நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 18 (2)

ஒரு சிறிய விஷயம் அந்த வீட்டில் பெரிய மாற்றத்தைத் தந்திருந்தது. பெற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் போய், “புள்ளைங்க ரெண்டுக்கும் ஓட்ட ஒரு வண்டி வாங்கி குடுங்கங்க” என்று நாச்சம்மையே, பழனியப்பனிடம் சிபாரிசு செய்தார். 

“தயாவ விசாரிக்க சொல்லியிருக்கேன் நாச்சியா. துர்கா லைசென்ஸ் வாங்கின கையோட புது வண்டி புக் பண்ணிடுவோம்” என்றார் அவர். 

“ரோசு உனக்கு புது வண்டி வாங்கித் தர போறாங்க ஐயா” குறிஞ்சி சொல்ல, “ஐஐஐ” என்று துள்ளி குதித்தாள் குழந்தை. 

“உனக்கும் வேலைக்கு போக வண்டி வேணும்லடா குறிஞ்சி? தினம் தம்பிதானே உன்னைய கூட்டிட்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வருது. அம்மா உனக்கொரு வண்டி வாங்கித் தரவா? உனக்கும் தேவைப்படும்ல?” என்று அலமேலு மகளிடம் கேட்க, “வேணாம்மா” என்றாள் மகள். 

“எம்புட்டு வேகமா வேணாம்ங்கற. உங்க வீட்ல சீரு செய்ய வேணாம்னுட்டாங்க. அம்மாவும் உனக்கு பெருசா ஒன்னும் செய்யல இல்லடா. இந்த வண்டியாவது வாங்கித் தர்றேன். அம்மா கொஞ்சம் காசு சேர்த்து வச்சுருக்கேன். நீ கவலைப்படாத” 

“அட, அதுக்கு இல்லம்மா. எனக்கு அவரோட போகத்தான் பிடிச்சிருக்கு. அதான் வேணாம்னேன். எனக்கு வேணும்னா கண்டிப்பா உன்கிட்ட கேட்கறேன்ம்மா” என்றாள் சலுகையாக அவர்மேல் சாய்ந்து. 

“எனக்கும் கடைக்கு போக பிடிச்சிருக்குடா பாப்பா”

“என்னம்மா சொல்ற?”

“இல்ல, நான் வேலைக்கு போறது உனக்கு பிடிக்கலையே, அதுக்குச் சொல்றேன். உன் மாமியாரு என்னைய ரெஸ்ட் எடுக்கச் சொல்லி கொள்ளை வருஷமாச்சு. ஆனா வேலைக்கு போகாம எப்படிடா வருமானம் வரும்? உனக்கு எம்புட்டு வயசானாலும் சரி, நீயி எம்புட்டு சம்பாதிச்சாலும் சரி, நான் உனக்கு ஆசைப்பட்டு செய்யுறது போல வருமா? என் மகளுக்கு செய்யுறதுல எனக்கொரு திருப்தி. உழைக்கிறத கேவலமாக பாக்க கூடாது பாப்பா.”

“அச்சச்சோ அப்படியில்லம்மா. நான் அப்படி நினைப்பேனா?”

“நினைக்கவே கூடாது பாப்பா. உங்கப்பா தவறுனதும் நம்மள தாங்குன குடும்பம் அவங்க. ஆம்பள இல்லாத நம்ம வீட்ல, எனக்கும் உனக்கும் அரவணைப்பு குடுத்து பாதுகாத்தவங்க அவங்க. அவங்களை பழிக்க கூடாதுடா. அது பாவம்” என்றார். அவள் தலை தொங்கி விட்டது. “நீங்களே வளர்த்து ஆளாக்கி, உங்க வீட்டுக்கே வர வச்சுட்டீங்க இல்ல?” என்று தயாபரனிடம் கோபித்திருக்கிறாள். அப்போது அது நியாயமாகப்பட்டது. இப்போது அம்மாவின் பார்வையில் அது தவறாக தெரிந்தது. அவரவர்க்கு அவரவர் நியாயம் போல வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்தானே. 

