நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 2 (2)

“துர்கா இப்படியெல்லாம் பொறுப்பில்லாம சொல்லிக்காம எங்கேயும் போக மாட்டாதானே?. உங்களுக்குத் தெரியாதா? அந்த ஆள் எதுவும் செஞ்சுருப்பானா? ஒருவேளை ரோஜாவ பத்தி தெரிஞ்சிட்டு துர்காவ பிளாக் மெயில்…”

“ஷ்ஷ்ஷ், பேசாத” அவன் உதட்டோடு சேர்ந்து அசைந்த சிகரெட்டை வெறுப்புடன் பார்த்தாள்.

“என்னை யோசிக்க விடு குறிஞ்சி. அக்கா உன்கிட்ட ரீசண்டா பேசும் போது ஏதாவது வழக்கத்துக்கு மாறா சொன்னாளான்னு யோசிச்சு சொல்லு. அதை விட்டு நீயும் குழம்பி என்னையும் குழப்பி விடாத” என்று கோபமாகச் சிகரெட்டை உதட்டில் இருந்து ஊதி உதறினான்.

“எப்பவும் போலத்தான் பேசினா, புதுசா ஒன்னும் சொல்லலையே” அதையே அவர்களின் ஒவ்வொரு பேச்சையும் மனதில் ஓட்டியபடிதான் சொன்னாள். குறிஞ்சியும், துர்காவும் கிட்டத்தட்ட தினமும் பேசி விடுவார்கள். அவ்வளவு நெருக்கம். தயாபரனுக்குக் குறிஞ்சியை மணமுடிக்க இரண்டு வீட்டினரும் முடிவு செய்ய, அதுதான் முதல் காரணம்.

குறிஞ்சியின் அப்பா முத்தையா தேர்ந்த சமையல் கலைஞர். அலமேலு முத்தையா அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் செய்தவர்கள். அப்போது அலமேலுவுக்குப் பேசியிருந்த மாப்பிள்ளை, அவருக்கு அப்பா வழியில் நெருங்கிய உறவு. அந்தத் திருமணப் பேச்சு தகையும் முன் வீட்டுக்குத் தெரியாமல் காதல் மணம் புரிந்து கொண்டார். முத்தையா வீட்டில் மகன் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டானே என அவர்களை ஏற்க மறுத்தனர்.

அதனால் இரண்டு வீட்டிலும் அவர்களுக்கு ஆதரவு இல்லாமல் போனது. குறிஞ்சி பிறந்த பிறகு நிலைமை மாறும் என நிச்சியமாக நம்பினார் அலமேலு. ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. திருமணம் முடித்து ஐந்தாண்டுகள் அதே ஊரில்தான் வசித்தார்கள்‌. காதல் திருமணமெல்லாம் பெரும் குற்றமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. அந்த ஊரில் அவர்களால் நிம்மதியாகக் குடும்பம் நடத்த முடியவில்லை. முத்தையாவின் வேலையும் பறிபோனது. ஆகையால், கைக் குழந்தையான குறிஞ்சியைத் தூக்கிக் கொண்டு அமராவதிபுதூர் வந்து விட்டார்கள்.

அப்போது, “நாச்சம்மை டீ ஸ்டால்” என்று மிகச் சிறிய அளவில் இயங்கிய தேநீர் கடைக்கு மாஸ்டராக வந்தவர் முத்தையா. அத்துடன் காலை, மாலை நேரங்களில் வடை, பஜ்ஜி, போண்டா என வகையாகச் சுவையாகத் தயாரிப்பார். அந்த வாய்ப்பு கூட அப்பொழுது நாச்சம்மைக்கு உடல்நலம் குன்றியதால் அவருக்குக் கிடைத்தது. இல்லையென்றால் கடையை அவர்களே தம்பதிகளாக நன்றாக நடத்தினார்கள். பணிக்கு ஆள் வைக்கும் அளவுக்குப் பெரிய உணவகம் இல்லை அது. அவர்களுக்கு அவ்வளவு வசதியும் அப்போது இல்லை.

முத்தையாவுக்கு அந்த இடமும் வேலையும் மிகவும் பிடித்துப் போனது. பழனியப்பன் குடும்பம் வசித்த அதே தெருவில் சிறிய வீடாகப் பார்த்து அவர்கள் கொடுக்க, அங்கே வாடகைக்குக் குடியேறினர். அவர் வேலைக்குச் சென்றதும், அலமேலு வீட்டு வேலைகளை முடித்து மகளுடன் நாச்சம்மை வீட்டுக்கு சென்றிடுவார். அவருக்குச் சின்னச் சின்ன உதவிகள் செய்து பேச்சுத் துணையாக இருப்பார்.

