தயாபரனுக்கு நெருக்கமான நட்பென்றால் அது ஶ்ரீகாந்த் மட்டுமே. அவனை விட வயதில் மூத்தவன் என்றாலும் அவர்களுக்குள் நட்பு சாத்தியப்பட்டிருந்தது. ஶ்ரீகாந்தும் அதே ஊர்தான். இருவரும் படித்தது ஒரே பள்ளி கல்லூரி என்றாலும், தொழில்தான் அவர்களை இணைத்தது. ஶ்ரீகாந்த் அப்பா சந்தையில் காய்கறி கடை வைத்திருக்கிறார். அது பெயரளவுக்குச் சில்லறை வியாபாரம் செய்யவே. சிறு, குறு, பெரிய உணவகங்கள் மற்றும் கல்யாண, விசேஷ வீடுகளுக்கு மொத்தமாகக் காய்கறி வழங்குவதுதான் அவரது பிரதான தொழிலே. அவராகச் சென்று வாடிக்கையாளர் பிடித்தது கிடையாது.
மொத்த கொள்முதலுக்குக் குறைந்த விலையில் தரமான, வாடாத, விரும்பிய காய்கறிகள் வேண்டுமென்றால் அவரைத் தொடர்பு கொண்டால் போதும் என்று உள்ளூர் மக்களுக்குத் தெரியும்.
ஶ்ரீகாந்த் பட்டப்படிப்பு முடித்திருக்கிறான். பள்ளி படிக்கும் காலத்திலேயே மாலையானால் அப்பாவின் கடையில்தான் இருப்பான். தயாபரனும் அப்படித்தானே. ஶ்ரீகாந்த் தன் அப்பாவுடன் தயாவின் கடைக்கு வரப் போக இருக்கையில் அவர்களின் நட்பு வேர் விட்டு இப்போது மரமாகி இருந்தது.
தயா மனம் திறந்து பேசும் நண்பன் ஶ்ரீகாந்த். பொதுவாக எல்லாவற்றையும் அவனிடம் கொட்டி கவிழ்த்து விடுவான். அதற்கு விதி விலக்காகி போனது அவனது அக்கா துர்கா விஷயம் மட்டுமே. அப்போதும் அரசல் புரசலாக ஏதோ பிரச்சினை என்று ஶ்ரீகாந்திற்குத் தெரிய வந்திருந்தது. துர்கா திருமணமாகாமல் கர்ப்பமாக வந்து நிற்கையில், முற்றிய கத்திரிக்காயை கடைப் பரப்பியது போல எப்படி அதை மறைக்க முடியும்?
அப்பொழுது ஶ்ரீகாந்த் தயாவிடம் எதுவும் கேட்கவில்லை. அந்தக் கடின காலத்தில் அவனுக்குத் தோள் கொடுத்து நின்றான், அவ்வளவே.
பல மாதங்கள் கழித்து ரோஜா பிறந்த பின்னர், மேலோட்டமாகப் பிரச்சினையை நண்பனிடம் பகிர்ந்திருந்தான் தயா. அவன் சொன்னதை மௌனமாகக் கேட்டு, எந்தவித எதிர் கேள்விகளும் கேட்காமல், அவன் அக்காவை குற்றவாளி கூண்டில் நிறுத்தாமல், அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று எதையும் உளறிக் கொட்டாமல், மௌனமாய் அவனுக்குத் தோள் கொடுத்தான். அது இன்று வரைக்கும் தொடர்கிறது.
“தயா, நான் பேசுறது கேட்குதா?”
“ஶ்ரீ மச்சா, அக்கா வந்து..” என்று அவன் தடுமாற, “நான் மதுரை வரைக்கும் வந்திருக்கேன். இங்க மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்ல உங்கக்கா துர்கா மாதிரியே..” என்று ஶ்ரீகாந்தும் யோசனையாக இழுத்தான்.
“மச்சா, அக்கா மாதிரியா? நல்லா பாத்தியா? எங்கக்கா தானா? கொஞ்சம் பக்கத்துல போய்ப் பார்க்கறியா?” என்று தயா படபடத்தான். சட்டென்று காரின் வேகத்தைக் குறைத்து ஓரங்கட்டினான்.