“அதில்லம்மா, நீங்க புகையில நாள் முழுக்க நின்னு கஷ்டப்படுறீங்களேன்னுதான்..”

“நீ நாள் முழுக்க ஹாஸ்பிட்டல்ல நின்னு கஷ்டப்படலயா பாப்பா? எந்த வேலையில கஷ்டம் இல்ல சொல்லு? எங்க எல்லாரோட வேலையை விட உன் வேலைதான் ஆபத்தானது. தினம் நோயாளிங்கள பாக்கற, அவங்களுக்கு மருந்து, ஊசி போடுற. என்னனென்னமோ பேரு கூட வாயில நுழையாத நோயெல்லாம் மனுஷங்களுக்கு வருது. அது உனக்கும் தொத்திக்குமோன்னு அம்மா அன்னாடம் பயப்படத்தேன் செய்யறேன். அதுக்காக உன்னய வேலைக்கு போகாதன்னு சொல்லிட்டேனா பாப்பா?” மறுப்பாக தலையசைத்தாள். 

“இல்ல, நீ ஆசைப்பட்ட படிப்ப படிக்காதன்னு தடுத்தனா? இம்புட்டுக்கும் உங்கூட படிச்ச புள்ள ரத்தத்த கண்டு மயங்கிருச்சுன்னு நீ சொன்னப்ப, ஆத்தேன்னுதான் இருந்துச்சு. ஆனா அம்மா உன் ஆசைக்கு விட்டுட்டேன்ல பாப்பா. நாளைக்கு உனக்கே கல்யாண வயசுல மக வந்தாலும் அம்மா உனக்கு செய்ய ஆசைப்படுவேன்டா. அதுக்கு நான் உழைக்கணும்ல? எல்லாம் எனக்கு தெம்பிருக்க வரைக்கும்தான். அப்புறம் அக்கடான்னு உன் புள்ளைங்களை பார்த்திட்டு இருந்திடுவேன்” என்றார் மலர்ந்த முகத்துடன். அவரின் மனக் கண்ணில் இப்போதே பேரன் பேத்திகள் பிறந்து விட்டார்கள் போலும். 

குறிஞ்சி குறுஞ்சிரிப்பை அடக்கியபடி அம்மாவைப் பார்த்தாள். 

“அம்மா எம்புட்டு பயந்து போய் கெடந்தேன் தெரியுமா? நீ புகுந்த வீட்ல பொருந்தி போகவும்தேன் அப்பாடின்னு இருக்கு” என்று ஆசுவாச பெருமூச்சுடன் சொன்னார். 

“தயா தம்பி உன்னய விரும்பி கட்டிக்க கேட்டப்போ அவங்கப்பாவே, வேணாம்னுதான் சொன்னாரு.” இது அவளுக்கு புது செய்தி. 

“என்னம்மா சொல்ற?” என்று புருவங்களை நெறித்தாள். 

“துர்காகாகதானே?” என்று அவள் கேள்வியாக நிறுத்த, “தம்பிக்கு கல்யாணம் பேசினப்போ. அலமேலு அத்தை கிட்ட கேளுங்கப்பான்னு சொல்லியிருக்காப்ல. பழனி அண்ணே, உங்க மாமா மனசு கேட்காம அது சரி வராதுன்னு சொல்லிட்டாரு உறுதியா. அப்புறம் தம்பியும் அக்காக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். அது வரைக்கும் என் கல்யாண பேச்செடுக்காதீங்கன்னு சொல்லிட்டாப்ல” என்று விளக்கினார்.

மெல்லிய அதிர்வுடன், “ஓ” என்றாள். அவளின் குவிந்த வாயை போலவே மனமும் வியந்து வியப்பில் ஆழ்ந்தது. 

“உன்ன பிடிக்காமலாம் உன் கை பிடிக்கல” என்று சென்னையில் வைத்து அவன் சொன்னது நினைவில் வந்தது. 