மூன்று வயது குறிஞ்சியைக் கொஞ்சுவது, கவனிப்பது, அவளுக்கு அலங்காரம் செய்து விடுவது, சோறூட்டி விடுவது, விளையாட்டு காட்டுவது, அவளுடன் விளையாடுவதுதான் எட்டு வயது துர்காவுக்குப் பிடித்தமான பொழுது போக்கு.

“துக்கா.. துக்கா..” என்று மழலையில் மொழிந்து துர்காவின் வால் பிடித்துச் சுற்றுவது எனக் குறிஞ்சியின் அன்றாடம் அப்படித்தான் கழியும்.

முத்தையா வேலை முடித்து வீடு வர பெரும்பாலும் இரவாகி விடும், அதுவரை மனைவி மகள் இருவரும் அங்கே பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் சம்பளம் குறைவாக இருந்தாலும் அங்கேயே வேலையைத் தொடர்ந்தார். அவர் திடீரென்று தவறிட, தயாபரன் குடும்பம் அவர்களைத் திக்கற்று நிற்க விடாமல் தாங்கிக் கொண்டது. அந்த நன்றி அலமேலுவுக்கு அதிகம் உண்டு.

குறிஞ்சியின் மனநிலை மதில் மேல் பூனை கதைதான். அம்மாவை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு அதிகம். அதற்கு முதலில் இந்த அடுப்படி சூட்டில் இருந்து அவர் வெளியேற வேண்டுமே. அதற்கு அவரைச் சம்மதிக்க வைக்க அவள் எவ்வளவோ போராடியும் வெற்றி பெற முடியவில்லை.

அந்த உணவகத்தின் உரிமையாளர் வீட்டுக்கே அவள் மருமகளாகச் செல்கையில் இனிமேல் என்ன மாறிட போகிறது? இதற்கு மேல் அவள் என்ன போராடினாலும் பயனில்லை என இப்போது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்திருந்தது.

கண் மூடி சிந்தனையில் ஆழ்ந்திருந்த குறிஞ்சிக்கு அம்மாவை நினைக்க நினைக்க, நேற்றிரவு தொடங்கி இப்போதுவரை அவரைத் தவிக்க விட்டது நினைவு வர, மனம் கேளாமல் உடனடியாக அவரை அழைத்து விட்டாள்.

“குறிஞ்சி..” அம்மாவின் அழைப்பில் பொங்கிய பாசத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.

“அம்மா சொல்றத கேட்கவே கூடாதுன்னு இருக்கியா? அம்மாக்கு எவ்வளவோ அவமானப் போச்சு தெரியுமா? பழனி ஐயா வீட்ல நீ ஏன் இன்னும் வரலன்னு கேட்கும் போது நான் என்ன சொல்லுவேன்னு கொஞ்சமாவது யோசிச்சியா நீ?”

“நீ என்னைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியாம்மா?”

“அப்போ வேணும்னு பண்றியா பாப்பா?”

“நான் வேணாம்னு சொன்னதை நீ கேட்டியாம்மா?” வெடுக்கென்று கேட்டிருந்தாள். பக்கத்தில் தயா இருப்பதையே மறந்து விட்டுக் கோபத்தில் வார்த்தைகளை விட்டிருந்தாள். அவன் விருட்டென்று திரும்பி அவளைப் பார்க்கவும்தான் அவனது அண்மையை உணர்ந்து சங்கடத்துடன் நாக்கை கடித்தாள்.

“நாங்க காலைல வீட்டுக்கு வந்துடுவோம்மா. துர்கா.. துர்கா மதினி..” என்று திருத்தி, “அவங்களையும் கூட்டிட்டு வர வேண்டியது அவர் பொறுப்புன்னு தயா.. உன் மருமகன் சொல்லியிருக்கார். அதுனால நீ கவலைப்பட்டு டென்ஷன் ஆகாம நேரத்துக்குச் சாப்பிட்டு படும்மா, நாங்க வந்துடுவோம்” என்று தண்மையாகப் பேசினாள். அலமேலு அதில் சமாதானமாகி மகளுக்குப் பத்திரம் சொல்லி அழைப்பை துண்டித்தார்.

காரின் வேகத்தைக் குறைத்து, “அப்போ என்னை வேணாம்னு உங்கம்மாகிட்ட சொல்லியிருக்க?” என்று ஓரக் கண்ணில் அவளை முறைத்து கேட்டான் தயா.