“அவங்க என்னைப் பார்த்ததும் சட்டுனு எழுந்து போனது மாதிரி இருந்ததுடா தயா. அவங்க தோள்ல தூங்கிட்டு இருந்த குழந்தை ரோஜா மாதிரியே இருக்கவும்தான் சந்தேகப்பட்டுத் தொடர்ந்து பார்த்தேன். ஆனா என்னைப் பார்க்காத மாதிரியே போயிட்டாங்க.”
“போய்ட்டாங்களா? எங்க போனாங்கன்னு பார்த்தியா மச்சா?”
“எங்கேயும் போகல. என் கண்ணு முன்னாடிதான் இருக்காங்க. நான் நம்ம ஊருக்குப் பஸ் இருக்கானு பார்த்திட்டு வந்து டீ குடிக்கலாம்னு நின்னா, இங்க கடை ஓரமா உக்காந்துருங்காங்க. இரு பக்கத்துல போய்ப் பார்த்திட்டு சொல்றேன்.”
“அக்காவாதான் இருக்கணும் மச்சா. அக்காவா இருக்கணும் கடவுளே..” என்று குரல் உடையச் சொன்னான் தயா.
“தயா, ஏதாவது பிரச்சினையா?”
கரிசனத்துடன் அவன் கேட்க, “டேய் நல்லவனே. முதல்ல அங்க இருக்கது எங்க அக்காவான்னு பார்த்து சொல்லுடா. உனக்குப் புண்ணியமா போகும்” என்று கத்தினான்.
“அப்போ கண்டிப்பா ஏதோ பிரச்சினைதான் போல. நீயென்னன்னா காலையில என்கிட்ட காரை வாங்கிட்டுச் சென்னை ஓடுற, உன் கல்யாண பொண்ணு குறிஞ்சியைப் பார்க்கத்தானே போன? இப்போ என்னன்னா..”
“டேய் டேய்..”
“தயாவின் தேவதைகள் தயாபரனை ரொம்பத் தவிக்க விடுறாங்க போலயே..”
“டேய் உனக்கெல்லாம் அறிவுன்னு ஒன்னு இருக்காடா. நான் இங்க எவ்வளவு டென்ஷன்ல இருக்கேன். நீ என்னன்னா..”
“தயா, அது உங்கக்கா துர்காதான். அவங்க மடியில ரோஜா படுத்திருக்கா.”
“அப்பாடா..” என்றான் நடுங்கும் குரலில். அவ்வளவு நேரமும் அவன் உடலில் இருந்த பதட்டம் வடிய, கைகள் நடுங்கின. நெற்றியில் சொட்டிய வியர்வையை ஒற்றை விரலால் சுண்டி உதறினான்.
“அவங்க யாருக்கோ வெயிட் பண்றாங்க போலருக்குடா. வெறிச்சு பார்த்திட்டு உக்காந்திருக்காங்க”
“மச்சா, வீட்ல எந்தப் பிரச்சனையும் இல்லடா. அக்கா ஏதோ குழப்பத்துல.. பிளீஸ் அவளைப் பத்திரமா ஊருக்கு கூட்டிட்டு வாயேன். உன் போனை கொஞ்சம் அவகிட்ட குடேன், நான் பேசணும்”
“என்னைப் பார்த்ததும் திரும்ப எழுந்து போயிட்டா என்னடா பண்றது?”
“ஏன்டா என் நிலைமை புரியாம உனக்கு இப்பதான் இப்படியெல்லாம் சந்தேகம் வருமா?” என்று இவன் கொந்தளிக்க, அந்தப் பக்கம், “ஏங்க, துர்கா..” என்று ஶ்ரீகாந்த் அழைக்கும் சத்தம் கேட்டது.
“உங்க தம்பி லைன்ல இருக்கான், பேசுங்க” என்று கைப்பேசியை நீட்டியவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
இவன் பார்வையில் பட்டு விடக் கூடாதென்றுதானே இங்கே வந்து தனியாக ஒதுக்குபுறமாகக் கடை மறைவில் அமர்ந்தாள். அப்படியும் எப்படிக் கண்டுபிடித்தான் இவன்? ஊருக்குச் செல்லும் பேருந்து பக்கம் சென்றவன், எப்போது இங்கு வந்தான்? கேள்விகள் சுமந்த கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
“தயா லைன்ல இருக்கான், பேசுங்க” கைப்பேசியை அவள் முன்னே நீட்டினான் ஶ்ரீகாந்த்.
