நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 18 (3)

“வண்டி விசாரிக்க சொன்னேனேப்பா தயா, எந்த வண்டி நல்லாருக்கும்னு சொல்லு. நாளைக்கே போய் வாங்கிடுவோம்” என்றார் பழனியப்பன். 

“என்னம்மா, வண்டி வாங்கி கொடுத்தா நீயே ஓட்டிடுவல்ல?” என்று மகளிடம் கேட்டார். 

“ம்ம், அம்மா சூப்பரா ஓட்டுவாங்க ஐயா” என்று அம்மாவுக்கு சிபாரிசு செய்தாள் ரோஜா. 

“என் ராசாத்தி சொன்னா சரித்தேன்” என்றார் அவர், செல்லமாய் அவள் தலைக் கலைத்து. 

நாச்சம்மை ரகசியமாக அந்த வாரத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்ல, அன்றைக்கு அக்கா, மனைவி இருவரையும் கடைக்கு அழைத்து சென்று, ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த புது வண்டியை வாங்கிக் கொடுத்தான் தயாபரன். 

“அய்யா, புது பைக்கு” என்று துள்ளி குதித்தாள் குழந்தை. மாமாவின் முகத்தை முத்தத்தால் நிறைத்தாள். 

“கலர் உனக்கு பிடிச்சிருக்கா க்கா?” 

“ஒயின் கலர் நல்லா இருக்குடா. ஆனா இந்த வண்டி ஹெவியா இருக்கே.” என்றாள் துர்கா, வண்டியை பிடித்து நேராக நிறுத்த சிரமப்பட்டு. 

“ஸ்டார்டிங்ல அப்படித்தான் இருக்கும்க்கா. வண்டியில ஏறி உக்காந்தா வெயிட் தெரியாது”

“இது ஜூபிடர் கொஞ்சம் ஹெவிதான்” என்றாள் குறிஞ்சி. 

“நாம ஓட்டி பழகின வண்டி டியோதானே? அது ரொம்ப லேசா இருந்தது தயா” துர்கா சொல்ல, “இதான் க்கா பெஸ்ட் வண்டி” என்றான் அழுத்தமாக. விற்பனையாளரும் அதையே சொல்ல, வாங்கி விட்டார்கள். 

வீட்டினர் அனைவரும் கோவிலில் காத்திருக்க, தயாவின் வண்டியிலும், புது வண்டியிலுமாக நால்வரும் கோவிலுக்குச் சென்று வண்டிக்கு பூஜை போட்டு சாமி கும்பிட்டு வீடு திரும்பினார்கள். 

துர்காவின் கவலைகள் எல்லாம் இடைப்பட்ட காலத்தில் காணாமல் போனதா என்று கேட்டால் இல்லைதான். கல்யாணத்துக்கு முன்னர் கர்ப்பம் எனும் போது தன் மகிழ்ச்சியை பெரிய பெட்டியில் வைத்து ஆணி அடித்து ஆழத்தில் புதைத்து விட்டாள். அதனால் ஶ்ரீகாந்தின் பிரியம், பதிலில்லா பிரிவு அவளை பாதிக்கவே இல்லை என்று சொன்னால் நிச்சயமாக அது பொய்தான். அவனும் அப்படியே ஒன்றும் ஒதுங்கி விடவில்லை. காத்திருக்கிறேன் என்றான். இம்முறை அம்மாவின் சம்மதத்திற்காகவும் சேர்த்து என்றான். 

“முதல்ல நான் சம்மதிக்கணும். அதுவே நடக்காத போது எதுக்கு உங்கம்மாகிட்ட போராடுறீங்க?” என்று அவள் சொன்னதும் முகம் வாடினாலும், அவன் பின் வாங்கவில்லை. சற்றே இடைவேளை விட்டிருந்தான் ஶ்ரீகாந்த். எப்போதும் போல அவன் பேசும் வசனங்கள், மனம் தொடும் வார்த்தைகள் அவள் மனம் தொட்டாலும் தொலைவிலேயே நின்று கொண்டாள் துர்கா. 

