலைய விட்டா அவன் பாவம் இல்லையாங்க? நீங்கல்லாம் இப்போ போட்டு அவனை அலைக்கழிக்கற அளவுக்கு அவன் என்ன பண்ணிட்டான் சொல்லுங்க. உங்களுக்கு நல்லது நினைக்கிறதை தவிர?”

“என்னைக் கேள்வி கேக்க உங்களுக்கு..” என்று ஆரம்பித்தவள், “உங்களுக்குப் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல” என்ற பதிலை அவன் முகம் பார்க்காமல் சொல்லி அவசரமாக அழைப்பை ஏற்கப் போகையில், அழைப்பு நின்றது. இம்முறை அவளே தம்பியை அழைத்தாள்.

அதுவரை நெஞ்சில் நிறைந்திருந்த பதட்டம் முற்றிலுமாக வடிந்திருக்க, தயாபரனுக்கு மூக்கின் நுனி வரை கோபம் துடித்து நின்றது. ஆனால் அக்காவிடம் அதைக் காட்டும் மனத்தைரியம் அவனுக்கு என்றைக்குமே இருந்ததில்லை.

“அக்கா..” எப்போதும் போல அவளே பேசட்டும் என்று விட்டுக் கொடுத்தான். அதுதான் துர்காவை எப்போதும் சங்கடப்படுத்திக் குற்ற உணர்வில் ஆழ்த்தும். இப்போதும், “தயா, தம்பி…” என்றாள் தளுதளுத்த குரலில். தயாவின் தொண்டைக் குழி அவஸ்தையாய் ஏறியிறங்க இடக்கரத்தால் முகம் கோதி தலைக் கலைத்தான். அவனது மனநிலை புரிந்த குறிஞ்சி எட்டி அவனிடம் இருந்து கைபேசியை வாங்கி, “துர்கா, எதுக்கு இப்போ மதுரை போன நீ? அதுவும் யார்கிட்டேயும் சொல்லிக்காம? நீ பண்றது உனக்கே நியாயமாப்படுதா?” என்று அழுகையை அடக்கிய குரலில் கேட்டாள்.

“நியாயமா? குறிஞ்சி நியாயமா பார்த்தா நீ நியாயத்தைப் பத்தியெல்லாம் என்கிட்ட பேசவே கூடாது. ஏன்னா நியாய அநியாயத்தை எல்லாம் கொஞ்சம் கூட மதிக்காத ஆள் நானு” துர்கா அத்தனை நிதானமாகப் பதில் சொல்ல, குறிஞ்சியால் அப்படிப் பேச முடியவில்லை.

மனம் கலங்கிட, துர்கா பத்திரமாக வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக இருக்க, “எப்படிப் பேசுற துர்கா நீ? இப்போ நான் என்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்கற?” என்று கேட்டாள்.

“உன்கிட்ட நான் என்ன கேட்டேன் குறிஞ்சி? எனக்காக அதைச் செஞ்சியா நீ?” துர்கா கோபமாகக் கேட்டிட, “நீ கூடத்தான் எனக்கொரு சத்தியம் செஞ்சி குடுத்த, அதைக் காப்பாத்தினியா நீ?” என்று கத்தினாள் குறிஞ்சி.

“ஏய் குறிஞ்சி, என்னது சத்தியம் அது இதுன்னு.. இப்போ அதான் ரொம்ப முக்கியமா? அக்காவ பத்திரமா ஊருக்கு வர சொல்றத விட்டுட்டு.. போன கொண்டா இப்படி” என்று தயா கத்த, “நான் ஊருக்கு வர்றேன். நீங்க ரெண்டு பேரும் என்னைப் பத்தி கவலைப்படாம வீட்டுக்கு வந்து சேருங்க” என்றாள் துர்கா. குறிஞ்சி, “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டாள்.

மறுநொடி ஶ்ரீகாந்த் இணைப்பில் வந்தான்.

“தயா”

“சொல்லு ஶ்ரீ”

“இந்தா ரோஜா பேசுறா”

“ரோஜா குட்டி..” பாசப் பரிதவிப்புடன் அழைத்தான் மாமன்.

“மாமா, நான் ஶ்ரீக்கா கூட ஊருக்கு வர்றேன். அம்மா சொன்னா மாதிரி புது ஸ்கூலு ஹாஸ்டலுக்குப் போகல,” என்று மழலையில் மாமனிடம் அம்மாவை போட்டு கொடுத்தாள்.