“நான் முன்னாடியே உங்கிட்ட சொன்னேன். நீதான் காது குடுத்து கேட்கல. இப்போ கல்யாணம் வேணாம்னு பாட்டா பாடிட்டு இருந்த. துர்காகாகத்தான் இந்த கல்யாணம்னு சொல்லவும் சரின்ன.” என்றார். ஆக, அவள்தான் காரணத்தோடு இந்த கல்யாணத்திற்கு சம்மதித்து இருக்கிறாள். அவன் அல்ல. முன்னர் அம்மா இது குறித்து பேசும் போதெல்லாம் அவரை எங்கே பேச விட்டாள். என்னவோ ஒரு நிர்பந்தம். அதற்கு மேல் பெரியவர்களின் நிபந்தனைகள், ரோஜாவை வளர்க்க வேண்டும் என்று. துர்காவின் நலனில் நலம் நாடியவளுக்கு வேறெதுவும் ஆராயத் தோன்றவில்லை. அவள் மனம்தான் வேறு பல விஷயங்களுக்காக முரண்டி கொண்டிருந்ததே. இப்போது யோசித்தால் அவள் நடவடிக்கை அவளுக்கே அந்நியமாக, அநியாயமாக தோன்றியது. 

கல்யாணத்திற்கு நான்கே நாள்கள் இருக்கையில், தயாபரன் அவளை தேடி தவித்து வந்து நின்றது நினைவில் வந்தது. அப்போதாவது சொன்னானா? அகம்பாவி. தயாவின் தேவதை அவனுக்கு தயவு காட்ட அல்ல தகிக்க தயாரானாள். 

“அது அப்போ என்னமோ கோபம்மா. நீ ஃபீல் பண்ணாத. நீ ஃபீல் பண்ற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்ம்மா, நம்பு” என்றாள். 

“உங்கப்பா இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். தயா தம்பிய அவருக்கு ரொம்ப புடிக்கும். அவருக்கிட்டதேன் கரண்டி புடிக்க கத்துக்கிடுச்சு தம்பி. சின்னதுலேயே அம்புட்டு ஆர்வம், பொறுப்பு” என்றார் பெருமையாக. 

“போதும்மா, உன் மருமகன் புராணம்” என்று போலியாக அலுத்துக் கொண்டாள். 

“சரி, நீ சொல்லு. அம்மா வண்டி வாங்கித் தரவா?”

“உன் தயா தம்பிக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்ம்மா” என்றாள் தீவிரமாக. சிரித்து விட்டார் அலமேலு. அவரின் வங்கி கணக்கு புத்தகத்தையும், பண பரிவர்த்தனை அட்டையையும் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார். 

“உன்கிட்டேயே இருக்கட்டும்மா” என்று அவரின் கையில் திருப்பி வைத்து அழுத்தினாள். அம்மாவின் வங்கி நிலவரம் அவளுக்குத் தெரியாதா என்ன? அவருக்கு அவள் செய்ய ஆசைப்படும் போது அம்மாவிடம் இருந்து வாங்குவாளா? 

அவரை சமாதானம் படுத்தும் விதமாக, “உன் பணம், என் பணம் மா. பத்திரமா இருக்கட்டும். தேவைப்பட்டா எடுத்துப்போம்” என்றாள். அலமேலுவும் மகளை வற்புறுத்தவில்லை. 

அம்மாவின் வார்த்தைகள் தயாபரனின் பிரியமாக மனத்தில் பசுமையாக வலம் வர வீடு சென்றாள். 

ஆவலாக கணவனைத் தேடி அவள் செல்ல, “குறிஞ்சி, வா. வண்டி ஓட்டுவோம்” என்றழைத்தாள் துர்கா. அவளுக்கு இப்போது கற்கும் ஆர்வம் மிகுதியாக வந்திருந்தது. பின்னே ஆசிரியை அல்லவா!

தயாபரன் கடைக்குச் செல்ல கிளம்பி வந்தவன், அவர்களிடம் விடைபெற்று வெளியேறினான். 

அன்றிரவு அவனிடம் கேட்க நினைத்தும் தயக்கம் வந்து தடைப் போட்டது. அப்படியே அவளும் தள்ளி போட்டு விட்டாள். 