ஆனால், அவனை கண்டதும், “ஶ்ரீக்கா” என்று பறந்த ரோஜாவை இரு சக்கர வாகனத்தில் இருத்தி தன்னோடு இறுக்கிக் கொண்டாள். குழந்தைகள் அந்த கணத்தில் வாழ்பவர்கள் என்பது வசதியாகி போனது. 

“இந்த கோவில் பிரசாதத்தை கொண்டு போய் பூஜை ரூம்ல வை குறிஞ்சி” என்று நாச்சம்மை சொல்ல, குறிஞ்சி உள்ளே சென்றாள். 

“நீ இருப்பா தயா, கடைக்கு நான் போறேன்” என்று பழனியப்பன் கூற, “நான் போறேன்ப்பா. குறிஞ்சியும் வர்றேன்னு சொன்னா. நீங்க வீட்ல இருங்க” என்றவன், “குறிஞ்சி” என்று மனைவியை அழைத்தான்.

அவள் வந்ததும், “வா போலாம்” என்றான். 

“என்ன புதுசா?” என்று கண்களால் கேள்வி கணைத் தொடுத்தாள். 

அவனோ பதில் சொல்லாமல் வெளியேறி விட்டான். அந்த கோபத்துடன் அவனது வண்டியை நெருங்கினாள். 

“இதுல போலாம்” என்று புது வண்டியை கைக் காட்டினான். 

“நீங்க இது ஓட்டுனா நல்லாவா இருக்கும்?” என்று கேட்டவளை முறைத்து, “வண்டியை எடு, குறிஞ்சியாத்தா” என்றான். 

“ஓ, நான் ஓட்ட போறேனா? என் பின்னாடி உக்காந்து வர உங்களுக்கு ஒன்னுமில்லையா?”

“ஒரு வெக்கமும் இல்ல, வண்டியை எடு வாயாடி” என்றான் காட்டமாக. 

“பிளீஸ் சொல்லணும் பொண்டாட்டி கிட்ட. உங்க கடை அடுப்பை விட நீங்கதான் எப்பவும் சூடா இருக்கீங்க” என்று அவனை பேசி விட்டே வண்டியை எடுத்தாள். மிக இயல்பாக அவள் பின்னால் அமர்ந்து, இடையில் கைப் பதித்து பார்வையை முன்னே பதித்தான். அவனது நெருக்கம் அவளை பாதிக்க, “உங்க மேல வேர்வை, சிகரெட் ஸ்மெல்” என்றாள். 

“போன ஜென்மத்துல மோப்ப நாயா இருந்துருப்ப போலடி”

“அப்போ நீங்களும் போலீஸ் நாயாதான் இருந்திருக்கணும்.”

“என்னது?” என்று புரியாமல் புருவம் சுருக்கியவன், “ஓ, நீ அப்படி வர்ற? ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது.. இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது” என்று உல்லாச மனநிலையுடன் பாட்டு பாடினான். 

“கத்தாதீங்க” என்று அவள் கத்தியது, அவனது உல்லாசத்தை குறைக்கவே இல்லை. ஆனால் குறைந்த பயண தூரம் அவனது உல்லாசத்திற்கு உலை வைத்து விட்டது. இருந்தாலும் முகத்தில் புன்னகையின் சாயலுடன் கடைக்குள் நுழைந்தான். 

அங்கு குறிஞ்சி வருவது அரிது என்பதால், அவளுக்கு வரவேற்பு, நலம் விசாரிப்பு பலமாக இருந்தது. அலமேலுவின் மகள் என்பதால் கூடுதல் பிரியம் பகிர்ந்தார்கள். 

அவளை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்றான். பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம், கையுறை, உடைக்கு மேலாக ஏப்ரன் (Apron) அணிந்திருந்ததை வியப்புடன் உள்வாங்கினாள். புருஷன் மேல் பார்வை பாராட்டாக பதிந்து விலகியது. சமையல் அறையை முடிந்தளவு நவீன மயமாக்கியிருந்தான். 