அவள் பேசியதை வைத்து இப்படியா கண்டுபிடிப்பான்? அவள் அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கணத்தில் மனதில் கனம் கூடி போக, பொய் பேச முடியாமல் படபடவென்று வந்தது. அவனை எதிர்கொள்ள இயலாமல் சாலைக்குக் கண்களைத் திருப்பி, இருக்கையில் முகத்தைப் புதைத்து, “எனக்குத் தூக்கம் வருது”

என்றாள்.

“ஓ, நான் கேள்வி கேட்டா உனக்குத் தூக்கம் வருது?”

“ப்ச், காலையில இருந்து தலவலி. அதான் தூங்கலாம்னு”

“ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தைரியம் குறிஞ்சி. என் மூஞ்சிக்கு முன்னாடியே என்னைத் தலைவலின்னு சொல்ற பார்த்தியா”

“ஐயோ, நான் ஒன்னும் உங்களைச் சொல்லல. நீங்களா எதையாவது நினைச்சுட்டு பேசினா அதுக்கு நான் பொறுப்பில்ல” கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“நானா எதையாவது நினைச்சுட்டு பேசுறேனா? நமக்கு நாலு நாள்ல கல்யாணம். உன் மனசுல என் நினைப்பு சுத்தமா இல்லைன்னு எனக்கு நல்லா தெரிஞ்சும்.. உன்னைக் கூட்டிட்டு போக இவ்வளவு தூரம் வர வந்திருக்கேன் பார்த்தியா. என்னைப் பார்த்தா உனக்குப் பைத்தியக்காரன் மாதிரிதான் இருக்கும்” கோபமா, கிண்டலா, கேலியா, விரக்தியா என்ன இருந்தது அவன் குரலில்? அவளால் சரியாக இழைப் பிரித்துக் கணிக்க முடியவில்லை. அந்த வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தி விட்டது.

இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து, விழிகள் இரண்டும் முழுதாக விரிந்து அவனை விழுங்க, “திரும்பவும் சொல்றேன் தயா, நீங்களா எதையாவது நினைச்சுட்டு பேசினா அதுக்கு நான் பொறுப்பில்ல” என்றாள் அழுத்தமாக.

“அப்போ உன் மனசுல நான் இருக்கேன்னு சொல்ற? உனக்கு இந்தக் கல்யாணத்தில் முழுச் சம்மதம்னு சொல்ற?” என்று அவன் கேட்க, “ரோட்டை பார்த்துக் கார் ஓட்டுங்க தயா” என்றாள் கோபமாக.

“என் கேள்விக்கு என்ன பதில் குறிஞ்சி?”

“நீங்க முன்னாடி கேட்டப்போ என்ன சொன்னேன்?”

“பிடிச்சுருக்குன்னு சொன்ன. ஆனா.. இப்போ சந்தேகமா இருக்கே”

“நீங்க நல்லா சந்தேகப்படுங்க. எனக்கு இப்போ தூக்கம் வருது” என்று குரலை உயர்த்தாமல் கத்தி விட்டு, மீண்டும் இருக்கையில் முகம் புதைத்துக் கண் மூடினாள்.

“இங்க மனுஷன் நான் என்ன குழப்பதுல கார் ஓட்டிட்டு இருக்கேன். இவளுக்குத் தூக்கம் வருதாம்ல தூக்கம்” என்று சத்தமாகக் கோபத்துடன் முணுமுணுத்து, “குறிஞ்சி மேடம் தூங்க கார் சீட் வசதியா இருக்கா? இல்ல என் மடியில வேணா படுத்துக்கறீங்களா? நான் தட்டி குடுத்து தாலாட்டு பாடவா?” என்று தன் தொடையைத் தட்டிக் காண்பித்துக் கேட்டான்.

அந்தச் சத்தத்தில் லேசாகத் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தவள் கண்கள் கோபத்தில் விரிய, “நான் உங்க மடியில படுத்தா உங்களுக்குக் கார் ஓட்ட டிஸ்டர்பென்ஸா இருக்கும். அதுனால நான் சீட்லயே அட்ஜஸ்ட் பண்ணி தூங்கிக்கறேன்” என்று சட்டமாகப் பதில் சொன்னாள்.

அவனோ அன்ன பறவை போல, “நீ என் மடிக்கு வந்தா நான் டிஸ்டர்பாவேன்னு.. குறிஞ்சிக்கு அந்த அளவுக்குத் தெரிஞ்சா சரிதான்” என்று தனக்கு வேண்டியதை மட்டும் கொத்திக் கொண்டு அவளுக்குப் பதில் கொடுத்தான். அவள் முகம் செம்மையுற இதழ் பிரியாமல் அவனைத் திட்டினாள்.

“துர்காவ காணோம்னு கொஞ்சமாவது கவலை இருக்கா உங்களுக்கு?”