இரண்டாம் வாரம் துர்கா நன்றாகவே தேறியிருந்தாள். அதற்குள் மூன்று நான்கு முறை விழுந்து முட்டியை பெயர்த்து கொண்டார்கள்தான். வண்டியில் வழுக்கி விழுவதெல்லாம் விஷயமா என கடந்தும் விட்டார்கள். எதுவுமே துர்காவை தடுத்து நிறுத்தவில்லை. 

ரோஜாவின் ஆர்வமும் ஆசையுமான முகமே அவளின் கற்கும் ஆர்வத்தை தூண்டி விட்டது. 

இப்போதெல்லாம் இரவல் வண்டியில் தினமும் அவர்களை பள்ளியில் கொண்டு விடுவது குறிஞ்சிதான். முகத்தில் காற்று மோத முன்னால் அமர்ந்து பயணிக்கும் அந்த பத்து நிமிட பயணத்திற்கு பரிசாக பிரிய முத்தங்களை பரிசளித்தாள் அத்தைக்கு. 

ரோஜாவின் ஈர முத்தங்களில் கன்னம் சிலிர்க்க, “ஐஸ் வைக்காத ரோசு” என்று போலியாக கோபித்தாள். 

ஒருநாள் துர்காவே பள்ளிக்கு மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாள். பின்னால் குறிஞ்சி அமர்ந்திருந்தாள்தான். ஆனாலும் அதுவே அவளுக்கு சாதித்தது போலிருந்தது. தம்பி சொன்ன சாதனை மனநிலை இப்போது அவளுக்கு விளங்கியது. புதிதாக சிறகு முளைத்தது போல உணர்ந்தாள். 

இளம் வெயில் முகத்தை சூடேற்ற, அதற்கு மாறாக காற்று தழுவி இதம் தர, ஒருவித இதமான இனிமையான அனுபவத்தை பத்தே நிமிட பயணம் தந்திருந்தது. 

அக்காவை முறையாக அழைத்துச் சென்று ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்திருந்தான் தயா. மறுவாரம் மைதானத்தில் பலர் பார்க்கும் பதட்டத்தில் சற்றே சமாளித்து எட்டு போட்டு தேர்வு முடித்து, தேர்ச்சி பெற்று விட்டாள். அன்று மாலையே கையில் ஓட்டுநர் உரிமத்துடன் அவள் வீடு வர, நாச்சம்மை முகத்தில் அப்படியொரு பூரிப்பு.

அவளுக்கு மிகப் பிடித்த கும்மாயம் செய்திருந்தார். இனிப்பை மகளுக்கும், மருமகளுக்கும், பேத்திக்கும் ஊட்டி விட்டார். 

நெடுங்காலம் கழித்து அம்மாவின் நேசத்தை வென்றதில் அவள் நெஞ்சம் நிறைந்திட்டது. 

“தேங்க்ஸ்டா தயா” தழுதழுத்த குரலுடன் தம்பியின் கைப் பிடித்தாள். 

“என்னக்கா நீ..” என்று அவன் புன்னகைக்க, “எல்லாரும் என் புருஷனை மறந்துட்டீங்க” என்று அவனுக்கு இனிப்பை ஊட்டினாள் குறிஞ்சி. அம்மா, அத்தை முன்பு அதை வாங்க அவன் சங்கடப்பட்டு நிற்க, “ஆ சொல்லு மாமா, ஆ” என்று ஆ காண்பித்து, மாமனுக்கு பாடம் எடுத்தது பட்டு ரோஜா. 

“ஆ வாங்கிக்கோ மாமா” என்று தளிர் கரங்களால் தயாபரனுக்கு ஊட்டியும் விட்டது தேவதை. 

அவனின் பிரிய தேவதைதான், “எங்கள பார்த்தா ஆளா தெரியலையா?” என்று முறைத்து நின்றது. 

இரவில் அவளை முத்தமிட்டு சமாளித்து விட்டான். ஆனால் என்ன மோகம்தான் முகிழ்க்கவில்லை. 

error: Content is protected !!
Scroll to Top