“நம்ம மக்களுக்கு திடீர்னு பழசு மேல ஒரு மோகம் வந்திடும். அம்மி கல்லு, ஆட்டு கல்லு, விறகு அடுப்பு இதுல சமைச்சாதான் ருசி, ஹெல்த்தின்னு கிளப்பி விட்டுருக்காங்கல்ல இப்போ. அதுனால விறகு அடுப்பை இன்னமும் விடாமல் வச்சுருக்கோம்.” என்று அவளுக்கு விளக்கினான். புகையை தவிர்க்க முக கவசம் என்பது புரிந்தது. 

அனலை குறைக்க காற்றாடிகள் ஆங்காங்கே வைத்திருந்தான், புகையை குறைக்க நவீன புகைப் போக்கிகள் போதுமான அளவில் இருந்தன. 

“இதெல்லாம்..”

“எப்போவோ செஞ்சாச்சு. நீங்க இப்போதான் விசிட் பண்றீங்க நர்ஸம்மா” என்றான். 

“உனக்காக எல்லாம் இங்க எதுவும் மாறல” அவளுக்கு கொட்டு வைக்காவிட்டால் அவன் தயாபரன் இல்லையே. 

“எனக்காக நீங்க மாறினா போதும்” அவளும் சளைத்தவளா என்ன?

“நான் மாறுறதா? வாய்ப்பில்லை குறிஞ்சியாத்தா. கனவு கண்டுட்டே இரு” என்றான். அவளுக்கு கோபத்துக்கு பதில் சிரிப்புதான் வந்தது. ஆனால் இதழ்களுக்குள் சிரிப்பை இழுத்துப் பிடித்து, வெடுக்கென்று முகத்தை திருப்பினாள். 

அந்த வேகத்தில் அடுப்பு பக்கம் நெருங்கப் போக, அவள் தோளை பிடித்து நிறுத்தினான். 

“இந்த அடுப்ப பார்த்துக்கோங்க தம்பி” என்று பணியாளர் சொல்லி வெளியே செல்ல, இருவரும் அதை கவனிக்கச் சென்றனர். இரவு உணவுக்கு காய்கறி குருமா கொதித்து கொண்டிருந்தது. அதன் வாசத்தை உள்வாங்கி, கொஞ்சம் உப்பை அள்ளி உள்ளே போட்டான். 

“இத பிடி” என்று கரண்டியை அவளிடம் கொடுக்க, அவனது நெருக்கம் உணர்ந்து அவள் நகர, “நெருப்பை உரசி பார்க்கையில நானும்தான் பத்திப்பேன். பதறாத.” என்றான், இரு பொருள் பட. 

“அட பைத்தியமே” என்று அவனை பார்த்தாள். 

“என்ன முறைப்பு?” என்று எகிறினான். பாவையின் பார்வையில் பிரியம் படர்ந்து பற்றிக் கொள்ள பேராவலாக இருக்க புருஷனுக்குத்தான் அது புரியவில்லை. 

அவள் கண்ணை உருட்டி மௌனமாக அவனைப் பின் தொடர்ந்தாள். அன்றைக்கு கல்லாவில் அவள்தான் அமர்ந்திருந்தாள். தயாபரன் மேற்பார்வையோடு நிறுத்திக் கொண்டான். 

எட்டு மணி போல பழனியப்பன் வந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் பத்து நிமிட இரு சக்கர வாகன பயணம். இம்முறையும், “நீயே ஓட்டு” என்று பின்னால் அமர்ந்து விட்டான். 

அவள் புடைவையை இழுத்து சொருகியிருக்க அவன் கரம் உரிமையாக அங்கிருந்தது. அவளின் ஒரு பக்க தோளில் அவன் முகம் பதித்து பேசிக் கொண்டே வந்தது அவளை இனிமையாக இம்சித்தது. 

வீடு வந்ததும், “தயா” என்று அவள் முறைக்க, அவள் கன்னத்தில் ஈரமாய், அவசரமாய் முத்தம் பதித்தான். 

“நீ தயவு காட்டலன்னா என்ன? எனக்கு நானே தயவு காட்டிக்கிட்டேன்” என்றான் சீண்டும் குரலில். மறுகணம் அவளிடம் தர்ம அடி வாங்க தயாரானான் தயாபரன். 

error: Content is protected !!
Scroll to Top