“ரோஜா குட்டிய எந்த ஹாஸ்டலுக்கும் போக விட மாட்டேன் மாமா. நீ எங்களோடதான் இருப்ப. சரியா செல்லம்?”

“சரி மாமா” என்றாள் குதூகலித்து. பெரியவர்கள் பிரச்சினையெல்லாம் பிஞ்சு குழந்தைக்கு எங்கே புரிய போகிறது. திடீரென்று, “நாம ஊருக்கு போறோம்” என்று சொல்லி அம்மா பேருந்தில் அழைத்துச் செல்கையில், அவளுக்கு அனைத்தையும் வேடிக்கை பார்க்க உற்சாகமாகதான் இருந்தது. ஆனால் இனிமேல் ஐயா, ஆச்சி, மாமா இருக்கும் வீட்டில் நாம இருக்கப் போவதில்லை.

நீயும் நானும் புதுப் பள்ளியில் சேர போகிறோம். அங்கேயே ஹாஸ்டலில் தங்க போகிறோம் என்று அம்மா சொன்னதும், ஐயா ஆச்சி, மாமா ஏன் வர மாட்டார்கள்? அவர்கள் ஏன் நம்முடன் இருக்க மாட்டார்கள் என்று கேள்வி எழுப்பினாள். சற்றே நேரம் செல்ல செல்ல, அந்தப் பரபரப்பான பேருந்து நிலையம் பிடிக்காமல் போய் விட வீட்டினரை தேடத் தொடங்கி விட்டாள். இப்போது மாமாவின் குரலை கேட்டதும் மலர்ந்து புன்னகைத்தாள் குழந்தை.

“ஆச்சி உனக்காக நம்ம வீட்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க சீக்கிரமா வீட்டுக்கு போங்க, மாமா உனக்குப் பொம்மையும் கலர் புக்கும் வாங்கிட்டு காலையில வந்துடுவேன்.”

“ஐ புக்கா மாமா, நானு கலர் குடுப்பேன்” என்றாள் குஷியாக. அந்த நாளின் முடிவில் தயாவின் ‍முகத்தில் அப்போதுதான் புன்னகையைக் காண முடிந்தது.

ஶ்ரீகாந்த், “நான் பஸ் ஏறிட்டு போன் பண்றேன்டா. நீ கவனமா கார் ஓட்டிட்டு வா” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான். ரோஜா அவன் தோளில் தொற்றியிருந்தாள்.‌

துர்காவிற்குத் தம்பியிடம் பேசாததில் நிரம்ப வருத்தம். தான் என்ன சமாதானம் சொன்னாலும் தன் செய்கையை நியாயப்படுத்தி விட முடியாது என்பதால் மௌனமாக ஶ்ரீகாந்தை பின் தொடர்ந்தாள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அதுவே கடினமாகத்தான் இருந்தது.

அவள் எண்ணங்களைப் படித்தது போல அவளை நோக்கித் திரும்பிய ஶ்ரீகாந்த், “தப்புச் செய்யறது மனித இயல்புங்க. அதுக்காகத் தப்பிச்சு ஓடிட்டே இருக்கணும்னா நாம காலம் முழுக்க ஓடிட்டேதான் இருக்கணும். முதல்ல யார்கிட்ட இருந்து தப்பிச்சு ஓட நினைக்கிறீங்க நீங்க? உங்களுக்கு நல்லது நினைக்கறவங்க கிட்ட இருந்தா? உங்களுக்காகவே வாழ்றவங்க கிட்ட இருந்தா? எதுக்காக?” என்று அவள் முகம் பார்த்து கேட்டான்.

“எதுக்காகன்னா? நான் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சும், என்னை எதுவும் சொல்லாம, எனக்காக எப்பவும் நிக்கறாங்க இல்ல. அதை என்னால ஜீரணிக்க முடியல. நான் தெரிஞ்சே செஞ்ச தப்பு.. அதுக்கான தண்டனைய யாருமே எனக்குக் குடுக்கல.”

“அதுனால? அவங்களைப் பிரிஞ்சி அவங்களைத் தண்டிக்க நினைக்கிறீங்களா நீங்க?” அவன் நிதானமாக நின்று கேட்க, அவளும் பிரேக்கை மிதித்தது போல அப்படியே நின்று அவனை வெறித்துப் பார்த்தாள்.