“பாவம், உனக்குக் கவலைல தூக்கம் கூட வரலன்னு சொன்னயில்ல குறிஞ்சி?” என்று அவன் நக்கலாகக் கேட்க, “துர்கா நம்ம கவலைப்படுற அளவுக்கோ, நம்மள பயமுறுத்தற மாதிரியோ எதுவும் பண்ண மாட்டா. அதுவும் ரோஜா கூட இருக்கும் போது நிச்சயமா பண்ண மாட்டா, எனக்கு அது நிச்சயமா தெரியும்” என்று உறுதியாகச் சொன்னாள்.

“அந்த நம்பிக்கையில்தான் நானும் போலீஸ் அது இதுன்னு யோசிக்காம இருக்கேன்.” என்றான் அவன்.

பெற்றோரின் மனஅழுத்தத்தை இப்போது அவன்தான் சுமக்கிறான். என்ன செய்து அக்காவை கண்டுபிடிக்க, அவள் எங்கே சென்றிருப்பாள்? மீண்டும் ஒரு புதைக் குழிக்குள் அவள் விழுந்து விடக் கூடாதே என்று அவன் மனதில் ஆயிரம் கவலைகள் சூழ்ந்திருக்க, குறிஞ்சியுடனான வார்த்தைப் போர், அதுதான் அவனை இலகுவாக்கியது. அவனுக்கே அது ஆச்சரிய அதிர்ச்சிதான். அவளுடனான பேச்சு அவனது புத்தியை கொஞ்சம் கூர்மையாக்கி சரியாக யோசிக்கத் தூண்டியது.

அவனது நண்பன், அவனை விட மூன்று வயது மூத்த ஶ்ரீகாந்தை அழைத்து ஆலோசனை கேட்கலாம் என அவனுக்கு அழைப்பு விடுத்தான். நண்பன் அவனது அழைப்பு ஏற்கவில்லை.

“தூங்கு” குறிஞ்சியைப் பார்க்காமலேயே அவன் சொல்ல, அவளுக்கு என்ன தோன்றியதோ, நாச்சம்மைக்கு அழைத்து ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவர்களின் உரையாடலை கேட்டபடி காரோட்டினான்.

அவன் கைகள் இயல்பாகக் காரை செலுத்தினாலும் அவன் மூளை என்னவெல்லாம் வழிகள் இருக்கிறது எனச் சிந்தித்துக் கொண்டிருந்தது. குறிஞ்சி பேச்சை முடித்து இருக்கையில் சாய்ந்து கண் மூடி உறங்கியிருந்தாள். அவள் தலை இருக்கையை விட்டு விலகி லேசாகச் சரிந்து தொங்க, அவன் கரம் நீண்டு அவள் தலையை வாகாக இருக்கையில் சாய்த்தது. மீண்டும் சாலையில் கவனமானான்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அந்த நள்ளிரவிலும் சாரை சாரையாக வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. அவன் பகலிலும் காரோட்டி வந்திருக்க, இப்போது கண்கள் எரிந்தன. உடலை மெதுவாக அழுத்தியது அசதி. கைகள் தானாகச் சிகரெட்டை தேடின. “பத்த வச்சா கத்துவாளே” என்று கடுப்புடன் முணுமுணுத்து, கண்களை நன்றாக விரியத் திறந்து, சாலையில் கவனத்தைக் குவித்தான். காரில் மெல்லிய ஓசையுடன் இசையை ஒலிக்க விட்டான்.

அச்சமயம் அவனது கைப்பேசி அழைத்தது. துர்காவாக இருக்க வேண்டும் என்ற ஆவலுடன் வேகமாகக் கைப்பேசியை எடுத்தான். அவன் நண்பன் ஶ்ரீகாந்த் அழைத்திருந்தான்.

தயா, “ஹலோ” சொல்லும் முன், “தயா நீ எங்கருக்க? சென்னையிலதானே?” என்று கேட்டிருந்தான் ஶ்ரீகாந்த்.

“சென்னையில இருந்து கிளம்பிட்டோம். ஊருக்கு வந்துட்டு இருக்கோம். காலையில ஊருக்கு வந்ததும், உன் காரை..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன், “உங்க அக்கா துர்கா எங்க இருக்காங்க? வீட்லயா இருக்காங்க? நீ பேசினியா அவங்ககிட்ட?” என்று அவசரமாக அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்கினான் அவன்.

தயாபரன் உண்மையைச் சொல்ல முடியாத தடுமாற்றத்துடன் ஒரு கணம் மௌனமானான்.‌

error: Content is protected !!
Scroll to Top