“அக்கா.. அக்கா..” என்று கத்தினான் தயாபரன்.
“நான் யார்கிட்டயும் பேசல” என்று முகம் திருப்பிக் கொண்டாள் அவள்.
தயா காரை ஓரங்கட்டி சத்தமாகப் பேசவும் விழித்து விட்டாள் குறிஞ்சி. துர்கா பற்றிய தகவல் என்றதும் அவளுக்கும் அவனது பதற்றம் தொற்றிக் கொண்டது. துர்காதான் என்று உறுதியானதும், “குடுங்க, அவகிட்ட நான் பேசுறேன்” என்று அவனிடமிருந்து கைப்பேசியைப் பிடுங்கினாள்.
“துர்கா..” என்று அவளும் கத்த, அந்தப்பக்கம் துர்கா அவளிடம் பேச தயாராக இருக்க வேண்டுமே.
“உங்க வேலையைப் பார்த்திட்டு போங்க. நான் யார்கிட்டயும் பேசல” என்று ஶ்ரீகாந்திடம் கடுமையாகச் சொன்னாள்.
“அண்ணா.. ஶ்ரீகாந்த் அண்ணா போனை ஸ்பீக்கர்ல போடுங்க பிளீஸ்” என்று இரைந்தாள் குறிஞ்சி.
ஶ்ரீகாந்த் கைப்பேசியைத் துர்காவிடம் நீட்டிக் கொண்டிருக்க, குறிஞ்சி கத்தியது காற்றில் கரைந்து யார் செவியையும் எட்டாமல் போனது.
ஶ்ரீகாந்த் கைப்பேசியைத் துர்காவின் கையில் திணித்து, “பேசுங்க” என்றான்.
அவனை எரித்து விடுவது போலப் பார்த்தவள் இணைப்பை நடுங்கும் விரலால் துண்டித்து, அவனை நிமிர்ந்து, “நான்தான் பேச விரும்பலன்னு சொல்றேன் இல்ல. அப்புறமும் எதுக்குப் போனை நீட்டிட்டே இருக்கீங்க? உங்களைப் பார்த்திட்டு பாக்காத மாதிரி ஒதுங்கி வந்தேன்தானே? அது தெரிஞ்சும் என்னத்துக்கு என் பின்னாடியே வர்றீங்க? எதுவுமே உங்களுக்கு ஒரு டைம் சொன்னா புரியாதா?” என்று கேட்டாள். அவள் கத்தவில்லை, அவ்வளவு நிதானமாகக் கேட்டிருந்தாள். அவள் நடுங்கும் விரலால் கைப்பேசி பொத்தானை அழுத்தியிருக்க அழைப்பு துண்டிக்கப்படவில்லை.
இங்கே துர்காவின் பேச்சை கேட்டிருந்த குறிஞ்சி திடுக்கிடலுடன் கைப்பேசியை அழுந்த பற்றினாள்.
துர்கா உதிர்த்த வார்த்தைகள், ஶ்ரீகாந்த் மீதான கோப வெளிப்பாட்டின் பின்னே வேறு காரணம் இருப்பது போல அவளுக்குப் பட்டது.
அதை உறுதி செய்தது அடுத்து ஶ்ரீகாந்த் கேட்ட கேள்வி. “அப்போ என்னாலதான் மதுரைக்கு வந்திருக்கீங்கன்னு சொல்றீங்க? அதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு என் மூஞ்சில அடிச்சுச் சொல்லிட்டீங்களே. நானும் அன்னையில இருந்து உங்க பக்கமே வராம ஒதுங்கிதானே இருக்கேன். அப்புறம் ஏன் இந்தத் திடீர் முடிவு? அதுவும் வீட்ல கூடச் சொல்லிக்காம இப்படி வர்றது உங்களுக்கே நல்லா இருக்கா துர்கா?” என்று நீளமாக நிதானமாகப் பேசியிருந்தான்.