“அஞ்சு வருஷமா இப்படித் தப்புப் பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்னு சொல்லி சொல்லி உங்களை நீங்களே தண்டிச்சுக்கறது பத்தாதா? முதல்ல நீங்க உங்களுக்குத் தண்டனை குடுக்கறதை நிறுத்துங்க. அப்புறம் மத்தவங்க உங்களை மன்னிக்கிறத பத்தி பேசலாம்” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாகச் சொன்னான். ரோஜா அவர்களையே புரியாமல் கண்களை உருட்டி முழித்துப் பார்க்க, “வீட்டுக்குப் போகலாம் வாங்க” என்று அவர்களின் ஊர் செல்லும் பேருந்து இருக்கும் பக்கம் அழைத்துச் சென்றான். துர்கா பல்லைக் கடித்துக் கொண்டு, விருப்பமில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.

இங்கே தயா உடனடியாகப் பெற்றோருக்கு அழைத்து விட்டான்.

“மதுரைக்கா? ஶ்ரீகாந்த் கண்ணுல படப் போய் என் பொண்ணு கிடைச்சா. இல்லன்னா நாம என்னப்பா தயா பண்ணியிருப்போம்” என்று பழனியப்பன் கேட்ட விதமே அவன் மனதை உருக்கியது.

“நம்மள இப்படி அல்லாட விடுறதே உங்க பொண்ணுக்கு வேலையா போச்சு. என்ன நினைப்புல அவ மதுரைக்குப் போனாளாம். வரட்டும் இருக்கு அவளுக்கு” பின்னால் நாச்சம்மை அழுகையுடன் முறையிட, “ப்பா, அக்கா வந்தா அவகிட்ட எதுவும் கேட்காதீங்க. அவளா ஏதாவது சொன்னா கேட்டுக்கோங்க. இல்லையா அவ போக்குல விடுங்க. சும்மா கேள்வி கேட்டு அவளை..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன், “இத எனக்கு நீ சொல்லணுமாப்பா தயா?” என்று கேட்டிருந்தார் பழனியப்பன்.

“இல்லப்பா, அம்மா..”

“அவ பெத்தவ இல்லையாப்பா. இப்படித்தான் பேசி மனச ஆத்திப்பா. அதுக்காக உங்கக்கா மனசு நோக பேச மாட்டாப்பா. உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.

“இல்லப்பா, கோபத்துல கைய கிய நீட்டிற போறாங்க” என்றவனை அதிர்ச்சியுடன் முறைத்து பார்த்தாள் குறிஞ்சி.

“அவங்களுக்கு ஐடியா இல்லைனாலும் நீங்களே எடுத்து குடுப்பீங்க போலவே” என்று அவள் முணுமுணுக்க, அந்தப் பக்கம், “நான் பார்த்துக்கறேன்ப்பா தயா, நீ பத்திரமா வா. காலையில இருந்து கார் ஓட்டுற கவனம்ப்பா” என்றார் பழனியப்பன். தயா கண் மூடித் திறந்து, “சரிங்கப்பா” என்று சொல்லி வைத்தான்.

அதற்காகவே காத்திருந்தது போல அடுத்த நொடி ஶ்ரீகாந்திடமிருந்து அழைப்பு வந்தது.

“நாங்க பஸ் ஏறிட்டோம் தயா. ஊர் பக்கத்துல வரும் போது கால் பண்றேன்”

“தேங்க்ஸ் மச்சா.” மனதார உணர்ந்து சொல்லி, “நீங்க ஊருக்கு வந்துட்டு இருக்கீங்கன்னு நான் அப்பாகிட்ட சொல்லி வைக்கிறேன்” என்றான்.

“உன் நன்றியை நீயே வச்சுட்டு, உங்கப்பா கிட்ட மட்டும் சொல்லி வை, போதும்” என்ற தீவிரமாகச் சொன்ன ஶ்ரீகாந்த் அழைப்பை துண்டித்தான்.

கைப்பேசியை ஓரமாகத் தூக்கி போட்ட தயா அப்படியே பொத்தென்று இருக்கையில் விழுந்து உடலை முறுக்கி கைகளை நெட்டி முறித்தான். காரின் கண்ணாடியை முழுதாக இறக்கி விட்டு, வேகமாக மேனி தழுவிய தென்றலை ஆழ்ந்து அனுபவித்தான். அவனையே பார்த்திருந்தாள் குறிஞ்சி.

பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக இருந்தான். சட்டையின் மேலிரு பொத்தான்களை அவன் விரல் நீக்கிட, அவள் விழிகள் விரிந்தன.

அவனது அடர்ந்த சிகை காற்றுக்கு அசைந்தாடி நெற்றியில் படர்ந்தது. மாநிறம், அடர்ந்த மீசை என ஆள் அழகன்தான். அவனை ரசித்த விழிகள் இடுங்க, இதழ்கள் ரசனையாக விரிந்தன.

உடல் சோர்வும் அசதியும் அவனுக்கு உறக்கம் வரும் போலிருக்க, பெரிதாகக் கொட்டாவி விட்டான். அவன் கரம் அனிச்சையாகச் சிகரெட்டை தேட, கண்கள் தாமாக அவளைத் தேடின.

அவன் பார்வை அவள் மேல் பதிய, அவளின் தீவிர பார்வையில் அவன் கண்கள் இடுங்கின.

“என்ன?” என்று கேட்டவன், அவள் சிகரெட்டை முறைக்கவும், “என்னைப் பிடிக்காத உனக்காகல்லாம் எனக்குப் பிடிச்சதை விட முடியாது, புரிஞ்சுதா?” என்று கோபமாகக் கேட்டான்.

“அப்போ உங்களுக்கும் என்னைப் பிடிக்காது. அப்படித்தானே தயா?” இப்படிக் கிடுக்கி பிடி போட்டு பிடிப்பாள் என அவனென்ன கனவா கண்டான்.

“உங்களுக்கும்னா என்ன அர்த்தம்? உனக்கு என்னைப் பிடிக்காதுன்னு சொல்ற? சரியா? இருக்கட்டும் இருக்கட்டும்” என்றான் ஸ்டீயரிங்கில் தாளமிட்டு.

“எனக்குப் பிடிக்காதுன்னா என் பக்கத்துலயே நீ உக்கார முடியாது. பெருசா பேச வந்துட்டா” என்று பக்கவாட்டில் அவள் முகம் பார்த்து சொன்னவன், “ஒரு சிகரெட்டை நிம்மதியா பிடிக்க விட மாட்டேங்கறாய்யா” என்று புலம்பிக் கொண்டே காரை இயக்கி நகர்த்தினான்.‌

அவனது சோர்ந்த முகம் அவளை என்னவோ செய்ய, “தயா” என்றழைத்தாள்.

“இப்போ என்ன? நாம நாளைக்குக் காலையில ஒழுங்கா ஊர் போய்ச் சேரணும். அதுனால சும்மா என்னைச் சீண்டி விடாம பேசாம வா, சொல்லிட்டேன்”

“எனக்குப் பசிக்குது”

“அடிங்க” என்று அவளைத் திரும்பி பார்த்து நாக்கை மடித்துக் கடித்தான்.

“நான் காலையில குடிச்ச காப்பியோட இருக்கேன். உனக்கு அது தெரியுமா குறிஞ்சியாத்தா? நான் கொலை பசியில இருந்தாலும் நீ அத்தைக்கிட்ட வம்பு பண்ணி சாப்பிடாம இருப்பியேன்னு வழியில வண்டியை நிப்பாட்டி, மேடத்துக்குப் பிடிச்ச முட்டை பப்ஸ் வாங்கிட்டு, அது போதாதுன்னு தேடி பிடிச்சு ஆட்டுக்கால் கேக், முட்டை போண்டான்னு வகையா வாங்கிட்டு வந்தா.. மேடம் என்ன பண்ணீங்க?”

“…..”

“உனக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா நான் வாங்கிட்டு வந்ததைப் பாதி உன் பிரெண்ட்கிட்ட குடுத்துத் தானம் செஞ்சிட்டு மீதியை உங்க ஹாஸ்டல் நாய் குட்டிக்கு பிச்சு போட்டிருப்ப?”

“அப்போ எனக்குப் பசியில்ல”

“உன் பிரெண்ட்க்கு குடுத்தது ஓகே. நாய் குட்டிக்கு முட்டை போண்டாவை பிச்சு போட்ட தெரியுமா, அதுவும் என்னைப் பார்த்துட்டே…”

“நாய் குட்டி என்னைப் பாவமா பார்த்துச்சு”

“ஆனா என்னால உனக்குப் பாவம் பார்க்க முடியாது இப்போ. ஒரு நேரம் சாப்பிடலன்னா ஒன்னும் ஆகாது. தூங்கு” என்றான் சாலையையும் அவளையும் மாறி மாறி பார்த்து.

“எனக்காக நீங்களும் உண்ணாவிரதம் இருக்கப் போறீங்களா தயா?”

“வேற வழி. என்ன சொன்னாலும் இவளுக்கு வாய் குறையுதா பாரு” கடுப்புடன் சொல்லி காரின் வேகத்தைக் கூட்டினான்.

error: Content is protected !!
Scroll to Top